பாரிஜாதவனேஸ்வரர் திருக்கோவில்

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

 


அருள்மிகு பாரிஜாதவனேஸ்வரர் திருக்கோவில்.


                                                                        
T 500 341.jpg


பாரிஜாதவனேஸ்வரர் என்ற களர்முளைநாதேஸ்வரர்
-
அம்மன்/தாயார் : அமிர்தவல்லி என்ற இளம்கொம்பன்னாள்
தல விருட்சம் : பாரிஜாதம்
தீர்த்தம் : துர்வாச, ஞான, பிரம்ம, ருத்ர தீர்த்தங்கள்
-பழமை : 1000-2000வருடங்களுக்கு முன்
புராண பெயர் : திருக்களர்
ஊர் : திருக்களர்
மாவட்டம் : திருவாரூர்
மாநிலம் : தமிழ்நாடு


பாடியவர்கள்:


அப்பர், சம்பந்தர்

தேவாரப்பதிகம்

கொங்கு லாமலாச் சோலை வண்டினம் கிண்டி மாமது வுண்டிமை சைசெயத்
தெங்குபைங் கமுகம் புடைசூழ்ந்த திருக்களருள்
மங்கை தன்னெடுங் கூடிய மண வாளனே பிணை கொண்டார் கைத்தலத்
தங்கையிற் படையாய் அடைந்தார்க்கு அருளாயே
.

-திருஞானசம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 105வது தலம்.

தல சிறப்பு:

இத்தல இறைவன் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார்.

80 அடி உயர ராஜ கோபுரம் கிழக்கு நோக்கியுள்ளது. சிவன், அம்மன் இருவரும் கிழக்கு நோக்கி தனி சன்னதிகளில் அருளுகின்றனர்.

பிரகராரத்தில் வலம்புரி விநாயகர், விஸ்வநாதர், கஜலட்சுமி, அகத்தியர், நாயன்மார்கள், சோமாஸ்கந்தர், சந்திரசேகரர், தெட்சிணாமூர்த்தி, சுப்பிரமணியர், துர்க்கை, லட்சுமி, சண்டிகேஸ்வரர் உள்ளனர்.

அஷ்டபுஜ துர்க்கை சிம்மத்தின் மீது அமர்ந்த கோலத்தில் இங்கு அருள்பாலிக்கிறாள். அகோர வீரபத்திரர் தனி சன்னதியில் மேற்கு முகமாக வீற்றிருக்கிறார்.

தலபெருமை:
முருகப்பெருமான் அறுபதினாயிரம் முனிவர்களுக்கும், துர்வாசருக்கும், பஞ்சாட்சர மந்திரத்தை உபதேசம் செய்தது இத்தலத்தில் தான். எனவே முருகப்பெருமான் இத்தலத்தில் வள்ளி, தெய்வானை இல்லாமல் குரு வடிவில் அருள்பாலிக்கிறார். கல்வியில் மேன்மை பெற இவரை வழிபடுவது சிறப்பு.

சிதம்பரம், பேரூரில் ஆனந்த தாண்டவம், திருவாரூரில் அஜபா தாண்டவம், மதுரையில் ஞான சுந்தர தாண்டவம், அவினாசியில் ஊர்த்துவ தாண்டவம், திருமுருகன் பூண்டியில் பிரம்ம தாண்டவம் தந்தருளிய சிவபெருமான் இத்தலத்தில் பிரம தாண்டவ தரிசனம் தந்துள்ளார்.

நடராஜரின் பிரமதாண்டவ தரிசன வடிவமும், எதிரில் துர்வாசர் கைகூப்பிய நிலையில் உள்ள வடிவமும் உள்ளது. துர்வாச முனிவரே இக்கோயிலுக்கு முதலில் கும்பாபிஷேகம் செய்ததாக புராணங்கள் கூறுகின்றன. கோவிலூர் மடாதிபதி வீரசேகரஞான தேசிக சுவாமிகளின் ஜீவ சமாதி கோயிலின் அருகே உள்ளது. இவர் இக்கோயிலுக்கு அதிக திருப்பணிகள் செய்துள்ளார். எனவே இவரை "திருக்களர் ஆண்டவன்' என வழிபாடு செய்கிறார்கள். பராசர முனிவர், காலவ முனிவர் வழிபட்ட தலம்.

இத்தலத்தில் வழிபாடு செய்தால் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் மோட்சம் கிடைக்கும் எனவும், கேது தோஷத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வழிபட்டால் தோஷம் நிவர்த்தியாகும் என்பதும் ஐதீகம்.

தல வரலாறு:


பதஞ்சலி முனிவருக்கும், வியாக்ரபாதருக்கும் சிவபெருமான் ஆனந்த தாண்டவ தரிசனம் தந்தருளியதை அறிந்த துர்வாச முனிவர் தனக்கும் நடன தரிசனம் தர வேண்டி இத்தலத்தில் கடும் தவம் இருந்தார்.

இவர் தேவலோக மலராகிய பாரிஜாதத்தை கொண்டு வந்து இப்பகுதியை பாரிஜாத வனமாக்கினார். பின் தீர்த்தம் உண்டாக்கி, பாரிஜாத மரத்தின் அடியில் லிங்கத்தையும், அருகே அம்பாளையும் பிரதிஷ்டை செய்து, தேவ தச்சனை கொண்டு கோயில் கட்டி வழிபாடு செய்தார். இதனால் இத்தலத்திற்கு பாரிஜாத வனம், தருவனம், கற்பகவனம் என்ற புராணப்பெயர்கள் உண்டு.

இவரது தவத்தில் மகிழ்ந்த இறைவன் இத்தலத்தில் "பிரமதாண்டவ தரிசனம்' தந்தருளினார். களரி என்பதற்கு தாண்டவம் என்றும் பொருளுண்டு. களரி என்பது மருவி "திருக்களர்' ஆனது. இதனால் இத்தல இறைவன் களர்முளை நாதேஸ்வரர் என அழைக்கப்படுகிறார்.

திருவிழா:

சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரத்தில் திருவிழா. வைகாசி விசாகம், நவராத்திரி, கந்த சஷ்டி, ஆருத்ரா தரிசனம், மார்கழி சஷ்டி திதி, சதய நட்சத்திரத்தில் நமசிவாய எனும் பஞ்சாட்சர மந்திரம் உபதேசிக்கும் நிகழ்ச்சி.

திறக்கும் நேரம்:

காலை 7 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்


ஆன்மீகச் சிந்தனை மலர் :


* படிகளைக்கண்டு மலைக்காதீர்கள் - வள்ளலார்.

                                                                             
Tblanmegamideanews 1285952330.jpg


கருணை நிறைந்தவராய் இருங்கள். உங்கள்மனதில் இரக்கம் ஊற்றுப் போல பொங்கி வழியட்டும். அடுத்தவர் துன்பங்களைப் போக்க உங்களால் இயன்ற உதவிகளைச் செய்யுங்கள்.
வயிற்றுப் பசிக்காக மற்ற உயிர்களைக் கொன்று உண்பது கூடாது. உயிர்க்கொலை புரிவோர் எமக்கு எந்நாளும் உறவாக மாட்டார்கள். இறைவன் உங்கள் கண்ணுக்கு எட்டுவதில்லை. ஆனால், கருத்துக்கு எட்டுவான். அன்போடு அவனை பற்றிப் பிடியுங்கள். நம்மை விட்டு விலகவே மாட்டான். அன்பு எங்கிருக்கிறதோ அங்கே இறைவன் இருக்கிறான். பலகாலம் இறைவனை வழிபாடு செய்வதால் உண்டாகும் நன்மைகளை எல்லாம் தர்மம் செய்து ஒரேநாளில் பெற முடியும். தர்மத்தின் பயனை உணர்ந்து கொண்டவர்கள் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தர்மம் செய்வார்கள். எத்தனை படிகள் என்று மலைத்து நிற்காதீர்கள். எல்லாப் படிகளையும் படிப்படியாக கடந்து விடலாம். உச்சிக் கமலத்தில் ஊற்றெடுக்கும் அமுதத்தைப் போல ஆண்டவன் இருக்கிறான். மனந்தளராமல் கடவுளைக் காணும் முயற்சியை மேற்கொள்ளுங்கள். புலால் உண்ணும் மனிதர்களைக் கண்டால் என் மனம் நடுங்குகிறது. அருட்பெருஞ்சோதியை உள்ளும் புறமும் காண்பவர்கள் மன்னுயிரைத் தன் உயிர்போல் மதித்து நடப்பார்கள்.


பவள சங்கரி திருநாவுக்கரசு.

தேதி - 07 -  02-- 2011

நன்றி - தின மலர்.

பங்களிப்பாளர்கள்

Coralsri.blogspot.com மற்றும் Ksubashini

இப்பக்கம் கடைசியாக 10 மே 2011, 14:22 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 1,540 முறைகள் அணுகப்பட்டது.