நவகிரஹத் தலங்கள் --ஆலங்குடி!

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக
திருஆலங்குடி (திருஇரும்பூளை) குருபகவானுக்குரிய திருத்தலம்..

இத்திருத்தலத்தின் 

இறைவன் திருப்பெயர்...காசியாரண்யேஸ்வரர், ஆபத்சகாயர்.

இறைவி திருப்பெயர்... ஏலவார்குழலி, உமையம்மை.

தலமரம்: கருநிறமுள்ள‌  பூளைச் செடி. 

தீர்த்தம்: பிரதான தீர்த்தம் அமிர்த புஷ்கரணி. இதனோடு சேர்த்து, பிரம்ம தீர்த்தம், இலக்குமி தீர்த்தம், இந்திர தீர்த்தம், அக்னி தீர்த்தம், யம தீர்த்தம், நிருதி தீர்த்தம், வருண தீர்த்தம், வாயு தீர்த்தம், குபேர தீர்த்தம், ஈசான தீர்த்தம், சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம்,   ஞான கூபம் கிணறு, பூளை வள ஆறு ஆகிய 15 தீர்த்தங்கள் உள்ளன.

வழிபட்டோர்: விஸ்வாமித்திரர், அஷ்டதிக் பாலகர்கள், அகஸ்தியர், புலஸ்தியர், காகபுஜண்டர், சுகர்பிரம்ம ரிஷி மற்றும் ஆதிசங்கரர்.

தேவாரப் பாடல்கள்; தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை தலங்களில் இது 98வது தலம். அப்பர் பெருமான், இந்தத் திருத்தலத்தை, 
திருவீழிமிழலைத் திருத்தாண்டகத்தில் இணைத்துப் பாடியிருக்கிறார். ஞானசம்பந்தப் பெருமான், 'சீரார் கழலே' என்று துவங்கும் தேவாரப் பதிகங்களைப் (இரண்டாம் திருமுறை) பாடியருளியிருக்கிறார்.

சீரார் கழலே தொழுவீ ரிதுசெப்பீர்
வாரார் முலைமங்கை யொடும் முடனாகி
ஏரா ரிரும்பூளை யிடங்கொண்ட ஈசன்
காரார் கடல்நஞ் சமுதுண்ட கருத்தே.

ஐந்து சோழர் காலக்  கல்வெட்டுக்களை உடைய இந்தத் திருத்தலத்தில் தெற்குக் கோபுரம்  மிகப் பெரியது. இது பஞ்ச ஆரண்யத் திருத்தலங்களுள் ஒன்று.. (ஆரண்யம்= காடு).

பஞ்ச ஆரண்யத் திருத்தலங்களாவன.திருக்கருகாவூர், முல்லைவனநாதர் திருக்கோயில் - முல்லைவனம், 2. அவளிவணல்லூர், சாட்சிநாதர் திருக்கோயில் - பாதிரிவணம், 3. அரதைப்பெரும்பாழி (ஹரித்துவாரமங்கலம்), பாதாளேசுவரர் திருக்கோயில்- வன்னிவனம், 4. இரும்பூளை, ஆபத்சகாயேசுவரர் திருக்கோயில் - பூளைவனம், 5. கொள்ளம்புதூர் ‍ வில்வாராண்யேசுவரர் திருக்கோயில், வில்வவனம்  
 
இந்த ஐந்து திருத்தலங்களையும் முறையே வைகறை, காலை, நண்பகல், சாயரட்சை, அர்த்த சாமம் ஆகிய பூசைக் காலங்களில், ஒரே நாளில் வழிபாடு செய்ய, முக்திப் பேறு கிட்டும் என்பது நம்பிக்கை..

தல வரலாறு:

ஆலமரத்தின் கீழிருந்து, நல்லுபதேசம் அருளிய தக்ஷிணாமூர்த்திக்கு உரிய‌ திருத்தலமாக விளங்குவதாலும், தேவர்களும், அசுரர்களும் திருப்பாற்கடலைக் கடைந்த போது தோன்றிய ஆலகால விஷத்தை, அருந்தி இவ்வுலகனைத்தையும் காத்தருளிய இறைவன் வீற்றிருக்கும் திருத்தலமாதலாலும், இத்திருத்தலம் 'திருஆலங்குடி' என்னும் பெயர் பெற்றது..
இவ்வூரில் விஷத்தால் யாருக்கும் எவ்விதத் தீங்கும் ஏற்படுவதில்லை என்று நம்பப்படுகின்றது.

ஆலங் குடியானை ஆலாலம் உண்டானை
ஆலங் குடியான் என்று ஆர்சொன்னார் - ஆலம்
குடியானே யாகில் குவலயத்தோ ரெல்லாம்
மடியாரோ மண்மீதினில். (காளமேகப் புலவர்)

திருத்தல அமைவிடம்:

வெட்டாற்றங்கரையில் இருந்து சுமார் ஒரு கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இந்தத் திருத்தலம். நீடாமங்கலம் ரயில் நிலையத்திற்கு வடக்கே 7 கி.மீ., தொலைவிலும், கும்பகோணம் மன்னார்குடி (நீடாமங்கலம் வழி) பேருந்து மார்க்கத்தில் கும்பகோணத்தில் இருந்து தெற்கே 17 கி.மீ., தொலைவிலும் இத்திருத்தலம் அமைந்துள்ளது. முசுகுந்த சக்கரவர்த்தியின் அமைச்சரான அமுதோகர் என்பவரால் நிர்மாணிக்கப்பட்ட திருக்கோயில் இது.

காசியில் இறப்பவர்களின் செவியில் சிவபிரான் 'ராம..ராம' என்ற தாரக மந்திரத்தை ஓதுவது போல, இந்தத் திருத்தலத்தில் இறப்பவர்களின் செவியில் இறைவன் பஞ்சாக்ஷர மந்திரத்தை ஓதி, முக்தியளிப்பதாக ஐதீகம்.

திருக்கோயில் அமைப்பு:
ஐந்து நிலைகள் கொண்ட ராஜகோபுரத்துடன் கூடிய ஆலயம் இது..

இத்திருக்கோயில், 'மாதா, பிதா, குரு' என்னும் உயரிய தத்துவத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது..நுழைந்ததும், முதலில் அம்மன் சன்னதி, பின் சுவாமி சன்னதி, அதன் பின்னர் குருபகவானின் சன்னதி என்று வருவதால் இவ்வாறு கூறப்படுகின்றது.

கலங்காமல் காத்த விநாயகர்:
சுந்தரர் பெருமான் இத்திருத்தலத்தை தரிசிக்க வந்த போது, வெட்டாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின் காரணமாக, அவர் வந்த ஓடம் தத்தளித்தது.. அந்த ஓடத்தை, ஆபத்சகாயரே ஓடக்காரராக வந்து கரையேற்றியதாக ஐதீகம். அந்த ஓடம் நிலை தடுமாறிப் பாறையில் மோதிய போது, எவ்வித ஆபத்தும் ஏற்படாமல் காத்ததால், விநாயகருக்கு, 'கலங்காமற் காத்த விநாயகர்' என்று அழைக்கப்படுகின்றார்... தேவர்களுக்கு ஏற்பட்ட துன்பங்களைக் களைந்தமையாலும் அவருக்கு இந்தத் திருப்பெயர் ஏற்பட்டது எனவும் கூறுகின்றனர்.

கலங்காமற் காத்த விநாயகரை வணங்கிய பின், தெற்கு நோக்கிய அம்பிகையைத் தரிசிக்கலாம்.

அம்மை, தவம் செய்து, இறைவனை மணம் செய்து கொண்ட திருத்தலம் இது..

ஆபத்சகாயேசுவரர் கிழக்கு நோக்கிய சன்னதியில் கோயில் கொண்டுள்ளார். ஸ்ரீதக்ஷிணாமூர்த்தியின் சன்னதி, தெற்கு கோஷ்டத்தில் 
அமைந்துள்ளது. ஞானகூபம் என்னும் கிணறும் அமைந்துள்ளது. 

பிரகாரங்களில் இருக்கும் சன்னதிகள்

முருகன், லஷ்மி, நால்வர், சன்னதிகள்,

சப்தலிங்கங்கள் (சூரியேசர்,சோமேசர், குருமோசேசுரர், சோமநாதர், சப்தரிஷிநாதர்,விஷ்ணு நாதர், பிரமேசர் ).

காசிவிசுவநாதர், விசாலாட்சி, அகத்தியர் முதலான‌ சன்னதிகள் அமைந்துள்ளன.

இத்திருக்கோயிலில், இன்னும் பல சன்னதிகளும், வசந்த மண்டபம், திருமாலைகட்டி மண்டபம் முதலான மண்டபங்களும் இருக்கின்றன. சிற்பங்கள் எழில் கூட்டும் சிறந்ததொரு கோயில் இது.

சிறப்பு வாய்ந்த பிற சன்னதிகள்:

சுக்ரவார அம்பிகை: அழகே உருவான அம்பிகை.. அம்பிகையின் திருவிழிகளின் ஆகர்ஷண சன்னதி, சொல்லால் வடிக்க இயலாது. வெள்ளிக் கிழமைகளில் அம்பிகைக்கு சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.

சுந்தரர் பெருமான்: உற்சவ மூர்த்தங்கள் இருக்கும் இடத்தில் சுந்தரர் பெருமான் விக்கிரகம் அமைந்திருக்கிறது. திருவாரூருக்கு ஒரு மன்னனால் இந்தச் சிலை எடுத்துச் செல்லப்பட்டு, பின் மீண்டும் ஒரு அர்ச்சகரால் இந்தச் சிலை திரும்பக் கொண்டு வரப்பட்டது.. அவ்வாறு துணியால் மறைத்துக் கொண்டு வருகையில், அந்த அர்ச்சகர், காவலர்களிடம் இருந்து  தப்பிக்க, அம்மை நோய் கண்ட தன் குழந்தையை எடுத்துச் செல்வதாகக் கூறினார். ஆலங்குடி வந்த போது, சிலைக்கே அம்மை போட்டிருந்ததாகவும், அதனால் அம்மைத் தழும்புகள் இன்னும் சிலையின் முகத்தில் இருக்கின்றன என்றும் கூறுகின்றார்கள்.

ஸ்ரீதக்ஷிணாமூர்த்தி: (குரு பகவான்)

குருபகவான் பரிகாரத் த‌லங்களாக, பல திருத்தலங்கள் கூறப்பட்டாலும், முதன்மையான திருத்தலமாக  விளங்குவது திருஆலங்குடியே. 

ஆங்கீரச மஹரிஷியின் புதல்வரான வியாழ பகவானே தேவர்களின் குரு. பொன்னவன் என்று போற்றப்படும் வியாழ பகவான், முழுமையான சுப கிரகம்.. பார்வை பலம் உள்ளவர்..ஜாதகங்களில் தாம் இருக்கும் இடத்தில் இருந்து ஐந்து, ஏழு, ஒன்பதாம் இடங்களைப் பார்வை செய்பவர்.. தனுசு, மீன ராசிகளின் அதிபதி.. புனர்பூசம், விசாகம், பூரட்டாதி நட்சத்திரங்களின் அதிபதி..

ஒரு ஜாதகருக்கு, கோட்சார ரீதியாக, குரு பலம் இருக்கும் போது, திருமணம் கைகூடும்.. புத்திர பாக்கியம் கிட்டும்.. புத்திர காரகர் இவரே..'குருவருள் இருந்தால் திருவருள் கிட்டும்' என்பது சத்திய வாக்கு.. குருபகவானுக்கு உகந்த நிறம் மஞ்சள், உரிய ரத்தினம் புஷ்பராகம், உகந்த தானியம் கொண்டைக்கடலை,  திசை ‍..வடக்கு, பஞ்ச பூதங்களில்… ஆகாயம், மலர்..முல்லை..

இந்தத் திருத்தலத்தில், குருபகவானின் நேரடி தரிசனத்திற்குப் பதிலாக, ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தியையே குருவாகக் கருதி வழிபடுகின்றனர்.. ஆதிகுருவான சிவபிரானின் திருவடிவமாக, ஆலின் கீழ் அமர்ந்து, சனகாதி முனிவர்களுக்கு உபதேசித்தருளும் ஸ்ரீ தக்ஷிணமூர்த்தியே இங்கு குரு பகவான்..

இவ்வுலகியல் துன்பங்களில் இருந்து விடுபடத் தேவையான ஞானத்தை அருளுகிறார் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி.. பரிபூரண ஞானம் பெற்ற ஒருவன், இவ்வுலகத்தில் ஏற்படும் துன்பங்களால் பாதிக்கப்பட மாட்டான்  பரிகாரத் தலம் என்று சொல்லப்படுவதன் காரணம் இதுவே என்று தோன்றுகிறது....வேண்டும் வரத்தை அருளுவதோடு, உள்ளத்தில் ஞான தீபத்தையும் ஏற்றி வைத்தருளுகிறார் குருபகவான்..

ஜாதகத்தில் குருபகவானின் ஸ்தான பலம் சற்றுக் குறைவாக அமைந்திருப்பவர்கள், ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தியின் சன்னதியில், அபிஷேக ஆராதனைகள் செய்து, மஞ்சள் நிற வஸ்த்ரம் சாற்றி, முல்லை மலர் மாலைகள் அணிவித்து, 24 நெய் தீபங்கள் ஏற்றி, 24 முறை சுற்றி வந்து நமஸ்கரிக்க, குரு பகவானின் அனுக்கிரகத்தால், வேண்டும் வரங்கள் கிடைக்கப் பெறுவார்கள்.

ஒவ்வொரு வியாழக் கிழமையும் இங்கு விசேஷ தினமே.. மாசி மாதம், மூன்றாம் வியாழக் கிழமை, 'மஹா குரு வாரமாக' அனுசரிக்கப்படுகின்றது..அன்று, பக்தர்கள் குருபகவானுக்கு லட்டுக்கள் நிவேதனம் செய்து விநியோகிக்கின்றனர்.. குருபகவான் ஒரு ராசியிலிருந்து, இன்னொரு ராசிக்குச் செல்ல ஒரு வருட காலம் ஆகும்.. ஆகவே, ஒவ்வொரு வருடமும் குருப் பெயர்ச்சி தினம் இங்கு விசேஷமாகக் கொண்டாடப்படுகின்றது..

சுமார் பதினான்கு தலைமுறைகளாகப் புண்ணியப் பலன் நிறையப் பெற்றவர்களே இத்திருக்கோயிலுக்கு வந்து தரிசனம் செய்ய இயலும் என்று சொல்லப்படுகின்றது.. குரு பார்க்க, கோடி தோஷம் நிவர்த்தியாகும்.. குருபகவானை வணங்கி, ஞான ஒளி பெறுவோம்!.


எழுதியவர் திருமதி பார்வதி ராமச்சந்திரன்

 

--Geetha Sambasivam (பேச்சு) 08:50, 24 ஆகஸ்ட் 2014 (GMT)

பங்களிப்பாளர்கள்

Geetha Sambasivam

இப்பக்கம் கடைசியாக 24 ஆகஸ்ட் 2014, 08:53 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 2,040 முறைகள் அணுகப்பட்டது.