பிலிப்பைன்ஸ் மொழி-பண்பாட்டில் தமிழ்க் கூறுகள்

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

பொருளடக்கம்

பிலிப்பைன்ஸ் மொழி-பண்பாட்டில் தமிழ்க் கூறுகள்


(Tamil elements in the Language and culture of Philippines)


முனைவர் ப. டேவிட் பிரபாகர்
வருகைதரு பேராசிரியர்
தெ லசால் பல்கலைக்கழகம்,
மணிலா, பிலிப்பைன்ஸ்தமிழகம் மேற்கத்திய நாடுகளோடு கொண்டிருந்த வணிகத் தொடர்புகளுக்கும் சீன நாட்டோடு கொண்டிருந்த பல்வகைத் தொடர்புகளுக்கும் எண்ணற்ற சான்றுகள் கிடைக்கின்றன. இது போன்றே, இன்றைய மலேயா, கம்போடியா, இந்தோனேஷியா முதலிய நாடுகளோடு தமிழகம் கொண்டிருந்த அரசியல் உள்ளிட்ட பல்வகைத் தொடர்புகளை ஆய்வுகள் எடுத்துக்காட்டுகின்றன. (க.த.திருநாவுக்கரசு, 'தெற்காசிய நாடுகளில் தமிழ்ப் பண்பாடு' 1987...) ஆயினும், தூரக்கிழக்கு ஆசிய நாடுகளான கொரியா, ஜப்பான், பிலிப்பைன்ஸ் முதலிய நாடுகளோடு தமிழகத்துக்கான உறவுகள் குறித்து விரிவான ஆய்வுகள் நிகழ்த்தப்பெறவில்லை. ஜப்பானிய- தமிழ் மொழி உறவுகள் குறித்து ஆய்வுகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. நியூசிலாந்தில் 1836 இல் கண்டெடுக்கப்பட்ட தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பித்தளையால் ஆன கப்பல் மணி தமிழக-நியூசிலாந்து தொடர்புக்குச் சான்றாக விளங்குகிறது.
கொரியாவில் பணிபுரியும் முனைவர் நா.கண்ணன், மின் தமிழ் மடலாடற் குழுவிற்கு அண்மையில் எழுதியுள்ள கடிதத்தில், 'சோழர்களின் ஆளுமை கொரியாவரை இருந்திருக்க வாய்ப்புண்டு. இங்கு 'சொல்லா' என்றொரு மாவட்டம் உண்டு. அது வணிகச் சாவடியாக இருந்திருக்கலாம்.' எனக் குறிப்பிடுகிறார். இந்தியவியலாளரான வி.ஆர். இராமச்சந்திர தீட்சிதர் குறிப்பிடுவதைப் போன்று,(Origin and Spread of Tamils -1947)கடலோடிகளான தமிழர்கள் ஆஸ்திரேலியா, பாலினேஷியா குறித்து அறிந்தவர்களாக இருந்திருக்க வேண்டும். இக்கட்டுரை பிலிப்பைன்ஸ் மொழி மற்றும் பண்பாட்டில் காணலாகும் தமிழ்க் கூறுகளை அறிமுகப்படுத்துவதாக அமைகிறது.


பிலிப்பைன்ஸ்


இந்நாடு தீவுகளின் கூட்டமாகும். புவியமைப்பில் தமிழகமும் பிலிப்பைன்சின் பகுதிகள் பலவும் ஒரே நேர்க்கோட்டில் (Latitude) அமைந்துள்ளன. இதன் தலைநகரம் மணிலா ஒரு துறைமுகப் பட்டினம். 'மணிலா பயறு', 'மணிலா புளி' (கொடுக்கா புளி) ஆகிய வழக்குகள் இதன் தமிழகத் தொடர்புகளைக் காட்டுவன. அரிசி இந்நாட்டின் அடிப்படை உணவு; மல்லிகை இந்நாட்டின் தேசிய மலர். கரும்பு வயல்களும் தென்னையும், முக்கனிகளும் தமிழகமாகவே பிலிப்பைன்சைக் காட்சிப்படுத்துகின்றன. வாழை இலையில் உண்ணுதல், வெற்றிலைப் பாக்கு போடுதல் தமிழகச் செல்வாக்கைக் சுட்டுகின்றன.


பிலிப்பைன்ஸ் 16 ஆம் நூற்றாண்டு (கி.பி.1571) தொடங்கி ஸ்பானிஷ் காலனி ஆதிக்கத்திலும் 20 ஆம் நூற்றாண்டு தொடக்கம் முதல் (கி.பி.1898) அமெரிக்க ஆதிக்கத்திலும் இருந்த நாடு. இரண்டாம் உலகப்போரில் கடுமையான பாதிப்புக்குள்ளான நாடு. ஸ்பானிஷ் காலனி ஆதிக்கத்திற்கு முந்தைய பிலிப்பைன்ஸ் வரலாறு தெளிவாக அறுதியிடப்படவில்லை. இம் மண்ணின் ஆதிவாசிகள் வேளாண்மை அறியாத குகை மனிதர்கள்; வேட்டை, மீன் பிடித்தல், உணவு சேகரித்தல் ஆகியவற்றை அறிந்தவர்கள். இப்போதுள்ள மக்களில் பெரும்பான்மையோர் மலாய்-பாலினேஷிய இனமக்கள். ஜாவா, சுமத்திரா, இந்தோனேஷிய நாடுகளிலிருந்து வரலாற்றுக்கு முற்பட்ட காலம் தொடங்கி அலை அலையாக் குடியேறியவர்கள். இன்றைய மக்கள் பண்பாட்டுக் கலப்பும் இனக் கலப்பும் மிகுந்தவர்கள்.மக்கள் தொகையில் 80% கத்தோலிக்க கிறித்தவர்கள்;15%இஸ்லாமியர்கள்.


பிலிப்பைன்ஸ் தமிழகத் தொடர்பு

தமிழக – பிலிப்பைன்ஸ் உறவுகள் குறித்து ஒரு சில ஆய்வுகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. பிலிப்பைன்ஸ் மானுடவியலின் தந்தை எனக் கூறப்படும் Hendry Otley Bayer அவர்களின் ஆய்வுகளும் (1921,1936,1948), V.A. Makarenko என்பவர் 'Tamil Culture -1964' இதழில் எழுதிய கட்டுரையும் இவர்களைப் பின்பற்றி Celine W. M. Arokiaswamy அவர்களின் 'Tamil Influences in Malaysia, Indonesia, and the Philippines' எனும் தலைப்பிலான ஆய்வும் இவ்வகையில் குறிப்பிடத்தக்கவை.மேலும், பிலிப்பைன்ஸ் பல்கலைக்கழகப் பேராசிரியர் Francisco R. Juan என்பவர் எழுதிய கட்டுரைகளும் (1965, 1971, 1971) Coeds Georges என்பவர் எழுதிய 'The Indianized States of Southeast Asia'(1968) எனும் நூலும் Robert B. Fox என்பவரின் ஆய்வுகளும் (1963,1967,1979) இவ்வகையில் குறிப்பிடத்தக்கவை.
தமிழக – பிலிப்பைன்ஸ் தொடர்புகள் மூன்று காலக்கட்டங்களில் நிகழ்ந்திருக்க வேண்டுமென்று பிலிப்பைன்ஸ் வரலாற்று அறிஞர்கள் கருதுகின்றனர்.


1. சங்க காலத்தையொட்டிய வரலாற்றுக்கு முற்பட்ட காலம். 2. தெற்காசிய நாடுகளில் நிலவிய ஸ்ரீவிஜய பேரரசு (கி.பி. ஏழாம் நூற்றாண்டு முதல் 13 ஆம் நூற்றாண்டு வரை) மற்றும் ஜாவாவில் நிலைகொண்டிருந்த மகாபஜித் (Mahapajit) எனும் இந்து அரசு (1293-1527) ஆகியவற்றின் காலம். 3. கிழக்கிந்திய கம்பெனியின் வணிகத் தொடர்பு ஏற்பட்ட காலம் (1644-1764).


முதல் காலக்கட்டத்தில் ஏற்பட்ட தமிழகத் தொடர்பை மறுக்கும் வரலாற்று அறிஞர்கள் சிலர், இரண்டாம் காலக்கட்டத்தில் இந்து, பௌத்த, இஸ்லாமியக் கூறுகள் பிலிப்பைன்ஸ் பகுதிகளில் இடம் பெறுவதை ஒப்புக் கொள்கின்றனர். ஆயினும், அதனைத் தமிழகத்தின் நேரடித் தாக்கமாக ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர் அல்லது இந்தியத் தாக்கமாகப் பொதுமைப்படுத்த முயலுகின்றனர். இதற்குப் பிலிப்பைன்ஸ் மொழிகளில் இடம் பெறும் (தமிழைக் காட்டிலும்) மிகுதியான சமஸ்கிருத சொற்களின் பயன்பாட்டைச் சான்றாகக் காட்டுகின்றனர். இடைக்காலத்தில் தமிழகத்திற்கும் தெற்காசிய நாடுகளுக்கும் இருந்த நெருக்கமான உறவை இவர்கள் கவனிக்க தவறுகிறார்கள். மேலும், பௌத்தத்திற்கும் சமஸ்கிருதத்திற்கும் தமிழகத்தில் இருந்த செல்வாக்கையும் தமிழ் மன்னர்களால் அவை அக்காலத்தில் போற்றி வளர்க்கப்பட்ட நிலையையும் பரப்பப்பட்டதையும் அவர்கள் கணக்கில் எடுத்துக்கொள்ள தவறுகிறார்கள்.


தொல்லியல் சான்றுகள்

பிலிப்பைன்சில் காணப்படும் வரலாற்றுச் சான்றுகள பல தமிழகத் தொடர்பைக் காட்டுகின்றன. 1928 இல் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வில் கிடைக்கப்பெற்ற கண்ணாடி மணிகள், வளையல்கள் ஆகியன இந்தியாவிலிருந்து வந்திருக்க வேண்டும் என Bayer கருதுகிறார் (செலின் 2000:86). ஏனெனில் இது சீனப் பாரம்பரியத்துடன் ஒத்திருக்கவில்லை. இதுபோன்றே இரும்புப் பயன்பாடும், நெசவு, வேளாண் தொழில் நுட்பங்களும் தெற்காசிய நாடுகளிடமிருந்து வந்திருக்கலாம் என Fox குறிப்பிடுகிறார். (செலின் 2000:91).


மேலும், மக்கள் ஊடுருவல் தெற்காசிய நாடுகளின் வாயிலாக விளங்கும் பல்லவன் (Palavan) தீவு வாயிலாக நடைபெற்றிருக்க வேண்டும் எனவும் இவர்கள் கருதுகின்றனர். இப் பெயர் பல்லவர்களை நினைவூட்டுவது. இது போன்றே, விசயாஸ் (Visayas)எனும் தீவின் பெயர் ஸ்ரீவிஜய பேரரசின் தொடர்பால் அமைந்திருக்கலாம் எனவும் வரலாற்று அறிஞர்கள் சிலர் கருதுகின்றனர்.


மேக்டன் (Macton) தீவில் கண்டெடுக்கப்பட்ட மகாபஜித் காலத்திற்கு முற்பட்ட உருவத்தை, சிவ வடிவமாக பேயர், மார்கெரென்கோ(1964) அடையாளம் காண்கின்றனர்.பிரான்சிஸ்கோ இதனைப் பௌத்த வடிவமாக்க் கருதுகிறார். இது போன்றே, 1917 இல் Wawa நதிக்கருகில் கண்டெடுக்கப்பட்ட அமர்ந்த நிலையிலுள்ள பொன்னாலாகிய பெண் தெய்வச் சிலையை பேயர் சைவ பெண் தெய்வமாகவும், பிரான்சிஸ்கோ பௌத்த பெண் தெய்வமாகவும் கருதுகின்றனர்.(இச் சிலை இப்பொழுது சிக்காகோ வரலாற்று அருங்காட்சியகத்தில் உள்ளது.) இவை பிலிப்பைன்ஸ் தமிழகத் தொடர்புக்குச் சான்றுகளாக விளங்குகின்றன.


மொழித் தாக்கம்


பிலிப்பைன்ஸ் மொழிகளில் 200க்கும் மேற்பட்ட சமஸ்கிருத, தமிழ்ச்சொற்கள் காணப்படுகின்றன. சமஸ்கிருதம் தமிழர்களால் பிலிப்பைன்ஸ் மொழிகளுக்கு வந்திருக்க வேண்டும் என்பது பிரான்சிஸ்கோவின் கருத்தாகும். (செலின் 2000:92). நீதிபதி ரோமுயல் டெஸ் (Romuel dez) என்பவர் பிலிப்பைன்ஸ் மொழிகள் திராவிடக் குடும்பத்தைச் சேர்ந்தவை என்றே குறிப்பிட்டுள்ளார்.

Phili.JPG
மணிலா அருகே கண்டெடுக்கப்பட்ட லகுனா செப்பேடு (Laguna Copperplate inscription-900 AD) பிலிப்பைன்ஸ் மொழிகளில் கிடைத்துள்ள பழமையான எழுத்துச் சான்றாகும்.இதில் இந்திய ஆண்டுக் கணக்குப்படி நாள் குறிப்பிடப்பட்டுள்ளது. இது இடைக்கால பிராமி எழுத்துகளைச் சார்ந்து அமைந்துள்ளது. முதல் பட்டியலில் உள்ள சொற்கள் யாவும் தமிழ்ச்சொற்களாகும்.இரண்டாம் பட்டியலில் உள்ள சொற்கள்
அன்றாட தமிழ்ப் பயன்பாட்டில் உள்ளவை.இவை தமிழர் தொடர்பால் பிலிப்பைன்ஸ் மொழிகளில் இடம் பெற்றவை. இவற்றுள் பலவும் Proto –Philippine, Tagalog-Eng. அகராதிகள் உள்ளவை. பிரான்சிஸ்கோ மற்றும் செலின் ஆகியோரால் எடுத்துக்காட்டப்பட்டவை.இவற்றுள் சில சொற்கள் மலாய், ஜாவானிய மொழிகளில் காணப்படவில்லை.எனவே இவை தமிழர்களின் நேரடித் தொடர்பால் இடம் பெற்றிருக்க வேண்டும். சொற்களை அடுத்து அடைப்புக்குள் இடம்பெறும் சுருக்க்க் குறியீடு பிலிப்பைன்ஸ் மொழி/பகுதியைச் சுட்டும்.


பட்டியல் - 1


apang (Mar.)'pan cake' அப்பம்
atep (Ilk.)' atip (Tag.)'roof' அத்திரம்
bagay (Tag.)'Share or divide' வகை (வகரம் பகரமாகத்திரிதல்)
bilanggu, bilanggo(Tag.,Ilk.)'prison/chain' விலங்கு
balidaya (Tag.)'trade' வணிகம்
bandi (Tag.)'wealth' பண்டம்
bata (Tag.)'suffer' வதை
guho (Tag.)'to cave' குகை
kapal (Mar.)'ship' கப்பல்
kawal (pil)'soldier' காவல்
kawali (Pil.)'skillet' குவளை
kulot (Tag.)'curl' சுருள்
malem (Pil)'afternoon' மாலை
mangga (Pil)'mango' மாங்காய்
mamppelang (Mar.)'ripe mango' மாம்பழம்
mama (Pil)'uncle' மாமா
malunggai (Tag.,Ilk.,Bik)'drum stick' முருங்கை
manic (Tag.,Ilk)'gem' மாணிக்கம்
mukha (Tag.)'face' முகம்(<முகர்தல்: தமிழ்மணி 20-2-2011)
mutya (Tag.)'pearl' முத்து
naga (Mar.)'serpent' நாகம்
palangka (Ilk.) 'chair' பலகை,பல்லக்கு
pitaka (Ilk), pitek(Igo.)'box/basket' பெட்டகம்
pusa (Pil)'cat' பூனை
putu (Tag.,Ilk)'rice cake' புட்டு
salaam (Pil)'filter' சல்லடை
sandana, sandanaq(Mar.)'sandal wood' சந்தனம்
songgo (Tag.)'shell' சங்கு
saray (Pil)'layer in strata' சாரை
tanika (Ilk.)'gold chain' அணிகலன்
tali (Pil)'string' தாலி


பட்டியல்-2


asa (Tag.) hope ஆசை
bala (Tag.) 'strength' பலம்
bhasa (sulu)'language' பாஷை
bidya (Tag.)'sting instrument,'வாத்தியம்
bias (Tag.)'poison' விஷம்
budi (Tag.)'Conscience' புத்தி
bumi (Sulu.)'Earth', பூமி
daya (Ilk.)'East' உதயம்
dewata (Bis.)'God' தேவதை
grahana (Mar.)'eclipse' கிரகணம்
garuda (Mar.)'vulture' கருடன்
guru (Tag.)'teacher' குரு
kapala (Bis.)'skull' கபாலம்
katha (sulu.)'story' கதை
laba (Tag.)'profit' லாபம்
maana (Mar.)'sense' மனம்
magha (Tag.)'cloud' மேகம்
katika (Mar.)'time' கடிகாரம்
masa (Tag.)'season' மாதம்
muksa (Tag.)'to die' மோட்சம்
mula (Tag.)'root' மூலம்
naraga (Tag.)'hell' நரகம்
paa (Tag.)'foot' பாதம்
panditha (Davao.)'learned' பண்டிதன்
sandi (Ilk.)'to join' சந்தி
surge (Tag.)'heaven' சொர்க்கம்
tiyaga (Tag.)'sacrifice' தியாகம்


இராமாயண- மகாபாரதச் செல்வாக்கு


பிலிப்பைன்ஸ் மக்கள் வழக்கில் இராமாயண- மகாபாரத கதை வடிவங்கள் பரவலாகக் காணப்படுகிறது. இந்நாட்டில் வழங்கும் 'Maharadia Lawana' (Maharaja Raavanaa) எனும் மரனவ் (maranao) வடிவமும், லம்-அங் (Lam-Ang) எனும் இலோகனாஸ் (Ilocanos) வடிவமும், இபுஹாவ் (Ifugao) பழங்குடிகளிடன் காணப்படும் பாடல்கள் பலவும்( hud-hud) இராமாயன- மகாபாரதக் கதைகளைத் தழுவியவை. மரனவ் (maranao) காப்பியமான தரங்கன்(Dharangan) இந்தியக் கதையமைப்பைக் கொண்டுள்ளது. மனுபோ அங்கே (Manu Ange) எனும் புராண கதை மாந்தர் கல்லாகும் கதை அகலிகை கதையை நினைவூட்டுகிறது. இதுபோன்றே, இபுஹாவ் (Ifugao) பாரம்பரியக் கதையில் வரும் பலிதுக் (Balituk) பாறையிலிருந்து அம்பு மூலம் தண்ணீர் வரவழைப்பது அர்சுனனை நினைவூட்டுகிறது. இராமாயண- மகாபாரத கதைகள் இன்றும் நாடகமாக நடிக்கப்படுகின்றன. வரலாற்றுக்கு முந்தைய பிலிப்பைன்சின் படைப்புக் கடவுள் 'Bathala'. இது பிரம்மனின் தழுவலாகும். மனுதர்மம், 'கர்மா' முதலியனவும் பிலிப்பைன்சில் பரவலாக அறியப்பட்டுள்ளன.


பண்பாட்டுக்கூறுகள்

விருந்தோம்பலின் அடையாளமாக விருந்தினர்களின் கழுத்தில் மல்லிகை மாலை சூட்டுவது இன்றளவும் பிலிப்பைன்ஸ் பண்பாட்டில் உள்ளது. இங்குள்ள இந்துக் கோவில்களின் வாயில்களிலும் மல்லிகை மாலைகள் விற்கப்படுகின்றன. பிள்ளைப் பேற்றுக்காகப் புனிதத் தலங்களுக்குப் பயணித்தல், இறந்த முன்னோர்க்கு உணவு படைத்தல், பித்தளை, தாமிரம், தகரம் கலந்த அழகிய வேலைப்பாடு கொண்ட உலோகக் கலை வடிவம், போட் லூட் (Boat – lute) எனப்படும் நரம்பிசைக் கருவி ஆகிய கூறுகள் தமிழ் பண்பாட்டின் தாக்கம் காரணமாக இருக்கக் கூடும்.மேலும், வாழை இலையில் உண்ணுதல், வெற்றிலைப் பாக்கு போடுதல், பச்சைக் குத்துதல், கண்ணுக்கு மைதீட்டல், சேவல் சண்டை போன்றவையும் இவ்வகையில் ஆராயத்தக்கவை.


தகாலக் மொழியை அடிப்படையாகக் கொண்டு தேசிய மொழி உருவாக்கப்பட்டுள்ள நிலையில் பிற பிலிப்பைன்ஸ் மொழிகள் முக்கியம் இழக்கும் நிலை, மேலைப் பண்பாட்டை நோக்கிய நகர்வு ஆகியன பிலிப்பைன்சின் பண்டை பண்பாட்டுச் சுவடுகளை அழித்து வருகின்றன. பிலிப்பைன்ஸ்-தமிழகத் தொடர்பு குறித்த ஆய்வுகள் இது வரை விரிவாக நிகழ்த்தப்படவில்லை. இந்நிலையில், பல்லவன் தீவு, விசயாஸ், மிண்டானவ் உள்ளிட்ட தென் பிலிப்பைன்ஸ் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் கள ஆய்வுகள் பிலிப்பைன்ஸ்-தமிழக வரலாற்றுத் தொடர்பை மேலும் துலக்கும்.


துணைநின்றவை

  • Bayer,H.O., "Sources of Philippines Culture", Mid_ Pacific Magazine,(Jan.- Mar), 1947
  • Celine W.M. Arokia swamy, Tamil Influences in Malaysia, Indonesia and Philippines, Printed in Philippines,Mar. 2000
  • Coedes,Georges, The Indianised States of South East Asia, East- West centre, Honolulu,1968
  • Fox,Robert B., Ancient man in Palawan, National museum,1963
  • Francisco,Juan R. Indian influences in the Philippines with special reference to Language and literature, University of Philippines,1964
  • Francisco,Juan R., Notes on Probable Tamil words in Philippines languages, University of Philippines,1965

--Ksubashini 16:45, 13 ஏப்ரல் 2011 (UTC)

பங்களிப்பாளர்கள்

Ksubashini

இப்பக்கம் கடைசியாக 13 ஏப்ரல் 2011, 16:51 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 3,074 முறைகள் அணுகப்பட்டது.