படிக்காசுநாதர் திருக்கோவில்

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

 அருள்மிகு படிக்காசுநாதர் திருக்கோவில்


                                                                                              
T 500 346.jpg


மூலவர் : படிக்காசுநாதர் ( சொர்ணபுரீஸ்வரர்)

உற்சவர் : சோமாஸ்கந்தர்

அம்மன்/தாயார் : அழகம்மை

தல விருட்சம் : வில்வம்

தீர்த்தம் : அமிர்தபுஷ்கரிணி

ஆகமம்/பூஜை : சிவாகமம்

பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்

புராண பெயர் : அரிசிற்கரைபுத்தூர், சிறுவிலிபுத்தூர்

ஊர் : அழகாபுத்தூர்

மாவட்டம் : தஞ்சாவூர்

மாநிலம் : தமிழ்நாடு

பாடியவர்கள்:


நால்வர்

தேவாரப்பதிகம்

அரிசிலின் கறை மேலனி யார்தரு
புரிசை நந்திருப் புத்தூர்ப் புனிதனைப்
பரிசொடும் பரவிப் பணிவார்க் கெலாம்
துரிசில் நன்னெறி தோன்றிடுங் காண்மினே.கும்பகோணம்

.-திருநாவுக்கரசர் தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 66வது தலம்.


தல சிறப்பு:                                              
400


இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். பொதுவாக பெருமாள்தான் சங்கு சக்கரம் வைத்தபடி அருள்பாலிப்பார். ஆனால் இத்தலத்தில் உள்ள முருகன் சங்கு, சக்கரம் வைத்தபடி அருள்பாலிக்கிறார். நாயன்மார்களில் ஒருவரான புகழ்த்துணையார் இத்தலத்தில் அவதரித்தவர்

.

இங்கு மூலவர் சன்னதியின் மேல் உள்ள கோபுரம் 3 நிலைகளைக் கொண்டது. இத்தலவிநாயகர் சொர்ண விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.


முன்மண்டபத்தில் புகழ்த்துணை நாயனார், தன் மனைவி லட்சுமியுடன் காட்சி தருகிறார். அருகில் சுந்தரர், மனைவி பரவை நாச்சியாருடன் இருக்கிறார். சொர்ணவிநாயகர், தனிச்சன்னதியில் இருக்கிறார். இவரை வணங்கியபின்பே, சிவனை வழிபட வேண்டுமென்பது ஐதீகம்.


பிரகாரத்தில் இரண்டு பைரவர்கள் இருக்கின்றனர். முருகன், தந்தைக்கு குருவாக இருந்து உபதேசம் செய்த சுவாமிமலை தலம், இங்கிருந்து 10 கி.மீ., தூரத்தில் இருக்கிறது.


தல பெருமை:


நாயனார் அவதார தலம்: நாயன்மார்களில் ஒருவரான புகழ்த்துணையார் இத்தலத்தில் அவதரித்தவர். சிவன் மீது பக்தி கொண்டிருந்த இவர், அரசலாற்றில் தீர்த்தம் எடுத்து தினமும் சிவபூஜை செய்வது வழக்கம். இவர் மிகவும் வறுமையில் வாடினாலும், பூஜையை மட்டும் விடாமல் செய்து வந்தார். ஒருசமயம் இப்பகுதியில் கடும் பஞ்சம் உண்டானது. அப்போதும் புகழ்த்துணையார் கலங்கவில்லை. பூஜையை வழக்கம்போல தொர்ந்தார்

.

பல நாட்களாக சாப்பிடாததால், உடல் தளர்ந்த புகழ்த்துணையார் தள்ளாடியபடியே சுவாமிக்கு அபிஷேக தீர்த்தம் எடுத்து வந்தார். சிவன் சன்னதிக்குள் சென்ற அவர், உடல் வலுவின்றி கீழே சரிந்தார். அப்போது தீர்த்த குடம் சிவலிங்கத்தின் மீது விழுந்தது. புகழ்த்துணையாரும் லிங்கத்தின் மீது விழுந்து மயக்கமுற்றார். சிவன் அவரது கனவில் தோன்றி, ""என்ன வேண்டுமென கேள்!' என்றார். புகழ்த்துணையார் கனவிலும், மக்களின் வறுமையை போக்கி, சிவபூஜை தடையின்றி நடக்க அருள் செய்யும்படி வேண்டினார். சிவன் அவரிடம், தினமும் ஒரு படிக்காசு தருவதாகவும், அதை வைத்து மக்களின் பஞ்சத்தை போக்கும்படியும் கூறினார்.


அதன்பின் மயக்கம் தெளிந்த புகழ்த்துணையார் பூஜையை தொடர்ந்தார்


சிவனும், தினமும் ஒவ்வொரு படிக்காசு கொடுத்தருளினார். பலகாலம் இத்தலத்தில் சிவபூஜை செய்த புகழ்த்துணையார், இங்கேயே முக்தியடைந்தார். சிவன் அவரை நாயன்மார்களில் ஒருவராக்கினார்.


படிக்காசு பூஜை: புகழ்த்துணை நாயனார் பிறந்து, வளர்ந்து, முக்தியடைந்த தலம் இது. தற்போதும் இவரது தலைமுறையினரே இங்கு பூஜை செய்கின்றனர்.


படிக்காசுநாதர் சன்னதியில் இரண்டு காசுகளை வைத்து வேண்டிக்கொண்டு, ஒன்றை மட்டும் வீட்டிற்கு எடுத்துச் சென்று பூஜிக்கின்றனர். இதனால், குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகும் என்பது நம்பிக்கை.


தல வரலாறு:


ஒருசமயம் பிரம்மா கைலாயத்திற்கு சென்றபோது, அங்கிருந்த முருகனை அவர் கவனிக்காமல் சென்றார். பிரம்மாவை அழைத்த முருகன், "நீங்கள் யார்?' எனக்கேட்டார். பிரம்மா அவரிடம் தன்னை அறிமுகப்படுத்தியதோடு, தானே உலகை படைப்பவன் என்றும் கர்வத்துடன் கூறினார்.

                                                                                                            
400


முருகன் அவரிடம் எந்த மந்திரத்தின் அடிப்படையில் படைக்கிறீர்கள்? எனக்கேட்டார். "ஓம்' என்னும் பிரணவ மந்திர அடிப்படையில்தான்! என்றார் பிரம்மா. முருகன், அம்மந்திரத்திற்கு விளக்கம் கேட்டார். அவருக்கு தெரியவில்லை. எனவே அவரது தலையில் குட்டி, பதவியை பறித்தார். இதையறிந்த சிவன் முருகனிடம், பிரம்மாவிடம் பதவியை கொடுக்கும்படி கூறினார். முருகன் கேட்கவில்லை.


சிவன், பிரணவத்தின் விளக்கம் சொல்லும்படி முருகனிடம் கேட்கவே, அவரும் விளக்கினார். பின்பு, சிவன் அவரை சமாதானம் செய்யவே, மீண்டும் பிரம்மாவிடம் பதவியை ஒப்படைத்தார். பிரணவத்தின் பொருள் தெரியாவிட்டாலும் வயதில் பெரியவரான பிரம்மாவை தண்டித்ததற்கு வருந்தினார் முருகன். எனவே தவறுக்கு மன்னிப்பு வேண்டி இத்தலத்தில் தவமிருந்தார்.


சிவன், அவருக்கு காட்சி தந்து ""தவறை யார் வேண்டுமானாலும் சுட்டிக்காட்டலாம், தவறில்லை. ஆனால், தண்டிக்கத்தான் கூடாது, என்று அறிவுரை சொல்லினார். இவரே இங்கு சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார்.


திருவிழா:


 மாசிமகம், மகாசிவராத்திரி, கிருத்திகை, ஆவணி ஆயில்யம் நட்சத்திரத்தில் நாயனார் குருபூஜை.

திறக்கும் நேரம்:

காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.


ஆன்மீகச் சிந்தனை மலர் :


பதட்டம் கூடவே கூடாது - வள்ளலார்.                                                                                            
400
  • நல்லோர் மனதை நடுங்க செய்யும் காரியத்தை கைவிடுங்கள். நம்பியவர்களை நட்டாற்றில் கை கழுவி விடாதீர்கள். ஆசை காட்டி, யாரையும் மோசம் செய்யாதீர்கள். யாரையும் அவமதிக்கும் எண்ணத்தை கைவிடுங்கள்.
  • கொலை, கோபம், சோம்பல், பொய், பொறாமை, கடுஞ்சொல் இவற்றை கனவிலும் நினைக்கக் கூடாது. புகை, கள் போன்ற தீய பழக்கங்களையும் அறவே தவிர்க்கவேண்டும். பதட்டத்தோடு எச்செயலையும்
    அணுகுதல் கூடாது. இவற்றை விலக்காவிட்டால் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க முடியாது.
பவள சங்கரி திருநாவுக்கரசு.

தேதி - ஜனவரி - 26 - 2011.

நன்றி - தின மலர்


பங்களிப்பாளர்கள்

Coralsri.blogspot.com மற்றும் Ksubashini

இப்பக்கம் கடைசியாக 10 மே 2011, 14:20 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 2,311 முறைகள் அணுகப்பட்டது.