நுட்பத்தின் அற்புதம்

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக


மாலன்

நாத்திகர்களும் காண வேண்டிய கலைக் கோவில்


கல் புன்னகைப்பதைப் பார்த்திருக்கிறீர்களா? புன்னகை என்றால் காதல் கசியும் புன்னகை அல்ல. வெற்றிக் களிப்பில் விரிந்த புன்னகை அல்ல. இதழோரத்தில் ஏளனம் சிந்தும் இகழ்ச்சிப் புன்னகை அல்ல. நாணிச் சிவந்த முகத்தில் ஓடிக் கடந்த புன்னகை அல்ல. மனநிறைவில் மலர்ந்த புன்னகை. ஆயிரம் பேருக்குச் சோறு போட்டு அவர்கள் பசியாறுவதைப் பார்க்கும் போது மனம் மகிழ்ந்து உதிர்க்குமே ஒரு புன்னகை, அந்தத் தாய்மை மிளிரும் புன்னகை.

அப்படி ஒரு புன்னகையைப் பார்க்க வேண்டுமானால் நீங்கள் அன்னப்பூரணியை சந்திக்க வேண்டும். இடக் கையில் அமுத கலசம் தாங்கி, இடையைச் சற்றே ஒடித்து தாராசுரத்தில் சிலையாய் நிற்கிறாள் அவள். அந்தச் சிலையை செதுக்கிய மனதில் காவிரியைப் போல் கற்பனை வெள்ளம் புரண்டிருக்க வேண்டும். கையில் இருக்கும் கலசத்தைச் சுண்டிப் பார்த்தால் காலிப் பாத்திரத்தைத் தட்டும் போது கேட்கும் ஓசை. அமுதத்தைத்தான் அத்தனை பேருக்கும் வார்த்தாயிற்றே, அப்புறம் கலசம் காலியாகத்தானே இருக்கும்? அவள் கீரிடத்தின் மேல் பகுதியைத் தட்டிப்பார்த்தால் பாதி நிறைந்த பாண்டம் போல் ஓர் ஓசை. கீரிடத்திற்குள் தலை, தலைக்கு மேல் சற்று இடைவெளி எனச் சிந்தித்திருக்கிறான் சிற்பி. காலைத் தட்டிப்பார்த்தால், அப்பா! அது முழுக் கல். அவ்வளவு உறுதியாய் நிற்கிறாள் அவள்.

அந்தச் சிலையை வைஷ்ணவி என்றும் சொல்கிறார்கள். பாற்கடலைக் கடைந்த போது வெளி வந்த அமுததத்தை விஷ்ணு பெண் வடிவம் எடுத்து வந்து பரிமாறியதாகப் புராணம் சொல்கிறது. பெண் வடிவம் எடுத்த விஷ்ணுதான் வைஷ்ணவி.

சோழர்கள் சிவ நேசச் செல்வர்கள். திரும்பின திசையெல்லாம் லிங்கம் அமைந்த கோவில்களைக் கட்டி, சிவனே என்று இருந்தவனைத் தென்னாடு உடைய சிவனாக நிறுவிய அரசர்கள் அவர்கள்தான். தாராசுரமும் சோழர்கள் கட்டியதுதான். ஆனால் அந்தச் சிவன் கோவிலில் வைஷ்ணவி! அந்தச் சிற்பத்தைக் கண்டு பிரமித்து இது நம்மிடம்தான் இருக்க வேண்டும் என ஆசைப்பட்டுத்தான் அன்னபூரணியைக் கொண்டு வந்து முக மண்டபத்தில் நிறுத்தியிருக்க வேண்டும் இரண்டாம் ராஜராஜன்.

ராஜேந்திர சோழனின் பேரன், முதலாம் ராஜராஜனின் கொள்ளுப் பேரன், இந்த இரண்டாம் ராஜராஜன்.அவனுடைய பாட்டன் பூட்டன் எல்லாம் பிரம்மாண்டங்களில் புத்தியைச் செலுத்தினார்கள். ராஜராஜன் கட்டிய பெரிய கோயில், ’என்னை அடிச்சுக்க எவண்டா இருக்கீங்க?’ என்று ஆயிரம் ஆண்டுகளாகக் கம்பீரமாக கேட்டுக் கொண்டு வானத்தை வருடியபடி நிற்கிறது. அவன் மகன் ராஜேந்திரன் அசகாய சூரன். அப்பனுக்குச் சற்றும் தப்பாமல் பிறந்திருக்கிறேன் என கங்கை கொண்ட சோழபுரத்தில் ஒரு கோயிலைக் கட்டி அசத்துகிறான். அவன் மகன் மூன்றாம் குலோத்துங்கன் திருபுவனத்தில் தன் வடநாட்டுப் போர்களின் வெற்றிச் சின்னமாக ஒரு கோயிலை எழுப்பி நிறுத்தியிருக்கிறான். அந்த வம்சத்தில் வந்த இரண்டாம் ராஜராஜன் தாராசுரத்தில் கடவுளின் வீடாக ஒரு கலைக் கோயிலைக் கட்டித் தந்திருக்கிறான்.

ஆனால் அந்த ராஜராஜனுக்கும் இந்த இரண்டாம் ராஜராஜனுக்கும்தான் எத்தனை வித்தியாசம்!. அவன் பிரம்மாண்டத்தின் பிரியன். இவன் நுட்பத்தின் ரசிகன்.

தென்னிந்தியாவிலேயே பெரிய சிவலிங்கத்தை ராஜராஜன் பெரிய கோவிலில் நிறுவினான் என்றால் ஒரு நெல் மணி அளவே இருக்கக் கூடிய முருகனை இரண்டாம் ராஜராஜன் செதுக்கி வைத்திருக்கிறான். சிவன் பார்வதிக்கு இடையே செல்லப் பிள்ளையாய் அமர்ந்திருக்கும் அந்த சோமாஸ்கந்தனை தாராசுரம் கோவிலின் முக மண்டபத்தில் பார்க்கலாம்.

கி.பி. பனிரெண்டாம் நூற்றாண்டில் (1145-1173க்குள் கட்டப்பட்டிருக்க வேண்டும்) கட்டப்பட்ட இந்தக் கோயில் கருவறை, அர்த்தமண்டபம், முகமண்டபம், ராஜ கம்பீரன் திருமண்டபம் என நான்கு கட்டுக்களைக் கொண்டிருக்கிறது. நான்கும் இடைவெளியின்றி ஒன்றை ஒன்று தொட்டுக் கொண்டு நிற்கின்றன.

கட்டிடங்களிலும் சரி, கட்டிடங்களை அமைத்திருப்பதிலும் சரி கற்பனை ததும்பி நிற்கிறது.

ராஜ கம்பீரன் மண்டபம் என்பது குதிரைகள் இழுத்துக் கொண்டு ஓடுகிற ஒரு தேர். முன்னங்கால்களைத் தூக்கிக் கொண்டு பாய்கிறது குதிரை. சக்கரத்தின் ஆரக்கால்களைச் சிறிது நேரம் உற்றுப் பார்த்தால் அவை சுழல்வது போல் தோன்றும் வகையில் வரிவரியாக அதைச் செதுக்கி இருக்கிறார்கள். (சிதம்பரத்தின் நிருத்த சபையும் கோனார்க்கின் சூரியன் கோவிலும் கூட தேர் வடிவில் அமைந்தவைதான். ஆனால் அவை தாராசுரத்திற்குப் பிறகு சுமார் நூறாண்டுகளுக்குப் பின்னர் உருவானவை)

ராஜ கம்பீரன் திருமண்டபத்தின் தூண்களை உட்கார்ந்த நிலையில் இருக்கும் யாளிகள் தாங்கி நிற்கின்றன, யாளி என்ற கருத்தாக்கமே கற்பனையின் குழந்தைதான். யானையின் துதிக்கையும் சிங்கத்தின் முகமும் காளையின் காதுகளும் கொண்ட விசித்திர மிருகம் அது. கிடைத்த இடத்தில் எல்லாம் உளிகள் கற்பனையச் சிந்தியிருக்கின்றன அல்லது ஒரு கதையச் செதுக்கியிருக்கின்றன. ராஜ கம்பீரன் மண்டபத்தின் கூரையைக்கூட அவர்கள் விட்டு வைக்கவில்லை.

முக மண்டபம் என்பதுதான் சிற்பக் கூடம். ஆறு வரிசைகளில் 48 தூண்கள் அந்த மண்டபத்தைத் தாங்கி நிற்கின்றன. எப்படிப் பார்த்தாலும் –நேர் கோட்டில் பார்த்தாலும் சரி, மூலைக் கோட்டில் சாய்வாகப் பார்த்தாலும் சரி, ராணுவ வீரர்கள் போல் ஒரே ஒழுங்கில் அவை நிற்கின்றன. ஒரு சதுரத்தில் அப்படி ஒரு ஒழுங்கைக் கொண்டு வருவது சுலபம். ஆனால் நம்மாட்கள் இங்கே அதை ஒரு செவ்வகத்தில் கொண்டு வந்து, தம்பி நாங்கள் கற்பனையில் மட்டுமல்ல, கணிதத்திலும் கிங்குடா என்று சொல்லாமல் சொல்லிச் சிரிக்கிறார்கள். முக மண்டபத்துத் தூண்கள் முழுதும் மினியேச்சர் எனப்படும் நுண் சிற்பங்கள். சுமார் ஓரடிக்கு அரையடிக்குள் அசாத்தியமான கைவேலையைக் காட்டியிருக்கிறார்கள் சிற்பிகள்.

பொடி நடையாகப் பிரகாரத்தைச் சுற்றி வந்தால் ஆச்சரியங்களை அள்ளித் தெளித்திருக்கிறார்கள். ஒரு புறம் பார்த்தால் யானை, இன்னொரு கோணத்தில் பார்த்தால் பசு என இரண்டையும் ஒரே சிற்பத்தில் கொண்டு வந்திருக்கிறார்கள், அதே போல ஒரே உருவத்தில் நான்கு பெண்கள், வட்டமாகச் சுழலும் கழைக்கூத்தாடிகள் எனப் பார்க்க ஏராளம் இருக்கிறது. மறக்காமல் மேற்கு மூலையில் சில நிமிடம் நின்று பாருங்கள். அங்கே சிற்பங்கள் இல்லை. நவீன ’சிமிண்ட் ஜாலி’களைப் போல ஐந்து சாளரங்கள் இருக்கின்றன. கல்லால் ஆன ஜன்னல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வடிவில் அமைந்த சாளரங்கள். கருவறையின் வெளிச் சுவர்களில் நாயன்மார்கள் தங்கள் கதையைச் சொல்லிக் கொண்டு நிற்கிறார்கள்.

கருவறையை அமைத்திருக்கும் கற்பனை பிரமிக்க வைக்கிறது. ஒரு தாமரைத் தடாகத்தில் மிதக்கும் தெப்பம் போல் கருவறையைக் கற்பனை செய்திருக்கிறார்கள். குளத்தின் சுவர்களைக் குறிப்பது போல் சிறு தடுப்புக்கள், அவற்றின் உள்ளே நீர் வந்து விழுந்து தேங்க வசதி. கருவறையின் அடித்தளத்தில் தாமரை இதழ்கள்(கல்லில்தான்) ‘குளச் சுவரை’ச் சுற்றி ஒரு அடி விட்டத்தில் பிரம்மாண்ட அகல் விளக்குகள். எண்ணை ஊற்றி திரி போட்டு ஏற்றி வைத்தால் தடாகத்துத் தண்ணீரில் அவற்றின் ஜோதி பிரதிபலிக்கும்.

ஆனால் நம் சமகாலத்து மக்களுக்குக் கற்பனையை ரசிக்கும் மனமோ, சிற்பத்தின் நுட்பங்களை வியக்கும் திறனோ, எப்பேர்ப்பட்ட வம்சத்தின் வாரிசுகள் நாம் என்ற வரலாற்றுப் பெருமிதமோ இல்லை கலைத் தூண்களைத் தோய்க்கிற கல்லாக மாற்றுவதும் சிற்பங்களைச் சிதைப்பதுமான கைங்கரியங்கள்தான் நம்முடையது. நல்ல வேளையாக யுனஸ்கோ தலையிட்டு இந்தக் கலைக் கோயிலைக் காப்பாற்றியிருக்கிறது. மனித குலத்தின் பெருமைக்குரிய பாரம்பரியப் பொக்கிஷங்கள் என அது பட்டியலிட்டுப் பராமரித்து வருபவற்றில் இதுவும் ஒன்று;

கோயிலை விட்டு வெளியே வந்தபோது என்னை ஒரு அற்பனாக உணர்ந்தேன். இந்தச் சாதனைக்கு முன்னால் அந்த நெல் மணி அளவு உள்ள மினியேச்சர் சிற்பம் போல என்னை உணர்ந்தேன். அதே நேரம் என் மூதாதையார்கள் குறித்து ஒரு கர்வமும் எழுந்தது. என்ன கற்பனை, என்ன நுட்பம்! எங்கே போயிற்று எல்லாம் என ஒரு கேள்வி விஸ்வரூபம் எடுத்து என்னை விளாசியது.
பூவினுள் பதுமம் போலும், புருடருள் திருமால் போலும் என விரியும் பழம் பாடல் ஒன்று ’கலைகளில் ஞானம் போலும்’ என்று போகிற போக்கில் சொல்லிக் கொண்டு போகிறது கலையை ஞானம் என்று கருதிய ஒரு தலைமுறை இருந்தது. கலை பொழுதுபோக்காகத் திரிந்தது எப்போது?

கேள்விகள் என்னை மொய்க்க வண்டியில் ஏறினேன், தாராசுரம் என்ற பெயர்ப்பலகை என்னைக் கடந்தது. என் கேள்விக்கான விடையை அந்தப் பலகை சொல்லிச் சிரித்தது. இரண்டாம் ராஜராஜன் இந்தக் கோவிலூருக்கு வைத்த பெயர் ராஜராஜேஸ்வரம். அது ராஜராஜபுரமாகத் திரிந்து, ராராபுரமாகித் தாராசுரமாக மாறித் தங்கிவிட்டது, காலம் எல்லாவற்றையும் திரிக்கும்.

அன்னபூரணி மன நிறைவோடு சிரிக்கிறாள். கலைக் கோவிலோ காலத்தைப் பார்த்துக் கர்வத்தோடு சிரிக்கிறது
எங்கிருக்கிறது?

கும்பகோணத்திலிருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது.

எப்படிப் போவது?

சென்னை மற்றும் தமிழகத்தின் பல ஊர்களிலிருந்து கும்பகோணத்திற்கு பேருந்து, ரயில் வசதிகள் இருக்கின்றன. கும்பகோணத்திலிருந்து நகரப் பேருந்து, ஆட்டோ, டாக்சிகள் கிடைக்கும்

நினைவில் கொள்க:
கோயில் பகல் பனிரெண்டு மணியிலிருந்து மாலை 4 மணிவரை கோயில் மூடியிருக்கும். கோயில் பிராகரத் தளம் முழுவதும் கருங்கல்லால் ஆனது என்பதால் அதிகாலை வேளைகளில் அல்லது மாலைவேளைகளில் செல்வது நல்லது. இல்லையென்றால் உள்ளங்கால் கொப்பளித்துவிடும்.

இந்திய தொல்பொருள் ஆராய்ச்சித்துறையால் அங்கீகரிக்கப்பட்ட கைடுகள் கிடைப்பார்கள். அவர்கள் உதவியோடு சுற்றிப் பார்த்தால் பல நுட்பமான விஷயங்கள் தெரியவரும்.


--Ksubashini 12:26, 25 ஜனவரி 2013 (UTC)

பங்களிப்பாளர்கள்

Ksubashini

"http://heritagewiki.org/index.php?title=நுட்பத்தின்_அற்புதம்&oldid=12079" இருந்து மீள்விக்கப்பட்டது
இப்பக்கம் கடைசியாக 25 ஜனவரி 2013, 12:30 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 1,408 முறைகள் அணுகப்பட்டது.