நவகிரஹத் தலங்கள் --திருநள்ளாறு

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக
திருநள்ளாறு:(சனீஸ்வர பகவானுக்குரிய திருத்தலம்)

இறைவன் திருப்பெயர்: தர்ப்பாரண்யேஸ்வரர், திருநள்ளாற்றீசர்

இறைவி திருப்பெயர்: போகமார்த்த பூண்முலையாள், பிராணாம்பிகை

தல மரம்:   தர்ப்பை

தீர்த்தம்: பிரம்ம தீர்த்தம், வாணி தீர்த்தம்,அன்ன தீர்த்தம், அகத்திய தீர்த்தம்,நள தீர்த்தம், நளகூப தீர்த்தம்.

வழிபட்டோர்: திருமால், பிரமன், இந்திரன், அகத்தியர், புலஸ்தியர், அர்ஜூனன், நளச் சக்கரவர்த்தி, அஷ்ட திக்பாலகர்கள்,  அஷ்ட‌ வசுக்கள், போஜன், முசுகுந்தச் சக்கரவர்த்தி
தேவாரப் பாடல்கள்: 

சம்பந்தர் தேவாரம் -1. பாடக மெல்லடிப் பாவை, 2. போகமார்த்த பூண்முலையாள்(பச்சைப் பதிகம்) 3. ஏடுமலி கொன்றையர, 4. தளிரிள வளரொளி.

அப்பர்  பெருமான் -1. உள்ளாறாததோர் புண்டரிகத் திரள், 2. ஆதிகண்ணான் முகத்திலொன்று.

சுந்தரர் பெருமான் -  செம்பொன் மேனிவெண் ணீறணி….

அமைவிடம்:

காரைக்காலில் இருந்து 5 கி.மீ தொலைவில் உள்ள திருத்தலம். பேரளத்திலிருந்து கிழக்காக, 18 கி.மீ தொலைவில் இருக்கிறது. இத்திருத்தலத்திற்கு வந்து செல்ல,கும்பகோணத்தில் இருந்தும்  பேருந்து வசதிகள் இருக்கின்றன. 

தல புராணம்:

நள மகாராஜன் வழிபட்ட திருத்தலமாதலால் 'நள்ளாறு' எனப் பெயர் பெற்றது. இதற்கு வேறொரு பெயர்க்காரணமும் கூறுகின்றனர்.அரசலாறு, வாஞ்சாறு ஆகிய இரண்டு ஆறுகளுக்கும் இடையே இருப்பதால்  'திருநள்ளாறு' என்று அழைக்கப் படுவதாகக் கூறுவதுண்டு.

சனிபகவானால், பல இடையூறுகளுக்கு ஆளாகி, தன் நாடு, மனைவி, மக்கள் அனைவரையும் இழந்த நள மகாராஜன், இங்கு வந்து வழிபட்டு, இழந்த அனைத்தையும் மீண்டும் பெற்றான்..

அதனால், நள சரிதம் படிப்பது, சனி பகவானின் பேரருளைப் பெற்றுத் தரும் என்பது நம்பிக்கை.. என்காலத்தில் உன்சரிதம் கேட்டாரை யான் அடையேன்!” என்று சனிபகவான் நளனுக்கு வரம் அருளியதாகப் புராணம். வரத்தை அளித்த சனிபகவான், “கட்டுரைத்துப் போனான்” என்று புகழேந்திப் புலவர் நளவெண்பாவில் கூறுகிறார். ‘கட்டுரைத்தல்’ என்றால், உறுதியாகக் கூறுதல். ஆதலால், சனிபகவான் நளசரித்திரம் படிப்பவரையும் கேட்பவரையும் காப்பார்.

இங்கு நளன் நீராடிய தீர்த்தமே நள தீர்த்தம். இதை இறைவனே நளனுக்காக அருளினார் என்பது நம்பிக்கை. நளதீர்த்தத்தை நளனுக்காக இறைவன் அருள் செய்தது வைகாசி மாதம். புனர்பூச நக்ஷத்திரம் ஆகும். அந்நாள் திருநள்ளாற்றில் மிக விசேஷமான வழிபாட்டு நாளாகும். இது தவிர மாசி மகம்,மார்கழி பௌர்ணமி (திருவாதிரை) ஆகியவையும் விசேஷ நாட்களாகும்..

திருநள்ளாறு முசுகுந்தச் சக்கரவர்த்தி ஸ்தாபித்த சப்த விடங்கத் தலங்களுள் ஒன்று..சப்தம் என்றால் ஏழு.. டங்கம் என்றால் உளி.. விடங்கம் அதாவது உளி கொண்டு செதுக்காத சுயம்பு மூர்த்திகளால் உருவான திருத்தலங்கள் என்பதால் சப்த விடங்கத் திருத்தலங்கள் என்று பெயர்.. இத்திருத்தலங்களில் தியாகராஜரே வெவ்வேறு பெயரில் அருளுகிறார்... ஒவ்வொரு திருத்தலத்திற்கும் ஒவ்வொரு வித நடனமும் உண்டு..

அவ்வகையில், இத்திருத்தலத்தில் தியாகராஜருக்கு, நகவிடங்கர் என்று திருப்பெயர்.. நடனம் உன்மத்த நடனம்.

மற்ற திருத்தலங்களும் நடனங்களும்.....

1.திருவாரூர் - வீதிவிடங்கர் - அசபா நடனம் (மேலும் கீழுமாக ஏறியும், இறங்கியும் முன்னும் பின்னுமாகச் சென்று வந்தும்   ஆடுவது.)

2. நாகப்பட்டினம் - சுந்தரவிடங்கர் - பாராவாரகரங்க நடனம் (அலைகள் அசைவது போன்ற நடனம்.)

3. திருக்காறாயில் - ஆதிவிடங்கர் - குக்குட நடனம் (கோழி நடப்பது போன்ற நடனம்.)

4. திருக்கோளிலி - அவனிவிடங்கர் - பிருங்க நடனம் (மலருக்குள் வண்டு  செல்வது போன்ற நடனம்.)

5. திருவாய்மூர் - நீலவிடங்கர் - கமல நடனம் (  குளத்திலிருக்கும் தாமரை மலர் காற்றில் அசைந்தாடுவது போன்ற நடனம்.)

6. திருமறைக்காடு - புவனிவிடங்கர் -  ஹ‌ம்ஸபாத நடனம் (   அன்னம் நடப்பது போன்று ஆடும் நடனம்.)

மரபு விக்கியில் சப்த விடங்கத் திருத்தலங்கள் குறித்த மேலதிகத் தகவல்களுக்கு….


திருஞானசம்பந்தர், மதுரையில் சமணரோடு நடத்திய அனல் வாதத்தில், இத்திருத்தலத்தில் இயற்றிய திருப்பதிகமான 'போகமார்த்த பூண்முலையாள்' என்று துவங்கும் பதிகத்தை நெருப்பில் இட, அது  எந்த வித பாதிப்புக்கும் உள்ளாகாமல் வெளிவந்தது.. அதனால் அதற்கு 'பச்சைப் பதிகம்' என்று பெயர். இந்தப் பதிகத்தைப் பாடி, சனிபகவானை வழிபடுவோருக்கு, 'சனி தோஷம்' உண்டாகாது என்பது நம்பிக்கை.

தேவாரப் பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்களில் இது 52வது தலம். இங்கு தர்ப்பாரண்யேஸ்வர ஸ்வாமி சுயம்பு மூர்த்தியாக அருளுகிறார். இங்கு நந்தியும் பலி பீடமும் சற்றே நகர்ந்து இருப்பதைக் காணலாம். தர்ப்பாரண்யேஸ்வரர் திருமேனியில், தர்ப்பை முளைத்த தழும்பு இன்றளவும் இருப்பதைக் காண முடியும்.

இங்கிருக்கும் விநாயகருக்கு சொர்ணவிநாயகர் என்று திருப்பெயர்.. இவரை வழிபட, செல்வச் செழிப்பு ஏற்படும் என்பது நம்பிக்கை..

இங்கிருக்கும் சனிபகவான் சன்னிதி பிரசித்தி பெற்றது... முதலில் சிவபிரானை வணங்கி, பின்னரே சனிபகவானை வழிபட வேண்டும்..பலர் அறியாத ஒரு விஷயம்.. இத்திருக்கோயிலில் ராஜகோபுரத்தினுள் நுழைந்ததும், முதல் படியைத் தொட்டு வணங்க வேண்டும்.. காரணம், நள மகாராஜா இத்திருக்கோயிலினுள் நுழையும் போது, சனி பகவான் அவரை விட்டு நீங்கி, வாசல் படியிலேயே தங்கி விட்டார். பின்னர் சிவபிரான், சனி பகவானுக்கு அருளி, தம் திருக்கோயில் முகப்பில் தனிச்சன்னிதி கொள்ளுமாறு அருளினார். ஆகவே   படியைத் தொட்டு வணங்க வேண்டும். 

திருக்கோயில் வழிபடும் முறை:

கோயிலுக்கு சற்றுத் தொலைவில் உள்ள நள தீர்த்தத்தில் நீராடி, தீர்த்தக் கரையில் உள்ள நளவிநாயகர், பைரவரை வணங்க வேண்டும். பிறகு, கோயிலுக்கு வந்து, கங்கா தீர்த்தத்தை(கிணறு) தரிசித்து, பின் ராஜகோபுரத்துள் நுழைய வேண்டும்..முதற்படியை வணங்கி, முதல் பிரகாரத்துள் நுழைய வேண்டும்.. இங்கு நள சரிதம் சித்திரங்களாக வரையப்பட்டிருக்கிறது.. இந்தச் சித்திரங்களை பக்தியுடன் பார்வையிடுவது நள சரிதத்தைப் படிப்பதற்குச் சமம் என்று சொல்கிறார்கள்.. அதன் பின் தர்ப்பாரண்யேஸ்வரரையும், தியாகராஜர் சன்னிதியில் இருக்கும் மரகத இலிங்கத்தையும் வழிபட வேண்டும்.. அதன் பின், பிராகரத்தில் அமைந்திருக்கும் துர்க்கை, சண்டிகேஸ்வரர், அர்த்தநாரீஸ்வரர் சன்னிதிகளை வழிபட வேண்டும்.. பின் வெளிப்பிரகாரம் சென்று, கட்டைக் கோபுர வாயிலில் அம்பிகை பிராணேஸ்வரியை வழிபட வேண்டும்.. அதன் பின்னரே சனிபகவானை தரிசிக்க வேண்டும்.. இதுவே முறையான வழிபாடாகும்…

மற்ற சிறப்புகள்:

இந்தத் திருத்தலம் 'சோமாஸ்கந்த மூர்த்தி' எனும் இறைவடிவம் திருமாலால் உருப்பெற்ற திருத்தலமாகும்..

திருமால், தர்ப்பாரண்யேஸ்வரரை வழிபட்டு, மன்மதனை மகனாகப் பெற்றார். அதனால், முருகப் பெருமானை, சிவபிரானுக்கும் உமையம்மைக்கும் இடையே அமைத்து, 'சோமாஸ்கந்த மூர்த்தத்தை' அமைத்தார். இந்த மூர்த்தத்தை இந்திரன் வழிபட்டு, ஜெயந்தன், ஜெயந்தி என்ற இரு மக்களை அடைந்தான். அதனால்,  குழந்தை பாக்கியத்திற்குரிய திருத்தலமாகவும் இது விளங்குகிறது.

இத்திருக்கோயிலில், நள தீர்த்தத்தில் நீராட, சனி தோஷம் நீங்கும் என்று கூறப்படுவதைப் போல், பிரம்ம தீர்த்தத்தில் நீராட, முன் வினை, சாபங்கள் நீங்கும், வாணி தீர்த்தத்தில் நீராட, மூடனும் கவி பாடுவான் என்று சொல்லப்படுகின்றது. முன்னொரு காலத்தில், உலகிற்கு ஏதேனும் பெரும் கேடு சூழ இருந்தால், இந்த மூன்று தீர்த்தங்களில் உள்ள நீர் சிவப்பு நிறமாக மாறுமாம்.. இதை ஓர் அறிகுறியெனக் கொண்டு பரிகார பூஜைகள் செய்து நலம் பெறுவார்களாம்.

இங்கு அருளும் சனீஸ்வர பகவான் அனுக்கிரக மூர்த்தி.. நள மகாராஜனின் வேண்டுகோளின்படி, கிழக்கு நோக்கி அருள் பாலிக்கும் சனீஸ்வர பகவான், சிவனருள் பெற்றவர் என்பதால், தம்மை வழிபடும் பக்தர்களை, தொல்லைகளிலிருந்து விடுவித்து அருளுகின்றார்.

இங்கு பலி பீடமும் நந்தியும் சற்று ஒதுங்கியிருக்கின்றன என்று பார்த்தோம்..  இதன் காரணம் பற்றி ஒரு நிகழ்வு சொல்லப்படுகின்றது.. ஒரு இடையன், திருக்கோயிலுக்கு, அரச கட்டளையின்படி பால் அளந்து கொடுத்து வந்தான்..  ஆனால் திருக்கோயில் கணக்கர், அந்தப் பாலை தம் இல்லத்திற்கு அனுப்பியதோடு, இதை வெளியிட்டால், இடையனுக்குக் கேடு செய்வதாக அச்சுறுத்தினார். பொய்க்கணக்கும் எழுதினார். அரசனுக்கு இந்தச் செய்தி தெரிந்தது.. அரசன் உண்மையறியாது இடையன் மேல் கோபம் கொள்ள, இறைவன் சினம் கொண்டு, சூலத்தை ஏவினார்.. அந்த சூலத்திற்கு வழிவிடவே, நந்தியும் பலி பீடமும் ஒதுங்கின.. சூலம் கணக்கர் தலையை வாங்கியது.. 

இறைவன், இடையனுக்கு காட்சி தந்து அருளினார். கோயிலின் தென்புறம் இடையனார் கோயில் உள்ளது.. இங்கு கணக்கன், இடையன், அவன் மனைவி ஆகியோர் திருவுருவங்கள் உள்ளன.

சனிப்பெயர்ச்சி, இங்கு ஒரு பெரும் விழாவாகக் கொண்டாடப்படுகின்றது.. சனி பகவான், கோட்சார ரீதியாக, இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு இடம் மாறுவார்.. அப்போது, சனி பகவானுக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகள் செய்யப்படுகின்றன.. தங்கக் காக வாகனத்தில், தங்கக் கவசத்துடன், சனி பகவானின் திருவுலா நடைபெறுகிறது.. இலட்சக்கணக்கான மக்கள் இதில் கலந்து கொள்கிறார்கள்.

சனீஸ்வர பகவான்.. 
இவர் சூரியபகவானுக்கும் சாயாதேவிக்கும் பிறந்த புதல்வர். இவரது இயற்பெயர் ச்ருதகர்மா.

ஜோதிட ரீதியாக, சனி பகவானின் முக்கியத்துவத்தை, இப்போது பார்க்கலாம்.. மகர, கும்ப ராசிகளின் அதிபதி சனிபகவான்.. பூசம், அனுஷம், உத்திரட்டாதி நக்ஷத்திரங்களின் ஆதிபத்தியம் உள்ளவர்..இந்த நக்ஷத்திரங்களில் பிறந்தவர்களுக்கு, பிறந்தது முதலே சனி மஹா தசை துவங்கும்.. மேஷத்தில் நீசமும், துலாத்தில் உச்சமும் அடைகிறார்.

ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசியை அடைய மிக அதிக காலம்(சுமார் இரண்டரை வருடங்கள்) எடுத்துக் கொள்பவர் சனி பகவான்.. ஆகையால் இவரை மந்தன் என்றும் குறிப்பதுண்டு..இதன் காரணமாகவே இவரது திருப்பெயர் சனைச்சரன்  என்பதாகவும் கூறுவதுண்டு...

இவரது பார்வை மிகுந்த தீட்சண்யமுடையது.. ஒரு ஜாதகத்தில், தாம் இருக்கும் இடத்தில் இருந்து, 3, 7, 10ம் இடங்களைப் பார்வை செய்பவர்.. இவரை தரிசிக்கும் போது, நேருக்கு நேர் தரிசிக்காமல் சற்று ஒதுங்கி நின்றே தரிசனம் செய்வது வழக்கம்.

சனி பகவானின் தசா காலம் பத்தொன்பது வருடங்கள். இது தவிர, கோட்சார ரீதியாக அவர் ஒவ்வொரு ராசிக்கும் இடம் மாறும் போது,  ஜென்ம ராசிக்கு 12, 1, 2 ம் இடங்களில் அவர் வரும்   போது ஏழரைச் (மொத்தம் ஏழரை வருடங்கள்) சனி என்றும், ஜென்ம ராசிக்கு 4ல் வரும் போது அர்த்தாஷ்டமச் சனி என்றும்,  7ல் வரும் போது கண்டச் சனி என்றும் 8ல் வரும் போது அஷ்டமச் சனி என்றும் சொல்லப்படுகின்றது..

சனி பகவான் கர்ம காரகன். ஆயுள் காரகனும் அவர் தான்.. நள்ளாற்றின் அம்பிகையின் திருப்பெயர், பிராணேஸ்வரி  என்றிருப்பதன் பொருள் இதனால் அறியலாம்.அம்மையும் அப்பனும் சனிபகவானுக்கு அருளியமை இதனால் விளங்கும். ..

சனி பகவான், அவரவர் செயல்களுக்கு ஏற்ப பலன்களைத் தருபவர்.. கர்ம வினைகளின்படி, தப்பாமல், அவரது தசா காலத்திலும், கோட்சார காலத்திலும் பலன்கள் கிடைக்கச் செய்பவர்.. பெரும் துன்பத்தைத் தருவது என்பதெல்லாம் அவரது குணம் இல்லை. அவரவர் வினைகளுக்குத் தக்கவாறு பலன் அளிப்பவரே அவர்.. சனி பகவானின் பாதிப்பிற்கு தெய்வங்களும் தப்பியதில்லை என்கின்றன புராணங்கள்..

மானிடப் பிறவி எய்தியதன் பலன் அடைய வேண்டி, உளப்பாங்கைத் திருத்தும் முகமாகவே அவர் பலன் அளிக்கிறார்.. அவரது தசா காலம், கோட்சார ரீதியிலான அஷ்டமச் சனி, ஏழரை வருடச் சனி போன்றவை முடிவடையும் காலத்தில் அளவற்ற நற்பலன்களைத் தருவார்.

சனிபகவானுக்கு உகந்த நிறம் நீலம். கருப்பு என்றும் சொல்லப்படுகின்றது.. உலோகங்களில் இரும்பு, ரத்தினங்களில் நீலக்கல், நவதானியங்களில் எள், மலர்களில் கருங்குவளை இவருக்கு உகந்தது. இவரது வாகனம் காகம். கழுகு என்றும் சில புராணங்களில் சொல்லப்படுகின்றது. இவருக்கு அதி தேவதை இவரது சகோதரனான யமதர்மராஜரே.. தர்மம் தவறாது பலன்களைக் கொடுப்பவர் சனிபகவான்.
ஜாதகத்தில், சனி பகவானின் ஸ்தான பலம் சரியாக அமையப் பெறாதவர்கள்,  சனி தசை, மற்றும் கோட்சார ரீதியாக சனி பகவானால் பாதிக்கப்பட்டவர்கள், திருநள்ளாறு வந்து முறையாக வழிபாடுகள் செய்து, சனி பகவானுக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகள் செய்து, கரு நீல வஸ்திரம் அல்லது கருப்பு பட்டு வஸ்திரம் சாற்றி, கருங்குவளை மலர்களால் அர்ச்சனை செய்து, எள் அன்னம் நிவேதனம் செய்து, பிரசாதத்தை விநியோகிக்க நலமுண்டாகும்.. ஏழைகள், அனாதைகள், முதியோர், மாற்றுத் திறனாளிகள் ஆகியோரை மதித்து உதவ, சனி பகவான் அருள் மழை பொழிவார்

எழுதியவர் பார்வதி ராமச்சந்திரன்

 
--Geetha Sambasivam (பேச்சு) 08:59, 24 ஆகஸ்ட் 2014 (GMT)

 


பங்களிப்பாளர்கள்

Geetha Sambasivam

இப்பக்கம் கடைசியாக 24 ஆகஸ்ட் 2014, 09:00 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 3,189 முறைகள் அணுகப்பட்டது.