நாகபஞ்சமியும் மன்னார்சாலை நாகராஜா கோயிலும்

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

 
நாக பஞ்சமியும் ம ண்ணார்சாலை நாகரஜா கோவிலும்


ஆகஸ்ட் 14ம் தியதி இந்துக்களின் முக்கிய பண்டிகையான "நாக பஞ்சமி". இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் பாம்புகளை தெய்வமாக வழிபடும் பாம்புகளுக்கான திருவிழா. சமீப காலமாக இந்த திருவிழாக்களின் முக்கியத்துவம் குறைந்து வருகிறது. காரணம் என்னவென்றால் பாம்புகளை வைத்து வேடிக்கை காட்டும் பாம்பாட்டிகளுக்கு பிராணிகள் நல சங்கத்தினரால் விதித்திருக்கும் தடை உத்தரவு. ஆனாலும் இந்த நாக பஞ்சமி தினத்தன்று, இந்த தடைகளையும் மீறி பாம்பாட்டிகள் நல்ல பாம்புகளை ஒரு நம்பிக்கையின் தெய்வீக சின்னமாக கருதி பொது இடங்களிலும் கோவில்களின் முன்பிலும் பாம்பிற்கு பக்தர்களின் சார்பாக பாம்பிற்கு பாலூட்டுவதை இன்றும் காணலாம். வட மாநிலங்களில் (மஹாராஷ்டிரா, மத்யப்ரதேசம், குஜாராத், ராஜஸ்த்தான்) இந்த நாகபஞ்சமி தினத்தை ஒரு முக்கிய பண்டிகையாக கருதி நாகராஜாவை வணங்குவதை வழக்கமாக க்கொண்டு கொண்டாடிவருகின்றனர். தென் மாநிலமான தமிழ்நாடு, ஆந்த்ரா, கர்நாடகா மற்றும் கேரளம் இதற்கு விதி விலக்கல்ல. சிவபெருமானின் கழுத்தை அலங்கரிக்கும் இந்த நல்ல பாம்பினை "நாகராஜா" என்று பக்தர்கள் அழைக்கின்றனர். இதன் காரணத்தினால் என்னவோ பாம்பை வணங்குவதால் சிவ பெருமானின் அருளையும் ஆசியையும் பெறுவதாக இந்து மத பக்தர்கள் நம்புகிறார்கள்.


பாம்புகளின் ராஜா என்று சொல்லப்படும் நாகராஜாவிற்கு இந்தியா மற்றும் ஸ்ரீலங்கா, தாய்லாண்ட், இந்தொனேஷியா போன்ற தென் கிழக்கு ஆசிய நாடுகளிலும் கோவில்கள் நிற்மாணிக்கப் பட்டுள்ளன. இந்த பாம்பு கோவில்களில் மிக முக்கியத்துவம் வாய்ந்த்து கேரளாவிலிருக்கும் "மண்ணார்சாலை" என்ற இடத்திலிருக்கும் நாகராஜா கோவில். இந்த நாகராஜா கோவில் 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்று கேரளத்திலிருக்கும் சில சரித்திர வல்லுனர்கள் கூறுவது வழக்கம். ஆனால் சில சரித்திர குறிப்புகளின் படி , இந்த கோவில் நிற்மாணம் செய்து 800 ஆண்டுகள் ஆகிறது என்று நம்பப்படுகிறது. இந்தக் கோவிலில் 30000 த்துக்கும் மேற்பட்ட கருங்கல்லினால் உருவாக்கப்பட்ட நல்ல பாம்பின் உருவச்சிலைகள் இருக்கின்றன.


இந்த கோவிலின் பின்னணியில் ஒரு புராதன கதை ஒன்று உள்ளது. இந்த கோவிலின் அருகில் ஒரு பழய நம்பூதிரி அந்தண குடும்பத்தை சேர்ந்த புராதன வீடு (இல்லம்) ஒன்று இருக்கிறது. காலபோக்கில், இந்த புராதன வீடு நவீன மயமாக்க பட்டுள்ளது. இந்த வீட்டின் பெயர் "இரிங்கடப்பள்ளி வீடு" என்பதாக அழைக்கப்படுகிறது. இந்த வீட்டின் பூர்வீக குடும்பத்தினர்கள் "மூலக் குடும்பம்" என்று அழைக்கபடுகிறார்கள் என்றும், முனிவர் பரசுராமரால், இந்த கோவிலில் பூஜை மற்றும் நிர்வாகம் செய்வதற்காக நியமிக்கபட்டது என்றும் நம்பப்படுகிறது. பழைய கட்டுக்கதைகளின் வாயிலாக கேள்விப்படுவது என்னவென்றால் " இந்த மூலக்குடும்பத்தின் ஒரு பெண் திருமணமாகி பல ஆண்டுகள் குழந்தை பாக்கியம் இல்லாமல் மிக்க வேதனையுடன் பரசுராமரை வணங்கி தனக்கு குழந்தை பாக்கியம் அளிக்குமாறு வேண்டினாள். மஹாவிஷ்ணுவின் அவதாரம் என்று கருதப்படும் பரசுராமர் அந்த பெண்மணியின் வேண்டுகோளுக்கு செவி சாய்த்து "பெண்ணே நீ சிவபெருமானின் கழுத்தை அலங்கரிக்கும் பாம்புகளின் தலைவரான "வாசுகியை" வணங்கி தவமிருந்தால் உனக்கு குழந்தை பிறக்கும்" என்று அருள் வாக்கு கூறினார். அந்த பெண்மணியும் வாசுகியை பூஜை செய்து தவமிருந்தார். தவத்தின் முடிவில் வாசுகி அவள் முன்பில் தோன்றி " பெண்ணே உனக்கு 5 தலையுடய பாம்பு ஒன்று உன்னுடைய மூத்த பிள்ளையாக பிறப்பான் அந்த பாம்பிற்கு மரணமே கிடையாது அவன் என்றும் சிரஞ்சீவியாக இந்த உலகம் இருக்கும் வரை இருந்து உன்னையும், உன்னுடைய வமிசா வழியினரையும் பக்தர்களையும் பாதுகப்பான் என்றும் அதன் பிறகு இளைய பிள்ளையாக ஒரு மகன் பிறப்பான் என்றும் ஆசீர்வதித்தார். அதன் படி முதல் குழந்தையாக ஒரு 5 தலை நாகபாம்பு ஒன்றும், அதன் பிறகு, ஒரு மகனும் பிறந்தனர். மகனும் பாம்பும் ஒருமிக்க வளர்ந்து வந்தனர். அந்த பெண்மணியோ தன்னுடைய மகனுக்கு திருமணம் செய்ய ஆசைப்பட்டாள். தன்னுடைய ஆசையை மூத்த மகனான நாகராஜனிடம் கூறினாள்.


நாகராஜனோ தனக்கு இந்த மனித வாழ்க்கையில் ஈடுபாடில்லை என்றும், மனித வாழ்க்கைக்கு ஒரு முற்றுப் புள்ளி வைத்து விட்டு விலகி தனியாக இருக்க ஆசைப்படுகிறேன் என்று கூறவும் அந்த பெண் நாகராஜன் எங்கும் போகவேண்டாம், இந்த வீட்டின் நிலவறையில் இருந்துகொள் என்றும் நான் இருக்கும் வரை என் கண் முன்னால் இருக்க வேண்டும் என்றும் வேண்டிக்கொண்டாள். நாகராஜன் தன்னுடய தம்பியிடம் " இந்த நிலவறையின் அருகில் ஒரு கோவில் கட்டி, அதில் நகராஜாவின் உருவசிலயை நிறுவி, அதற்கு வேண்டிய பூஜை முறைகளையும் சொல்லிவிட்டு, கோவிலின் புனிதத்தன்மையை காக்குமாறு கூறிவிட்டு நிலவறையில் போய் யோக நித்திரையில் ஈடுபடத்துவங்கினார். அதற்கு முன்பு தன் தாயை நமஸ்கரித்து " அம்மா நான் இந்த குடும்பத்தையும் அதன் தலைமுறையையும், என்னுடைய பக்தர்களையும், இந்த உலகம் இருக்கும் வரை காப்பாற்றிக்கொண்டிருப்பேன். உனக்கு என்னை பார்க்கவேண்டும் என்று தோன்றினால், நிலவறைக்கு வந்து பார்க்கலாம்" என்ரு கூறிவிட்டு நிலவறைக்கு சென்று, கதவை மூடிக்கொண்டார். இன்றும் இந்த கோவிலை அடுத்திருக்கும் நிலவறையில் நாகராஜன் இருப்பதாக பக்தர்க்ள் நம்புகிறார்கள்.


பல நூற்றாண்டுகளாக நம்பூதிரி குடும்பத்தை சேர்ந்த ஒரு நபரை த்தவிர யாருமே அந்த நிலவறைக்குள் சென்றதாக சரித்திரமில்லை. அந்த குடும்பத்தின் மூத்த பெண்மணி என்று சொல்லப்படும் "வலிய அம்மா" விற்கு மட்டுமே நிலவறைக்கு செல்லும் அனுமதியுண்டு. நாகராஜருக்கு பூஜை செய்யும் உரிமையும் அந்த "வலிய அம்மா" விற்கு மாத்திரமே உண்டு. கோவில் கடவுளான நாகராஜனுக்கு அடுத்தபடியாக முக்கியத்துவம் வாய்ந்தவர் இந்த "வலிய அம்மா". இன்றைக்கும் இது நடைமுறையிலுள்ளது. "வலிய அம்மா" வின் மரணத்திற்கு பிறகு, அந்த குடும்பத்தின், மூத்த பெண்மணி, அந்த பொறுப்பை ஏற்றுகொள்கிறார். அப்படி அந்தப் பெண் திருமண வாழ்க்கையிலிருந்தால், அதற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, குடும்ப வாழ்க்கையிலிருந்து விலகி, தன்னுடய பொறுப்பை ஏற்றுக்கொண்டு "வலிய அம்மா" ஆகி பொறுப்பை ஏற்றுக்கொள்கிறார்.


சென்ற1920ம் ஆண்டு முதல் 1993ம் ஆண்டு வரை "வலிய அம்மா" வாக இருந்த மூத்த தாயின் பெயர் "சாவித்திரி அந்தர்ஜனம்". தன்னுடய 14ம் வயதில் இந்த வலிய அம்மா பொறுப்பை ஏற்றுக்கொண்டார். திருமண வாழ்க்கையே வேண்டாம் என்று ஒதுக்கிவிட்டு, தன்னுடய வாழ் நாள் முழுவதையும் நாகராஜவிற்கே அற்பணித்தார். இப்போது இந்த வலிய அம்மா பொறுப்பில் இருக்கும் பெண்மணியின் பெயர் "உமாதேவி அந்தர்ஜனம்". 1993ம் ஆண்டு இந்த பொறுப்பை ஏற்றுக்கொண்டு, இன்றும் பணியாற்றி வருகிறார். கோவில் பூஜை செய்வதோடல்லாமல், விசேஷ ப்ரார்த்தனைகளையும், பக்தர்க்ளின் வழிபாடுகளையும் கோவிலின் நிர்வாகத்தையும் மேற்பார்வை செய்து வருகிறார்.


குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இந்த கோவிலுக்கு வந்து, "உறுளி ப்ரர்த்தனை" என்ற வழிபாட்டு ப்ரார்த்தனை செய்வது இன்றும் நடந்துவருகிறது. நூற்றுகணக்கான பக்தர்க்ள் தங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லாத குறையை சொல்லி "வலிய அம்மா" வை வேண்டி, தங்களுடைய உறுளி ப்ரார்த்தனையை நிறைவேற்றுகிறார்கள். உறுளி என்பது ஒரு நல்ல கனமுள்ள வட்ட வடிவமுள்ள வெங்கலப் பாத்திரம். குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகள் இந்த உருளி பாத்திரத்துடன் "வலிய அம்மா" விடம் தங்களுடய வேண்டுதலை சொல்லவேண்டும். வலிய அம்மா அந்த உறுளி பாத்திரத்தை புஜை செய்து அதற்கென்று நிர்ணையிக்கபட்ட ஒரு அறையில் உறுளியை கவிழ்த்தி வைத்துவிடுவார். அந்த தம்பதியர், தங்களுக்கு குழந்தை பிறந்த பிற்பாடு, குழந்தையுடன் கோவிலுக்கு வந்து "வலிய அம்மா" வை பார்த்து, வெள்ளியில் ஒரு பாம்பு உருவத்தை செய்து காணிக்கையாக கொடுத்த பிற்பாடு, வலிய அம்மா அந்த வெள்ளி பாம்பு உருவத்திற்கு புஜை செய்து, அந்த கவிழ்த்தி வைத்திருந்த உறுளியை நிமிர்த்தி வைத்து ப்ரார்த்தனையை முடித்து தம்பதியையும் குழந்தையையும் ஆசீர்வதிப்பார். இப்போது உள்ள கணக்குப்படி, வருடத்திற்கு 5000 உறுளி ப்ரார்த்தனைகள் நடை பெற்று வருகிறது.


வருடம் ஒரு முறை, சிவராத்திரிக்கு அடுத்த நாள், "வலிய அம்மா" நிலவறைக்கு சென்று நாகராஜனை வழிபடுவதாக கூறுகிறார்கள். இன்றும் அந்த நிலவறையில் நாகராஜன் இருந்துகொண்டு பக்தக்ளுக்கு அருள் பாலிப்பதாக நம்புகிறார்கள். கேரள மக்கள் நாகராஜனை "அப்பூப்பன்" என்று பக்தியோடு அழைக்கிறார்கள்.


மனித வாழ்க்கையே நம்பிக்கையை அடிப்படையாக கொண்டது. நம்பினால் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு.நீலகண்டன் (செம்பூர் நீலு)
மும்பை


--Geetha Sambasivam 07:15, 18 செப்டெம்பர் 2012 (UTC)பங்களிப்பாளர்கள்

Geetha Sambasivam

இப்பக்கம் கடைசியாக 18 செப்டெம்பர் 2012, 09:07 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 1,501 முறைகள் அணுகப்பட்டது.