பரிபாடல்

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

கட்டுரையாளர்: க.சிவமணி

நன்றி:- தினமணி தொகுத்து அனுப்பியவர்  : டாக்டர் கண்ணன் நடராசன்



இயற்கை இன்பத்தில் மனதைப் பறிகொடுத்த பண்பட்ட மக்களின் வாழ்க்கை நிகழ்வுகளைப் படம்பிடித்துக் காட்டி நம்மையும் ஆற்றுப்படுத்தும் நோக்கில் அமைந்தவை சங்க இலக்கியங்கள்.


இயற்கை நிகழ்வுகளைப் பொருத்தமான உவமைகளைக் கொண்டு காட்சிப்படுத்துவதில் சங்கப் புலவர்கள் நிகரற்றவர்கள்.


எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான பரிபாடல் என்ற நூலில், வையை ஆறு பற்றிய உவமைச் சிறப்பு படித்து இன்புறத்தக்கது.


பரிபாடல் தொகுப்பில் இன்று நமக்குக் கிடைத்துள்ள 22 பாடல்களில் வையை ஆறு பற்றிய பாடல்கள் ஏழு.



பரிபாடல் திரட்டிலிருந்து 3 பாடல்கள் தான் கிடைத்துள்ளன. வையை ஆற்றைப் பற்றிப் புலவர்கள் பாடிய பாடல்களில் பல்வேறு உவமைகள், வையை ஆற்றின் சிறப்பை வெளிப்படுத்துவதோடு, பாண்டிய மன்னனின் வீரம், கொடைச்சிறப்பு, தலைவன், தலைவியர் தம் காதல் சிறப்புகள் ஆகியவற்றை எடுத்துக்காட்டி, படிப்போர் உள்ளத்தைப் பரவசப்படுத்தும் பயன்மிகு செய்திகள் பலவற்றையும் பட்டியலிட்டுச் செல்கின்றன.


வையை பற்றிய பாடல்களில் வையை ஆற்றைப் பிற இயற்கைக் காட்சிகளோடு ஒப்பிடுதல், தலைவன், தலைவியரின் செயல்களோடு ஒப்பிடுதல், பாண்டிய மன்னனோடு ஒப்பிடுதல் ஆகிய நோக்கிலேயே பெரும்பாலான உவமைகள் அமைந்துள்ளன. வையை ஆற்றின் பெருக்கைப் பாடிய புலவர் பலர்.


அவர்களுள், மையோடக்கோவனார் பாடிய பாடலில் வையை ஆறு பெருக்கெடுத்து வரும் நேரத்தில் மகளிரும், பாணரும் பல்வேறு இசைக்கருவிகளை ஒலிக்கச் செய்கின்றனர். வையை நீர் இரு கரைகளிலும் மோதி அடித்துக்கொண்டு பேரோசையுடன் வருகிறது.


இவ்வோசை இடியுடன் மேகம் முழங்குவதை,

"உரும் இடி சேர்ந்த முழக்கம் புரையும்" (வை.7வரி - 82)

என்ற வரிகளில் எடுத்துக்காட்டியுள்ளார்.


மற்றொரு பாடலில், மலையிலிருந்து இறங்கி வரும் அருவி, நிலத்தை அடைகிறது. ஆற்றில் நீராட வந்த மகளிர் கூந்தலில் இருந்து நீக்கிய வாடிய மலர்களையும், மைந்தர்தம் மார்பில் சூடியிருந்த பூக்களையும் வையை அடித்துச் செல்லும் காட்சியை,

"மின் ஆரம் பூத்த வியன் கங்கை நந்திய
வானம் பெயர்ந்த மருங்கு ஒத்தல்" (வை - 16, வரி - 36,37)

என்னும் நல்வழிசியாரின் பாடல் அடிகள், வையை ஆறு வானிலிருந்து வரும் கங்கை ஆற்றை ஒத்து விளங்குகிறது என்னும் பொருத்தமான உவமை வாயிலாகச் சுட்டுகிறது.


மேகங்கள் கறுத்து இடைவிடாத மழையைப் பொழிய, வையையாறு பெருக்கெடுக்கிறது. மழை மிகுதியால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் வையை பல்வேறு மரங்களையும் அடித்துக்கொண்டு புயல் வேகத்தில் ஓடுகிறது.


இக்காட்சியைப் புலவர் நல்வழுதியார்,

"நளி கடல் முன்னியது போலும் தீம் நீர்
வளிவரல் வையை வரவு" என்ற வரிகளில்,

வையை ஆற்றின் விரைவை எடுத்துக்கூறும் நோக்கில், கடல் பொங்கி வருவதைப்போல என்னும் உவமையைக் கையாண்டுள்ளமை படிப்போர் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் சிறப்புடையது.


வையை ஆற்று நீர்ப்பெருக்கின் சிறப்பைக் கூற வந்த புலவர்கள், வையை நதியை மக்களின் செயல்களுக்கு உவமையாகக் கூறுதலும் உண்டு. நல்வழுதியாரின் பின்வரும் பாடல் வரிகள், மதுரை மக்கள் புகழும் படியாகப் பாய்ந்து வரும் வையையின் வெள்ளப்பெருக்கைக் காண எண்ணற்ற மக்கள் குவிகின்றனர். வையை வெள்ளம் அதிகரித்து, இரு கரையின் உயரத்தைவிட நீரின் அளவு உயர்ந்து காணப்படுகிறது.


இதனை,

"...... வையை நீர், வையைக்
கரைதர வந்தன்று, காண்பவர் ஈட்டம்
நிவந்தது, நீத்தும் கரைமேலா நீத்தம்
கவர்ந்தது போலும், காண்பவர் காதல்" (வை - 12, வரி - 32 - 35)

என்ற வரிகளில், வையையின் வெள்ளம் கரைக்கு மேல் உயர்ந்த செயலை, நீர்ப்பெருக்கைக் காண வந்த மக்களின் ஆசை வெள்ளத்தை ஒத்தது எனக் குறிப்பிட்டு, மக்களின் ஆசைப்பெருக்கை வையை நதிப்பெருக்கொடு உவமித்துக் கூறியிருப்பது சிறப்புடையதாகும்.


தலைவி, தலைவனிடம் பல்வேறு நிகழ்ச்சிகளைக் காரணம் காட்டி ஊடல் கொள்வதும் பல்வேறு முயற்சிகளைக் கையாண்டு தலைவன், தலைவியின் ஊடலைத் தணிக்கப் பல்வேறு முறைகளை மேற்கொள்ளும் பொருட்டு விரைந்து செயல்படுதலும் இயல்பு. தலைவனின் இச்செயலை வையையின் வெள்ளப்பெருக்குடன் ஒப்பிடுகிறார் புலவர்.


"உணர்த்த உணரா ஒள் இழை மாதரைப்
புணர்த்திய இச்சத்துப் பெருக்கத்தின் துனைந்து" (வை - 7, வரி - 36 - 37)

என்ற வரிகளில், ஆற்றில் பாயும் வையை வெள்ளம், தலைவியின் விரைவான ஊடலைத் தணிக்க முயலும் தலைவனின் விரைவான செயலை ஒத்திருந்தது என உவமித்துள்ளார்.


இதுபோன்று மேலும் சில பாடல்களில் வையை ஆறு உவமித்துப் பாடப்பட்டுள்ளமை படித்து இன்புறத்தக்கது.

பங்களிப்பாளர்கள்

Ksubashini

"http://heritagewiki.org/index.php?title=பரிபாடல்&oldid=727" இருந்து மீள்விக்கப்பட்டது
இப்பக்கம் கடைசியாக 8 ஜனவரி 2010, 14:47 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 2,275 முறைகள் அணுகப்பட்டது.