நவகிரஹத் தலங்கள் --திருக்கஞ்சனூர்

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக
திருக்கஞ்சனூர்(சுக்கிர பகவானுக்கு உரிய திருத்தலம்).

இறைவன் திருப்பெயர்: அக்னீஸ்வரர்.

இறைவியின் திருப்பெயர்: கற்பகாம்பிகை

தல மரம்: பலாச மரம். செம்மஞ்சள் நிறப் பூங்கொத்தையும், தட்டையான விதைகளையும் உடைய புரசு தான் பலாச மரம் என்று அழைக்கப்படுகின்றது.

தீர்த்தம்: அக்கினி தீர்த்தம், பராசர தீர்த்தம்.

வழிபட்டோர்: பராசர முனிவர், பிரம்மா, அக்கினி, கம்சன், சந்திரன், விருத்தகாளகண்டன், சித்திரசேனன், மார்க்கண்டேயர், சுக்கிர பகவான் ஹரதத்தர் முதலானோர்.

தேவாரப் பாடல்கள்:

மூவிலைவேற் சூலம்வல னேந்தி னானை
மூன்றுசுடர்க் கண்ணானை மூர்த்தி தன்னை
நாவலனை நரைவிடையொன் றேறு வானை
நால்வேத மாறங்க மாயி னானை
ஆவினிலைந் துகந்தானை அமரர் கோவை
அயன்றிருமா லானானை அனலோன் போற்றுங்
காவலனைக் கஞ்சனூ ராண்ட கோவைக்
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந் தேனே(திருக்கஞ்சனூர் திருத்தாண்டகம். அப்பர் சுவாமிகள்):  
 
தலபுராணம்:

இத்திருத்தலத்தின் வேறு பெயர்கள், பலாசவனம், பராசரபுரம், பிரமபுரி, அக்கினிபுரம், கம்சபுரம், முத்திபுரி ஆகியன.

கம்சன் இந்தத் திருத்தலத்து இறைவனை வழிபட்டு, தன் நோய் நீங்கப்பெற்றதன் காரணமாக, இந்தத் தலத்துக்கு 'கஞ்சனூர்' என்ற பெயர் ஏற்பட்டது..

வேறு சிறப்புகள்:

1.பராசரர், அக்னீஸ்வரரை வழிபட்டு, சித்தப் பிரமை நீங்கப் பெற்றார்..

2.அக்னி பகவானின் சோகை நோய் தீர்த்த எம்பிரான் ஆகையால், அக்னீஸ்வரர் என்ற திருநாமம் ஏற்று அருள் புரிகிறார்.

3.மாண்டவ்ய ரிஷியின் புத்திரர்கள், இங்கு வழிபட்டு, மாத்ருஹத்தி தோஷம் நீங்கப் பெற்றனர்.

4.பிரம்ம தேவர், இத்திருத்தலத்தில், இறைவனது திருமணக் கோலக் காட்சி கிடைக்கப் பெற்றார்.

5. கலிக்காம நாயனார் திருமணம் நிகழ்ந்த தலம் இது..

6.மானக்கஞ்சாற நாயனார், ஹரதத்தர் முதலான சிறப்பு மிக்க பெரியோர்கள் வழிபட்டு, அருள் பெற்ற தலம் இது.

7. இத்திருத்தலத்தில், நடராச மூர்த்தி, முத்தித் தாண்டவம் செய்தருளினார். பராசரமுனிவர், இந்தத் தாண்டவத்தைக் காணும் பேறு பெற்றார்.

8. சோழர், விஜயநகர மன்னர்கள் காலத்திய கல்வெட்டுக்களில் இத்தலம் 'விருதராச பயங்கர வளநாட்டு நல்லாற்றூர் நாட்டுக் கஞ்சனூர் ' என்றும்; இறைவன் பெயர் 'அக்னீஸ்வரம் உடையார் ' என்றும் இருப்பதாகச் சொல்கிறார்கள்.

திருக்கோயில் சன்னதிகள்:

மூலவர், உயர்ந்த பாணலிங்கத் திருமேனியுடன் கூடிய சுயம்பு மூர்த்தி..

ஐந்து நிலைகள் கொண்ட எழிலார்ந்த ராஜகோபுரத்தைக் கடந்து திருக்கோயிலின் உள்ளே புகுந்தால் அழகான உள் மண்டபம் வருகிறது.. அங்கு இடப்பக்கம் விநாயகர், வலப்பக்கம் விசுவநாதர், அம்பிகையின் சன்னதிகள்.

சுவாமி சன்னதிக்குச் செல்லும் வழியில், இடது பக்கம், வௌவால் நெத்தி மண்டபம் உள்ளது. அங்கு மயூரசுப்பிரமணியர், மஹாலக்ஷ்மி சன்னதிகள் உள்ளன.

இங்கு மூலவரான அக்னீஸ்வரரே, சுக்கிரபகவானின் அருளை வேண்டி வழிபடப்படுகின்றார்.. சுக்கிரபகவானுக்கு சிலாரூபமான சன்னதி இல்லை.. வெளியே பிரகாரத்தில் உற்சவ மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

மகா மண்டபத்தில் பைரவர், சூரியன், சனிபகவான், சந்திரன், நவக்கிரக சன்னதி, நால்வர் சன்னதிகள் உள்ளன.

ப்ருகு முனிவரின் புத்திரர் சுக்கிர பகவான்.. பெரும் சிவபக்தரான இவர், காசியில் ஒரு சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து, நீண்ட காலம் தவம் செய்து, சிவனருள் பெற்றார்..அமிருந்த சஞ்சீவினி மந்திரத்தை சிவபிரான் அருளால் கற்ற இவரது பக்திக்கு மெச்சி, இவரை நவக்கிரகங்களுள் ஒருவராகச் செய்தார் எம்பிரான்..

அசுர குருவான சுக்கிராச்சாரியார், களத்திர காரகர்.. பரணி,பூரம், பூராடம் நக்ஷத்திரங்களின் அதிபதி.. இந்த நக்ஷத்திரங்களின் சிறப்புக்களில் ஒன்று இவற்றுக்கு 'தனுஷ்டை' தோஷம் கிடையாது.. அதாவது, இந்த நக்ஷத்திரங்களில் இறைவன் திருவடி அடைவோர் தனுஷ்டை தோஷத்தினால் பாதிக்கப்படமாட்டார்கள்.

ரிஷப,துலாம் ராசிகளின் அதிபதி.. இவருக்கு உகந்தவை.. நிறங்களில் வெண்ணிறம், தானியங்களில் மொச்சை, மலர்களில் வெண் தாமரை, உலோகங்களில் வெள்ளி, கிழமைகளில் வெள்ளிக் கிழமை, ரத்தினங்களில் வைரம்.

அசுர குருவாக இருப்பதால், தன்னை நம்பி வந்தவர் எப்படிப்பட்டவராயினும் கைவிடாது காப்பாற்றுவார் சுக்ரன் என்பது ஐதீகம்.. சுக்ர தசை, மிக அதிக ஆண்டுகள்(20 வருடங்கள்) ஒரு ஜாதகருக்கு இருக்கும்..

பிருகு முனிவரின் புத்திரராதலால், 'பார்க்கவன்' என்றும் 'கவி' என்றும் அழைக்கப்படும் சுக்கிர பகவான் அருள் இருந்தால், உரிய காலத்தில், வாழ்வில் பெற வேண்டிய நலங்கள் அனைத்தும் பெறலாம். ஒரு ஜாதகருக்கு, சுக்கிரனின் ஸ்தான பலம் சரியில்லை எனில், அவர் கஞ்சனூர் வந்து அக்னீஸ்வரருக்கு அபிஷேகங்கள் செய்து, வெண்பட்டு வஸ்திரம் சாற்றி, வெண் தாமரை மலர்களால் அர்ச்சனை செய்து, வெண்பொங்கல்/ தயிர்சாதம் நிவேதனம் செய்ய வேண்டும். பிரசாதங்களை விநியோகிக்க வேண்டும்.

பொதுவாக, வெள்ளிக் கிழமைகளில், சுக்ர ஓரை எனப்படும் காலை ஆறிலிருந்து ஏழு மணிக்குள், நெய் தீபங்கள் ஏற்றி, மஹாலக்ஷ்மி வழிபாடு செய்ய, பணத்தட்டுப்பாடு இல்லா நல்ல வாழ்க்கை அமையும். மனதில் அமைதி கூடும்.

கஞ்சனூரில் வாசுதேவர் எனும் வைணவ பக்தரின் மகனாக அவதரித்தவர் மகான் ஹரதத்தர்.. சிவபக்திச் செல்வராக விளங்கிய இவர்,மிகச் சிறு வயதிலேயே சிவனருள் பெற்றார்.. பழுக்கக் காய்ச்சிய இரும்பு நாற்காலியில் அமர்ந்து சிவபரத்வத்தை நிரூபித்தார்..

பஞ்சாக்ஷர மகிமையையும், ருத்ராக்ஷ மகிமையையும் உலகறியச் செய்தார் இந்த மகான்..   

அவ்வூரில் ஒரு பக்தர் இருந்தார்.  அவர் எப்பொழுதும் ஐந்தேழுத்தை உச்சரிப்பவர்.. ஒரு நாள் அவர்  புல்கட்டைக் கீழே போட்ட போது, அறியாமல் ஒரு பசுவின் கன்றின் மீது போட்டு விட்டார். அது உடனே இறந்து விட்டது.. இதனால் ஏற்பட்ட 'கோ(பசு) ஹத்தி' தோஷத்தைப் போக்கிக் கொள்ள, அவர் ஹரதத்தரை அணுகினார்.

ஹரதத்தர், அவர் புல்கட்டைக் கீழே போட்ட போது, ஐந்தெழுத்தை உச்சரித்துக் கொண்டே போட்டதால், அதைக் கேட்டுக் கொண்டே உயிர் விட்ட பசு நற்கதி அடைந்து விட்டதாகத் தெரிவித்தார்.. இதை நம்பாத அவ்வூரார் முன்பாக, ஹரதத்தர் சொல்படி, அந்த பக்தர், காவிரியில் நீராடி, கல்நந்திக்கு ஒரு கைப்பிடி புல் அளித்தார். அவ்வாறு செய்யும் போது, '"கல் நந்தி புல் சாப்பிடுமானால் பஞ்சாட்சரத்தால் தோஷம் நிங்கும் " என்று சொல்லிப் புல்லைத்தர, அந்த நந்தியும் உண்டதாகக் கூறுகின்றனர்.

சுரைக்காய் பக்தர் என்ற ஒரு பக்தரையும், இவ்வாறே இறைவன் சோதித்து, அருள் புரிந்தார். சுரைக்காய் விற்கும் அவரிடம் ஒரு நாள் ஒரே ஒரு சுரைக்காய் எஞ்சியிருந்தது..அதை விதைக்கு என்று அப்படியே வைத்துவிட்டார். 

அந்நிலையில் இறைவன் அவரிடம் விருந்தினராக வந்து உணவிடுமாறு கேட்டார்.  அச்சமயம், விருந்தினருக்கு, சுரைக்காய் கறிக்கு ஆகாது என்றெண்ணி பக்தர் கலங்கினார். அப்போது இறைவன்  "ஒரு பாதி விதைக்கு, ஒரு பாதி கறிக்கு " என்று அசரீரியாக அருள, அவ்வாறே செய்து அருள் பெற்ற அந்தப் பக்தரின் பெயர் சுரைக்காய் பக்தர் என்றே வழங்கப்படுகின்றது.   

திருத்தல அமைவிடம்..

இந்தத் திருத்தலம் திருவாவடுதுறைக்கு அருகில் உள்ளது.. சூரியனார் கோயிலுக்கு சுமார் ஆறு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது கஞ்சனூர். கும்பகோணத்திலிருந்தும் சென்று வரலாம்..பேருந்து வசதிகள் உள்ளன.
 

எழுதியவர் திருமதி பார்வதி ராமச்சந்திரன்

 

--Geetha Sambasivam (பேச்சு) 08:55, 24 ஆகஸ்ட் 2014 (GMT)

பங்களிப்பாளர்கள்

Geetha Sambasivam

இப்பக்கம் கடைசியாக 24 ஆகஸ்ட் 2014, 08:57 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 1,341 முறைகள் அணுகப்பட்டது.