பட்டுக்கோட்டையார் பாடல்களில் தொல்காப்பியரின் களவியல் கூறுகள்

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

முனைவர் சி.சேதுராமன்


 

"முன்னோர் மொழிப் பொருளையும் பொன்னேபோற் போற்றுவோம், என்பதற்கேற்ப தமது பாடல்களில் முன்னோர்களின் கருத்துகளைப் பதிவுசெய்து பாடியவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.


பண்டைத் தமிழ் இலக்கிய - இலக்கணக் கூறுகள் கல்யாணசுந்தரனாரின் பாடல்களில் அமைந்திருப்பதே இதற்குச் சான்று.


பட்டுக்கோட்டையாரின் பாடல்களில் தொல்காப்பியர் கூறும் களவியல் (பொருளதிகாரம்) கூறுகள் பல காணப்படுகின்றன. இவை திருக்குறளோடும் குறுந்தொகையோடும்கூட ஒப்பு நோக்குதற்குரியவை.


தலைவனும், தலைவியும் காதலின் முதன்மை மாந்தர்களாவர். தலைவன் இயல்பு பற்றி, "பெருமையும் உரனும் ஆடூஉ மேன" (தொல்.கள.1044) எனத் தொல்காப்பியர் வரையறை செய்கிறார்.


பட்டுக்கோட்டையார் தனது தலைவனைப் பற்றி,

"ஆளும் திறமையும் வீரமும் கடமையும்
பெருமையும் கொண்டவர் ஆண்கள்.

என்று கூறியுள்ளார்.


தொல்காப்பியர் தலைவியின் இலக்கணத்தை,

"அச்சமும் நாணும் மடனும் முந்துறுத்த
நிச்சமும் பெண்பாற்கு உரிய என்ப. (1045)

என்று குறிப்பிடுகிறார்.


மக்கள் கவிஞர்,

"அன்பும், அறமும், அடக்கமும்,
பொறுமையும்,
பண்பும் கொண்டவர் பெண்கள்.

எனத் தொல்காப்பியரின் களவியல் இலக்கணத்திற்குரிய இலக்கியத்தைப் படைத்துள்ளார்.


காதலுக்கும், தலைவனும் தலைவியும் ஒருவரையொருவர் விருப்புடன் நோக்கும் காட்சிக்கும் கண்களே காரணமாக அமைகின்றன. இதை தொல்காப்பியர்,

"நாட்டம் இரண்டும் அறிவு உடம்படுத்தற்குக்
கூட்டி உரைக்கும் குறிப்புரை ஆகும் (1042)

என்று குறிப்பிடுகிறார்.


இந்நூற்பாவுக்கு இளம்பூரணர், "தலைமக்கள் இருவர் கண்களும், நாட்டத்தை வெளிப்படுத்தி, இருவரும் அறிவால் உடன்படுவதற்குத் துணையாய் சேர்ந்து உரைக்கும் குறிப்புமாக அமையும் என்று பொருள் கூறுவார்.


திருவள்ளுவர் இந்நோக்குதல் பற்றி,

"கண்ணொடு கண்ணிணை நோக்குஒக்கின் வாய்ச்சொற்கள்
என்ன பயனும் இல (1100)

என்று மொழிகிறார்.


மக்கள் கவிஞர்,

"கண்ணோடு கண்ணு பின்னி
எண்ணாததெல்லாம் எண்ணி

"கண்ணோட கண்ணு கலந்தாச்சு
"காணாத இன்பம் கண்டாச்சு

என்ற பாடல்களில் தொல்காப்பியரின் கூற்றை வழிமொழிந்துள்ளார்.


மேலும்,

"தூர இருந்து கொண்டே தொடாமல்
திருடுவதும்
சுற்றிவிட்ட பம்பரம்போல் சுழன்று வட்டம் போடுவதும்
வீரர்களும் மயங்க மோகவலை வீசுவதும் - காதல்
விளையாடுவதும் கண்களம்மா

என, காதலின்போது ஏற்படும் எல்லா நிலைகளுக்கும் கண்களே காரணம் என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வரிகள்,

"கண்தரவந்த காம
ஒள்ளெரி (குறுந்.305)

என்ற குப்பைக்கோழியார் கூறும் பாடலுடன் ஒப்பு நோக்கத்தக்கது.

தலைவியைக் கண்டு தலைவன் கொள்ளும் ஐயம் காதலுக்குச் சிறந்தது என்பதைத் தொல்காப்பியர்,

"சிறந்துழி ஐயம் சிறந்தது என்ப
இழிந்துழி இயல்பே சுட்டலான (1040)

என மொழிகிறார்.


மேலும், இந்த ஐயத்தைக் களைபவையாக,

"வண்டே இழையே வள்ளிப் பூவே
கண்ணே அலமரல் இடைப்பே அச்ச மென்று
அன்னவை பிறவும் ஆங்குஅவண் நிகழ
நின்றவை களையும் கருவி என்ப (தொல்.1041)

என வண்டு உள்ளிட்டவற்றைக் கருவிகளாகக் கூறுகிறார்.


தொல்காப்பியர் வகுத்தளித்த இலக்கணக் கூற்றுக்கு இலக்கியமாக, பட்டுக்கோட்டையாரின் பின்வரும் பாடல் அமைந்திருக்கிறது.

"ஆடைகட்டி வந்த நிலவோ? - கண்ணில்
மேடைகட்டி ஆடும் எழிலோ...?

என்ற பாடல் வழி உள்ளம் தடுமாறுகிறான் தலைவன்.


தலைவி மலர் ஜாடையில் சிரித்ததும், நீரலையில் ஓடி விளையாடியதும் தலைவனின் நினைவுக்கு வருகிறது. அவள் பெண்தான் என்ற தெளிவு பிறக்கிறது. உடனே அவனது ஐயம் களைகிறது. தலைவி, தலைவனின் அருகில் வந்து,

"அன்பு மனம் கூடுவதில் துன்பமில்லை" என்று கூறத் தலைவன் மனந்தேறுகிறான்.


ஐயம் - அதைக் களையும் கருவிகள் என அனைத்தையும் பட்டுக்கோட்டையார் ஒரே பாடலில் இடம்பெறச் செய்திருப்பது காதல் சுவையை மேலும் கூட்டுவதாக அமைந்துள்ளது.

மக்கள் கவிஞரின் இப்பாடல் வள்ளுவரின்,

"அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ
கனங்குழை
மாதர்கொல் மாலும்என் நெஞ்சு (1081)

என்ற குறட்பாவுடன் ஒத்திருப்பது நோக்குதற்குரியது.

இவ்வாறு, பட்டுக்கோட்டையாரின் பல பாடல்கள் இலக்கணக் கூறுகள் நிறைந்த இலக்கியப் பெட்டகமாகத் திகழ்கின்றன.


நன்றி:- தினமணி

பங்களிப்பாளர்கள்

Ksubashini

இப்பக்கம் கடைசியாக 8 மே 2011, 07:56 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 1,213 முறைகள் அணுகப்பட்டது.