பகுப்பு:கோயில்கள்

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

திருமுல்லை வாயில்  தலபுராணம்


சென்னையில் உள்ள அம்பத்தூரை அடுத்து இருக்கும் திருமுல்லை வாயிலில் மாசிலாமணீஸ்வரர் கொடியிடை நாயகி கோயில் உள்ளது. 


இந்தக் கோயிலில் உள்ள விசேஷங்கள்:-

கோபுர வாயிலில் உள்ளே நுழைந்தவுடன் எதிரே வினாயகப் பெருமான் கட்சி தருவார்.

நந்தி மாசிலாமணீஸ்வரர் சன்னிதியில் ஈசனுக்கு எதிர்ப்புறம் நோக்கி இருக்கும்.

அந்த நந்தி அருகே ஒரு முல்லைக் கொடி படர்ந்து இருக்கும். முல்லைக்கொடி அருகே விளக்கேற்றி வழிபடுவர்.

மாசிலாமணீஸ்வரர் சன்னிதியில் முன்னால் இரு பெரிய வெள்ளெருக்கு மரம் கட்டிப்பிடிக்க முடியாத அளவு பருமனாக இருக்கும்.

இந்த வெள்ளெருக்கு மரத்தைக் கட்டிப்பிடித்து வேண்டுதல் செய்தால் அப்படியே பலிக்கும் என்று கூறுவர்.

இந்தக் கோயிலின் தல புராணத்தை ஒட்டியே அந்த ஊருக்கு திரு முல்லைவாயில் என்று பெயர் வரக் காரணம்.

தாயார் பெயர் கொடியிடை நாயகி,

பௌர்ணமி நன்நாளில் வெள்ளிக்கிழமையாகவும் அமைந்தால் இந்த தலத்தில் இருக்கும் கொடியிடை நாயகியையும், திருவொற்றியூரில் உள்ள வடிவுடை நாயகியையும், , மேலூரில் உள்ள திருவுடை நாயகியையும் ஒரு சேர தரிசித்தால் பெரும் புண்ணியம் என்பது வழக்கம். இங்கும் இறைவன் தி்ரு மேனியில் லிங்கத்தில் வெட்டுண்ட வடு தெரிவதால் வருடம் முழுவதும் சந்தனக் காப்பு இருக்கும். வருடத்தில் ஒரு நாள் ,அல்லது ஆருத்ரா தரி்சனம் போன்ற நாட்களில் மட்டும் சந்தனம் நீக்கி இருக்கும் கோலத்தைக் காண முடியும்

இங்கு வேட்டையின் பொருட்டு வந்த தொண்டைமான் வேந்தனது யானையின் காலில் முல்லைக் கொடி சுற்றிக் கொண்டது. அதனை வேந்தன் வாளினால் வீசினான். அது பொழுது இறைவர் தலையில் வாள் பட்டதனால் குருதி வெளிப்பட்டதைக் கண்ட மன்னன் அங்கே தோண்டவும் இறைவன் வெளிப்பட்டு அவர்க்கு அருள் செய்தருளினார். இச்செய்தி,

” சொல்லரும் புகழான் றொண்டைமான் களிற்றைச்
சூழ்கொடி முல்லையாற் கட்டிட்டு
எல்லையில் இன்பமவன்பெற வெளிப்
பட்டருளிய விறை வனேயென்றும்
நல்லவர் பரவுந் திருமுல்லை வாயில்”

என்னும் இவ்வூர்ப்பதிகம் பத்தாம் திருப்பாடலின் அடிகளால் அறியக் கிடக்கின்றது, இத்தலம் முருகப் பெருமானால் பூசிக்கப்பட்டது. சோழன், காமதேனு, வசிட்டர் இவர்கள் வழிபட்டுள்ளனர். சுவாமி சந்நிதியில் இரண்டு எருக்கந் தூண்கள் இருக்கின்றன.
இறைவர்:- மாசிலாமணி ஈசர். இறைவி:- கொடியிடை நாயகி.


கல்வெட்டு:

See the Annual Reports on South Indian Epigraphy for the year 1904, No. 662- 684.)
இத்திருக்கோயிலில் சோழமன்னர்களில், பரகேசரிவர்மன் உத்தமசோழன், முதலாம் இராசேந்திர சோழன், மூன்றாங் குலோத்துங்கன், மூன்றாம் இராசராசன் இவர்கள் காலங்களிலும்; பாண்டிய மன்னர்களில் ஜடாவர்மன் திரிபுவனச் சக்கரவர்த்தி பாண்டியதேவன் காலத்திலும்; விசயநகர வேந்தர்களில் ஹரிஹரராயர் II, இரண்டாம் தேவராயருடைய தம்பி பிரதாப தேவராயர், வீரப்பிரதாபபுக்க ராயர், வீரப்பிரதாப மல்லிகார்ச்சுன தேவமகாராயர் இவர்கள் காலங்களிலும் செதுக்கப்பட்ட கல்வெட்டுக்கள் இருக்கின்றன. இவைகளன்றி, பார்த்திவேந்திரவர்மன் காலத்திலும் பொறிக்கப்பட்ட இரண்டு கல்வெட்டுக்கள் உண்டு.
மழவரையர் மகளாரும், கண்டராதித்த பெருமாள் தேவி யாரும், ஆகிய செம்பியன்மாதேவியார், புழற்கோட்டத்து அம்பத்தூர் நாட்டு அம்பத்தூர் ஊராரிடமிருந்து நிலம் வாங்கி, இத் திருமுல்லை வாயில் கோயிலுக்கு உத்தமசோழ தேவரின் பதினான்காம் ஆட்சி யாண்டில் கொடுத்துள்ளனர். மண்டபத்துத் தூணில் உள்ள முதலாம் இராசேந்திரசோழ தேவன் கல்வெட்டு, அந்த மண்டபம் கட்டப் பட்டதைக் குறிப்பிடுகின்றது. வட திருமுல்லைவாயில் ஜெயங் கொண்ட சோழ மண்டலத்துப் புழற்கோட்டத்துக்கானப்பேரூர் நாட்டுக்கு உட்பட்டிருந்தது என்பதை ஜடாவர்மன் சுந்தரபாண்டிய தேவனின் பத்தாம் ஆண்டுக் கல்வெட்டுத் தெரிவிக்கின்றது. அம் மன்னனது 18ஆம் ஆண்டுக் கல்வெட்டு புழற்கோட்டம் விக்கிரம சோழவளநாடு என்னும் பெயர் எய்தியதைப் புலப்படுத்துகின்றது.

அன்புடன்
தமிழ்த்தேனீ

இவ்வகையில் தற்போது ஊடகங்கள் யாதும் இல்லை.

"http://heritagewiki.org/index.php?title=பகுப்பு:கோயில்கள்&oldid=3843" இருந்து மீள்விக்கப்பட்டது