நவகிரஹத் தலங்கள்--திருநாகேஸ்வரம்

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக
நவக்கிரகத் திருத்தலங்கள்===திருநாகேஸ்வரம்(ராகு பகவானுக்குரிய திருத்தலம்)

திருநாகேச்சுரம் பேச்சு வழக்கில், திருநாகேஸ்வரம் ஆனது.

இறைவன் திருப்பெயர்: நாகேஸ்வரர், நாகநாதர், சண்பகாரண்யேஸ்வரர்.
இறைவி திருப்பெயர்: பிறையணிநுதலாள், (பிறையணிவா ணுதலாள்)
  கிரிகுஜாம்பிகை, (தமிழில்) குன்றமாமுலையம்மை தனிக்கோயில் கொண்டு அருளுகிறார்.
தல மரம்              : சண்பகம்.
தீர்த்தம்: சூரிய தீர்த்தம்.
வழிபட்டோர்: கௌதமர், நந்தி, நளன், பராசரர், பகீரதன், நாகங்களான‌ ஆதிசேஷன், தக்ஷன்,  கார்க்கோடகன் ராகு பகவான் முதலியோர்.

தேவாரப் பாடல்கள்:

 சம்பந்தர் பெருமான்- 1. பொன்னேர் தருமே னியனே,  2. தழைகொள்சந்தும் மகிலும்.

 அப்பர்   -1. கச்சைசேர் அரவர் போலுங்,, 2. நல்லர் நல்லதோர், 3. தாயவனை வானோர்க்கும்.

சுந்தரர்  - 1. பிறையணி வாணு தலாள் 
பிறையணி வாணுதலாள்
உமையாளவள் பேழ்கணிக்க
நிறையணி நெஞ்சனுங்க
நீலமால்விடம் உண்டதென்னே
குறையணி குல்லைமுல்லை
அளைந்துகுளிர் மாதவிமேல்
சிறையணி வண்டுகள்சேர்
திருநாகேச் சரத்தானே.

தேவாரப் பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்களில் இது 29வது தலம்.

இத்திருத்தலம் கும்பகோணத்திற்கு  மிக அருகில் அமைந்திருப்பதால், நகரப் பேருந்துகளில் செல்லலாம்.

தலத்தின் சிறப்பு:

நாகராஜாக்கள் வழிபட்ட திருத்தலமாதலால் நாகதோஷத்திற்கான பரிகாரத் தலமாக விளங்குகிறது..மனித தலை, நாக உடலுடன் கூடிய ராகு பகவானுக்கான க்ஷேத்திரமாக இது அறியப்படுகின்றது.

 ராகு பகவான் சிறந்த சிவபக்தர்.. நாகங்கள் வழிபட்ட திருத்தலம் என்பதால் இங்கு வந்த அவர், இறையருளால் இங்கேயே தங்கி விட்டதாகச் சொல்கிறார்கள்.  

பாற்கடலை, அமிர்தம் பெறுவதற்காக, தேவர்களும் அசுரர்களும் கடைந்த போது, ஸ்வர்பானு என்ற அசுரன் தேவர்களின் நடுவில் அமர்ந்து, அமிர்தம் பெற முயற்சித்தான்.. அவன் மோகினி வடிவம் தாங்கிய விஷ்ணுவால் இரு கூறாக வெட்டப்பட்டான்.. வெட்டுப்பட்ட தலையும் உடலும் முறையே திருநாகேஸ்வரம், கீழப்பெரும்பள்ளம் திருத்தலங்களில் விழுந்ததாகவும், தலை விழுந்த திருநாகேஸ்வரம், ராகு பகவானுக்குரிய திருத்தலமானதாகவும் கூறுகின்றனர்.

இத்திருத்தலத்தில், மங்கள ராகு மற்றும் யோக ராகுவாக அமர்ந்து, தம்மை வழிபடும் பக்தர்களுக்கு அனுக்கிரக மூர்த்தியாக அருளுகின்றார். தனியாக சன்னதி கொண்டிருக்கும் ராகு பகவான் மங்கள ராகு ஆவார். கிரிகுஜாம்பிகை சன்னிதியில், விநாயகருக்கு அருகில் அருளும் ராகு பகவான் 'யோக ராகு' ஆவார். பரிகார பூஜைகள் செய்வோர், இவ்விரு சன்னதிகளையுமே தரிசிக்க வேண்டும்..

ஒரு சிவராத்திரியன்று எம்பிரானை  ராகு பகவான்   வழிபட்டார். ஆதலால், இன்றும், சிவராத்திரியன்று இரண்டு கால பூஜைகளை ராகு பகவானே நடத்துவதாக ஐதீகம்.

இங்கு ராகு பகவான், தம் தேவியரான சிம்ஹி மற்றும் சித்ரலேகை (நாகவள்ளி, நாகக்கன்னி என்றும் சொல்கிறார்கள்)யுடன் தனி சன்னதி கொண்டு அருளுகிறார்.. நாக உருவில் இல்லாது, முழுமையான விக்ரக உருவில் ராகு பகவான் அருளுகிறார்.

ஒவ்வொரு நாளும் ராகு கால நேரத்தில் சிறப்புப் பூஜைகள், அபிஷேகங்கள் நடைபெறுகின்றன. செவ்வாய், வெள்ளி, ஞாயிறு விசேஷமானவை..

ராகு பகவானின் மேல் பால் அபிஷேகிக்கப்படும் போது, ராகு பகவானின் திருவடிக்கருகில் அது நீலநிறமாக மாறுவதை இப்போதும் காணலாம்..

சுவாமி நாகநாதர் சுயம்பு மூர்த்தி!..சுவாமிக்கு அருகில் பிறைநுதலாள் கோயில் கொண்டருளுகிறார்.. கிரிகுஜாம்பிகை, லக்ஷ்மி, சரஸ்வதி மூவரும் தனிக்கோயில் கொண்டு ஒரே சன்னிதியில் அருளுகின்றனர். பிருங்கி முனிவர் விரும்பிய வண்ணம், மூவரும் ஒரே சன்னிதியில் காட்சி தருகின்றனர். தேவியர் சுதை வடிவம் ஆதலால் அபிஷேகமில்லை. இந்த மூன்று தேவியருக்கும் புனுகு சார்த்தி வழிபாடு செய்கின்றனர்.. மார்கழி மாதம் அல்லது தை மாதத் துவக்கத்தில்  இந்த நிகழ்வு நடைபெறும்.. அந்த சமயத்தில், மூன்று தேவியரையும், திரைச்சீலையில் ஆவாஹனம் செய்து (பாலாலயம் போல்)பூஜிக்கிறார்கள்.

தை கடைசி வெள்ளியன்று, காய்கறிகள், பழங்கள், சுத்தான்னம் முதலியவை படைத்து வழிபடுவது ஒரு பெரிய விழாவாகும்.. அம்பிகையின் சன்னதிக்கருகில் சங்கநிதி, பதுமநிதியும் இருப்பதால், இங்கு வழிபட செல்வச் செழிப்பு நிறையும் என்பது நம்பிக்கை.

தல புராணம்:

சுசீல முனிவரின் மகனான சுகர்மனை நாகம் தீண்ட, அதனால் அவன் மரணமடைந்தான்... அவனைத் தீண்டிய நாகத்தை(இது தக்ஷன் என்று  சொல்கிறார்கள்) சுசீல முனிவர் நாக உரு நீங்கி விடும் என்று சபித்தார். சாபம் நீங்க, காசிப முனிவரின் ஆலோசனைப்படி, இலிங்கம் அமைத்து வழிபாடு செய்து, சாபம் நீங்கப் பெற்றது நாகம்..

பிருங்கி முனிவர், முப்பெருந்தேவியரை விடுத்து, மும்மூர்த்திகளை மட்டுமே வழிபட்டு வந்தார். அதனால் சினம் கொண்ட அம்மை, சிவபிரானை வேண்டித் தவமிருந்து, எம்பிரான் உடலில் சரிபாதியைப் பெற்றார்..சிவபிரான் அர்த்தநாரீஸ்வரத் தோற்றம் கொண்டு அருளுகையில், இந்தத் திருவுரு, பல தலங்களில் எழுந்தருளப் பிரார்த்தித்தாள் அன்னை.. அவ்வண்ணமே, இந்தத் திருவுருவில் அம்மையப்பன் எழுந்தருளிய தலங்களில் இதுவும் ஒன்று.

திருக்கோயில் அமைப்பு:

இத்திருத்தலத்தின் வேறு பெயர்கள், கிரிகன்னிகை வனம்,  சண்பக வனம் என்பன. சேக்கிழார் பெருமான் மிக விரும்பிப் பூசித்த பிரான் என்று சொல்கிறார்கள்.. இத்தலத்து இறைவன் மேல் கொண்ட அன்பால், தம் ஊரான குன்றத்தூரிலும், நாகேஸ்வரரைப் பிரதிஷ்டித்து வழிபட்டார் சேக்கிழார்.  

ஐந்து நிலைகளை உடைய, கிழக்குப் பார்த்த பிரதான கோபுர வாயில். தலமரம் சண்பகம் என்பதால், தலத்தின் விநாயகருக்கும் சண்பக விநாயகர் என்பது பெயர்.

கோபுர வாயிலின் வழியே உள்ளே நுழைந்தால் முன்னே நிருத்த கணபதி, நந்தி தேவர் அமைந்தருளுகின்றனர். மூன்றாம் பிரகாரத்தில், இடப்புறம் சூரிய தீர்த்தம் அமைந்துள்ளது. சூரிய தீர்த்தத்தின் கரையில் மழுப்பொறுத்த விநாயகர் சன்னிதி அமைந்துள்ளது..  வலப்பக்கம் நூற்றுக்கால் மண்டபமும் உள்ளது.

இரண்டாம் பிரகாரத்தில், சேக்கிழார், அவர் தாயார் அழகம்மையார், தம்பி பாலறாவாயரின் திருவுருவங்கள் அமைந்துள்ளன. சேக்கிழார் திருப்பணி செய்த மண்டபமும் இருக்கிறது. 

நடராச சபை எதிரே நால்வர் சன்னிதியும் அமைந்திருக்கிறது.

மூலவர் கருவறையை அடுத்த முதல் பிராகாரத்தில் மேல்புறம் விநாயகர், சந்திரசேகரர், முருகன், பஞ்சலிங்கம், லட்சுமி போன்றோரின் சன்னிதிகளும் குபேர தீர்த்தமும் அமைந்துள்ளன. மூலவர் சன்னிதி, சோமாஸ்கந்தர் அமைப்பில் அமைந்துள்ளது.. நாகநாதர், முருகன் பிறையணிவாணுதலம்மை, என்று அமைந்திருக்கிறது.

 பிறையணிவாணுதலம்மை சன்னிதியில், நிலவின் வெளிச்சம், கார்த்திகை பௌர்ணமி தினங்களில் விழுமாறு  கட்டப்பட்டிருக்கும் அமைப்பு பிரமிப்பூட்டுகிறது.
கிரிகுஜாம்பிகை கோயில் கொண்டுள்ள தனிக்கோயில் மிக அருகில் இருக்கிறது.

கோயிலின் நிருதி மூலையில், ராகு பகவான் சன்னிதி அமைந்துள்ளது.

பராந்தக சோழ மாமன்னரின் திருப்புதல்வர், யானை மேல் துஞ்சிய ராஜாதித்தரின் சகோதரர், கண்டராதித்த சோழ மாமன்னர் திருப்பணி செய்து கட்டிய கோயில் இது. சேக்கிழார் உள்மண்டபத் திருப்பணியையும், அச்சுதப்ப நாயக்கரின் மந்திரியாக இருந்த ஸ்ரீகோவிந்த தீக்ஷிதர், வெளிமண்டபத் திருப்பணியையும் செய்ததாக, கல்வெட்டுக்கள் கூறுகின்றன. கார்த்திகை மாதம் பிரம்மோற்சவம் நடைபெறுகிறது.

வைகாசி பூசத்தில், சேக்கிழார் பெருமானின் குருபூசை விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றது. 

காலை, குடந்தை கீழ்க்கோட்டம், நண்பகலில் திருநாகேச்சுரம், மாலையில் திருப்பாம்புபுரம் என்று ஒரே நாளில் வழிபடுவது விசேஷமாகக் கருதப்படுகின்றது.

ராகு பகவான்:

நவக்கிரகங்களில், ராகு பகவானும், கேது பகவானும் சாயா கிரகங்கள் என்றே அழைக்கப்படுகின்றார்கள்.. இவர்களது சுழற்சியும், தலைகீழாகவே அதாவது அப்ரதட்சிணமாகக் கணக்கிடப்படுகின்றது..

ராகு பகவான் யோக காரகர் என்று அறியப்படுபவர். 'ராகுவைப் போல் கொடுப்பாரில்லை' என்பது பழமொழி..இவர் ஜாதகத்தில், மிக நல்ல ஸ்தானத்தில் அமைந்தால், அவரது தசை, ஜாதகருக்கு மிக நல்ல பலன்களைக் கொடுக்கும்..

ராகு, கேது இருவருக்கும் ராசி ஆதிபத்தியம் இல்லை.. நட்சத்திர ஆதிபத்தியம் உண்டு.. திருவாதிரை, சுவாதி, சதய நட்சத்திரங்களின் அதிபதி ராகு பகவான்.. இவருக்குரிய‌ தானியம் உளுந்து, ரத்தினம் கோமேதகம், மலர் மந்தாரை. (இள)நீல நிறம் இவருக்குரியது..

இவரது தசா காலம் சுமார் 18 வருடங்கள்.. ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு மாற, சுமார் ஒன்றரை வருட காலம் எடுத்துக் கொள்பவர்.. ராகு கேது பெயர்ச்சி தினத்தில்,  திருநாகேஸ்வரம் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.

ஜாதகத்தில், ராகு பகவானின் ஸ்தான பலம் சரியில்லாதவர்கள், இத்திருக்கோயிலுக்கு வந்து, ஸ்வாமி, அம்பாள், ராகு பகவான் சன்னிதியில் அபிஷேக ஆராதனைகள் செய்து, ராகு பகவானுக்கு நீல வஸ்திரம் சாற்றி அர்ச்சனைகள் செய்து, உளுந்து சாதம் நிவேதனம் செய்து விநியோகிக்க நலமுண்டாகும்..  
நாக தோஷம், காலசர்ப்ப தோஷம், புத்ர தோஷம் உள்ளவர்கள், அவசியம் வழிபட வேண்டிய திருத்தலம் இது!.

யோகிகளும் ஞானிகளும் இத்திருக்கோயிலில் நுழையும் போது, நம் உடலில் நாக ரூபத்தில் உறைவதாக அறியப்படும் சக்தியின் வீச்சை மிக அதிக அளவில் உணருவதாகச் சொல்லப்படுகின்றது..

எழுதியவர் பார்வதி ராமச்சந்திரன்

 

--Geetha Sambasivam (பேச்சு) 09:02, 24 ஆகஸ்ட் 2014 (GMT)

பங்களிப்பாளர்கள்

Geetha Sambasivam

இப்பக்கம் கடைசியாக 24 ஆகஸ்ட் 2014, 09:03 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 1,245 முறைகள் அணுகப்பட்டது.