பழமொழி ஆராய்ச்சிக் கட்டுரைகள்

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

 அன்புள்ள நண்பர்களே பழுத்த அனுபவம் வாய்ந்த பெரியவர்களால் ஒவ்வொரு அனுபவத்தின் வாயிலாகவும் அடிக்கடி உபயோகப் படுத்தப் படும் சொல் வழக்குகள் பழமொழிகள் என்று பெயர் பெற்றன. எவ்வளவு அருமையான பழமொழிகள், பல பெரியவர்கள் அவ்வப்போது பல அருமையான பழமொழிகளைச் சொல்லுகிறார்கள், இப்போது காலம் இருக்கும் இருப்பில், நவீன யுகத்தில்,விஞ்ஞான வளர்ச்சியில் மிக உயர்ந்த நிலையில் இருக்கும் இந்தக்காலத்தில், பெரியவர்கள் சொல்லுவதையெல்லாம் யார் காது கொடுத்து கேட்கப் போகிறார்கள், என்கிற எண்ணம் தலை தூக்கினாலும், நல்லதை சொன்னால் எப்போதும் நம்மவர்கள் புரிந்து கொள்வார்கள், ஏற்றுக்கொள்வார்கள் என்னும் நம்பிக்கையின் அடிப்படையால் எழுந்த பக்குவத்தோடு எழுதுகிறேன் .


பழமொழிகள் எப்படி ஏற்பட்டன என்று ஆராய்ந்தால், எல்லாப் பழமொழிகளுமே அனுபவத்தால் ஏற்பட்டன என்று ஒரு நல்ல தீர்ப்பு கிடைக்கிறது, பழம் என்றாலே இனிப்பு ,சுவை, கனிவு, முற்றிய நிலை, மீண்டும் பல மரங்களுக்கு விதைகள் அளிக்கவிருக்கும் காலச் சுழற்சி, ப்ரபஞ்ஜ வளர்ச்சி, என்றெல்லாம் பொருள் வருகிறது, அனுபவ முதிர்வே பழம் , அந்த அனுபவத்தால் விளைந்த, அறிவால் வெளிப்படும் சொற்களை பழமொழி என்று பொருள் கொள்ளலாம், அப்படியானால் எல்லாப் பழமொழிகளுமே, சொல்வழக்குகளுமே, ஒன்று உண்மையானதாக பயனுள்ளதாக இருக்கவேண்டும், அல்லது..பெரியவர்கள் உணர்ந்து சொன்ன பழமொழிகள் ,சற்றே திரிந்து அர்த்தம் வேறாகி தவறான பொருள் தருமாறு மாறுபட்டு இருக்க வேண்டும், அப்படி பல பழமொழிகள் இருக்கின்றன, அந்தப் பழமொழிகளை ஆராய்வோம்,


பழமொழி 1 " நடந்தால் நாடெங்கும் உறவு
படுத்தால் பாயும் பகை “

எந்த ஒரு விஞ்ஞான வளர்ச்சியும் இல்லாத காலத்திலே மக்கள் ஒரு ஊர் விட்டு மற்றொரு ஊருக்குப் போக, அல்லது தாங்கள் போகவேண்டிய இடங்களுக்கு போய்ச்சேர நடந்து தான் செல்லவேண்டும் என்னும் கட்டாயத்தில் இருந்தனர். கால்நடை யாளர்களாகவே வாழ்ந்தனர்,அதற்குப் பிறகு தங்களின் தேவைகளை மனதில் கொண்டு உண்மையான கால்நடைகளாகிய குதிரை, மாடுகள், எருது, கழுதை போன்ற கால்நடைகளின் மேலேறி தங்கள் பயணத்தை தொடர்ந்தனர்.

மன்னர்கள் ஆண்ட காலத்தில் முப்படைகளின் பிரிவில் யானைப்படை, குதிரைப்படை போன்றவை இருந்தாலும் எளிதில் ஊடுருவக் கூடிய காலாட்படையை மன்னர்கள் பெரிதும் நம்பினர். நாம் வாழும் இந்தப் ப்ரபஞ்சம் அடுத்த வினாடி என்ன நடக்கப் போகிறது என்றே நமக்குத் தெரியாமல் நம்மை எப்போதுமே ஒரு எதிர்பார்ப்பிலேயே வைத்திருக்கிறது, அதனால்தான் நாம் வாழக்கையில் ஆயிரம் ப்ரச்சனைகளை எதிர்கொண்டாலும் அவற்றிலிருந்து மீண்டு ஓரளவு இயல்பான, சுவாரஸ்யமான மகிழ்ச்சியான வாழ்க்கை வாழமுடிகிறது. "நேற்று நடந்ததும் இன்று நடப்பதும் நாளை நடக்கப் போவதும்” அனைத்தும் நன்மைக்கே என்று தினமும் நடப்போர் சங்கம் ஒன்றிற்கு தட்டி வாசகமாய் நான் எழுதிக் கொடுத்ததும் நினைவுக்கு வருகிறது....!

நடகக வேண்டும், நல்லவை எல்லாம் நடக்கவேண்டும். நடப்பன எல்லாம் நன்மையாகவே நடக்கவேண்டும் என்று நம் மனது அடிக்கடி நினைக்கிறது, நடக்கும்....நிச்சயம் நடக்கும், நம்பிக்கைதானே வாழ்க்கை,எதாக நினைக்கிறோமோ அதாக ஆகிறோம் என்பது பெரியோர் வாக்கு. ”நடந்தால் நாடெங்கும் உறவு”  உண்மைதான் ...நடந்தே நாடெங்கும் உறவை ஏற்படுத்திக் கொண்ட பல பெரியோர்களின் அனுபவ பூர்வமான உண்மை வாசகம்,

நல்ல நோக்கத்துடன் நடந்து,நல்லவிதமாக நடந்து தாய்நாட்டுப் பாசத்துடன் ஜாதி மத பேதமில்லாமல் அனைத்து மக்களின் மேலும் நேசத்துடனும்,பாசத்துடனும் மனித நேயத்தை மனதிலே தேக்கி அறவழியை உணர்த்தும் வண்ணமாக சத்திய வழியில். அஹிம்சாவழியில் நடந்தே அடிமைப்பட்டிருந்த நம் தேசத்துக்கு விடுதலை வாங்கிக் கொடுக்க காரணமாய் இருந்தவர்கள் பலர் அவர்களில் மஹாத்மா காந்தி அவர்கள், வினோபாபாவே அவர்கள்,ஜெயப்ரகாஷ் நாராயணன் அவர்கள். நடந்தே ஒரு நாட்டுக்கு விடுதலை வாங்கி கொடுக்க முடியுமென்றால் நடக்கலாமே, நடக்க நடக்க நாடெங்கும் உறவு, உலகமே உறவு என்று எல்லைகள் விரிந்துகொண்டே செல்லும் வாய்ப்பு இருக்கிறது, நடப்போம்..

நடப்பதால் மற்றும் என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது.? எல்லா மனிதர்களுக்கும் நம் உடலில் கொழுப்பு, சர்க்கரை, போன்ற பொருட்கள் இருக்கின்றன ,ஆனால் அவைகள் இருக்க வேண்டிய விகிதாசார அளவு குறைந்தாலோ,அதிகரித்தாலோ அதை நோய் என்கின்றனர் மருத்துவர்கள், இருக்க வேண்டிய அளவுக்கு குறைந்தாலோ,அதிகரித்தாலோ, அது அளவுக்கு மிஞ்சுதல் என்று பொருள் கொள்ளலாம். "அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் விஷம்" அல்லவோ, அப்படி அளவுக்கு மிஞ்சினால் உடனே வைத்தியர்கள் ”நான் சொல்வதைக் கேட்டு நட” என்கிறார்கள். அதாவது நடந்தாலே அனேக வியாதிகள் குணமாகி விடுகின்றன என்று பொருள் கொள்ளலாம்.

”ஆகவே நடந்தால் நாடெங்கும் உறவு” நாம் இருந்தால்தானே நடப்போம், நடந்தால்தானே இருப்போம். உறவுகள் பெருக வேண்டுமானால்,நடக்க வேண்டும், நல்லது நடக்கவேண்டும், நம்மால் அடுத்தவருக்கும் அடுத்தவரால் நமக்கும், நல்லது நடக்கவேண்டும். இளங்கோவடிகளார் சிலப்பதிகாரத்தில்“நடந்தாய் வாழி காவேரி” என்று புகழ்ந்திருக்கிறார்,அந்தப் பாடலை திரு சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் ”நடந்தாய் வாழி காவேரி நாடெங்குமே செழிக்க நன்மையெல்லாம் கொழிக்க நடந்தாய் வாழி காவேரி” என்று வெங்கலக் குரலில் பாடியதைக் கேட்டிருக்கிறோம்.

ஆறு பொங்கிப் ப்ரவாகமாய் ஓடுவதைக்கூட நடந்தாய் என்று வர்ணிக்கிறார்கள்,அப்படி காவிரி நடந்தே எத்தனை ஊர்களை,கிராமங்களை செழிக்க வைத்திருக்கிறாள், பதினெட்டாம் பெருக்கு என்றும் ஆடிப்பெருக்கு என்றும் கொண்டாடும் நாளில் பலவித சித்ரான்னங்களை படைத்து காவிரிக்கரையில் கொண்டு சென்று பல மக்களோடு பகிர்ந்து அருந்தி பொதுவுடமையை நம் மக்கள் வளர்த்துக்கொள்ள உதவுகிறாள், நடந்தால் பொதுவுடமை வளரும் என்றும் நிரூபிக்கிறாள். நடந்தே மூவுலகும் சுற்றி நன்மை விளைவித்தவர் நாரதர் என்று சொல்வார்கள், நாரதருக்கு நாரதர் என்று ஏன் பெயர் தெரியுமா? நா--ரதம் ,அதாவது வாகனம் இல்லாதவர் என்று பொருள் , அவரே நடந்துதானே பல கலகங்களை செய்து நன்மை செய்திருக்கிறார் ஆகவே பெரியோர் சொல் கேட்டு நடப்போம்.. கலகம் செய்ய வேண்டாம் நாரதர் கலகம் செய்தாலும் நல்ல நோக்கத்திலே செய்வதால் நன்மை விளைகிறது,நாரதர் கலகம் நன்மையில் முடியும் என்பது சொல்வழக்கு . நாம் கலகம் செய்தால் அது நன்மை விளைவிக்காது. நல்லதைமட்டும் எடுத்துக் கொள்ளுவோம் நடப்போம், "அதே போல்

படுத்தால் பாயும் பகை,"

ஒவ்வொரு மனிதரும் படுக்கவேண்டுமென்றால், ஒன்று இரவிலோ அல்லது பகலிலோ ஓய்வெடுக்க வேண்டிய அவசியத்தை முன்னிட்டுப் படுக்கலாம் வயதான பின்னரும் படுத்தால், அதாவது நோயில் படுத்தால் பாயும் பகையாகும்.பாய் எப்படிப் பகையாகிறது....? நோயினால் தாக்கப்பட்டு தன் சுய உணர்வே இல்லாமல்,அல்லது விபத்தில் அடிபட்டு சுயநினைவில்லாமல் ஒரே நிலையில் படுத்திருக்கவேண்டிய அவசியம் ஏற்படுகிறது அப்படிப் படுத்திருப்பவர்களுடைய உடலுறுப்புகளின் சீரான இயக்கம் தடைப்படுவதால் உடலில் பல இடங்களிலும், முதுகிலும் புண்ணாகும், இவற்றை படுக்கை காயங்கள் என்று மருத்துவத்திலே சொல்லுவார்கள் அதற்காக தண்ணீர் படுக்கை, காற்றுப் படுக்கை, என்றெல்லாம் எத்துணையோ விஞ்ஞான வசதிகள் வந்துவிட்டாலும், படுக்கையில் இருப்பவர்களுக்கு நாம் படுக்கையில் இருக்கிறோமே என்னும் நினைவே வியாதிகளை அதிகரிக்கும் மனோவியாதியாக துன்புறுத்தும்
”ஆகவே படுத்தால் பாயும் பகை”

இங்கு படுத்தால் என்பது சோம்பினால் என்றும் பொருள் கொள்ளலாம், நாம் கொஞ்ஜம் அசந்தால் நம்மைக் கவிழ்க்க ஏராளமான சதி நடக்க ஆரம்பித்துவிடும் அப்படி இருக்க படுக்கலாமா...? தன்னுடைய மரணத்தை தக்ஷிணாயண காலத்திலிருந்து உத்திராயண காலம் வரையில் தள்ளிப் போட நினைத்த பீஷ்மர் கூட தரையில் படுக்கவில்லை சரப் படுக்கையில் படுத்தார், ஏனென்றால் அவருடைய உடற்புண்கள் ஏற்படுத்தும் தாக்கத்திலிருந்து மீளவும், மற்றும் சரங்களின் உறுத்துதல் இருந்து கொண்டே இருந்தால்தான் சோம்பாமல் இருக்க முடியும் என்றும், அதையும் தவிர அவருடைய தீர்க்க தரிசனம் மரணத்தையே தள்ளிப் போட்டிருக்கிறது என்னும் மஹாபாரத செய்தி
நம்மை வியக்கவைக்கிறது, அந்த சரப் படுக்கை மூலமாக அக்யூ பன்ச்சர் என்னும் விக்ஞான முறையை அப்போதே செயல் படுத்தி உள்ளனர் என்பது தெளிவாகிறது

ஆகவே படுக்காதீர்கள் ,அப்படிப் படுக்க வேண்டுமானால், நம்மை எப்போதும் எச்சரிக்கையாக இருக்கப் பணிக்குமாறு செய்யப்பட்ட படுக்கையில் படுக்கலாம் ஆகவே  “படுத்தால் பாயும் பகை” ஆமாம் படுத்தாலே காத்திருக்கும் பகை எல்லாம் பாயும் என்பதைத்தான் பெரியவர்கள் நடந்தால் நாடே உறவு படுத்தால் பாயும் பகை என்று நம்மை எச்சரித்திருக்கிறார்களோ என்று தோன்றுகிறது

எனக்கு இந்த ஆய்வை எழுதும்போதே தோன்றிய சந்தேகம் ஒன்று இருக்கிறது, கருநாகப் பாய் விரித்து கடலின் மேல் படுத்திருக்கும் திரு நாராயணனும் அதனால்தான் அவ்வப்போது பல அவதாரங்கள் எடுத்து நடக்க ஆரம்பித்தானோ என்று, ராமனை காட்டுக்கு அழைத்து சென்று நடக்கவிட்டார் விஸ்வாமித்திரர் கண்ணன் மஹாபாரதத்தில் தேரோட்டியாய் வரும் வரையில் சாந்திபினி ஆஸ்ரமத்தில் இருந்து கொண்டு நடந்தே காட்டிற்குப் போய் விறகுகள் சேகரித்தான், அனைத்து நற்காரியங்களையும் செய்தான் என்பது மஹாபாரதச் செய்தி.


திரு நாராயணனும் இதற்காகத்தான் நரசிம்மமாகவும் பல அவதாரங்கள் எடுத்தானோ என்று சந்தேகம் வருகிறது. அப்படியே சற்று நேரம் படுக்கலாம் என்று ஆதிசேஷன் மேல் படுத்தாலும் அவனைப் படுக்க விடாமல் கஜேந்திரன் நாராயணனனை ஆதிமூலமே என்றழைத்து படுக்கையிலிருந்து எழுப்பினான், ,ப்ரஹலாதன் கேட்கவே வேண்டாம்
அவ்வபோது நாராயணனனை எழுப்பிக் கொண்டே இருந்தான். மஹாபலியோ வாமனாவதாரமாய் நாராயணனை நடக்க விட்டான் இப்படி பக்தர்கள் நாராயாணனை படுக்க விடாமல் அழைத்துக் கொண்டே இருக்கின்றனரோ என்று சந்தேகம் வருகிறது.

ஸ்ரீமன் நாராயணன் கொண்டிருப்பது யோக நித்திரை என்று சொல்லுவார்கள், யோக நித்திரை கொண்டிருக்கும் நாராயணனையே எழுப்பிக்கொண்டே இருக்கிறார்களே
அப்படியானால் போக நித்திரை கொள்ளலாமோ...கூடவே கூடாது என்பதை இப்பழமொழி நன்கு உணர்த்துகிறது. அடடா பெரியவர்கள் தீர்க்கதரிசிகள்தான். ஆராய முயலுவோம் நன்மையென்றால் அதன் படி நடக்க முயலுவோம் .படுக்க வேண்டாம்.

அன்புடன்
தமிழ்த்தேனீ


                                                                                                                                                                                                                    • பழமொழி 2.

பழமொழி -. ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்


ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம். சிந்தனையை தூண்டும் பழமொழி இது. கூத்தபிரான் ,சுடலைமாடன் நடராஜன்,தில்லைக் கூத்தன், அம்பலவாணன் , ஆத்மா பரமாத்மா ஊழிக்கூத்தாடிய நேரம் எப்போது எதனால் ஊழிக்கூத்தாடினான்? அவனுடைய ஆட்டம் நின்றால் ப்ரபஞ்ச சுழற்சியே நின்று போகும். உயிர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். அம்பலத்தில் ஆடுகின்ற ஞானக் கூத்தன். அவன் கையிலே உடுக்கு, அந்த உடுக்குஎன்னும் இசைக்கருவியின் இசை நடனம் என்னும் கலைக்கு ஆதாரஸ்ருதி. ஒவ்வொரு உடுக்கு என்பதில் பல வகை உடுக்குகள் உள்ளன. அந்த ஒவ்வொரு வகை உடுக்கிலும் இசை,தாளம் சப்தம், எல்லாமே மாறுபடுகின்றன உடுக்கை அடிப்பவரின் திறமைக்கு ஏற்ப உடுக்கின் சப்தமும் மாறுகிறது .

ஊர் இரண்டு பட்டால் ,அதாவது ஊர்மக்கள் இரண்டு பட்டால் ஒற்றுமை குறைந்து விரோதம் அதிகரித்து அதனால் கலகம் வரும் நிலை ஏற்பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் ஊர் மக்கள் இரண்டு படும்போது கூத்தாடிக்கு எப்படி கொண்டாட்டம் வரும் ....? வரும் ….!!!!!! எப்படி வருமென்று பார்ப்போம். கூத்து என்பது நாடகம் என்னும் கலையின் பிறப்பிடம்........ கூத்தாடிகள் தங்களுடைய கலைகளால் மக்களின் கவலை மறந்து மகிழ்வாக இருக்க வைப்பர் மக்களின் கவலை போக்கும் மருந்தாக கூத்து என்னும் கலை பயன்பட்டு வந்தது,....

ஊர் மக்கள் மன வேறு பாடுகள் கொண்டால், இரண்டு ஊருக்கும் பொதுவாக இருக்கும் பெரியவர்கள் கூத்து என்னும் கலைக்கு ஏற்பாடுகள் செய்வர். அங்கு இரண்டு ஊர் மக்களும் ஒன்று கூடுவர். அப்படி ஒன்று கூடும் போது இரண்டு ஊர்ப் பெரியவர்களும் மக்கள் மகிழ்வாக இருக்கும் நேரம் பார்த்து, பல, அறிவு பூர்வமான ,மக்கள் ஒப்புக் கொள்ளக்கூடிய ,சமாதானங்களைக் கூறி இரண்டு ஊர்மக்களின் விரோத மனப்பான்மையைப் போக்கினர். அதற்கு கூத்து என்னும் கலை பயன் பட்டதால் ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு ஒரு கூத்து நடத்த வாய்ப்பு வருமல்லவா.அதைத்தான் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்று பெரியவர்கள் சொல்லி இருப்பார்களோ ...?

" விஞ்ஞானமும் மெய்ஞானமும் தண்டவாளங்களின் இரு இணை இரும்புகள் போல் என்றும் சந்திக்காது.ஆனால் அவைகளை இணைக்கும் நடு மரப் பட்டைகள் என்கிற உறவுப்பாலம், ,கீழே தாங்குதற்கு கருணை உள்ளம் கொண்ட பூமி , அன்பு பாசம் நேசம் போன்ற இணைப்புகள், இவைகள் இல்லாது போயின், மெய்ஞானமும் சரி விஞ்ஞானமும் சரி வலுவிழந்து போய்விடும் " இவற்றை உணர்ந்து பெரியவர்கள் இரண்டு தண்டவாளங்களை இணைக்கும் நடு மரப்பட்டைகளாக உறவுப் பாலமாக செயல்பட்டிருக்கிறார்கள். மனிதாபிமானத்தை ,அன்பை, பாசத்தை ஒற்றுமையை வளர்த்திருக்கிறார்கள், ஆனால் ...இப்போது பல கூத்தாடிகள் தாங்கள் கொண்டாட்டமாக இருப்பதற்காகவே, இனம் ,மொழி, மதம் சாதி ,போன்ற பலவகையான ஆயுதங்களைப் பயன் படுத்தி ஊர் மக்களை, இரண்டு படவைக்கிறார்கள், கலகம் செய்கிறார்கள்,நாமும் அவர்களின் பேச்சை, செவி மடுத்து அடித்துக் கொண்டு சாகிறோம்.

கூத்தாடிகள் அந்தக் காலத்தில் பல நல்ல கருத்துக்களை மையமாக வைத்து மக்களை அறிவுறுத்தி மக்களை நல் வழிக்கு அழைத்துச் சென்றார்கள், )இந்தக் காலத்தில் அதே கூத்தை ,நாடகத்தை , திரைப்படத்தை வைத்து மக்களை இரண்டு படுத்தி கூத்தாடிகள் குளிர் காய்கிறார்கள்,கொண்டாட்டமாக இருக்கிறார்கள், ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்று நன்மைக்காக பெரியோர்கள் செய்து வைத்த அதே பழ மொழியை தங்களுக்கு சாதகமாக பயன் படுத்திக் கொண்டு மக்களின் விரோதங்களைத் தூண்டி விட்டு, மக்கள் அடித்துக் கொண்டு இருக்கும்போது நாட்டின் செல்வங்களை சத்தமில்லாமல் களவாடி தங்களுக்கு சேர்த்துக் கொள்கிறார்கள்.

இவை புரியாமல் மக்கள் வேறு வழியில்லாமல் மாற்றிமாற்றி மீண்டும் அவர்களுக்கே வாக்குகளை அளித்து அவதிப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள், வாழும் மக்களின் முன்னேற்றமே நாட்டின் முன்னேற்றம், என்று உணராமல் பல கோடிகளை தங்கள் வாரிசுகளுக்கு சேர்த்து வைத்துவிட்டு செல்கிறார்கள், அந்த வாரிசுகள் கஷ்டப் பட்டு சம்பாதித்திருந்தால் அந்தப் பணத்தின் அருமை தெரியும், இலவசமாக வந்ததால் அந்தப் பணத்தைக் கொண்டு அதையும் கெடுத்து தாங்களும் கெட்டுப் போய் வன் முறைகளுக்கு வழி வகுக்கிறார்கள், இவையெல்லாம் நல்ல வழிகள் அல்ல என்று உணர்ந்த அக்காலத்துப் பெரியோர்கள் முன் உதாரணமாக தங்களுடைய சொத்துக்களை நாட்டுக்கு தானமாக அளிக்க முன் வந்தனர்,மக்களின் நல் வாழ்வே, ஒற்றுமையே நாட்டின் பெரும் பலம் என்று உணர்ந்து செயல் பட்டார்கள்.

பொதுவாக ஊர் மக்கள் இயற்கை சீற்றத்தாலோ. விபத்துக்களாலோ பாதிக்கப்படும்போது மற்ற மக்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவவேண்டும்,அதை விடுத்து பாதிக்கப்பட்ட மக்களைக் காப்பாற்றாமல் அவர்களிடம் இருக்கும் பணத்தையும், தங்கம் போன்ற விலைஉயர்ந்த பொருட்களையும் களவாடிக்கொண்டு செல்வர் சிலர் .அவர்கள் மனிதர்களே அல்லர். அவர்களைப் போன்ற மனிதர்கள் உதவுவது போல் நடித்து களவாடுவர்
ஒரு வகையில் இவர்களும் கூத்தாடிகளே. இவர்கள் இந்தக் காலக் கூத்தாடிகள். இவர்களுக்கு மனசாட்சியும் கிடையாது.மனமே கிடையாது.
இன்றைய நிலையில் நம் சகோதர நாடாகிய ஜப்பானுக்கு ஆழிப் பேரலை (சுனாமி) அதிகப் பேரழிவை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் அங்கு அவதிப்படும் மக்களுக்கு நாம் எவ்வாறு உதவலாம் என்று நினைக்கும் மனிதர்கள் வணங்கப்படவேண்டியவர்கள்.மாறாக இந்த நிலையில் எப்படி தமக்கு ஆதாயம் தேடலாம் என்று நினைக்கும் மனிதர்கள் இன்றையக் கூத்தாடிகள்.

ஆகவே ஊர் இரண்டு பட்டால் அதாவது மக்கள் ஒற்றுமை இல்லாமல் பிரிந்திருந்தால் சந்தர்ப்பவாதிகளும் சுயநலவாதிகளும் நவீனக் கூத்தாடிகளாக மாற அதிக வாய்ப்பு உள்ளது ஆகவே மக்களும் ஒற்றுமையாய் வாழ்வது அவசியம் என்று உணர்த்தத்தான் முன்பே பெரியவர்கள் ஆராய்ந்து சொல்லிவிட்டுச் சென்றார்களோ ”:ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் “ என்னும் முது மொழியை அளித்து விட்டுச் சென்றனறோ...?

அன்புடன்
தமிழ்த்தேனீ
*********************************************************************************************************************************************************************************************************************
பழமொழி 3.


" அழுத பிள்ளை தான் பால் குடிக்கும்"

அருமையான பழமொழி

பசியெடுத்தாலும் அழாமல் அதாவது எந்த ஒரு முயற்சியும் எடுக்காமல் நான் இன்னும் முன்னுக்கு வரவில்லையே என்று கவலைப் படும் பலர்,அதாவது பரவாயில்லை, அடுத்தவர்கள் முன்னுக்கு வந்து விட்டார்களே என்று கவலைப்படும் பலர்,இப்படிப் பலவகை மனிதர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் உணர்த்துவது போல் இந்த முதுமொழி அமைந்திருக்கிறது.

நான் ஒரு முழு நீள நாடகத்தை மூன்று நாளில் எழுதி முடிக்கும் வழக்கமுடையவன்.என்னை பார்த்து சக நாடக எழுத்தாளர்கள் கேட்பார்கள் மூன்று நாளில் எப்படி எழுதி முடிக்கிறாய் என்று, அவர்களுக்கு நான் பதில் சொல்லுவேன் மூன்று நாளில் முடிக்க முன்னூறு நாள் யோசித்திருக்கிறேன்,உழைத்திருக்கிறேன் என்று.  இதுதான் வெற்றியாளர் பலரின் ரகசியம், பலபேர் சொல்வதைக் கேட்டிருக்கிறேன். நேற்று கூட நான் அவரைப் பார்த்தேன் ஒரே நாளில் அவர் கோடீஸ்வரராக ஆகிவிட்டார் என்று ஒரே நாளில் கோடீஸ்வரராக ஆவதற்கு அவர் எத்துணை முயற்சிகள் செய்திருப்பார் பலகாலமாக, அது வெளியே தெரிவதில்லை, எப்போதும் வேர்கள் வெளியே தெரியாது விருட்ஷம் மட்டும் தான் தெரியும் குள்ளமாக வாமனாவதாரம் எடுத்த நாராயணனின் விஸ்வரூபம் வெகு சிலரே பார்த்திருக்கக் கூடும். ஆனால் அந்த விஸ்வரூபத்தைக் கண்டவர்கள்கூட அந்த விஸ்வரூபத்தின் பின்னால் இருக்கும் "அணுவை சத கூறிட்ட அணுவிலும் உளன் " என்று ஆன்மீகப் பெரியார்கள் சொன்னாற் போலே அந்த அணுவிலிருக்கும் இறைவனைக் கண்டிருப்பார்களாஎன்பது சந்தேகமே ..அது போலத்தான் முயற்சிகளை காணாதோர் முடிவை மட்டும் கண்டு ஆச்சரியப் படுகின்றனர்.

முயற்சி செய்யாமல் பலனை மட்டும் எதிர் பார்க்கும் பலருக்கு செயலில்லாமல் விளைவு இல்லை என்பது புரியவில்லை. கண்ணன் கீதையிலே சொன்னது போல செயலை, அல்லது , கடமையை செய் பலனை எதிர் பாராதே... அதாவது நீ கடமையை ஒழுங்காக செய்தாலே பலனை நீ எதிர் பார்க்க வேண்டாம் தானாகவே வரும் என்னும் பொருள் பட சொன்னது போல கடமையைக் கூட செய்யாமல் இருப்பவர்களை கடமையை
செய்யத்தூண்டுவது போல இந்த முதுமொழி அமைந்திருக்கிறது


ஒரு உணவகத்தில் நான் ஒரு குழாயில் கையை சுத்தம் செய்து கொண்டிருந்தேன். இன்னொரு கோடியில் கடைசீக் குழாயில் இன்னொருவர் கையை சுத்தம் செய்துகொண்டிருந்தார் . அவரைப் பார்த்து நான் சொன்னேன் வேடிக்கையாக நீங்களும் நானும் கோடியில் ஒருவர் என்று, ஆமாம் அந்தக் கோடியில் அவர் இந்தக் கோடியில் நான் அது போல வெகு சிலரே கோடியில் ஒருவராக முயற்சி செய்கிறார்கள். அல்லது கோடிகளுக்காக முயற்சி செய்கிறார்கள் ஆகவே முயற்சி திருவினையாக்கும் என்பதைத்தான் “ அழுத பிள்ளை பால் குடிக்கும் என்று சொல்லி இருக்கிறார்களோ என்று எனக்குத் தோன்றுகிறது

இன்னொரு முக்கியமான விஷயமும் நினைவுக்கு வருகிறது,ஒவ்வொரு மனிதரும் பிறக்கும் போது அத்துணை நாட்கள் ஒரு தண்ணீர் நிரம்பிய பையில் நீந்திக் கொண்டிருந்தாலும் , அந்த தண்ணீரிலும் அந்தக் குழந்தை ஸ்வாசிக்க காற்றையும், தொப்புள் கொடி வழியே தாய்மையின் உணர்வுபூர்வமான சக்தி , தாய் உண்ணும் உணவிலிருந்தே எடுக்கப்பட்டு அக்குழந்தைக்கு ஏற்ப அவ்வுணவை மாற்றி அனுப்பிய அபூர்வ சக்தியினால், உணவாக அனுப்பப்பட்டும் , அக்குழந்தை பாதுகாக்கப்படுகிறது....

அது மட்டுமல்ல தாயின் தொப்புள் கொடியிலிருந்து தயாரிக்கப்படும் மருந்து அந்தக் குழந்தைக்கு மட்டுமல்ல, அனைத்து குழந்தைகளுக்கும் உயிர் காக்கும் ஜீவரசமாக இருக்கிறது என்பதை விஞ்ஜானத்தில் கண்டு பிடித்து அவைகளைப் பாதுகாக்க்க ஆரம்பித்திருக்கிறார்கள். மேலும் தாய்ப் பால் குடிக்கும் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் என்று நம் முன்னோர்கள் கூறியதையே இப்போதைய விஞ்ஞானிகளும் ஆராய்ச்சி செய்து ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்.

இப்படி இன்று நாம் கண்டு பிடிக்கும் அனைத்துமே ஏற்கெனவே ஒருவன் கண்டு பிடித்து செயலாற்றி இருக்கிறான் என்றால்..அவன்தான் இறைவன் என்று ஒப்புக் கொள்வதில் தவறென்ன...? ஏற்கெனவே அவன் உருவாவாக்கியதை கண்டு பிடித்த நமக்கே விஞ்ஜானி என்று பெயரென்றால் உருவாக்கிய அவனை இறைவன் என்று சொல்வதில்.தவறென்ன ....? என்னே இறையின் சக்தி ,..!!! என்னே இறையின் படைப்பு ரகசியம் “யார் சொன்னது இறை இல்லையென்று...? தயவு செய்து மாற்றிக் கொள்ளுங்கள் அவனன்றி ஒரு அணுவும் அசையாது.

அப்படி பாதுகாப்பாய் இருந்த குழந்தை இயற்கையின் வழியே இந்த பூவுலகுக்கு வருவதற்காக இடையே நசுக்கப் படுகிறது நசுக்கப் பட்டு நழுவி முதலில் தலையைக் காட்டி பின் மொத்தமாக இந்தப் ப்ரபஞ்சப் ப்ரவேசம் அடைகிறது, அப்படி நசுக்கப் படும்போது அது வரை அந்தக் குழந்தை ஸ்வாசித்த காற்றும் தடைப்படுகிறது.அந்தக் குழந்தை வெளியே வந்து பூமியில் விழுந்து அதன் உடல் இயக்கம் ஆரம்பிக்க இருக்கும் அந்த இடைவெளியில் அதற்கு மூச்சுவிட காற்று தேவை, அந்தக் காற்று உள்ளே போகும் வழியை இது வரை இருந்த குடியிருந்த கோயிலின் கர்பக் க்ரகத்தில் இருந்த கருணையே வடிவான தண்ணீர் இப்போது அடைத்துக் கொண்டிருக்கும், அந்த தண்ணீர் வெளியேறினால்தான் காற்று உள்ளே புக முடியும் . அதற்குதான் குழந்தை முயற்சி செய்து அழ ஆரம்பிக்கிறது உரக்கக் குரலெடுத்து அழ ஆரம்பிக்கிறது., அப்படி அந்தக் குழந்தை அழும்போது அந்த தண்ணீர் ஸ்வாசக் குழாயிலிருந்து வெளியேறுகிறது ,அப்படி தண்ணீர் வெளியேறியவுடன், குழந்தை முதல் மூச்சு விடுகிறது .அப்படி அழவில்லையென்றால் மருத்துவர்கள் அடித்தாகிலும் அக் குழந்தையை அழ விடுவர், ஏனென்றால் அழுதால்தான் மூச்சே.முதல் மூச்சே விடமுடியும், முதல் மூச்சு விட்டால்தானே பிழைக்கும். பிழைத்தால்தானே பால் குடிக்கும்
அதனால்தான் அழுத பிள்ளை பால் குடிக்கும் என்று ஆன்றோர்கள் சொல்லிவிட்டு சென்றிருக்கலாம்.

பசியெடுத்தாலும் அழாமல் அதாவது எந்த ஒரு முயற்சியும் எடுக்காமல் நான் இன்னும் முன்னுக்கு வரவில்லையே என்று கவலைப் படும் பலர்,அதாவது பரவாயில்லை,அடுத்தவர்கள் முன்னுக்கு வந்து விட்டார்களே என்று கவலைப்படும் பலர்,இப்படிப் பலவகை மனிதர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் உணர்த்துவது போல் இந்த முதுமொழி அமைந்திருக்கிறது.


பசியினால் அழுகிறது என்று அனுபவத்தில் தெரிந்துகொள்ளும் அன்னை பால் கொடுத்து அதன் பசி தீர்த்து அந்தக் குழந்தையை பராமரிப்பாள், பூச்சி கடித்திருக்கிறது அதனால்தான் அழுகிறது என்று குழந்தையை எடுத்து அதன் உடலில் தடவிப் பார்த்து அந்தப் பூச்சிக்கடிக்கு வைத்தியம் செய்வாள், குழந்தைகள் அழுதால்தானே குழந்தைக்கு வயிறு வலிக்கிறதா? ஏதேனும் பூச்சி கடித்துவிட்டதா? அல்லது பசியினால் அழுகிறதா? என்று நாம் அந்தக் குழந்தையை எடுத்து கவனிப்போம். அழாமலே இருந்தால் நம் எங்கே கவனிக்கப் போகிறோம்?

சில நேரங்களில் குழந்தைகள் அழுகையை நிறுத்தாமல் இருக்கும்போது அந்தக் குழந்தை கழுத்து சுளுக்கிக்கொண்டதால் அழலாம், அந்தக் கழுத்துச் சுளுக்குக்கு உரம் விழுதல் என்று பெயர், அப்படி உரம் விழுந்த குழந்தையின் காதைத் தொட்டாலே இன்னும் அதிகமாக குழந்தை வீறிட்டு அழும், அப்படிக் கண்டுபிடிக்கலாம், அப்படி உரம் விழுந்ததாகக் கண்டு பிடித்தால் அந்தக் குழந்தையின் உரத்தை எடுக்க பல வழிகள் உள்ளன. அந்த உரத்தை எடுக்க குழந்தையை ஒரு தடிமனான போர்வையில் நடுவில் விட்டுவிட்டு, அந்தப் போர்வையின் நாலு மூளைகளையும் பக்கத்துக்கு ஒருவராகப் பிடித்துக்கொண்டு மேலும் கீழுமாய் இரண்டு அல்லது மூன்று முறை உருட்டினால் அந்த முறையில் குழந்தையின் சுளுக்கை (உரத்தை) எடுத்தால் அந்தக் குழந்தை அழுகையை நிறுத்திவிட்டு சிரிக்கும்.

வயிற்று வலி என்றால் ஒரு வெற்றிலையில் விளக்கெண்ணெய் தடவி அதை நெருப்பிலே வாட்டி அந்தக் குழந்தையின் வயிற்றிலே போட்டால் வயிற்று வலி நீங்கி குழந்தை சிரிக்கும். ”அழுத பிள்ளை சிரிச்சுதாம் கழுதைப் பாலைக் குடிச்சுதாம் ” என்று ஒரு பழமொழியின் மூலமாக பெரியவர்கள் வழி சொல்லிவிட்டு சென்றிருக்கின்றனர்  குழந்தை இளைத்து போனாலோ, அதன் உடலில் நீலம் இருந்தாலோ கழுதைப் பாலைக் குடுத்தால் அந்த்அக் குழந்தையின் உடல் நீலமும் இளைப்பும் போய்விடும்..  புரட்சி எங்கு உருவாகிறது என்று நானே எனக்குள் கேள்விகள் கேட்டுக் கொண்டு
பல நாள் ஆராய்ந்து அதன் மூலத்தை என்னுடைய பாணியிலே ஒருகவிதையாக வடித்தேன்.

" புரட்சி "
"அசை, புரளு, கவிழாதே நிமிரு
இயக்கம் கொள் பேரியக்கம் கொள்
அப்போதுதான் கருவறையிலிருந்தே
நீ வெளி வரமுடியும் இல்லை
யென்றால் இறந்த குழந்தை " என்று.

ஆமாம் கருவறையிலேயே புரட்சி ஆரம்பித்து விடுகிறது என்பதே உண்மை, இப்போது சொல்லுங்கள் அழுத பிள்ளை பால் குடிக்குமா..........?
அழாத பிள்ளை பால் குடிக்குமா...?


அன்புடன்
தமிழ்த்தேனீ


                                                                                                                                                                                                                    • பழமொழி ஆராய்ச்சிக் கட்டுரை 4

”கள்ளன் பெரிதா காப்பான் பெரிதா”

கள்ளன் பெரியதா காப்பான் பெரியதா…? என்று அடிக்கடி ஒரு பழமொழியை உபயோகப்படுத்துகிறோம். என்ன ஒரு வினாச்சொல் வழக்கு, ஆச்சரியமாக இருக்கிறது. யோசித்துப் பார்த்தால் அந்தக் காலத்துப் பெரியவர்கள் எவ்வளவு யோசித்து ஒவ்வொரு வார்த்தையையும் சொல்லி இருக்கிறார்கள் என்கிற ஆச்சரியமே மிஞ்சுகிறது.

மா,பலா வாழை என்று ஒரு சொல் அடுக்கு உண்டு, பழங்களில் முதன்மையானது மாம்பழம், அடுத்து பலாப்பழம், அடுத்து வாழைப்பழம் மூன்றுமே மருத்துவ குணமுள்ள இனிப்பான சுவையான பழங்கள். ஆங்கிலத்திலே (riverse engineering) என்று சொல்லுவார்கள். ஒரு யந்திரத்தை கட்டுமானம் செய்ய அதே போன்ற ஒரு யந்திரத்தை ஒவ்வொரு பாகமாகப் பிரித்து தலைகீழாக எண்ணிக்கை வரும்படி அடுக்கி வைத்துவிட்டு, மீண்டும் அதே வரிசையில் அதை கட்டுமானம் செய்வார்கள்.

அது போல நாம் நம்முடைய முன்னோர்கள் சொன்னதையெல்லாம் ஒவ்வொரு சொல்லாக எடுத்து அவற்றை பிரித்து அடுக்கி வைத்துவிட்டு, மீண்டும் கட்டுமானம் செய்ய ஆரம்பித்தால்தான் தெரிகிறது. அவர்கள்: அதற்குள்ளே எவ்வளவு நுணுக்கமான விஷயங்களை பொதிந்து வைத்திருக்கிறார்கள் எனபது.
மாம்பழம் சாப்பிட்டால் வயிற்றுப் போக்கு வரும் என்று கூறுவார்கள் ஆனால் அந்த மாம்பழத்தின் உள்ளே இருக்கும் கொட்டையின் உள்ளே இருக்கும் மாம்பருப்பை எடுத்து உண்டாலே அதுவே சிறந்த மருந்து வயிற்றுப் போக்குக்கு, அடடா கனிவையும் சுவையையும் வைத்து அதனுள்ளே மருந்தையும் வைத்த இறைவன் எவ்வளவு பெரியவன்

வண்டு துளைத்த பழம் இனிப்பாக இருக்குமென்று சொல்லுவர். ஆனால் துளைத்துக் கொண்டு உள்ளே சென்று மாட்டிக் கொள்ளும் வண்டு ஒரு கள்ளன் ,அந்தக் கனியின் சுவையைக் கூட அறிய முடியாமல் , சுவைக்க முடியாமல் மாங்கொட்டையின் உள்ளே மாட்டிக் கொண்டு அவதிப்படுகிறது. பூ மூடிக் கொண்டு காயாகி பின் கனியாகி அதை யாராவது உண்ணும்போதுதான் வெளியே வரமுடியும் அதனால் கள்ளனாய் இருப்பதை விட காப்பனாய் இருப்பதே மேல்.


அதே போல மேலே முள்ளாக கரடு முரடாக இருக்கும் பலாப் பழத்தின் சுவை நான் சொல்ல வேண்டியதில்லை உங்களுக்குத் தெரியும். ஆனால் அந்தப் பலாச்சுளையின் உள்ளே இருக்கும் பலாக் கொட்டையை அப்படியே சாப்பிட்டால் தொண்டையை அடைத்துக் கொண்டு மூச்சுகூட விடமுடியாமல் அவதிப்பட நேரும்,. ஆனால் அதே பலாக் கொட்டையை வேக வைத்து தோலை உரித்து உண்டால் அது பல நோய்களுக்கு மருந்தாகும் , நாங்கள் சிறு வயதில் இருக்கும்போது கட்டை அடுப்பில் சமைப்பார்கள், எரிகின்ற கட்டை அடுப்பின் உள்ளே இந்தப் பலாக்கொட்டைகளை போட்டு விடுவோம். அடுப்பை அணைத்த பின் சற்று பக்குவமாக வெந்த அந்தப் பலாக் கொட்டையை தோல் உரித்து ,உண்போம் அது பலாச் சுளையைவிட இனிமையாக இருக்கும்.

அடுத்தது வாழை , வாழைப்பழமே மருந்து , வாழைதண்டு சாற்றினை பாம்பு கடி விஷத்துக்கு முறிவாக அளிப்பர், வாழைப்பட்டையில் பாம்பு கடித்தவர்களை படுக்க வைப்பர்,விஷ முறிவான இந்த வாழைமரம் இருந்தால்தான் கொண்டாட்டங்களே களை கட்டும். அதே போல் வாழைப் பழம் இருந்தால்தான் விருந்தே களைகட்டும் தலை வாழை இலையில் முதலில் வாழைப்பழமும் சர்க்கரையும் போட்டுவிட்டு ,பிறகுதான் மற்ற உணவு வகைகளை பறிமாறுவர்.

வாழைப்பழம் நம்முடைய உள் உறுப்புகளின் இயக்கத்தை எளிதாக்குகிறது, இறைப்பையின் இயக்கத்தை துண்டுகிறது உண்ணும் உணவுகள் செரிக்க உதவுகிறது. அந்த வாழை மரத்தை ஆராய்ந்தால் வாழைக் குருத்து முளை விட்டு பின் வளர்ந்து , மரமாகி குலைதள்ளும் பருவத்திற்கு சற்றுமுன்பாக பெரிய பெரிய இலைகள் வருவது நின்று போய், ஒருநாள் ஒரு பளபளப்பான ஒரு சிறு இலை தோன்றும் அதைக் " கண்ணாடி இலை " என்பர் .அந்தக் கண்ணாடி இலை தோன்றிய பிறகுதான் குலைவிடும்,

அந்தக் கண்ணாடி இலை அந்தக் குலை சிறியதாக இருக்கும்போது பாதுகாக்கும், பிறகு வாழைக் குலை பெரியதாக ஆகும்போது அந்தக் கண்ணாடி இலை அந்த வாழைக்குலைக்கு வழிவிட்டு ஒதுங்கி இருக்கும்வாழையடி வாழையாய் குருத்துகள் அந்த வாழை மரத்தின் கீழே தோன்றிக் கொண்டே இருக்கும், ஒரு வாழை மரம் வைத்தாலே அது தானாகவே வாழைத்தோப்பாகும் . ஒரு நல்ல பெண்மணி ஒருத்தி வந்தாலே எப்படி குலம் தழைக்குமோ அது போல. நம்மை வளர்க்கும் தாய் எப்படி நம்மை ஒரு குறிப்பிட்ட காலம் வரையில் வளர்த்து நாம் பெரியவனானவுடன் நம் சுகத்துக்காக ,நம் மகிழ்ச்சிக்காக, சற்றே ஒதுங்கிக் கொள்கிறாளோ அதுபோல கண்ணாடி இலை ஒதுங்கிக் கொள்ளும்.

பிறகு குலையில் வாழைப்பூ தோன்றும் அந்த வாழைப்பூவில் உள்ளிருக்கும் தனித்தனியான ஒவ்வொரு மடலும் ஒரு கொத்துப் பூக்களை பாதுகாத்து அவை முற்றி காய்களானவுடன் மடல்கள் ஒதுங்கிக் கொள்ளும், இப்படி ஒவ்வொரு மடலும் இதழ் விரிந்து காப்பானாக இருந்து ஒதுங்க வேண்டிய நேரத்தில் ஒதுங்கிக் கொள்ளும், ஆனாலும் கடைசியாக காயாக முடியாத சில சிறு பூக்களை கடைசீ வரையில் மடல்கள் மூடிக் கொண்டு பாது காத்துக் கொண்டிருக்கும். அந்த அமைப்பை நாம் வாழைப் பூ என்கிறோம் மனிதன் எப்படி வாழவேண்டும் என்று அறிவுறுத்துமாறு வாழ்க்கைப்பாடம் நடத்தும் ஒவ்வொரு வாழை மரமும் காப்பானே, என்பதில் ஐயமே இல்லை.

பிறகு அந்த வாழைப்பூவை மடல் பிரித்து அந்த சிறும் பூக்களை கொத்தாக எடுத்து அரிந்து அதை சமைத்து நாம் உண்ணுவோம், அப்படி சிறும் பூக்களை அரியும் போது ஒவ்வொரு சிறும் பூக்களையும் கூர்ந்து கவனித்தால், சுற்றிலும் அந்த சிறும் பூக்களின் பாகங்களும் நடுவில் தலை கொழுத்து ஒரு மொட்டுமாய் இருக்கும் அந்த மொட்டுடன் கூடிய தண்டை கள்ளன் என்று சொல்லுவார்கள் , அது உடலுக்கு கெடுதியானது ஆகவே அந்த கள்ளனை நீக்கி விட்டு சமைப்பர். அதைக் காட்டித்தான் உள்ளே கள்ளன் ஒளிந்திருக்கிறான் பார் என்று என் அன்னை கூறுவார்கள்


”கள்ளன் பெரியதா காப்பான் பெரியதா” "நாமெல்லாரும் கள்ளர்கள். காப்பான் இறைவன் ஒருவனே .அதனால் காப்பானிடம் காட்டிக் கொள்ளாமல் நாம் ஒளிய இடமே கிடையாது என்பதை உணராமல் நம்மின் உள்ளுக்குளே ஒளிந்திருக்கிறோம்” கள்ளனே காப்பானாகவும் காப்பானே கள்ளனாகவும் இருந்த மாயக் கண்ணனைக் கேட்டால்தான் தெரியும் கள்ளன்  பெரியதா காப்பான் பெரியதா என்று...?
அன்புடன்
தமிழ்த்தேனீ
*********************************************************************************************************
பழமொழி ஆராய்ச்சிக் கட்டுரைகள் 5 கண்ணடி பட்டாலும் கல்லடி படக்கூடாது

" கல்லடிக்குத் தப்பினாலும் கண்ணடிக்குத் தப்பாது " "கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது "


இரண்டுமே அருமையானபொருள் பொதிந்த பழமொழிகள். கல்லால் அடித்தால் எப்படியாவது தப்பி விட முடியும். பெண்கள் கண்ணால் அடித்தால் கயல் விழிகளால், காதல் என்னும் வில்லால் அடித்தால் தப்பமுடியுமோ.. .ஆனானப்பட்ட விஸ்வாமித்திரரே தப்ப முடியவில்லையே, அவ்வளவு ஏன் காமன் கணை தொடுத்தததனால் ஈசனே தப்ப முடியவில்லையே மோகினியிடம் மனதைப் பறி கொடுத்து விட்டாரே, இப்படியெல்லாம் தோன்றினாலும் இவையெல்லாம் உருவகக் கதைகளாகப் பட்டாலும், முடிவு என்னவோ கண்ணடிக்கு தப்ப முடியாது என்பதுதான் உண்மையாகத் தோன்றுகிறது.
ஆமாம் இப்பழமொழி என்ன பொருள் வருமாறு பெரியவர்கள் கூறி இருக்கிறார்கள்....?

” கண்ணொடு கண் நோக்கின் வாய்ச்சொற்கள் ஏது பயனுமில என்று சொல்வார்கள் “  "எண் சாண் உடலுக்கு சிரசே ப்ரதானம் ஒருசாண் சிரசுக்கு கண்ணே ப்ரதானம் " என்று நான் சொல்லுகிறேன். ஆனானப்பட்ட ராமனும் லோக மாதாவான சீதையும் இல்லறத்தில் மாட்டிக் கொள்ளவில்லையா...? கண்ணால் கண்டவுடனே நெஞ்சமே இடம் மாறுகிறது, என்றால் என்ன ஒரு சக்தி கண்ணுக்கு...? லோக மாதாவின் கடைக்கண் பார்வை பட்டாலே அங்கு ககனமே செழித்தோங்குமே.குசேலனைக் கடைக்கண் கொண்டு பார்த்தாள் மஹாலக்ஷ்மி கண்ணனின் வேண்டுகோளுக்கிறங்கி, குசேலன் குபேரனானான் என்று சொல்லுவர்.. ”என் அமுதனைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே” என்று அரங்கனைக் கண்ட கண்ணால் வேறு எதையுமே பார்க்காமல் தன்னுடைய இன்னுயிரைத் துறந்தார் திருப்பாணாழ்வார், அடடா என்ன ஒரு சக்தி கண்ணுக்கு...?


கைதேர்ந்த அனுபவமிக்க சிற்பிகள் முதலில் ஒரு சிலையை வடிக்க தோஷமில்லாத கல்லைத் தேர்ந்தெடுப்பர். தேரை இருக்கும் கல் என்றால் அதனைத் தள்ளிவிடுவர். அது போல அவர்கள் ஒரு கல்லை செதுக்க உளி என்னும் ஆயுதத்தைப் பயன்படுத்துவர் , அப்படி உளியால் செதுக்கும் போது மொத்த சிலையையும் வடித்துவிட்டு, அந்தச் சிலைக்கு கண்ணை மட்டும் திறக்காமல், விட்டு வைப்பர் ஏனென்றால் மற்ற பாகங்கள் கல்லடி பட்டாலும் ,அதாவது கொஞ்சம் சிதைந்தாலும், அதை வேறு சிலையாக அளவைக் குறைத்து மீண்டும் சரி செய்து விட அவர்களின் திறமை பயன்பட்டது. ஆனால் கண்ணடி பட்டால் ,அதாவது அந்தச் சிலையின் கண் ஏதேனும் அஜாக்கிறதையினால் அடி பட்டுவிட்டால் அந்தச் சிலையை மீண்டும் சரி செய்ய முடியாது, அதனால் அதற்கென்று ஒரு நேரம் ஒதுக்கி ,இன்னும் கொஞ்ஜம் கவனமாக கண்ணை செதுக்கும் போது,வெகு தீவிரமாக கலைநுணுக்கத்தோடு அதிக கவனத்தோடு சிலையின் கண்ணைத் திறப்பர். அது மட்டுமல்ல ஒரு சிலை முழுமை பெறும் வரை சிற்பியைத்தவிற மற்றவர்கள் அதைப் பார்க்க அனுமதிக்க மாட்டார்கள். ஏனென்றால் அதைப் பார்க்கும் யாராவது ஒருவர் கண் திருஷ்டி போட்டுவிட்டால் சிலை சரியாக வராது என்பது சிற்பிகளின் நம்பிக்கை. அதனால்தான் கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது என்று சொல்லி இருப்பரோ பெரியவர்கள்....?


கண்ணடி என்பது கண் திருஷ்டி என்று பொருள் வருகிறது ஆமாம் கண் திருஷ்டி என்று ஒன்று உண்டா?அதெல்லாம் சுத்தப் பயித்தியக் காரத்தனம் ,என்று நாகரீகம் முற்றிய நிலையில் நம் மனம் அதை ஒதுக்கினாலும் பெரியவர்கள் என்ன காரணத்துக்காக இப்படி சொல்லி இருக்கிறார்கள் என்று அலசினால்…
”எப்படி இப்போதும் இளமையாக காட்சி அளிக்கிறீர்கள்”? என்று கேட்பவர்களுக்கு நான் விளையாட்டாக பதில் சொல்வேன் ,சிறு வயதிலேயே முதியவன் போல தோற்றம் அமைந்து விட்டதால் ,அப்போதிலிருந்தே உங்கள் கண்கள் என்னைப் பார்த்து பழகிவிட்டதால் இப்போதும் என்னால் அதே மாதிரி தோற்றமளிக்க முடிகிறது என்று. கண்ணுக்கு பழக்கம் மிக முக்கியம் என்பது இந்த பதிலால் கொஞ்சம் விளங்குகிறது அல்லவா,
ஆமாம் இந்தக் கண்களின் பழக்கம் நமக்கு எப்படி மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்பதற்கு என்னுடைய வாலிப வயதிலே எனக்கு ஏற்பட்ட ஒரு சம்பவத்தை ஆராய்வோம்.


ஒரு நாள் வில்லிவாக்கம் என்னும் ஊரிலே நான் சாலையில் நடந்து போய்க்கொண்டிருந்தேன். அனேகமாக பருவப் பெண்கள் எதிரே வந்தால் அவர்களை இந்தக் காலத்தில் இளைஞ்ஞர்கள் வெறிப்பதைப் போல என்னால் பார்க்க முடிந்ததில்லை, ஏனென்றால் என் தாயாரின் வளர்ப்பு அப்படி,ஆனால் அதையும் தாண்டி ஒரு பெண்ணை வைத்த கண்வாங்காமல் பார்த்த அநாகரீகமான செயலை நான் செய்தேன்....ஏன் அப்படி செய்தேன் என்று என்னையே நான் ஆராய்ந்ததில் எனக்கு ஒரு முடிவு கிடைத்தது அது ' அந்தப் பெண்ணின் கண்களில் இருந்த காந்தமோ அல்லது அந்தப் பெண்ணின் பேரழகோ,ஏதோ ஒன்று என்னை ஈர்த்திருக்கிறது என்று உணர்ந்தேன்,மறு நாளும் அதே நேரத்துக்கு அதே சாலையில் நான் சென்று அந்தப் பெண்ணைக் காண தவமிருந்தேன். அது ஒரு நேர ஒற்றுமையோ, அல்லது என் அதிர்ஷ்டமோ மீண்டும் அதே தேவதை நடந்து வந்து கொண்டிருந்தாள்.மறுநாளும் அவளையே பார்த்துக் கொண்டிருந்து விட்டு வீட்டுக்குத் திரும்பினேன்... இது போல தொடர்ச்சியாக அவளைக் காண்பதும் ஒவ்வொரு நாளும் என்னுடைய மனநிலை மாறு பாட்டை அலசுவதும் எனக்கு ஒரு பெரிய ஆராய்ச்சியாகப் பட்டது

..
முதல் நாள் அவளைப் பார்த்தவுடன் நான் அதிர்ந்தேன், ஆம் அவள் அழகு என்னை மயக்கியது. அவள் கண்கள் என்னை அடித்துப் போட்டது, மறு நாள் அதே அழகுடன் அந்தப் பெண் ,அதே வாலிப வயதுடன் நான். ஆனால் முதல் நாள் என்னை அடித்துப் போட்ட அந்த அழகின் ,கவர்ச்சியின் விகிதா சாரம் மறுநாள் சற்றே குறைந்திருந்தது அதற்கு மறு நாள் இன்னும் சற்று குறைந்தது, இப்படியே நான் அவளைப் பார்த்த கடைசீ முறை எனக்கு அவள் பால் ஏற்பட்ட கவர்ச்சியின் விகிதாசாரம் வெகுவாக குறைந்து போய் விட்டது, ஏன் இந்த மனோ நிலையில் இவ்வளவு மாற்றம் என்று யோசிக்க ஆரம்பித்தேன் ,இறைவனின் படைப்பின் அற்புதத்தை யோசிக்க ஆரம்பித்தேன். உலகில் உள்ள அத்துணை பெண்களுக்கும் ஒரே மாதிரி அவயவங்கள்
உலகில் உள்ள அத்துணை ஆண்களுக்கும் ஒரே மாதிரி அவயவங்கள். ஆனால் அவைகளை அமைக்கும்போது அளிக்கும் சிறு சிறு அளவு மாற்றங்களால் கோடானு கோடி மக்களை கோடானு கோடி விதமாகப் படைக்கும் இறைவனின் அற்புதம் விளங்கியது. சிறு சிறு அளவு மாற்றங்களில் இத்துணை மாற்றுப் படைப்புகள் கொடுக்க முடியுமா...? முடிகிறதே இறைவனால்!


ஒன்று புரிந்தது அவ்வளவும் கண்கள் செய்த மாயம்,ஆமாம் கண்கள் இதயத்தின் வாசல் என்று யாரோ கூறியது நினைவுக்கு வருகிறது, முடிவு என் கண்களுக்கு அவள் அழகு பழகிவிட்டது.அவ்வளவே ,அவள் அழகு சற்றும் குறையவில்லை என்பதே உண்மை, என் கண்களுக்கு அவள் அழகு பழகிவிட்டதால் என் இதயத்தில் முதல் நாள் ஏற்பட்ட அதிர்வுகள் வரவில்லை. ஆகவே நாம் கண்ணால் பார்ப்பது இதயத்தை பாதிக்கும் என்பது உண்மைதானோ...? அப்படியானால் கண் திருஷ்டி என்பது உண்மையாகத்தான் இருக்க வேண்டும் .கண்களால் பார்த்தால் இவ்வளவு பாதிப்பு ஏற்படுமானால் எவ்வளவு ஜாக்கிறதையாக இருக்க வேண்டும் நாம்...? முன்பெல்லாம் பல தவ வலிமை பெற்றோர் கண்ணால் பார்த்தே ஒரு பெண்ணுக்கு ஒரு சிசுகர்ப்பம் ஏற்படுத்த முடியும் என்று பல கதைகள் கேட்டிருக்கிறேன் அது உண்மையா என்று ஆராய வேண்டும் .ஆக கண்களுக்கு இருக்கும் சக்தி வலிமையானதுதான் என்பதில் சந்தேகமில்லை,ஆகவே கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது என்று பெரியவர்கள் சொன்ன பழமொழி உண்மையாக இருக்கக் கூடும் .


ஒரு பெண்ணை ,அவள் அழகை ரசிப்பதில் தவறேதும் இல்லை, ஆனாலும் அதில் ஒரு நாகரீகம் இருக்க வேண்டும் ,நம் கண்கள் பார்ப்பதை அவள் உணர்ந்தாலும் அந்தப் பார்வை அவளுக்கு உறுத்தாத வகையில் இருக்க வேண்டும் என்று தோன்றியது, பருவ வயதில் ஏற்படும் விழிப்புணர்ச்சி இயல்பானதுதான், , ஆனால் விழி புணர்ச்சி மிகவும் தவறானது அல்லவா...? அதனால்தான் பெரியவர்கள் திருஷ்டி சுற்றிப் போடுங்கள் என்கிறார்கள்.
"கண்ணொடு கண் நோக்கின் வாய்ச் சொற்கள் ஏது பயனுமில " என்னும் வாக்கிற்கேற்ப கண்ணடி படுதல் கூடாது, கல்லடி பட்டால் ஆறும் கண்ணடி பட்டால் கஷ்டம்தான் , முன்பெல்லாம் நாம் எழுது கோலாக பயன் படுத்தி வந்த ஒரு சாதாரண பென்சிலின் கூர்முனையை நம்முடைய இரு கண்ணுக்கு மத்தியில் வைத்து இரு கண்ணாலும் நாம் அந்த கூர் முனையைப் பார்த்தாலே சிறிது நேரத்தில் தலை சுற்றும், தலை வலிக்கும்..

ஏனென்றால் நம் இரு கண்ணின் பார்வை அலகுகள் ஒரு சேர ஒரு புள்ளியில்..அதாவது இரு கண்ணுக்கு இடையே சந்திக்கும்போது அது நம் நெற்றிப் பொட்டில் சந்திக்கின்றது. நெற்றிப் பொட்டில் இரு கண்ணின் பார்வையின் அலகுகள் சந்திக்கும் போது நம் மூளையில் ஏதோ ஒரு மாற்றம்,அல்லது ஒரு பாதிப்பு வருகிறது அதனால் தலைய வலிக்கிறது, தலை சுத்துகிறது உச்சித் திலகம் என்பது புருவ மத்தியைக் குறிக்கும். யோகநெறியில் புருவமத்தியை 'ஆக்கினை' என்று சொல்வது வழக்கு. ஐம்புலன்களை கட்டுக்குக் கொண்டுவரும் மையம் 'ஆக்கினை'. சாதாரணமாக திலகம், குங்குமம் இட்டுக்கொள்ளும் இடம் இந்தப் புருவ மத்தியில்தான்.


ஒன்றைக் குறித்து யோசிக்கும்போதுகூட விரலால் புருவமத்தியைத் தொட்டுக்கொண்டுதான் யோசிக்கிறோம். இதனையே உணர்வுடையோர் மதிக்கின்ற மாணிக்கம் என்கிறார். 'உதிக்கின்ற செங்கதிர்' என்பது சூரியனின் செங்கதிர்களைக் குறிப்பது போல் தோன்றினாலும் - சூரியனின் கதிர்கள் எல்லாவுயிர்களையும் காப்பது போல், இறைவன் எல்லா உயிர்களிலும் உள்ளிருந்து இயக்குகிறான் என்பதை விளக்கவே 'உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம்' என்றார்.அபிராமி பட்டர் இயற்றியவர்: அபிராமி பட்டர் ” கள்ளவாரணப் பிள்ளையார் காப்பு ” என்னும் இறை வணக்கப் பாடலில் .அதாவது புருவமத்தியில் தோன்றி நம்மை இயக்குகிறாள் என்பது மறைபொருள். இதனை உணர்ந்தவர்கள் இறையை மாணிக்கமாக மதிக்கின்றனர்.

அப்படி இருக்க கண்ணடி படலாமா...கூடாது, மனோ தத்துவ நிபுணர்கள் ஒரு பெண்டுலத்தை ஆட்டி விட்டு அதையே பார்கச் சொல்லுகிறார்கள். அப்படி பார்த்துக் கொண்டிருக்கும் போதோ அல்லது அவர்களின் கண்ணையே பார்க்கச் சொல்லுகிறார்கள். அப்படி நம்முடைய சாதாரண கண்கள்,அந்த மனோ தத்துவ நிபுணரின் சக்தி வாய்ந்த கண்களைச் சந்திக்கும் போது நம்முடைய பார்வையின் சந்திப்பு புள்ளியும் ,அவருடைய பார்வையின் சந்திப்பு புள்ளியும் ஒரு இடத்தில் சந்திக்கின்றன, சற்று நேரத்தில் நம்முடைய சாதாரண கண்ணின் பார்வையின் வீரியம் குறைந்து மனோதத்துவ நிபுணரின் பார்வையின் வீரியம் அதிகமாகும்போது நம் பார்வையின் சந்திப்பு புள்ளி பின் வாங்குகிறது, அப்படி பின்வாங்கி அவருடைய பார்வையின் சந்திப்பு புள்ளி நம்முடைய நெற்றிப் பொட்டில் வந்து தாக்கும் போது நாம் வலுவிழக்கிறோம்.

அவர் சொல்லுக்கு கட்டுபட்டு மயங்குகிறோம். நம் மூளை அவர் கட்டுப்பாட்டில் வருகிறது அதனால்தான் நெற்றிப் பொட்டை மறைத்து ஏதேனும் ஒரு பொட்டு வைத்துக் கொள்ளச் சொல்லி நம் முன்னோர் நமக்கு அறிவுறை சொன்னார்களோ. அடடா பெரியவர்களின் ஞானம் நம்மை வியக்க வைக்கிறது! அந்தக் காலத்துப் பெரியவர்களின் ஞானம்தான் .இந்தக் காலத்து விஞ்ஞானம் என்கிற உண்மை புரிகிறது. அப்போது விஞ்ஞானம் என்று சொன்னால் நமக்குப்
புரியாது என்கிற ஒரே காரணத்தினால் அவர்கள் மெய்ஞானம் என்று அனைத்தையும் ஏற்படுத்தி விட்டு சென்றனரோ? என்று எண்ணிப் பார்க்கையில் வியப்பேற்படுகிறது அவர்களின் தீர்க்க தரிசனத்தின் மேல்..


ஈசனாரின் நெற்றிக்கண்ணில் தோன்றிய ஒளியால் பிறந்தவன் கந்தன். அதே நெற்றிக்கண்ணால் நக்கீரனை எரித்து சாம்பலாக்கினான். தன் கண்ணையே ஈசனுக்கு அளித்தவன் வேடன் கண்ணப்பன். ஒரு கையால் ஒரு கண்ணைப் பிடுங்கினான், மறு கண்ணைப் பிடுங்க கைகள் வேண்டுமே அதனால் ஈசனின் முகத்திலே செருப்புடன் கூடிய காலை வைத்து குறுதியை அடைத்தவன் கண்ணப்ப நாயனார். கண்ணப்ப நாயனாரின் பக்தியைப் புரிந்துகொண்டு இறைவனே காட்சி அளித்து மீண்டும் கண்ணப்ப நாயனாருக்கு கண்களை அளித்தான் ஈசன்.
கல்லடி படவேண்டாம், கண்ணடி...... படவே வேண்டாம் பெரியோர் சொல் வேதம்... நம்புவோம்.. அதனால் கண்ணடி படவே கூடாது, அப்படியே பட்டால் இறைவன்தான் காக்க முடியும் என்று உணர்த்தத்தான் இந்தப் பழமொழியை ஆன்றோர் கூறிவிட்டுச் சென்றனரோ..?
அன்புடன்
தமிழ்த்தேனீ

பங்களிப்பாளர்கள்

தமிழ்த்தேனீ

இப்பக்கம் கடைசியாக 4 ஏப்ரல் 2011, 16:58 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 5,914 முறைகள் அணுகப்பட்டது.