நவகிரஹத்தலங்கள் --வைத்தீஸ்வரன் கோயில்

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக
வைத்தீஸ்வரன் கோயில்(அங்காரக(செவ்வாய்) பகவானுக்குரிய திருத்தலம்)

இறைவன் திருப்பெயர்: வைத்திய நாதர்

இறைவி திருப்பெயர்: தையல்நாயகி

தல மரம்: வேம்பு

தீர்த்தம்: சித்தாமிர்த  தீர்த்தம்

வழிபட்டோர் : முருகர், சூரியன், ரிக் வேதம், அங்காரகன்(செவ்வாய்), இராமர், இலட்சுமணன், அநுமான், ஜடாயு, சம்பாதி, பிரம்மன், சரஸ்வதி, லட்சுமி, துர்க்கை, துர்வாசர், சிவசன்மன் முதலானோர்.

தேவாரப் பாடல்கள்: சம்பந்தர் பெருமானும் அப்பர் பெருமானும் இத்திருத்தலத்தைப் பாடிப் போற்றியிருக்கின்றனர்.

சம்பந்தர் - கள்ளார்ந்த பூங்கொன்றை, 

அப்பர் - 1. வெள்ளெருக்கரவம் விரவுஞ், 2.ஆண்டானை அடியேனை.

இத்திருத்தலம், திருப்புள்ளிருக்குவேளூர் என்றே முற்காலத்தில் வழங்கப்பட்டது.. புள்(ஜடாயு, சம்பாதி), இருக்கு (ரிக் வேதம்), வேள்(முருகன்), ஊர்(சூரியன்) ஆகியோர் வழிபட்டதால், இத்திருத்தலத்தின் பெயர் இவ்வாறு அமைந்தது.

இத்திருத்தலத்தில் கோயில் கொண்டருளும் முருகப் பெருமான் 'செல்வ முத்துக் குமாரர்' என்ற திருநாமம் உடையவர்.. சோமாஸ்கந்தராக, அம்மையப்பன் சன்னிதிகளுக்கிடையில் அருளும் இந்தப் பெருமான், இத்திருத்தலத்து இறைவன், இறைவியாருக்கு இணையான சிறப்போடு போற்றப்படுகின்றார்.. காலையிலும், அர்த்தஜாம பூஜையின் போதும் முதலில் முருகனுக்கு பூஜை செய்த பிறகே, சிவனுக்கும் அம்மனுக்கும் பூஜை நடக்கும்.

குமரகுருபரர், அருணகிரிநாதர் முதலிய மகான்கள் இவரைப் பாடிப் போற்றியிருக்கிறார்கள்.. முத்துக்குமாரருக்கு, அன்றாடம் இரவு நேரத்தில் நடைபெறும் அர்த்தஜாம தரிசனம், நேத்திரப்பிடி தரிசனம் அல்லது புழுக்காப்பு தரிசனம் என்று அழைக்கப்படுகின்றது.. இத்திருத்தலத்திலேயே தங்கி,இரவு அர்த்தஜாமம், மற்றும் காலை நிர்மால்ய தரிசனம் இரண்டையும் தரிசித்து, இரவு முருகப் பெருமான் மீது சார்த்திய 'நேத்திரப்பிடி சந்தனம்' பிரசாதம் பெற்று உண்ண, தீராத நோய்களும் குணமாகும். மக்கட்பேறு கிட்டும். சங்கீத மும்மூர்த்திகளுள் ஒருவரான, முத்துஸ்வாமி தீக்ஷிதர், இவர் அருளால் பிறந்த மகான்..

அருள்மிகு வைத்தியநாதஸ்வாமி, சுயம்பு மூர்த்தி.. மிகப் பல குடும்பங்களின் குலதெய்வமாக வணங்கப்படுபவர்.. உடலில் ஏற்படும் நோய்கள் மட்டுமல்லாது, பக்தர்களின் பிறவிப்பிணியையும் நீக்கி அருள்பவர்.. தையல் நாயகி அம்பிகை, தன் திருக்கரத்தில் தைலபாத்திரமும், அமிர்தசஞ்சீவியும், வில்வ மரத்தடி மண்ணும் எடுத்துக்கொண்டு உடனிருக்க, 4448 வியாதிகளையும் தீர்த்தருளுகின்ற பெருமான்.

தையல் நாயகி அம்மனை வணங்கி வழிபட, குழந்தைகளுக்கு ஏற்படும் 'பாலாரிஷ்ட தோஷம்' நீங்கும்.

தன்வந்திரி சித்தர் ஜீவசமாதி அடைந்த திருத்தலம். இத்திருத்தலத்து இறைவனை, சித்தர்கள் பலர் ஒன்று கூடி அமிருதத்தால் அபிஷேகம் செய்து வழிபட்டதாகவும், அப்போது, சிந்திய அமிருதம், குளத்தில் கலந்து விட்டதால், குளத்தின் நீர் மருத்துவ குணம் கொண்டதாக மாறிவிட்டதாகவும் கூறுகின்றனர்.

இங்கு, புற்று மண், அபிஷேக தீர்த்தம், வேப்ப இலை, அபிஷேக சந்தனம், அபிஷேக விபூதி இவைகளை கொண்டு "திருச்சாந்து' எனப்படும் உருண்டை தயாரிக்கப்படுகிறது. இதைச் சாப்பிட்டால் தீராத நோய்கள் குணமாகும் என்பது நம்பிக்கை. சரும‌ நோய்களுக்கு, இங்கு வழங்கப்படும் புனுகு எண்ணெய் வாங்கி உடலில் தேய்த்து, சித்தாமிர்தத் தீர்த்தத்தில் நீராடுகின்றனர். 

சதானந்த முனிவர் என்பவர் இங்குள்ள தீர்த்த கரையில் தவம் இருந்தார். அப்போது, ஒரு தவளையைப் பாம்பு விழுங்க முயற்சித்து, அவரது தவத்திற்கு இடையூறு செய்தது. அதனால் கோபமடைந்த முனிவர் விடுத்த சாபத்தினால் இந்த தீர்த்தத்தில் பாம்புகள், தவளைகள் இல்லை.
இங்கு அங்காரக பகவான், தனி சன்னிதி கொண்டு அருளுகின்றார்... ஒரு முறை,அங்காரகனுக்கு வெண்குஷ்ட நோய் வந்த போது, நோய் தீர்க்கும் வழி வேண்டி, இறைவனைப் பிரார்த்தனை செய்தார். அப்போது, அசரீரி ஒன்று ஒலித்தது.வைத்தீசுவரன் கோயில் சென்று ஒருமண்டலம் சித்தாமிர்த குளத்தில் குளித்துவிட்டு வைத்தியநாதசுவாமியை வணங்கினால் ரோகம் குணமாகிவிடும் என்று சொன்னது அந்த அசரீரி. இதையடுத்து அங்காரகனும் இங்கு வந்து வழிபட்டு நோய் குணமடையப் பெற்றார்.. அதனால் இங்கு அனுக்கிரக மூர்த்தியாக, கோயில் கொண்டருளுகின்றார் அங்காரக பகவான். அங்காரக பகவானின் தசாபுத்தி நடப்பவர்களும், ஜாதகத்தில் அங்காரக தோஷம் உள்ளவர்களும், செவ்வாய் பகவானை வழிபட்டு நலம் பெறுகின்றனர்.

ஸ்ரீராமர், இத்திருத்தலத்தில், ஜடாயுவின் உடலை தகனம் செய்ததாகக் கூறுகின்றனர். 

(மெய்சொல்லா விராவணனை மேலோடி யீடழித்துப்
பொய்சொல்லா துயிர்போனான் புள்ளிருக்கு வேளூரே``(ஞானசம்பந்தர் தேவாரம்)).


அந்த இடம், 'ஜடாயு குண்டம்' என்று வழங்கப்படுகின்றது. இந்தக் குண்ட‌த்திலுள்ள திருநீறும் நோய் நீக்கும் சக்தி கொண்டது.

 இங்குள்ள 5 கோபுரங்களும் ஒரே நேர்கோட்டில் அமைந்துள்ளன. இங்குள்ள மரகதலிங்கம் புகழ்பெற்றது. இங்கு நவக்கிரகங்கள் அனைத்தும் சிவன் சன்னதிக்கு பின்புறம், ஒரே நேர்கோட்டில் நின்றருளுகின்றனர்.

பங்குனியில் பிரம்மோற்சவம் நடைபெறும். அதில் ஐந்தாவது நாளன்று செல்வமுத்துக்குமரன் வைத்தியநாதரைப் பூசித்துச் செண்டு பெறும் நிகழ்வு பிரசித்தம்.. இந்தத் திருத்தலத்திலேயே முருகன் சூரனை வெல்ல, வேல் வாங்கியதாகச் சொல்கின்றனர். மாதந்தோறும் வரும் கார்த்திகைவிழா இங்குச் சிறப்பானது. இந்நாளில் செல்வமுத்துக்குமார சுவாமிக்கு நடைபெறும் அபிஷேக ஆராதனைகள் விசேஷமானவை. அபிஷேகங்களில் சந்தன அபிஷேகம் மிகவும் சிறப்புடையது.

செவ்வாய்க் கிழமைகளில் அங்காரகர் பிரகாரத்தில் வலம் வரும் நிகழ்வையும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் தரிசித்து அருள் பெறுகின்றனர்..  

திருக்கோயில் வழிபடும் முறை:

இது சற்றே பெரிய திருக்கோயில். நான்கு கோபுரங்களுடனும் உயர்ந்த மதில்களோடும் கூடிய கோயில். மேற்கு நோக்கிய இறைவன் சன்னிதியும், தெற்கு நோக்கிய‌ அம்பாள் சன்னிதியும் கொண்டது. பக்தர்க‌ள், முதலில் சித்தாமிர்தக் குளத்தின் நீரை தலையில் தெளித்துக் கொண்ட பின்னரே, இறைவனை வழிபடச் செல்கிறார்கள்.

மேற்கு வாயிலைத் தாண்டினால் வருவது மஹாமண்டபம்.. எழில் கொஞ்சும் சிற்பங்கள் அலங்கரிக்கும் தூண்கள். பல்லவர் காலத்தைச் சேர்ந்த சிற்பங்கள். தங்கம் மற்றும் வெள்ளியால் ஆன இரு கொடி மரங்களைக் கடந்தால் பிரகாரங்கள்.. கற்பக மரமாய் வரம் தரும் கற்பக விநாயகரை முதலில் வழிபட வேண்டும். பின், சுவாமி சன்னிதியில் அருள்மிகு வைத்தியநாதரை தரிசித்து விட்டு, பிரகாரத்தை வலம் வந்தால், சன்னிதியின் பின்னால் ஒரே நேர்க்கோட்டில் அமைந்த நவக்கிரகங்கள். பக்கத்தில் தன்வந்திரி சன்னிதி... சற்றுத் தள்ளி ஜடாயு குண்டம்.
சுவாமி சன்னிதிக்கு நேர் செங்குத்தாக, தெற்கு நோக்கிய அம்பாள் சன்னிதி..செல்வ முத்துக்குமாரர், தனி சன்னிதியில், அம்பிகை சன்னிதிக்கு இடப்புறம் திரும்பினோமெனில் செல்வ முத்துக்குமாரரை தனி சன்னிதியில் தரிசிக்கலாம். 


அம்பிகை சன்னிதியிலிருந்து நேராக வந்தால் சித்தாமிர்தக் குளம். கோயிலின் கிழக்கே பைரவர், மேற்கே வீரபத்திரர், தெற்கே விநாயகர், வடக்கே காளி ஆகியோர் இத்தலத்திற்கு க்ஷேத்ர பாலகர்களாக(காவல் தெய்வங்களாக)இருக்கின்றனர்..

அங்காரக பகவான் சன்னிதி, வெளிப்புறமாக, தனியாக அமைந்துள்ளது. அங்காரக பகவானை வழிபட்ட பின், திருச்சுற்றுக்களை வலம் வந்து, கொடிமரத்தருகில் நமஸ்கரித்து, சிவத்தியானம் செய்து,வழிபாட்டை நிறைவு செய்யலாம்.

அங்காரக பகவான்:'மாதுல காரகன், பூமி காரகன், சகோதரகாரகன்' என்றெல்லாம் போற்றப்படுபவர் அங்காரக பகவான். மேஷ, விருச்சிக ராசிகளுக்கு அதிபதி. மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் நட்சத்திரங்களின் அதிபதி.அசாத்திய மன உறுதி, அங்காரகனால் கிட்டும். புகழ் பெற்ற அரசியல் தலைவர்கள், காவல் துறை அதிகாரிகள், படைத் தளபதிகள், நீதிபதிகள், பொறியில் வல்லுனர்கள் முதலானோர்களின் ஜாதகங்களில் அங்காரகன் பலம் பெற்று இருப்பதைப்  பார்க்கலாம்.. மருத்துவத் துறையில் ஈடுபட்டிருப்பவர்களின் ஜாதகங்களிலும் அங்காரக பகவான் நல்ல ஸ்தான பலம் பெற்றிருப்பார். உத்தியோகத்தில் சிக்கல் உள்ளவர்கள், அங்காரக பகவானை வழிபட நலமுண்டாகும்.

அங்காரக பகவானுக்குரிய‌ நிறம்- சிகப்பு,  ரத்தினம்..பவளம் வாகனம்..அன்னம் , தானியம் ..துவரை.

ஜாதகத்தில் அங்காரக பகவானின் ஸ்தான பலம் சரியில்லாதவர்கள், செவ்வாய் தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள், இந்த தலத்திற்கு வந்து, அங்காரக பகவானுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து, சிகப்பு வஸ்திரம் சார்த்தி, செம்பருத்தி, செவ்வரளி மலர்களால் அர்ச்சனை செய்து, துவரை அன்னம் நிவேதனம் செய்து விநியோகிக்க நலமுண்டாகும்.

திருத்தல அமைவிடம்:

சீர்காழி தலத்திலிருந்து 5 கி.மீ. மயிலாடுதுறையிலிருந்து 13 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது இந்தத் தலம். கும்பகோணத்திலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன.

எழுதியவர்:  திருமதி பார்வதி ராமச்சந்திரன்

--Geetha Sambasivam (பேச்சு) 12:14, 4 ஜூலை 2014 (GMT)

 
 

பங்களிப்பாளர்கள்

Geetha Sambasivam

இப்பக்கம் கடைசியாக 4 ஜூலை 2014, 12:15 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 1,316 முறைகள் அணுகப்பட்டது.