புதையலைத் தேடி

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

அ.ச.ஞானசம்பந்தன்
எல்லாவித வளங்களுடனும் வாழ்கின்ற ஒருவன் குறிப்பிட்ட ஓர் இடத்தில் புதையல் இருக்கிறது என்றால் அது பற்றி அதிகம் கவலைப்பட மாட்டான். ஒரு சமுதாயத்தின் புதையல் என்பது அந்தச் சமுதாயத்தின் முன்னோர்கள் தேடி வைத்த இலக்கியம் முதலியனவே ஆகும். இதை அல்லாமல் பணம், காசுதான் முன்னோர்கள் தேடி வைத்தார்கள் என்றால் அது பெரும்பாலும் மூன்று தலைமுறைக்கு மேல் நீடிப்பதில்லை. செல்வ வளம், அதிகார வளம் முதலிய அனைத்தும் நிறைந்திருந்த எகிப்திய, மெசப்பட்டோமிய, சுமேரிய, சீன, கிரேக்க, உரோம நாகரிகங்கள் அத்தனி வளங்களைப் பெற்றிருந்தும் இன்று பொய்யாய்க் கனவாய் மெல்ல மறைந்துவிட்டன. ஆனால் கிரேக்க இலக்கியம், சீன இலக்கியம், இலத்தீன் மொழி இலக்கியம் என்பவை இன்றும் உள்ளன.

அந்த இலக்கியங்கள், மறைந்துவிட்ட சமுதாயங்களின் வாழ்க்கைமுறை, தேடிய செல்வம், கொண்ட குறிக்கோள் என்பவற்றை எடுத்துக்காட்டும் கண்ணாடியாக அமைந்துள்ளன. மேலைநாட்டு முறை இது என்றால், இந்தியாவைப் பொறுத்தமட்டில் வேத நாகரிகம், குப்த நாகரிகம், மொகலாய நாகரிகம் என்று சொல்லிக்கொண்டே போனால் அவையும் இன்று கனவாக மாறிவிட்டன.

இத்தனை நாகரிகங்களிடையே வேதகால நாகரிகம், சுமேரிய நாகரிகம் என்பவற்றிற்கு முற்பட்டு இந்தியாவின் தென்கோடியில் தமிழ்நாட்டில் ஒரு நாகரிகம் தோன்றி, அது வடக்கே வளர்ந்து சென்று சிந்து வெளிப்பகுதியில் கால் கொண்டது. ஆனால் மிகச் சிற்ப்புடன் வளர்ந்த அந்த நாகரிகம் ஆரியர் வருகையால் அழியலாயிற்று. அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வேதகால நாகரிகம் நிலை பெற்றது. இந்தக் காலத்தை அடுத்துள்ள காலங்களில் தமிழகத்தில் மிக விரிவானதும், நுணுக்கமானதும் ஆகிய ஓர் இலக்கணமே தோன்றிற்று.

தொல்காப்பியம் என்று பெயர் பெற்று அந்த இலக்கணம், கிறிந்து பிறப்பதற்கு 700 அல்லது 800 ஆண்டுகள் முற்பட்டுத் தோன்றியிருக்கவேண்டும். எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என்ற மூன்று பெரும் பிரிவுகளையும் ஒவ்வொன்றிலும் ஒன்பது இயல்களையும், (உட்பிரிவுகளையும்) கொண்டு விளங்குகிறது இந்நூல்.

மிகப் பழைய மொழிகள் என்று இன்று குறிக்கப் பெறும் வடமொழி, கிரேக்கம், சீனமொழி ஆகியவற்றிற்கூட பொருளதிகாரம் என்ற ஒரு பகுதி இல்லை. உலகிலிருந்த, இருக்கின்ற வேறு எந்த மொழியிலும் மொழிக்குரிய இலக்கணம் ஓரளவு இருப்பினும் பொருளதிகாரம் என்ற பகுதி தமிழைத் தவிர வேறு எந்த மொழியிலும் இல்லை.

தொல்காப்பியப் பொருளதிகாரம் மொழிக்கு இலக்கணம் கூறவில்லை. அதற்குப் பதிலாக, அந்த மொழியைப் பேசும் மக்கள் வாழ்க்கை முறை, உணவு, உறைவிடம், இலக்கியம், வாழ்க்கையின் குறிக்கோள், நம்பிக்கைகள், தெய்வ வழிபாடுகள், என்பவற்றைக் குறிப்பதுடன் இன்னும் சிலவற்றையும் விரிவாகப் பேசுகின்றது.

தனிமையாக மலைகளில், மலைக்குகைகளில் வாழ்ந்தவர்கள், காட்டுப் பகுதியில் வாழ்ந்தவர்கள் மெல்ல ஒன்று கூடிக் கிராமங்களை அமைத்து ஒருங்கிணைந்து வாழத் தொடங்கினர். அவர்கள் வாழ்க்கை முன்னேற்றத்தில் கண்ட தனிச்சிறப்பு வேளாண்மை ஆகும். இந்த வாழ்க்கை முறைகள் குறிஞ்சி வாழ்க்கை, முல்லை வாழ்க்கை, மருத வாழ்க்கை என்று குறிக்கப்பெற்றன. இந்தக் காடுகள், மலைகள் முதலியவற்றில் இருந்து புறப்பட்ட சில மக்கள், மருத நிலத்தில் தங்கி வேளாண்மை செய்யாமல் கடற்கரைப் பகுதிகளில் குடியேறினர். ஏர் உழுது பயிர் விளைப்பதற்குப் பதிலாக படகுகள் கட்டிக் கடலிற் சென்று மீன் பிடித்தனர். கடல் நீரிலிருந்து உப்பை உண்டாக்கினர். இவர்கள் வாழ்க்கை நெய்தல் வாழ்க்கை என்று சொல்லப் பெறும்.

இந்த நால்வகை மக்களும் வாழுகின்ற பகுதிகள் அனைத்தும் தமிழகத்தில் இருந்தமையால் இந்தப் பூமிக்கு நானிலம், (நால்+நிலம்) என்று பெயரிட்டனர். காடுகள் நிறைந்து இருந்தமையின் மழை வளத்திற்குப் பஞ்சமே இல்லை. பெருநதி என்று சொல்லத் தக்கது காவிரி ஒன்றே ஆயினும் தாமிர வருணை, வையை முதலிய சிற்றாறுகளும் நீர் வளம் தந்தன. இதன் காரணமாக மக்கள் வளமான வாழ்க்கை வாழ்ந்தனர்.

இத்துணைச் சிறப்புடைய தமிழகம் மிகப் பழங்காலம் தொட்டே மூன்று பகுதிகளாகப் பிரிக்கப் பெற்றுச் சேர, சோழ, பாண்டியர் என்ற மூன்று இனத்தவரால் ஆட்சி செய்யப் பெற்று வந்தது. இந்த மூன்று அரசர்களுள்ளும் ஓயாது போர் நிகழ்ந்தது என்பது உண்மைதான். என்றாலும் மூவரும் தமிழர்களே ஆதலால் இப்போர்களின் வெற்றிதோல்விகள் பொருளாதார நட்டம் தவிர அவர்களுடைய வாழ்க்கை முறையைப் பாதிக்கவில்லை. இவர்களுடைய போர்களும் தமிழகத்திற்கு உள்ளேயே நிகழ்ந்தனவே தவிர தமிழகத்தை விட்டு வெளியே சென்றதாகத் தெரியவில்லை. சரித்திரத்துக்குள் அகப்படாத கரிகாற்சோழன் என்பவன் இமயத்தில் புலிக்கொடி பதித்தான் என்று இலக்கியம் பேசுவது தவிர வேறு சான்றுகள் ஒன்றும் கிடைக்கவில்லை.

கிறிஸ்துவுக்குப் பின் 2-ம் நூற்றாண்டு வரை தமிழகம் இருந்த நிலைதான் இதுவரை கூறப் பெற்றது. கி.பி.2 முதல் 5 நூற்றாண்டு முடிய களப்பிரர் என்ற வேற்று இனம் தமிழகத்துக்குள் புகுந்து பாண்டி நாட்டையும், பல்லவர்கள் ஆட்சி செய்த தொண்டை நாட்டையும் கைப்பற்றியது.

9-ம் நூற்றாண்டுத் தொடக்கம் சோழர்கள் தலையெடுத்துப் பல்லவர், பாண்டியர், சேரர் ஆகிய அனைவரையும் வென்று, தமிழகம் முழுவதையும் ஒரு குடைக்கீழ் ஆண்டனர். தரைப்படையுடன் மட்டுமல்லாமல் இச்சோழர்கள் கடற்படையையும் உருவாக்கி ஈழம், மலேசியா முதலிய நாடுகளையும் வென்று தம் குடைக்கீழ்க் கொண்டு வந்தனர். 12-ம் நூற்றாண்டின் முடிவில் சோழப் பேரரசும் அஸ்தமித்து விட்டது.


13 முதல் 18 நூற்றாண்டு முடியத் தமிழ்ச் சிற்றரசர்கள், தெலுங்குச் சிற்றரசர்கள், இஸ்லாமியச் சிற்றரசர்கள் முதலியோர் தமிழகத்தின் சிறு சிறு பகுதிகளைக் கைக்கொண்டு ஆண்டு வந்தனர். 19, 20ஆம் நூற்றாண்டுகளில் மேற்கத்திய ஆதிக்கம் தமிழகத்தை மூடி மறைத்துவிட்டது. இதுதான் நம் நாட்டின், நம் முன்னோர்களின் வரலாற்றுச் சுருக்கமாகும்.

வடநாட்டிலோ அல்லது உலகின் பிற இடங்களிலோ இல்லாத ஒரு தனிச் சிறப்பு இத்தமிழினத்திற்கு இருந்து வந்தது. கிறிஸ்து பிறப்பத்தற்கு ஆயிரம் ஆண்டுகள் முற்பட்டுத் தோன்றிய தமிழ் இலக்கியங்கள் இன்று வரை தைல தாரை போல் இருந்து வருகின்றன. கிறிஸ்து வரையிலுள்ள காலத்தில் தோன்றிய இலக்கியங்கள் சங்க இலக்கியங்கள் என்று பெயர் பெறுகின்றன. அவற்றுள் முக்கியமானவை பத்துப்பாட்டும், எட்டுத் தொகையும் ஆகும். இவ்விலக்கியங்களுள்தொல்காப்பிய இலக்கணத்திற்கு மாறுபட்ட பல கருத்துக்களும் இடம் பெற்றுள்ளதால் இந்த இலக்கியங்கள் தோன்றுவதற்குப் பல நூறு ஆண்டுகள் முன்னரே தொல்காப்பியம் தோன்றியிருக்கவேண்டும் என்று நினைப்பதில் தவறில்லை. கிறிஸ்துவிற்கு எண்ணூறு ஆண்டுகள் முன்னர் இப்படி ஒரு முழுமையான இலக்கணம் தோன்ற வேண்டுமானால் அதற்கு முன்னர் ஆயிரம் ஆண்டுகளாவது இலக்கியங்கள் தழைத்து இருந்திருக்கவேண்டும். இலக்கியம் கண்டதற்கே இலக்கணம் வரையப் பெற்றது. ஆகலின் தொல்காப்பியத்தின் முன்னர் இலக்கியம் தழைத்திருந்தது என்று கொள்வதிலும் தவறில்லை.

தமிழர்களுடைய மூவாயிரம் ஆண்டு வாழ்க்கை வரலாற்றை இவ்வளவு சுருங்கிய அளவில் கூறுவதன் நோக்கம் ஒன்று உண்டு. நம்முடைய நாகரிகம், பண்பாடு இவை இரண்டையும் பிரதிபலிக்கும் இலக்கியம் என்பது தான், இக்கட்டுரையின் தலைப்பில் புதையல் என்று குறிக்கப் பெற்றது.

அந்தப் புதையலில் இருந்தே தேர்ந்தெடுத்த சில நவரத்தினங்களை அடியில் தந்துள்ளோம். கிறிஸ்து பிறப்பதற்கு அரை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நமது இலக்கியங்களில் பதித்து வைக்கப் பெற்ற நவ மணிகளாகும் இவை.

“யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர் தர வாரா (புற நானூறு-192)
ஒரு நாட்டவர் தம்முடைய எல்லைக்கு அப்பால் உள்ளவர்களைத் தம்மைப் போன்ற மனிதர்கள் என்று கூட எண்ணவில்லை. எண்ணாதது மட்டுமல்ல. கொன்றும் குவித்தார்கள். எந்த நாகரிகக் காரர்களும் அவ்வளவு பழைய காலத்தில் உலக சகோதரத்துவத்தை இவ்வளவு சிறந்த முறையில் எடுத்துக் கூறவில்லை. பகைமை வளர்வதற்கு ஒரு முக்கிய காரணம் பிறர் தமக்குத் தீங்கிழைத்தார் அவரைப் பழிவாங்க வேண்டும் என்ற எண்ணமே ஆகும். இந்த எண்ணம் இருக்கின்றவரையில் யாதும் ஊர் யாவரும் கேளிர் என்பது கனவாய் முடிந்துவிடும். இந்த நுணுக்கத்தை அறிந்த கணியன் பூங்குன்றன் என்ற தமிழறிஞன் தீதும் நன்றும் பிறர் தர வாரா (ஆதலால்) யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று பாடினான்.

நம் முன்னோர் பொதிந்து வைத்த புதையலில் இந்த இரண்டு அடிகளை மட்டும் சொல்லத்தக்க முறையில் உலகிற்கு எடுத்துக் கூறினால், உலகம் சமாதானம் பெறும் வாய்ப்பு அதிகமாகும்.

இந்த உலகம் ஏன் நிலைபெற்று நிற்கிறது என்ற வினாவை அன்றைய தமிழறிஞன் ஒருவன் தன்னைத் தானே கேட்டுக்கொண்டான். நீண்ட ஆராய்ச்சிக்குப் பிறகு அவனுக்கு விடை கிடைத்தது. அந்த விடை உண்டால் அம்ம (புற நானூறு:182) என்று தொடங்கும் புறப்பாடலில் வரிசையாகப் பேசப் பெற்றுள்ளது. போரிட்டு மடியும் இன்றைய உலகத்திற்கு இந்தப் புதையலை எடுத்துத் தந்தால் எவ்வளவு பயனுடையதாகும், கடலுள் மாய்ந்த இளம் பெருவழுதி என்ற அந்தப் பாண்டிய மன்னன் கூறுவதை இதோ கேளுங்கள்.

தமக்கு இலாபம் என்று கருதி எந்த முயற்சியிலும் ஈடுபடமாட்டார்கள். பெருமுயற்சியுடைய அவர்கள் பணியெல்லாம் பிறருடைய நன்மைக்காகவே செய்யப் பெறுவதாகும். இவர்களுக்குச் சாவா மூவாப் பெரு வாழ்வு தரும் அமிழ்தமே கிடைத்தாலும், கிடைத்தற்கரிய பொருள் என்று கருதித் தாமே உண்ணால் பிறருக்குப் பகிர்ந்து அளித்து விட்டே உண்பர், யாரிடமும் வெறுப்புப் பாராட்ட மாட்டார்கள். அச்சமே இல்லாதவர்கள். புகழ் வருவதாயின் உயிரையும் கொடுப்பர். எவ்வளவு பெருத்த இலாபம் வரினும் அது பழியோடு வருவதானால் அதை ஏற்க மாட்டார்கள். இப்படிப்பட்ட மாட்சிமை உடையவர்கள் உலகிடை வாழ்வதானால் தான் உலகம் அழிந்து போகாமல் நிலை பெற்று நிற்கின்றது என்று கூறுகின்றார்.

ஆயிரக்கணக்கான அணுகுண்டுகளைத் தம்மிடம் வைத்துக்கொண்டு உலக அமைதிக்குப் பாடுபடுகிறோம் என்று வாய்கிழியப் பேசும் புரட்டர்களுக்கு இந்தப் புதையலை எடுத்து அனுப்பினால் எவ்வளவு பயனுடையதாக இருக்கும்.

பண்பாட்டிற்கு ஓர் எல்லை வகுக்கின்றது பழைய தமிழ் நாகரிகம்.
“முந்தை இருந்து நட்டோர் கொடுத்த
நஞ்சும் உண்பர் நனி நாகரிகர் (நற்றிணை- 355)
அதாவது எதிரேயே இருந்து கொண்டு தமக்கு நன்றாகத் தெரியும்படி விஷத்தை உணவிற் கலந்து ஒரு நண்பர் கொடுத்தால் முகஞ் சுழிக்காமல் அந்த நஞ்சை வாங்கி உண்பவர்களே சிறந்த நாகரிகம் உடையவர்கள் என்று பேசுகிறது இப்பாடல். விமானத்தில் போவதும், கணினியைப் பயன்படுத்துவதும் தான் நாகரிகம் என்று பேசித் திரியும் இற்றை நாள் மக்களுக்கு உண்மையான நாகரிகம் எது என்பதை இந்த இரண்டடிகள் எடுத்துத் தருகின்றன.

உலகம் தோன்றிய நாளிலிருந்தே ஓயாது உழைக்கின்ற ஓர் இனமும், அவர்களுடைய உழைப்பின் பயனைச் சுரண்டித் தின்னும் மற்றோர் இனமும் இன்று வரை இருந்து தான் வருகின்றன. சோழன் நல்லுருத்திரன் என்ற மன்னன், மேலே கூறிய இருசாராருள் யாருடைய நட்புத் தனக்கு வேண்டும் என்று விளைபதச் சீறிடம் நோக்கி (புறநானூறு: 190) என்ற பாடலில் இதோ பேசுகிறான்.
நெற்றி வியர்வை நிலத்தில் விழ உழுது, வித்தி, நீர்விட்டுக் கண்போல் பாதுகாக்கும் உழவனுடைய நிலத்தில் நன்கு முற்றி விளைந்த நெற்கதிரை இரவு நேரத்தில் படக்படக்கென்று வெட்டித் தன் வளைக்குள் கொண்டு சென்று வைத்துவிடுகிறது எலி. இதுபோன்று பிறர் உழைக்கச் சுரண்டும் மனிதர்கள் நட்பு எனக்கு வேண்டவே வேண்டா என்கிறான் அந்த மன்னன்.

தனிமனிதன் ஆயினும், ஒரு நாடே ஆயினும் பசிக்கொடுமை காரணமாக மற்றொருவரிடமோ அல்லது மற்றொரு நாட்டிடமோ சென்று, இதனை எனக்குத் தருக என்று கேட்பது மிக இழிவானதாகும். அப்படிக் கேட்பவர் எதிரே நான் தரமாட்டேன் என்று சொல்வது அதைவிட இழிவானதாகும். பிறார் கேளாமலே இதனை எடுத்துக்கொள்க என்று சொல்வது உயர்ந்ததாகும். அவ்வாறு கொடுப்பவர் எதிரே, அது எனக்கு வேண்டா என்று சொல்வது அதைவிட உயர்ந்ததாகும். இக்கருத்தைக் கழைதின் யானையார் என்ற புலவர் ஈ என இரத்தல் இழிந்தன்று (புறநானூறு :204) என்று தொடங்கும் பாடலில் 2500 ஆண்டுகளுக்கு முன்னரே கூறியுள்ளமை, இன்றைக்குப் பொதுவாக அனைத்து மக்களும் சிறப்பாகத் தமிழ் மக்களும் வாழ்க்கையில் மேற்கொள்ளவேண்டிய சிந்தனையாகும்.

புதையல் என்று கூறியவுடன் மிகப் பழங்காலத்தில் வழங்கிவந்த பொன் பொருள் என்றும், இற்றை நாளில் அதை அப்படியே பயன்படுத்துவது இயலாத காரியம் என்றும் நம்மில் பலர் நினைக்கின்றனர். ஆனால் இலக்கியப் புதையலுக்கு, அதிலும் சிறப்பாகத் தமிழிலக்கியப் புதையலுக்கு இக்கருத்து பொருந்தி வராது,

மார்ச், ஏப்ரல் ஆகிய இரு மாதங்களும் இந்திய நாடு தமிழ் மாநிலம் ஆகிய இரண்டிலும் நிதி அறிக்கை, (வரவு செலவுத் திட்டம்) சமர்ப்பிக்கப்படுகின்ற காலமாகும். ஓர் ஆண்டிற்கு விதிக்கப்படும் புதிய வரிகளும் இந்த அறிக்கையில் பேசப்படும். வரிக்கொள்கை பற்றி எல்லாக் கட்சியினரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் ஒரு பொதுத்தன்மை இன்றுவரை இருந்ததில்லை.

ஆனால், 2500 ஆண்டுகளுக்கு முன்னர், முதிர்ந்த வயதிலும் தலை நரைகொள்ளாத பிசிராந்தையார் என்னும் புலவர், ஒரு சிறிதும் அச்சமில்லாமல் பாண்டியன் அறிவுநடை நம்பி என்ற மன்னனிடம், நேருக்கு நேராக, காய் நெல் அறுத்து (புறநானூறு:184) என்று தொடங்கும் பாடலின் மூலம் வரிவிதிப்புக் கொள்கை பற்றி ஓர் உதாரணத்துடன் கூறுகின்றார்.

ஒரு சிறு பரப்பளவுள்ள நிலத்தில் விளைந்த நெல்லை அறுவடை செய்து, சேமித்து வைத்து தினமும் சிறிது சிறிதாக ஒரு யானைக்கு வழங்கினால் அந்தச் சிறிய பகுதியில் விளைந்த நெல் யானைக்குப் பல நாள் உணவாகும். அவ்வாறு செய்யாமல் யானையை அவிழ்த்து விட்டுத் தானே சென்று உண்ணுமாறு செய்தால் நூறு ஏக்கர் நிலமானாலும் அது பாழாகிவிடும். யானையின் வாய்க்குள் போகும் நெல்லைவிட அதிகமாக அதன் கால்களில் மிதிபட்டுப்பாழாகும். இந்த உவமையைக் கூறிவிட்டுப் புலவர் அரசனிடம் வரிவிதிப்புக் கொள்கை பற்றி இதோ பேசுகிறார். அறிவு மிக்க வேந்தன் மக்களின் கொடுக்கும் சக்தியை அறிந்து முறையாக வரி விதித்தால் நாடும் வளம் பெருகும். மக்களும் மகிழ்ந்து வாழ்வர். அவ்வாறில்லாமல் முட்டாளாகிய ஓர் அரசன் தன்னுடைய முட்டாள் தனத்திற்கேற்ற அமைச்சர்களை வைத்துக்கொண்டு ஒரேயடியாக மக்களிடம் வரி என்ற பெயரில் கொள்ளை அடித்தால், யானை புகுந்த நிலம் போல நாடு அழியும் என்கிறார்.

நம் முன்னோர் பழைய இலக்கியங்கள் என்ற பூமிக்குள் பொதிந்து வைத்துள்ள புதையலின் ஒரு பகுதியை இங்கொன்றும் அங்கொன்றுமாக மேலே எடுத்துத் தந்துள்ளோம். உலகிலுள்ள வேறு எந்த மொழியிலும், எந்த இலக்கியத்திலும் இது போன்ற புதையல்களை இவ்வளவு அதிகம் காண முடியாது. இவ்வாறு கூறுவதால் ஏதோ தாய்மொழி வெறியில் பேசுகிறோம் என்று யாரும் நினைக்க வேண்டா. இவற்றைக் கற்ற பிறகு பிறமொழி இலக்கியங்களில் நுழைந்தால் அவற்றைச் சிறந்த முறையில் இரசிக்கவும், ஒப்பாய்வு செய்யவும் இது பெரும் துணை புரியும் என்ற கருத்தின் அடிப்படையிலேயே இது வலியுறுத்தப் பெற்றது.

இந்தப் புதையல்கள் சங்கப் பாடல்களில் மட்டும் உள்ளனவோ என்று யாரும் சந்தேகம் கொள்ள வேண்டா. சிலப்பதிகாரம், மணிமேகலை, பெருங்கதை, கம்பராமாயணம், சூளாமணி, சிந்தாமணி, பெரிய புராணம் போன்ற காப்பியங்களில் மட்டுமல்லாமல் சிறு சிறு நூல்களிலும் கூட அகழ்ந்து தோண்டினால் இத்தகைய புதையல்கள் கிடைக்கும்.

இந்தப் புத்தாண்டிலிருந்தாவது (1999) தமிழர்களாகிய நாம் நம் முன்னோர் சேமித்து வைத்துள்ள புதையல்களைத் தேடி எடுக்க வேண்டும் என்ற உறுதி கொள்வோமா?

சரி. அப்படியானால் இந்த உறுதி மட்டும் போதாது; உறுதி கொண்டவர்கள் சில வழித்துறைகளை நாடிப் புதையல் இருக்குமிடம் செல்லவும் வேண்டும். நம் முன்னோர் பொதிந்து வைத்த காலத்தில் சுற்றுவட்டாரப் பூமி கல் முள் இல்லாமல் சுத்தமாகத்தான் இருந்தது. ஆனால் இன்று அப்பகுதி கரடு முரடானதாக, கல் முள் உள்ளதாக மாறிவிட்டது. இது என்ன கல் முள் என்று சந்தேகிக்கிறீர்களா? இந்தப் புதையல்களைத் தாங்கி நிற்கும் பாடல்கள் இன்று நம்மால் எளிதில் புரிந்து கொள்ள முடியாத சொற்களால் ஆனவை. அப்பாடல்களில் பயன்படுத்தப் பெற்ற பல சொற்கள் இன்று வழக்கொழிந்து விட்டன. இன்னும் சில சொற்கள் பொருள் மாறிவிட்டன. எனவே இன்றுள்ள நாம் அப்பாடல்களைப் படிக்கும்பொழுது அது கரடு முரடானதாக கல் முள் நிறைந்ததாக நினைக்கின்றோம். சற்றுப் பொறுமையுடன் இச்சொற்களின் பொருளை நின்று நிதானித்து அறிய முயலவேண்டும்.

அதுமட்டுமல்ல. இந்தப் புதையல் இருக்கும் இடத்திற்குச் செல்வது என்பதே சற்றுக் கடினமான விசயமாகும். ஆகவே அது இருக்கும் இடத்திற்குச் செல்லும் வழியை முதலில் தயார் செய்து கொள்ள வேண்டும். நகரத்தில் தார் போட்ட சாலையிலும், சிமெண்டு போட்ட சாலையிலும் நடந்து பழகிய நாம் இவை இரண்டும் இல்லாமல் கப்பி போட்ட சாலையில் நடப்பது பெருங்கடினம். அந்தக் கப்பியும் இல்லாமல் கற்கள் புதைந்துள்ள மண்சாலையில் நடப்பது அதைவிடக் கடினம். அதிலும் நடந்து பழகியபிறகு வயல் வரப்புகளில் நடந்து பழக வேண்டும்.
இதேபோல் அந்தப் பழைய பாடல்களையும் காப்பியப் பாடல்களையும், சிற்றிலக்கியப் பாடல்களையும் புரிந்து கொள்ள வேண்டுமானால் 20-ஆம் நூற்றாண்டை முடித்துக்கொண்டு 21-ஆம் நூற்றாண்டில் அடியெடுத்து வைக்கப் போகும் நாம், நம் பழைய புதையல்களைத் தேடிச் செல்ல முனைவது மிக இன்றியமையாததாகும்.

தார்ச்சாலையிலிருந்து வயல் வரப்பிற்குச் செல்லும்பொழுது மாறுபட்ட பல சாலைகளைக் கடந்து செல்வது போல் இக்கட்டுரையில் நம் புதையல்களை நோக்கிச் செல்ல ஒரு புதிய பாதை அமைத்துத் தரப்படுகிறது. மற்றொரு விதமாகக் கூறினால் 20-ஆம் நூற்றாண்டிலிருந்து 21-ஆம் நூற்றாண்டிற்கு எப்படிச் செல்வது? அதற்குரிய வழி கீழே தரப்படுகிறது.

20-ஆம் நூற்றாண்டுத் தமிழில் பழகிய நாம் முதலில் நல்ல உரைநடையைக் கற்றுக்கொள்ளவேண்டும். இன்று புற்றீசல் போல் வெளிவரும் நாள், வார, மாத இதழ்களில் வரும் கதைகள், கட்டுரைகள் நல்லவைகளாக இருக்கலாம். ஆனால் அவற்றில் காணப்படும் தமிழ் நடை ஐயோ பாவம்!

புதையலைத் தேடிச் செல்ல வேண்டும் என்று முடிவு எடுத்தவர்கள் 20-ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் தோன்றிய ஓரிரு சிறுகதை ஆசிரியர்களின் நடையை முதலில் நன்கு கவனித்து அறிந்து கொள்ளவேண்டும். பி.எஸ்.ராமையா, தி. ஜானகிராமன், மு.வரதராசன், நா. பார்த்தசாரதி போன்றவர்களை முதலில் கற்க வேண்டும்.

அடுத்தபடியாகப் புதுமைப்பித்தன், ஜெயகாந்தன் போன்றவர்கள் நடையைக் கற்க வேண்டும். தமிழில் ஒரு வாக்கியத்தைச் சொல்வதன் மூலம் மேலோட்டமாக ஒரு பொருளும் ஆழ்ந்து சிந்திக்கும்போது மற்றொரு பொருளும் தோன்றுமாறு எழுதுபவர்கள் இவர்கள் போன்றவர்கள்.

இதனை அடுத்துக் கல்கியின் நடையை ஆழமாகக் கற்றுத் தெரிந்து கொள்ளவேண்டும். முன்னர் கூறப்பெற்றவர் சிலரின் நடையில் தமிழ் இலக்கண வரம்பு சில சமயங்களில் மீறப் பெற்றிருக்கும். ஆனால் எவ்வளவு பெரிய புதினத்தை எழுதினாலும், எவ்வளவு நீண்ட வாக்கியத்தை எழுதினாலும் கல்கியின் நடை இலக்கணவரம்பை மீறாதது. தமிழை முறையாகக் கற்கவில்லை என்றாலும் தமிழ்த் தென்றல் திரு வி.க. நடையைக் கற்க வேண்டும். மகாத்மா காந்தி ஆங்கிலத்தில் எழுதுவதுபோலத் திரு வி.க. தமிழில் எழுதினார். எந்த ஒரு வாக்கியமும் ஆறு ஏழு சொற்களுக்கு மேல் கொண்டிராது. ஆனால் கார்ல் மார்க்ஸின் அபேதவாதக் கொள்கைமுதல், நம்மாழ்வாரின் ஆன்மநேயம் வரை திரு வி.க. தொடாத தலைப்பே இல்லை. எந்தத் துறையில் புகுந்து எழுதினாலும் இந்த இருபதாம் நூற்றாண்டில் அவருடைய தமிழ் நடைக்கு இணையாக எழுதியவர்கள் யாரும் இல்லை. இது அவருடைய தனிச் சிறப்பாகும். இங்கு உதாரணத்திற்கு எடுத்துக் காட்டப்பெற்ற எழுத்தாளர்கள் தவிர இவர்களைப் போன்றே எழுதியவர்கள் பலருண்டு என்பதையும் மறத்தலாகாது. புதையலை நாடிச் செல்பவர்கள் இப்பகுதியில் சொல்லப் பட்டவற்றை ஈடுபாட்டுடன் கற்றல் வேண்டும். இதற்காக எந்தத் தமிழாசிரியரையும் நாடிச் செல்லவேண்டிய தேவையே இல்லை.

இதற்கு அடுத்தப்டியாகப் பாரதியின் கவிதைகளைப் பயில வேண்டும். தமிழ்ச் சொற்களுக்கு அன்றாடம் வழங்குகின்ற சாதாரணச் சொற்களுக்குக் கூட எவ்வளவு ஆற்றல் வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டுமேயானால் பாரதியின் கவிதைகள் அதற்கு ஓர் எடுத்துக்காட்டாகும்.

இன்னும் கொஞ்சம் முன்னேறிச் சென்றால் வள்லலாரின் உரை நடை ஒரு தனிவகையைச் சேர்ந்தது என்பதை அறிய முடியும். அச்சியற்றப்பெற்ற நூல்களிற் கூட ஒரு வாக்கியம் இருபது வரிகள் வரை நீண்டு செல்வதைக் காணமுடியும். அதில் ஓரளவு பயிற்சி பெற்ற பிறகு அவருடைய திருவருட்பாவின் ஆறாந்திருமுறைப் பாடல்களில் மிக எளிதாக நுழையலாம். அகராதி தேடிப் பொருள் காணவேண்டிய சொற்கள் வள்லலார் பாடல்களில் மிக மிகக் குறைவாகும். பாரதியைப் போலவே வள்ளலாரும் எளிய சொற்களைக் கையாண்டு அந்தச் சொற்கள் மாபெரும் ஆற்றலைப் பெறும் முறையில் தம் கவிதைகளில் பெய்துள்ளார். இதுவரை கூறப்பெற்றவை பத்தொன்பது, இருபதாம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த தமிழ் இலக்கியங்களாகும்.

மேலே கூறப் பெற்றவற்றுள் பெரும்பகுதி நூல்கள் உரை நடை நூல்களேயாகும். தமிழிலக்கியப் பூங்காவில் நுழைய விரும்புவர்கட்கு வழி காட்டத் தொடங்கும் இக்கட்டுரையில் தொடக்கமே உரைநடை நூல்களின் பட்டியலாக இருப்பது ஏன் தெரியுமா? எந்த ஒருமொழியிலும் உரை நடை நூல்களை நன்கு ஆன்று பயின்றாலொழிய அம்மொழியின் கவிதைக்குள் புகுந்து அனுபவிப்பது கடினம். இதற்கொரு காரணமுண்டு. . ஒருவன் மனத்தில் தோன்றிய கருத்தை மற்றொருவருக்குச் சொல்ல வேண்டுமானால் உரை நடை, கவிதை என்ற இரண்டு வகையிலும் சொல்லலாம். உரை நடை பல சொற்களைக் கொண்டு, பல தொடர்களைக் கொண்டு ஒரு கருத்தை வெளியிடும் முறையாகும். இதன் எதிராக, கவிதை என்பது மிகச் சில சொற்களைக் கொண்டு, மிகப் பல கருத்துக்களை வெளியிடும் வழியாகும். எனவே தான் உரைநடையை முதலில் படித்து, ஒரு மொழியில் உள்ள சொற்கள் பொருள் விளக்கும் தன்மையை நன்கு அறிந்து கொண்டபிறகே கவிதைக்குச் செல்லவேண்டும் என்கிறோம். உபநிடதங்கள், திருக்குறள் போன்ற நூல்கள் பல்வகைப்பொருளைச் சிலவகைச் சொல்லில் சொல்லும் பேராற்றல் உடையவை. எனவே தான் உரைநடைக்கு முக்கியத்துவம் கொடுத்து ஆரம்பிக்கின்றோம்.

இவற்றில் ஓரளவு பயிற்சியும் தேர்ச்சியும் பெற்றபிறகு பதினேழாம் நூற்றாண்டின் முற்பகுதியில் பெருங்கவிஞராக விளங்கிய குமரகுருபரரிடம் செல்லலாம். அவருடைய கவிதைகள் முழுவதையும் படிக்க நேரமின்றேனும் மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழ் ஒன்றையாவது கற்க வேண்டும். சொற்களைக் கோத்து வாங்கிப்புதிய அமைப்பில் தொடர்களை உண்டாக்கும் சிறப்பு குமரகுருபரருடையது. கவிதைக்கு ஏற்ற சொற்களாக அமைக்கும்பொழுதே இசைச்சிறப்பும் தோன்றுமாறு கவிதை புனைந்தவர் அவர்.

அடுத்து, பன்னிரண்டாம் நூற்றாண்டில் தோன்றிய பெரியபுராணத்திற்குச் செல்ல வேண்டும். இப்பெருநூலுள் காரைக்கால் அம்மையார் புராணம், அளவால் அதைவிடச் சிறிய திருநீலகண்டர் புராணம், அதைவிடச் சிறிய மெய்ப்பொருள் நாயனார் புராணம் போன்றவற்றுள் ஏதாவது ஒரு புராணத்தை ஈடுபாட்டுடன் கற்கவேண்டும். குமரகுருபரர், சேக்கிழார் என்ற இருவரையும் ஓரளவு பயின்று விட்டால் தமிழ்க் கவிதையின் போக்கையும் அதிலுள்ள நுணுக்கத்தையும் அறிந்து கொள்ள முடியும்.

சொற்களுக்கு இருவகைப்பொருளுண்டு. ஒன்று ஓசைப் பொருள், மற்றொன்று சொல்லின் பொருள். இவை இரண்டையும் புரிந்து கொள்ள இவ்விரு கவிஞர்களும் பேருதவி புரிவர்.

இதன் பிறகு, பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த திருத்தக்க தேவர் இயற்றிய சீவக சிந்தாமணியுள் நுழையலாம். அதிலும் முதலிலுள்ளதாகிய நாமகள் இலம்பகம் ஒன்றைக் கற்பதே பேருதவி புரியும். சேக்கிழாரின் நடையோடு ஒப்பிட்டால் திருத்தக்கதேவரின் நடை சற்றுக் கடினமானதுதான். பாடலின் பெரும்பகுதிக்கு அகராதி தேவைப்படும். ஆகவே கொஞ்சம் சிரமப்பட்டாலும் திருத்தக்கதேவரின் நாமகள் இலம்பகத்தைக் கற்பது மிக மிக அவசியம்.

இன்னும் சற்று மேலே போனால் தமிழ் இலக்கியத்தின் முடிமணியாய் விளங்கும் கம்பநாடனின் இராமாயணத்தைக் காணலாம். 9-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கம்பநாடன் விருத்தப் பாக்களின் முடிசூடா மன்னனானவன். அப்பெருநூலுள் கம்பனின் முழுத்திறமையும் வெளிப்படுகின்ற யுத்த காண்டத்தில் ஏதாவது ஒரு படலத்தைத் தேர்ந்தெடுத்துப் பயிலலாம்.

மேற்சொல்லிய நூல்களையாவது சொல்லிய வரிசை முறையில் பயின்றுவிட்டால் தமிழில் எந்த நூலை எடுத்தாலும் யாருடைய உதவியும் இன்றிப் பயில முடியும்.

இடையே உள்ளவற்றை விட்டுவிட்டு இரண்டாம் நூற்றாண்டில் தோன்றிய இளங்கோவின் சிலப்பதிகாரம் புதையல் தேடிச் செல்லும் வழியின் கடைசி மைல்கல்லாகும். இந்நூலுள் மதுரைக்காண்டத்தில் உள்ள ஏதாவதொரு காதையைச் சற்று ஆழமாகக் கற்றுவிட்டால் சங்கப் பாடல்களில் நுழையும் தகுதி நம்மிடம் வந்து சேர்ந்து விடும்.

சிலப்பதிகாரத்தைப் பற்றிக் கூறியவுடன் மிக மிக முக்கியமான திருக்குறள் பற்றியும், சமய இலக்கியங்கள் பற்றியும் ஒன்றும் சொல்லவில்லையே என்ற ஐயம் பலருடைய மனத்தில்தோன்றலாம். திருக்குறளைப் பொறுத்த மட்டில் தமிழ்ச் சமுதாயத்திற்கு உரிய பண்பாட்டை மட்டும் கூறுவதாக இக்கட்டுரையாளன் நினைக்கவில்லை. அகில உலகத்திற்கும், எல்லாக் காலத்திற்கும், எல்லாச் சமுதாயத்திற்கும் தேவையான, இன்றியமையாத அறங்களைக் கூறுகின்ற நூலாகும் அது. அத்தகைய நூலில் ஒரு பகுதியையாவது கற்றுத் தீர வேண்டும் என்று சொல்வது ஒவ்வொருவரும் தவறாமல் உணவு உட்கொள்ளவேண்டும் என்று சொல்வது போலாகும். உணவு உட்கொள்ளவேண்டும் என்று பிறர் சொல்லித்தான் தெரியவேண்டும் என்பதில்லை. அதேபோல, திருக்குறளைப் படியுங்கள் என்று பிறர் சொல்லித் தான் தெரியவேண்டும் என்பதில்லை. உணவு உட்கொள்ளவில்லையானால் உடல் வாடிவிடும். திருக்குறளைப் படிக்கவில்லையானால் உள்ளமும் உயிரும் வாடிவிடும்.

நிற்க. சமய இலக்கியம் என்று சொல்லுவது கி.பி. ஆறாம் நூற்றாண்டு முதல் ஒன்பதாம் நூற்றாண்டு வரை தோன்றிய தேவார, திருவாசக, திவ்யப்ரபந்தங்களாகும். இன்றைய சமுதாயத்தில் வாழும் நாம் தெருவில் நடந்து போவது முதல் அணுகுண்டு வரை எல்லாவற்றிற்கும் அஞ்சிக்கொண்டே இருக்கின்றோம். போட்டிச் சமுதாயத்தில் கோடிகோடியாகப் பணம் சேர்த்தாலும் மனத்தில் அமைதியில்லை. இரவில் உறக்கம் வருவதில்லை. இந்த அச்சத்தைப் போக்கிக் கொள்ள விரும்புபவர்கள், மனத்தில் அமைதியை வேண்டுபவர்கள், தூக்க மாத்திரையில்லாமல் உறங்க வேண்டுபவர்கள் செய்யவேண்டிய ஒன்றே ஒன்று மேலே கூறிய சமய நூல்களுள் ஏதாவது ஒரு நூலிலிருந்து சில பாடல்களை அன்றாடம் தவறாமல் படிப்பதே ஆகும். மூன்று மாதம் விடாமல் படித்துப் பாருங்கள். மேலே கூறிய மூன்றும் உறுதியாகக் கிடைக்கும்.

இதுவரை உரை நடையில் தொடங்கிப் பாடல்கள் வரை சிற்சில நூல்களை எடுத்துக்காட்டாகத் தந்துள்ளோம். இதைப் படிப்பவர்கள் தமிழ் இலக்கிய உலகமே இங்கு காட்டப் பட்ட பட்டியலில் அடங்கிவிட்டது என்று நினைக்கவேண்டா. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதமாவது போல, தமிழ் இலக்கியம் என்னும் கடலிலிருந்து, ஒரு சிறு குவளையளவு எடுத்துக்காட்டியுள்ளோம். இங்குக் கூறப்பெற்ற பட்டியல் புதையலை நோக்கிச் செலுத்துகின்ற கைகாட்டி மரமேயாகும். செல்லும் வழியில் சில ஊர்களின் பெயரைக் கைகாட்டிமரம் குறிப்பது போல, சில நூல்களின் பட்டியல் இங்கே தரப்பெற்று உள்ளது. இந்தப் பட்டியலை நூறால் பெருக்கினாலும் அதனுள் அடங்காது தமிழ் இலக்கியக் கடல் பரந்து கிடக்கிறது.

இருபத்து ஒன்றாம் நூற்றாண்டில் உலகம் முழுவதும் அடியெடுத்து வைக்கப்போகின்றது. மிகப் பழைய இலக்கியங்களைக் கொண்டுள்ள சீனர்கள், கிரேக்கர்கள் ஆகியோர் எவ்வளவு புதுமைகளை மேற்கொண்டாலும் தங்கள் பண்பாட்டுக்கருவூலமாகிய தங்கள் பழைய இலக்கியங்களை மறப்பதே இல்லை. பழைய இலக்கியங்களே இல்லாத சில இனத்தவர்கள் கூட எத்தனை புதுமையிலும் தங்கள் தாய்மொழியை மறப்பது இல்லை.

அமெரிக்காவிற்கோ இங்கிலாந்திற்கோ சென்று பார்த்தால் இந்த உண்மையைப் புரிந்துகொள்ள முடியும். குஜராத்தியர், மராட்டியர், பஞ்சாபியர் என்ற வட நாட்டு இனத்தவருடன் தென்பகுதியைச் சேர்ந்த தெலுங்கர், கன்னடியர், கேரளத்தார் ஆகிய அனைவரும் மேலைநாடுகளில் தமிழரைப்போலவே சென்ற ஐம்பது அல்லது அறுபது ஆண்டுகளாகக்குடியேறி வாழ்கின்றனர். அங்கு வாழும் அவர்களுடைய வீடுகளிற் சென்று பார்த்தாலும் தம் இனத்தவரோடு தெருக்களில் நின்று பேசுவதைப் பார்த்தாலும் ஒரு புதுமையைக்காண முடியும். அவர்கள் அனைவரும் ஆங்கிலத்தை நன்கு கற்றுத் தேர்ந்தவர்கள்தான் ஆனாலும் என்ன புதுமை, அவர்கள் வாழும் வீடுகளிலாகட்டும், வெளியிலாகட்டும், தத்தம் தாய்மொழியில் தான் பேசிக்கொள்கின்றனர். மறந்துகூட ஆங்கிலத்தில் உரையாடிக்கொள்வதில்லை. தம் தாய்மொழி தெரியாதவர்களிடம் மட்டுமே ஆங்கிலத்தில் உரையாடுகின்றனர்.
அமெரிக்காவில் குடியேறி வாழும் ஜெர்மானியர், பிரஞ்சுக்காரர், ஜப்பானியர் முதலிய இனத்தவரும் கூடத் தத்தம் தாய்மொழியிலேயே உரையாடுவதை அங்குக் காணலாம். இத்தனை இனத்தவரும் எங்கிருந்தாலும் தாய்மொழியிலேயே பேசிக்கொள்ளும் ஒரு தொகுதியாகவே உள்ளனர். இத்தகைய இனத்தவர்களிடையே வீட்டில் மனைவியிடமும் ஆங்கிலத்தில் பேசும் ஓர் இனத்தவர் வெளிநாடுகளின் உண்டு என்றால் அந்தப் பெருமைமிகு இனம் தமிழினமே ஆகும்.

ஆப்பிரிக்கவிலிருந்து இரண்டு நூற்றாண்டுகள் முன்னர் ஆயிரக்கணக்கில் அமெரிக்காவில் குடியேறிய நீக்ரோக்கள் புதிய உலகத்தில் புகுந்ததும் தங்கள் தாய்மொழியை மறந்தனர்; ஆங்கிலத்தில் மூழ்கி எழுந்தனர். ஆங்கிலமும் கடைசிவரை சரியாக வரவில்லை. தாய்மொழியையும் இழந்தாயிற்று. இனத் தனித்துவம், (Ethnic Identity) என்பதை அறவே இழந்து இன்று அவர்கள் அவதிப்படுகின்றனர்.

ஊமையராய்ச் செவிடர்களாய் நமது தமிழர் எனக் கொண்டு தமிழ்நாட்டிலும் மேலை நாடுகளிலும் வாழ்ந்து வரும் சகோதரி சகோதரர்களே! நீக்ரோக்களுக்கு ஏற்பட்ட கதி வெளிநாட்டில் வாழும் தமிழர்களை மட்டுமில்லாமல் தமிழகத்தில் வாழும் நம்மையும் பற்றிக்கொள்ள வருகின்றது. தமிழகத்திற்கூடவா என்று நினைக்கிறீர்களா? ஆம் இது உண்மை. தமிழகத்தில் வாழும் ஆங்கிலம் கற்ற மக்கள், வீட்டிற்குள் பேசுவதும் கூட ஆங்கிலத்தில் தான். தம் குழந்தைகளும் அப்படியே பேசிப் பழகவேண்டும் என்று விரும்புகின்றனர். வற்புறுத்துகின்றனர். இப்படியே சென்றால் தமிழ்நாடு மிஞ்சும்; தமிழர் என்ற பெயருடன் நாமும் மிஞ்சுவோம். ஆனால் தமிழர்க்குரிய இனத்தனித்துவம் பொய்யாய்க் , கனவாய்ப், பழங்கதையாய் மெல்லப் போய்விடும். ஐயோ விதியே, தமிழ்ச் சாதியை என்செய நினைந்தனை? என்று புலம்புவது தவிர வேறு செயற்பாலது ஒன்றும் இல்லையோ என்று மனம் அங்கலாய்க்கிறது.

இந்நிலை மாற மேலே சொல்லப்பெற்ற முறையிற்சென்று நம்முடைய இனப்பண்பாட்டைத் தன்னுட் பொதிந்து வைத்திருக்கும் பழைய தமிழ் இலக்கியங்களைக் கற்றுத் தெளிவது ஒரு சிறந்த வழியாகும். ஆனால் இதைவிட இன்றியமையாத ஒன்றும் இங்கே சிந்திக்கப்படவேண்டும்.

தமிழர்களாகிய நம்மில் பெரும்பாலானவர்கள் மன நிலையில், இன்று அழுத்தமாகப் பதிந்துள்ள ஒரு கோட்டத்தை, (கோணலை) நிமிர்த்தவேண்டும். தாய்மொழியில் நினைந்து தாய்மொழியில் பேசுவது கெளரவக்குறைவு என்று நினைக்கின்றவர்கள் பலர் இங்கு இன்றும் உள்ளனர். ஆங்கிலத்திலும் முழு அறிவு பெறாமல் தமிழில் நினைத்தாலும் அரைகுறை ஆங்கிலத்தில் பேசுவதே பெருமை என்ற மனப்பான்மை தான் நம்மில் அழுந்தி விட்ட மனக்கோட்டமாகும்.

இந்த அவலநிலை நேராதிருக்க ஒரே வழி நம் முன்னோர் விட்டுச் சென்ற புதையலைத் தேடிச் சென்று பெற்றுக்கொள்வதே ஆகும்.

இன்றைய உலகம் வெகுவேகமாக முன்னேறிக்கொண்டு இருக்கின்றது. போட்டி நிறைந்த சமுதாயம் எல்லா நாடுகளிலும் தோன்றிவிட்டது. எதற்கெடுத்தாலும் நேரமில்லை என்று சொல்லிக்கொள்வது நம்மில் பலருக்கும் இன்று வழக்கமாகிவிட்டது. இந்த நிலையில் எத்தனயோ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்த் தோன்றிய இலக்கியங்களைத் தேடிப்பிடித்துப் படிப்பதால் அது எம் வாழ்க்கையை வளம் படுத்த உதவவா போகிறது? என்று பலரும் கேட்பது காதில் விழாமலில்லை. வாழ்க்கையில் வளம் பெறுவது என்பது பதவி உயர்வு பெறுவதிலும் பணம் சேர்ப்பதிலும் மட்டுமே இருக்கிறது என்று நினைப்பதுதான் பெரும் தவறாகி விடுகிறது. இவற்றை மட்டும் சேர்த்தவர்கள் பலரும் மன அமைதி இன்றி அலைவது ஏன்? இளைய தலைமுறையோடு அவர்களுக்குத் தொடர்பில்லாமல் போனது ஏன்? இந்தப் பிரச்னைகளுக்கு எல்லாம் காரணமாக இருப்பது நமது பழைய பண்பாட்டை இலக்கியத்தை அறியாமல் இருப்பதே ஆகும். வயது வந்தவர்களே இதனை அறியவில்லை என்றால் இளைய சமுதாயம் அதனை எவ்வாறு அறியப் போகிறது? இந்த முதிய, இளைய சமுதாயங்கள் ஒன்றாகச் சேர்ந்து, ஒத்த நினைவோடு வாழவேண்டுமேயானால், பதவியோ, பணமோ, இதற்கு உதவி செய்யாது. தம்முடைய வாழ்க்கையில் இத்தகைய பிரச்சனைக்களைச் சந்தித்த நம் முன்னோர், அப்பிரச்சனைகளை எதிர்கொண்ட விதத்தையும் அவற்றை வென்ற விதத்தையும் இலக்கியங்களில் புகுத்தி வைத்துள்ளனர். நேரமில்லை என்று சொல்லுகின்ற நாம் பல்வேறுதுறை நூல்களையும், பொழுதுபோக்குப் பத்திரிகைகளையும் படிக்கவில்லையா? அதுபோல, நம் முன்னோர் தேடிவைத்த இலக்கியச் செல்வத்தையும் அகழ்ந்து எடுத்துப்பயன்படுத்துவது, நம் வாழ்க்கையில் மேற்கொள்வது மிக மிக இன்றியமையாதது ஆகும். வரப்போகின்ற நமது அடுத்த தலைமுறைக்குத் தொழில்வளம், நிலவளம், செல்வவளம் ஆகியவற்றை மட்டும் விட்டுச் செல்வதால் அந்தச் சமுதாயம் முழுமை பெற்றுவிடாது. இலக்கியப் புதையலை அகழ்ந்து எடுத்து நாம் பயன்படுத்துவதோடு நமக்குப் பின் அடுத்து அடுத்து வரப் போகின்ற தலைமுறைகளுக்கும் இவை பயன்படுமாறு கிடைக்கச் செய்வதே நம்முடைய தலையாய கடமையாகும். இதனைச் செய்யாவிடின் வருங்காலச் சந்ததியினர்க்கு நாம் பெருந்தவறு செய்தவர்களாக ஆகிவிடுவோம். மனிதன் ரொட்டித் துண்டால்மட்டும் வாழவில்லை. மனிதனின் வளர்ச்சியென்பது மன வளர்ச்சியே ஆகும். அவ்வளர்ச்சியைத் தருவதில் பெரும் பங்கு வகிப்பது இலக்கியமே ஆகும்.

அந்த இலக்கியப் புதையலை அகழ்ந்து எடுத்துப் பயன்படுத்துவோமாக.

நன்றி: அரிமா நோக்கு (2009)


--Ksubashini 15:34, 6 மே 2011 (UTC)

பங்களிப்பாளர்கள்

Ksubashini

"http://heritagewiki.org/index.php?title=புதையலைத்_தேடி&oldid=6628" இருந்து மீள்விக்கப்பட்டது
இப்பக்கம் கடைசியாக 6 மே 2011, 15:34 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 5,953 முறைகள் அணுகப்பட்டது.