நவகிரஹத்தலங்கள் --திருவெண்காடு

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக
1.திருவெண்காடு ( புதனுக்குரிய திருத்தலம்.

இந்தத் திருத்தலத்தின் பிரதான மூர்த்தி, தீர்த்தம், விருக்ஷம் ஆகியவை, கீழ்க்கண்டவாறு  குறிக்கப்பட்டிருக்கின்றன..

இறைவன் திருப்பெயர்: சுவேதாரண்யேஸ்வரர், வெண்காட்டு நாதர். 

அம்பிகையின் திருப்பெயர்: பிரம்ம வித்யாம்பிகை.

தல மரம்: வடஆலமரம்.  

தீர்த்தம்: முக்குளம் (சூரிய, சந்திர, அக்கினி தீர்த்தங்கள்).

பிரதான மூர்த்தி, அம்பிகை,   விருக்ஷம் ஆகியவை குறிப்பிடப்பட்ட போதிலும், இத்திருத்தலத்தில், இவையனைத்துமே மும்மூன்றாக அமைந்து விளங்குகின்றன.

வழிபட்டோர்: பிரம்மன், இந்திரன், ஐராவதம், புதன், சூரியன், சந்திரன் முதலானோர்.

திருத்தலத்தின் சிறப்புகள்:

இத்திருத்தலம், மூர்த்திகள் மூன்று (சுவேதாரண்யர், அகோரர், நடராஜர்), அம்பிகைகள் மூன்று (பிரம்ம வித்யாம்பிகை, துர்க்கை, காளி), தல மரங்கள் மூன்று (வடவாலமரம், கொன்றை, வில்வம்), தீர்த்தங்கள் மூன்று (சூரிய, சந்திர, அக்னி) ஆகியவற்றைப் பெற்றுள்ளது. 
இங்கு வந்து வழிபாடு செய்த பிரம்ம தேவருக்கு, அம்பிகை வித்யையை உபதேசித்தாள். ஆகையால், அம்பிகைக்கு பிரம்ம வித்யாம்பிகை என்று பெயர்.


இத்திருத்தலத்தின் அகோர மூர்த்தியின் மகிமை, சொல்லில் அடங்காது. அகோர மூர்த்திக்கென‌ விசேஷமான சஹஸ்ரநாமம் இருக்கிறது.. தேர்ந்த சாதகர்கள், இதனை அதிகம் வெளியிடாது போற்றிப் பாதுகாக்கிறார்கள்... 

ஒவ்வொரு ஞாயிறு இரவிலும் அகோர பூஜை நடைபெறுகிறது. கார்த்திகை மாத ஞாயிறுகளில் நடக்கும் பூஜை விசேஷமானது.

அகோரமூர்த்தி திருவடிவு கொண்ட புராணம் கீழ்க்கண்டவாறு கூறப்படுகிறது. 

சலந்திரன் என்பவனின் மகனான மருத்துவன், சிவனை நோக்கித் தவம் செய்து, சூலாயுதம் பெற்றான். அதை நல்ல நோக்கத்திற்காக‌ மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற கட்டளையும் பெற்றான். ஆனால், விதி வசத்தால், அந்தக் கட்டளையை மறந்து, சூலாயுதத்தை, தேவர்களை, துன்புறுத்துவதற்காகப் பயன்படுத்தினான்.

இறைவன் கோபம் கொண்டு நந்தியை அனுப்ப, நந்தியின் மீதும் சூலத்தை ஏவினான். சூலம், நந்தியை ஒன்பது இடங்களில் துளைத்தது.. இதனால் கடும் சினம் கொண்ட எம்பிரான், அகோரமூர்த்தியாக திருவடிவு கொண்டு மருத்துவனை அழித்தார். இன்றும், சுவாமி சன்னதிக்கெதிராக இருக்கும் நந்தியின் உடலில் ஒன்பது துளைகள் இருப்பதைக் காணலாம். மாசி மாதம் கிருஷ்ணபட்சம் பிரதமை திதி, பூர நட்சத்திரம் ஞாயிறு இரவு  அகோர மூர்த்தி தோன்றினார். ஆகவே, இங்கு ஞாயிற்றுக் கிழமைகளில் நடக்கும் பூஜை பிரசித்தமாக இருக்கிறது.

இங்கிருக்கும் நடராச சபை, சிதம்பரம் போலவே செப்பறையில் அமைந்துள்ளது. சிதம்பர இரகசியமும் அமைந்துள்ளது. இந்தத் திருத்தலத்தின் மற்றொரு திருப்பெயர், 'ஆதி சிதம்பரம்' என்பதாகும்.

ஒன்பது தாண்டவ க்ஷேத்திரங்களுள் திருவெண்காடு முக்கியத்துவம் வாய்ந்தது. சிதம்பரத்தில், பரம்பொருளின் நிர்க்குணத் தன்மையை தம் தாண்டவத்தின் மூலமாகக் காட்டியருளும் எம்பிரான், இங்கு சகுணத் தன்மையை விளக்குவதாகக் கூறப்படுகின்றது.

நவக்கிரகத் திருத்தலங்களுள் புதனுக்குரியதாக விளங்குவது திருவெண்காடு. புதன் வித்யாகாரகன். சந்திரனுக்கும் தாரைக்கும் பிறந்தவர் புத பகவான்.. புதபகவானும் சந்திரபகவானும் வழிபட்ட திருத்தலம் இது....

ஸ்தல விருக்ஷமான வடவால மரம், சந்திர தீர்த்தத்தின் அருகில் இருக்கிறது.. இதன் மகிமை, கயாவில் இருக்கும் அக்ஷயவடத்தை ஒத்தது என்று கூறுகின்றார்கள். கயாவில் விஷ்ணு பாதம் இருப்பதைப் போல், இந்த விருக்ஷத்தின் அடியில் ருத்ர பாதங்கள் இருக்கின்றன. இங்கும் பித்ருகடன்கள் நிறைவேற்றப்படுவதைக் காணலாம்.

இங்கு புத பகவானுக்கு தனியாக சந்நிதி இருக்கிறது.. புத பகவானின் ஸ்தான பலன் சரியாக அமையப் பெறாத ஜாதகர்கள், இந்தத் திருத்தலத்திற்கு வந்து, இறைவனையும், இறைவியையும், புத பகவானையும் தரிசித்து வழிபாடுகள் செய்ய வேண்டும். புத பகவானுக்கு அபிஷேகங்கள் செய்து, பச்சை நிற வஸ்திரம் சாற்றி, பாசிப்பருப்பு சேர்த்த வெண்பொங்கல், சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்து, பிரசாதத்தை விநியோகிக்க வேண்டும்.. இவ்வாறு செய்வதால் புத தோஷம் நீங்கப் பெறும். புத பகவான் அருளால், கல்வி அறிவு, பேச்சுத்திறமை, இசை, ஜோதிடம், கணிதம், சிற்பம், மருத்துவம், மொழிகளில் புலமை ஆகியவை கிட்டும்.

இத்திருத்தலம் பிரமஸ்மசானம் என்றும் சொல்லப்படுகின்றது. 'நூறு கோடி பிரமர்கள் நொந்தினார்' என்ற அப்பர் சுவாமிகளின் திருவாக்கு, இங்கு நினைவு கூரத் தக்கது.

துர்க்கை, இங்கு மேற்கு நோக்கி நின்று, அருள் மழை பொழிகிறாள்.

தினமும் ஆறு கால வழிபாடுகள் நடைபெறுகின்றன. சுவேதாரண்யேசுவரருக்கு காமிகாகமத்தின்படியும், அகோரமூர்த்திக்கு காரணாகமத்தின்படியும், நடராசப்பெருமானுக்கு மகுடாகமத்தின்படியும் வழிபாடுகள் நடைபெறுன்றன.

அப்பர், சுந்தரர், சம்பந்தர் மூவராலும் பாடப் பெற்ற திருத்தலம் இது.. சம்பந்தர், 'கண்காட்டும் நுதலானும்' என்று துவங்கும் 'திருவெண்காட்டுப் பதிக'த்தையும் 'உண்டாய் நஞ்சை உமையோர் பங்கா' , 'மந்திர மறையவை' என்று தொடங்கும் பதிகங்களையும்,   பாடியருளியிருக்கிறார்.
அப்பர் ‍ 'பண்காட் டிப்படி', 'தூண்டு சுடர்மேனி(திருவெண்காடு திருத்தாண்டகம்)' எனத் தொடங்கும் தேவாரப் பதிகங்களையும், சுந்தரர் ,'படங்கொள் நாகம்' எனத் தொடங்கும் தேவாரத் திருப்பதிகத்தையும் பாடியருளியிருக்கிறார்கள்.

அச்சுதக் களப்பாளர், குழந்தைப் பேறு அடைய, திருமுறைப் பதிகங்களில் கயிறு சார்த்தி வழிபட்ட போது, 'பேயடையா..' என்று துவங்கும் திருவெண்காட்டுப் பதிகம் கிடைக்கப் பெற்று, இங்கு வந்து வழிபட்டார். அதன் காரணமாக, மெய்கண்டாரை(சிவஞானபோதம் என்னும் சைவ  சித்தாந்த முழுமுதல் நூலை அருளிச்செய்தவரே மெய்கண்டார்) திருமகனாக அடைந்தார். ஆகவே, குழந்தையின்மை காரணமாக வருந்தும் தம்பதியர், இங்கு வந்து வழிபட்டு, திருவெண்காட்டுப் பதிகத்தை தினமும் பக்தியோடு ஓதி வந்தால் நலம் பெறலாம்.

திருவெண்காடராகிய பட்டினத்தடிகள் சிவதீக்ஷை பெற்ற திருத்தலம் இது. சிறுத்தொண்டர் இளமையில் வாழ்ந்த திருத்தலம் இது. அவரது மனைவியான திருவெண்காட்டு நங்கையின் பிறந்த ஊர் இதுவே.

திருத்தல அமைவிடம்: . மயிலாடுதுறை, சீர்காழி , பூம்புகார், ஆகிய ஊர்களுக்கு அருகாமையில் அமைந்திருக்கிறது.  மயிலாடுதுறை - மங்கைமடம் செல்லும் நகரப் பேருந்துகள் திருவெண்டுகாடு வழியாகச் செல்கின்றன.


எழுதியவர்:  திருமதி பார்வதி ராமச்சந்திரன்

--Geetha Sambasivam (பேச்சு) 12:20, 4 ஜூலை 2014 (GMT)

பங்களிப்பாளர்கள்

Geetha Sambasivam

இப்பக்கம் கடைசியாக 4 ஜூலை 2014, 12:29 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 1,467 முறைகள் அணுகப்பட்டது.