புலம் பெயர்ந்த தமிழரும் மலேசியத் தமிழும் ஒரு சமுதாய மொழியியல் கண்ணோட்டம்

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

சாம் மோகன் லால்
மலேசியத் தமிழரின் வரலாறு

மலேசியத்தீபகற்பத்தில் ஏறக்குறைய 20- ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் புலம் பெய்ர்ந்த இந்தியர்களின் வரவு அதிகரிக்கத் தொடங்கியது. இதற்கான முக்கிய காரணம் 1900-ஆம் ஆண்டுக்கும் 1920-ஆம் ஆண்டுக்கும் இடையில் பால் மரத் தோட்டங்களின் வளர்ச்சியால் மலேசியா ஒரு புதிய பரிமாணத்தை எதிர்கொண்டது. இதன் பயனாக மலேசியாவில் 1921-ஆம் ஆண்டில் ஏறக்குறைய இந்தியர்களின் எண்ணிக்கை 4 70 000 ஆக இருந்த அடுத்த பத்து ஆண்டுகளில் 6 22 000ஆக உயர்ந்தது. மேலும், 1921-ஆம் ஆண்டில் 12.4 விழுக்காடு இந்தியர்களே மலேசிய இந்தியப் பெற்றோருக்கு மலேசிய நாட்டில் பிறந்தவர்களாக இருந்தனர். ஆனால், இந்த விழுக்காடு 1947-ஆம் ஆண்டில் 50 விழுக்காடாக உயர்ந்தது.(Desmond Tate 2008) மலேசிய இந்தியர்கள் இந்த நாட்டில் இரண்டறக் கலந்துவிட்டதையே இது காட்டுகிறது.. 1930- ஆம் ஆண்டில் பெரும்பாலும் இந்தியாவில் உள்ள எல்லா இனத்தவரும் மலேசியாவில் காணப்பட்டாலும் ஏறக்குறைய 87 விழுக்காட்டினர் தென்னிந்தியர்களாகவே இருந்தனர். அதிலும், 90 விழுக்காட்டினர் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டுள்ளவர்கள் ஆவர். இதன் காரணமாக மலேசியாவில் தமிழின் பயன்பாட்டைத் தனியாகக் கூறத் தேவியில்லை. தற்போதும் கூட இந்நாட்டில் தமிழின் பயன்பாடு வளர்ந்து கொண்டே வருவது மட்டுமல்லாமல் மிகவும் சிறப்பாகச் செழித்தோங்குகிறது என்று கூறினால்கூட அது மிகையாகாது. இருப்பினும் மலேசியாவில் வழங்கப்படும் தமிழையும் அதன் பயன்பாட்டையும்அங்கு காணப்படுகிறப் பன்மொழிச் சூழலின் அடிப்படையில் நோக்கும் நிலையில் பல அடிப்படை வேறுபாடுகளையும் தனித்தன்மை வாய்ந்த பயன்பாட்டினையும் காண முடிகிறது.

மலேசியாவும் பன் மொழிச்சூழலும்

பன் மொழிகள் பேசப்படும் மலேசியாவில் தற்போது ஏறத்தாழ நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகளும், கிளை மொழிகளும் இருக்கின்றன. (Maya 2006) இருப்பினும், தேசிய மொழிகளாகக் கருதப்படும் மலாய், சீனம் தமிழ் ஆகிய மூன்று மொழிகளும், ஆங்கிலமுமே முக்கியமன மொழிகளாகச் சமுதாயத்தினரால் பற்பல சூழல்களில் பேசப்படுகின்றன. இந்த மூன்று மொழிகளுள் 65.1 விழுக்காட்டினர் மலாய் மொழியையும், 26 விழுக்காட்டினர் சீன மொழியையும் 7.7 விழுக்காட்டினர் பல இந்திய மொழிகளையும் பேசுகின்றனர்..(Department of Statistics, Malaysia web site) இந்த 7.7 விழுக்காடு இந்தியர்களுள் 8..5 விழுக்காடினருக்கும் மேற்பட்டோருடைய தாய் மொழி தமிழாகும். இந்தக் காரணத்தால் மலேசிய அரசால் தமிழ் மொழி அங்கீகரிக்கப்பட்டு, பள்ளி முதல் பல்கலைக் கழகம் வரை கற்பிக்கப் படுகிறது. தமிழ்க் கல்வியானது தாய் மொழி வழிக் கல்வி, தாய்மொழிக் கலவி ஆகிய இரு வகைகளில் நடைபெறுகிறது. அதாவது, மலாய் மொழி, ஆங்கிலம் இவற்றைத் தவிர்த்துத் தொடக்க நிலைப் பள்ளிகளில் தமிழ் வழியாகவே எல்லாப் பாடங்களும் கற்பித்துத் தரப்படுகின்றன. இடை நிலைப் பள்ளிகளிலிருந்து உயர்சான்றிதழ்க் கல்வி வரையில் தமிழ், தனியாக ஒரு பாடமாகக் கற்பிக்கப்படுகிறது. மலேசியாவில் இருக்கிற பல்கலைக் கழகங்களுள் ஒரு பல்கலைக் கழகத்தில் துறை சார்ந்த கல்வியாகவும், இரண்டு பல்கலைக் கழகங்களில் இரண்டாம் மொழிப் பாடமாகவும் தமிழ் மொழி கற்பித்துத் தரப்படுகிறது. (நாராயணசாமி 2009) 
மலாய் மொழி மலேசியாவில் ஆட்சிமொழியாக இருக்கிற காரணத்தாலும் மலேசியர் யாவரும் மலாய் மொழியைக் கண்டிப்பாகத் தெரிந்திருக்கவேண்டும் என்ற கட்டாயத்தினாலும் பெரும்பான்மையான இந்தியர்கள் தங்கள் தாய்மொழியான தமிழோடு மலாய் மொழியிலும் புலமை பெற்றவர்களாகவே காணப்படுகிறார்கள்.மேலும், பல மொழிகள் பேசப்படும் ஒரு நாட்டின் இலக்கணத்திற் கேற்ப மலேசியாவில் மலாய் மொழி பேசுவோர் மலாய், ஆங்கிலம், சீனம் ஆகிய மொழிகளில் சூழலுக்கேற்ப பயன்படுத்துவதை அன்றாடம் பார்க்கலாம்.இது பன் மொழி வழக்குச் சூழலைக் கொண்ட ஒரு நாட்டின் பண்பாகும். இந்தக் காரணங்களால் மலேசியத் தமிழில் மொழிக் கலப்பு ஏற்பட வாய்ப்பும் இருக்கிறது. பொதுவாக, மொழிக் கலப்பு என்பது பிற மொழிகளின் தாக்கத்தால் ஏற்படுவதாகும். அதாவது், இதைப் புறத்தாக்கத்கின் விளைவு என்று அழைக்கலாம். ஆனால், மலேசியாவில் வழங்கப்படும் தமிழ் தனித் தன்மை வாய்ந்த தமிழாகக் காணப்படுகிறது எனும் போது இதன் தனித் தன்மைக்கான மொழிக் கூறுகளைக் கீழ்வரும் இரண்டு கருத்துகளின் அடிப்படையில் நோக்கவேண்டும்.
புலம் பெயர்ந்த தமிழரால் தற்போதும் பயன்படுத்தப் பட்டு வரும் நல்ல பழையதமிழ்ச் சொற்கள், பன் மொழிச்சூழலால் ஏற்பட்டுள்ள தாக்கம். பழைய தமிழ்ச் சொற்கள்

காலப் போக்கில் மொழியானது மாற்றமடைந்து கொண்டு வருகின்றது என்பது நாம் எல்லோரும் அறிந்த உண்மை. இதை அடிப்படையாகக் கொண்டு பல மொழியியல்
அறிஞர்கள் மொழி மாற்றத்தைப் பற்றித் தங்கள் கருத்துகளைப் பல கோணங்களில் ஆய்வு செய்து கூறியிருக்கிறார்கள்.சசூர் (1915/1959), வில்ஹம் (1836, பால்
போஸ்டர் (1968). ஆகவே, முற்காலத்திலும் வழக்கிலிருந்த ஒரு சில சொற்கள் தற்போது பல காரணங்களால் மாற்றம் அடைந்துள்ளன, மாற்றம் அடைந்து கொண்டும்
வருகின்றன. தமிழ் மொழியும் அதற்கு விதி விலக்கல்ல. தமிழ் நாட்டில் முன்பு வழங்கப்பட்டுவந்த சில சொற்கள் தற்காலத்தில் வழக்கொழிந்து
அவற்றிற்குப் பதிலாகப் புதிய பயன்பாட்டுச் சொற்கள் தோன்றிவிட்டன. அல்லது, ஏதாவது ஒரு நாட்டுப் புறப் பகுதிகளில் மட்டுமே அச்சொற்கள் தற்போதும்
வழக்கில் இருக்கலாம். ஆனால், மலேசியாவைப் பொறுத்தவரையில் இன்றும் ஒரு சில தூய/பழைய தமிழ்ச்சொற்கள் அவற்றின் பயன்பாட்டுச் சூழலுக்கேற்ற
தனித்தன்மையுடன் மலேசியத் தமிழரால் தக்கவைக்கப்பட்டுள்ளன. மொழித் தக்கவைத்தலுக்குப் பல காரணங்கள் இருக்கின்றன. அதற்கான முக்கிய காரணங்களாக
Gardner(1991) என்பவர்,

1. வரலாற்று அடிப்படையிலான காரணம், அதாவது, தாய்நாட்டிலிருந்து புலம் பெயர்ந்து வேறு ஒரு நாட்டில் குடியேறுதல்,
2. சமூகத்தினரால் விரும்பப்படுகிற மொழிப் பயன்பாடு,
3. முதலாகத் தெரிந்துகொண்ட சொற்களைப் பயன்பாட்டிலிருந்து களைய விருப்பமின்மை

ஆகிய மூன்று காரணங்களைக் குறிப்பிடுகிறார். ஆனால், மலேசியத் தமிழரைப் பொறுத்த வரையில் இரு மொழிக் கூறுகளில் ஒரு சிலவற்றின் பயன்பாடு மலேசியத்
தமிழர் புலம் பெயர்ந்த அக்காலத்தைய மொழிப்பயன்பாடு என்று கூறுவது ஏற்புடையதாக இருக்கும். ஆனால், வேறு சில சொற்கள் இந்த மண்ணுக்கே உரிய
தனிச்சிறப்புடன் வலம் வரும் சொற்களாகும். எடுத்துக்காட்டாக பசியாறு என்ற ஒரு சொல்லைக் கூறலாம்.
பசி+ஆறு ‘(ஆற்றுப்படுத்துதல்)’ ‘appetite + satisfy,subside ‘ ஐயா! காலையிலே பசியாறி விட்டீர்களா? ‘Did you have your breakfast?’
என்ன பசியாறினீர்கள்? ‘What did you have?’

போன்ற வழக்கமான கேள்விகளில் கலந்துள்ள மொழிப் பயன்பாடு இந்நாட்டிற்கே உரிய வழக்குகளாகும்.

ஓடு என்ற வினையின் பயன்பாடும் குறிப்பிடத்தக்கதாகும்.

படிப்பெல்லாம் எப்படி ஓடிட்டு இருக்குது?
‘How about your studies?’
’நாளிதழில் அதப் பத்திய செய்தி கொஞ்ச காலம் ஓடுதில்லெ’ ‘ The news about that has been coming in the news paper for quite some time ‘
தமிழ்நாட்டில் மேலே கூறப்பட்டுள்ள மொழிச்சூழலில் பெரும்பாலும் ஓடு என்ற வினைகுப் பதிலாக இரு என்ற வினை அல்லது போ, நட போன்ற வினைகள் பயன்படுத்தப்படுகின்றன.
அந்தப் போட்டியில் ம்ன்னர் முதல் பரிசு வாங்கி வாகை சூடினார். Mannar got the first prize in that contest!
நீதிபதி அவருடைய பேச்சைக் கவனமாகச் செவிமடுத்தார். ‘Judje had carefully listened to his speech ‘
அந்த வேலையை நீ ஏன் செய்தாய் என்று ஆசிரியர் மாணவனைச் சாடினார். Teacher scolded the student for doing that work
மேலே கொடுக்கப்பட்டுள்ள இரண்டு வாக்கியங்களில்வாகை சூடு ‘win’ என்ற வினை மிகவும் சிறப்பாகவும் அழகாகவும் மலேசியத்தமிழில் அன்றாடம் பயன்பாட்டில் இருந்து வருகிறது. மேலும், தமிழகத்தில்வழக்கிலுள்ள கேள் என்ற வினைக்குப் பதிலாக செவிமடு (6) என்ற வினையின் பயன்பாடும் திட்டு, வை, ஏசு ‘scold/express one’s dissatisfaction’ ஆகிய வினைக லுக்குப பதிலாகச் சாடு (7) என்ற வினையின் பெருமளவிலான பயன்பாடும் மலேசியத் தமிழின் தனித்தன்மையை எடுத்துக்காட்டுகிறது. ’சிறிதளவும்’ என்ற சொல்; மலேசியத் தமிழில் வழங்கப்பட்டாலும் ’கிஞ்சிற்றும்’ ‘very little’ என்ற சொல் அடிக்கடி பயன்படுத்தப் படுவதைக் காணலாம். இந்தச் சொல் பெரும் பாலும் தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் அருகிவிட்டது என்றே கருதத் தோன்றுகிறது. இதைப் போன்று, ‘பாவி’ ‘use’ என்ற வினை பயன்பாடு என்ற பொருளில் அன்றாடம் வழங்கப்படுகிறது.
நீங்க ஏன் அதெப் பாவிக்கக் கூடாது? ‘Why can’t you use that?’
’தேடல்’ என்ற பெயர்ச்சொல் ஒரு பொருளைக் கண்டறிவதற்கான முயற்சி என்ற பொருளில் தமிழ் மொழியில் இடம் பெற்றுள்ளது. இந்தச் சொல்லின் வேறு ஒரு வடிவமான தேட்டை, Search’ என்ற சொல்லை மலேசிய நாளேடுகளில் பார்க்க முடிகிறது. இதை ஒரு சொல்லாக்கம் என்று கூடக் கூற முடியும்.
மலையாளத்திலிருந்து கிளம்பி தெலுங்கு, தமிழ் எனத் தேட்டையை போட்ட நடிகை அசின் இப்போது இந்தியில் குடியேறியுள்ளார். (மலேசிய நண்பன் ஏப்பிரல் 2009) ‘The actress Asin who has come from Malayalam film field has finally settled in Hindi film field after her constant search for getting chances to act both in Tamil and Telugu film fields’
போதனை, போதி, ஆரூடம் போன்ற சொற்கள் த்மிழ் மொழியில் இருந்தாலும் தற்காலத் தமிழில் இவற்றின் பன்பாடு மிகவும் அருகிவிட்டது என்றே சொல்லலாம். ஆனால், மலேசியாவிலுள்ள நாளேடுகளிலும் பிற சஞ்சிகைகளிலும் இச்சொற்கள் அன்றாடம் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
அந்தப் பள்ளியின் போதனா முறை ஏற்புடையதல்ல.
The teaching method of that school is not acceptable.
ஒருவருமந்த விவகாரத்தைக் குறித்து ஆரூடம் சொல்லக் கூடாது. Nobody should guess anything regarding that matter.
கோடிகாட்டு, சுட்டிக்காட்டு ஆகிய இரண்டு சொற்களில் தமிழ் நாட்டைப் பொறுத்தவரையில் சுட்டிக் காட்டு என்ற வினையின் பயன்பாடு பெரும்பாலும் நாளிதழ்களிலும் அன்றாடம் பேச்சிலும் கூட இருப்பதைக் காண முடிகிறது. ஆனால், மலேசியாவில் ஏறக்குறைய எல்லாச் சூழல்களிலும் கோடிகாட்டு (10) என் ற
சொல்லின் பயன்பாடு தெளிவாகத் தெரிகிறது சுட்டிக் காட்டு என்ற வினையின் பயன்பாடு பெரும்பாலும் குறைவாகவே காணப்படுகிற்து.
அந்தக் கருத்தை நடப்பிலாக்குவதாகக் கோடி காட்டியுள்ளார். ‘He has indicated that the idea will be implemented’
மேலும் எட்டுப்பேர், பத்துப்பேர் ஆகிய என்னுப் பெயர்கள் எண்மர், பதின்மர் என்று வழங்கப்படுவதையும் பார்க்க முடிகிறது. இரண்டு பதின்ம வயது பள்ளி மாணவர்கள் கடத்தப்பட்டனர். ‘Two 13 year old students have been kidnapped ’
அந்தக் கூட்டத்தில் ஈராயிரம் பேர் வந்தனர். ‘2000 persons have participated in that meeting’
தனித் தன்மை வாய்ந்த மொழிப் பயன்பாட்டைத் தண்ணி ‘water’ என்ற சொல்லில் ஏற்பட்டுள்ள பொருண்மை வேறுபாட்டை நோக்கினால் தெளிவாகப் புலப்படும். இந்தச் சொல் பெரும்பாலும் மலேசியத் தமிழில் சூழல் அடிப்படையில் குடிப்பதற்குப் பயன்படும் பானத்தையே குறிப்பிடுகிறது. அதாவது, குடிக்கிற பச்சைத் தண்ணீர், குளிர்ப் பானங்கள், தேநீர் முதலியவற்றைக் குறிபிடுகிறது. (மது வகைகளைத் தவிர்த்து), மேலும், சூழலுக்குத் தகுந்தவாறு பல்காரங்களையும் சேர்த்துப் பொருள்படவும் வாய்ப்பிருக்கிறது.. ‘ஐயா! தண்ணி சாப்பிடப் போகலாமா? ’ (Shall we go for a drink? Coffee, tea, juice etc.)

பன்மொழிச்சூழலால் ஏற்பட்டுள்ள தாக்கம் பல மொழிகள்பேசும் ஒரு நாட்டில் பல சமுதாய, அரசியல், பொருளாதாரக் காரணங்களால் ஒவ்வொரு நிலையிலும் பெரும் பான்மையினர் பேசும் மொழியின் தாக்கம் சிறுபான்மையினர் பேசும் மொழியில் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இத்தாக்கமானது சிறுபான்மையினரின் ஒலியன், உருபன், பொருள் மேலும் இலக்க ணம் ஆகிய எல்லா மொழிக்கூறுகளிலும் ஏற்படுகிறது. இக்கருத்தை, Annamalai 1979, Dua (1977), Gumperz (1971), Jisa (2000), kroil (2006), Weinreich (1953:1) ஆகியோர் பல ஆய்வுகளின் வாயிலாகத் தெளிவாக விளக்கியுள்ளனர்.

Poplack (1988) என்ற அறிஞர் பன்மொழி பேசப்படுகின்ற சமுதாயத்தில் ஏற்படுகிற மொழி இடையீற்றைப் பற்றிக் குறிப்பிடும்போது ஒரு மொழியில் இடையீடானது போதுவாகப் பெயர்ச்சொல், பெயரடை, வினையடை, இடைச்சொற்கள் என்றவரிசைப்படி ஏற்படுகிறது என்று கூறுகிறார். இந்தக் கருத்தின் அடிப்படையில் மலேசியத் தமிழை நோக்கினால் மலாய் சீனம், முதலிய மொழிகளிலிருந்து பல பெயர்ச் சொற்களின் பயன்பாட்டை மலேசியத் தமிழில் பார்க்க முடிகிறது. ஆனால், இந்தப் பெயர்ச் சொற்களின் பயன்பாட்டை சமுதாய
மொழிப் பயன்பாட்டுச்சூழலின் அடிப்படையில் இரண்டு நிலையில் பார்க்கலாம்.

முதலாவதாகப் பெரும்பான்மை மொழிகளின் பண்பாட்டின் அடிப்படையிலான பெயற்சொற்கள். இந்தச் சொற்களைப் பொறுத்தவரையில் அதன் பயன்பாட்டிற்குக் குறிப்பிட்ட சூழல் இருகிறது. மேலும் இச்சொற்களுக்கு இணையான சொற்கள் தமிழில் இல்லாத காரணத்தால் இவற்றின் தாக்கம் மலேசியத் தமிழில் ஒரு பண்பாடு தொடர்பான பயன்பாட்டுக் கட்டாயத்தை ஏற்படுகிறது. இரண்டாவதாகப் பயன்பாட்டு அடிப்படையிலான பெயற்சொற்கள்/மொழிக் கூறுகள், இந்தச் சொற்களில் பெரும்பாலும் பெயற்சொற்களே காணப்பட்டாலும் வேறு பல மொழிக் கூறுகளையும் கண்டுகொள்ள முடிகிறது. இந்தச் சொற்களுக்குப் பெரும்பாலும் தமிழில்இணைச்சொற்கள் இருக்கின்றன. இருப்பினும், இச்சொற்கள் பெருமளவில் அன்றாடம் மலேசியாவில் உள்ள தமிழரால் எல்லாச்சூழல்களிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. பயன்படுதப்படுகின்றன.Paradis (1993), Grosjean (2001) ஆகிய இரண்டு ஆய்வாளரும் நிலை பெற்றுவிட்ட இடையீட்டுச் சொற்கள் (static iterference) என்று இரண்டு வகையாகப் பிரிப்பர். ஆனால், மலேசியத்தமிழைப் பொறுத்தவரையில் ஒரே ஒரு வகையான நிலைபெற்றுவிட்ட இடையீட்டுச் சொற்கள். மேலும், இச்சொற்கள்/ மொழிக்கூறுகள் மலேசியத் தமிழில் உறைந்து போய்விட்டன என்றும் கூறலாம். (fossilized linguistic forms), ஏனென்றால், இந்த உறைந்துபோன சொற்கள்/ மொழிக்கூறுகளின் பயன்பாடு மலேசியத் தமிழுக்கான ஒரு தனித் தன்மையைக் கொடுக்கிறது. இந்த மொழிக்கூறுகளில்
வெவ்வேறு விதமான இலக்கணக் கூறுகளையும் காண முடிகிறது. பண்பாட்டு அடிப்படையிலான சொற்களின் தாக்கம் பண்பாட்டு அடிப்படையிலான சொற்கள்/ மொழிக் கூறுகளின் தாக்கம்.


பண்பாட்டு அடிப்படையிலான சொற்கள்

மலேசியாவில் பேசப்படுகிற தமிழில் மலாய் மற்றும் சீன மொழிகளிலுள்ள பண்பாட்டு அடிப்படையிலான சொற்களான உணவுப் பொருட்கள், விழாக்களின் பெயர்கள், மேலும், ஊர்ப் பெயர்கள், மாந்தர்களின் பெயர்கள் முதலியவை அம் மொழிக்கே உரிய ஒலிச்சேர்க்கையுடனும், உச்சரிப்பு முறையுடனும் வழங்கப் படுவதைப் பார்க்க முடிகிறது. இந்தச் சொற்களை அன்றாடம் மலேசியாவில் வாழும் தமிழர் தங்களுடைய பேச்சில் பயன் படுத்துவதைப் பார்க்கமுடிகிறது. இவ்வொலிச்சேர்க்கைகளும் சொற்களும் தமிழுக்குப் புதியனவாகவே இருக்கின்றன. எடுத்துக் காட்டாக, மலாய், சீன உணவுப் பொருள்களைக் கூறலாம். இந்தச்சொற்களுக்குப் பொதுவாகச் சூழல் அடிப்படையில் குறுகிய பயன்பாடு மட்டும் இருக்கலாம். இருப்பினும், இச்சொற்களை மலேசியத்தமிழில் இரண்டறக் கலந்துவிட்டதாகவே கருத வேண்டும். ஏனென்றால்,இந்தச்சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள் இல்லை. ஆனால், அன்றாடம் இடைவிடாமல் பயன்படுத்தப்படுகின்றன. ஆகவே, இச்சொற்களைப் பண்பாட்டு அடிப்படையிலான பயன்பாட்டுக் கட்டாயம் என்றே கூறலாம். கீழ்வரும்வாக்கியங்களில் மேற்கூறிய ஒரு சில சொற்களைக் காணலாம்.

நாம ஆயர் லிமாவ் சாப்பிடப் போலாமா?
‘Shall we go to drink lime juice?’

எனக்கு நாசி கொரபு ரொம்பப் பிடிக்கும்.
‘naasikerabu isadish in eastern Malaysia’

நாம் நாசி ஆயாம் (na:si a:ya:m) சாப்பிடப் போகலாமா?
Shall we go to eat chicken rice?

எனக்கு அந்த சீராப் ரொம்பப் பிடிக்கும்
‘I like that red colour drink.’

அவங்க எல்லாரும் சுராவ்கு (cu:ra:v) போறாங்க.
‘all of them are going to a muslim worshipping place

உனக்குத் தெலுர் கம்போங் (telur kampong) வேணுமா?
‘Do you want to eat the egg of a country fowl?’


பயன்பாட்டு அடிப்படையிலான சொற்கள்/ மொழிக் கூறுகள்

சிறுபான்மையினரின் மொழியில் ஏற்படுகிற பயன்பாட்டுச்சொற்களின் தாக்கம் பொதுவாகப் பன்மொழிச்சூழலில் பெரும்பான்மையினருடைய மொழியில் அடிக்கடிவழங்கப்படும் சொல் அல்லது மொழிக்கூறுகளின் அடிப்படையில் அமைவதைப பார்க்கலாம். இவை பெரும்பாலும் தவிர்க்க முடிகிற மொழித் தாக்கமாகும். இருப்பினும், மேலே குறிப்பிட்டதைப் போல் இத்தகைய சொற்கள் அன்றாடம் தமிழ்மொழியில் இயற்கையான முறையிலேயே பயன்படுத்தப்படுவதன் வாயிலாக இவை மலேசியத் தமிழ்ச் சொற்களோடு ஒன்றிணைந்து உறைந்து போய்விட்டன.இச்சொற்களின் பயன்பாட்டுக்கான காரணங்களாகக் கீழ்வருவனவற்றைக் குறிப்பிடலாம்.மலேசியத் தமிழரிடையே தமிழ், மலாய், ஆகிய இரு மொழிகளிலும் உள்ள இரு மொழிப் புலமை மலாய் மொழியில் அன்றாடம் இச்சொற்களுக்கான பயன்பாட்டு விகிதம்.

தமிழில் இச்சொற்களுக்கான ஏற்ற சொற்களை உடனுக்குடன் தெரிந்து கொள்வதில்ஏற்படுகிற தடுமாற்றம், மலாய், தமிழ் இம்மொழிகள் பேசுவோரிடையே காணப்படுகிறசமுதாய, மொழி அடிப்படையிலான நெருக்கம்.


பெயர்ச் சொற்களின் பயன்பாடு

இதுலே அவுங்க bahagian (role)என்ன?
What is their role in this (matter)?’

கவலைப்படாத அது senang (simple) தான்
‘do not worry that is simple’

எனக்கில்லே உனக்குத் தான் untung (profit),
‘the profit is for you, not for me’

நான் படிக்கணும் என்ன kocou (disterb)பண்ணாதே
‘do not disturb me, I have to learn’

Balai polis (Police station) பக்கத்துல தான் இருக்குது.
’the police station is nearby’

பெயற்சொற்களும் வினையடையும்
நான் இந்த கணக்கெ சீலாப்-பா (தவறாக, wrongly) செஞ்சிட்டேன்.
‘I have done this maths wrongly’

நீ kosar-ஆ (roughlly) பேசாதெ
‘do not talk roughly’

நான் சீலாப்-பா (wrongly) எளுதிட்டேன்.
I have written wrongly’


பெயர்ச்சொற்களும் பெயர் அடையும்

கணிதப் பாடம் ரொம்பசெனாங்- கான (simple+ adj) பாடம்.
The mathematics is very simple’
மேலே கூறப்பட்ட இலக்கணக் கூறுகளைத் தவிர்த்து வேறு பல மலாய்ச் சொற்களோடு வேற்றுமை உருபுகளையும் இணைத்துப் பயன்படுத்தப்படுகின்றன. எடுத்துககாட்டாகக் கீழ் வரும் வாக்கியங்களைப் பார்க்கலாம்.

அவர் அந்தக் கீலாங்கி- லே ( industry +locative case) வேலை செய்கிறார்.
‘’he is working in an industry’

நாளெ வீட்டு சேவா-வெ (rent + objective case) செலுத்திவிடுகிறேன்.
I will give rent tomorrow’


ஈர்ப்பு மொழிக் கூறுகள்/ சொற்கள் (punch language components)

மேலே கூறப்பட்ட பல இடையீட்டுச்சொற்கள் மலேசியத் தமிழின்அடையாளச்சின்னங்களாக இருந்தாலும் முகியமான ஒரு சில மொழிக் கூறுகள் மலேசியத் தமிழின் இலட்சியக் குறியீடாக (bench mark) இருப்பதை மறுக்கமுடியாது. எடுத்துக் காட்டாகத் தமிழில் –lah என்ற மலாய் மொழிக் கூறின் பயன்பாடு குறிப்பிடத் தக்கதாகும். இந்த ஒட்டானது பொதுவாக மலாய் மொழியில் அழுத்தத்தைக் குறிப்பதற்கும், அன்பினை உணர்த்துவதற்கும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், மலேசியத் தமிழில் இந்த மொழிக் கூறானது ஒரு தனித் தன்மைவாய்ந்த ஈர்ப்பு மொழிக் கூறாகவே அன்றாடம் பயன்பாட்டில் வந்துள்ளது.மேலும் வெவ்வேறு உரைக் கோவைகளில் இதன் பொருள் சூழல் அடிப்படையில் எவ்வித மாற்றங்களை அடைகின்றன என்பதைப் பல சூழல்களிலிருந்து தரவுகளைத் தயாரித்துஅவற்றைப் பகுப்பாய்வு செய்வதன் வாயிலாகவே தெரிந்து கொள்ளமுடியும்.என்னுடைய தரவுகளிலிருந்து இந்த மொழிக் கூறானது தமிழில் அழுத்தத்தை ஏற்படுத்தப் பயன் படுத்தப்பட்டாலும் பெரும்பாலான இடங்க்ளில் இது ஒருவெற்று இணை ஒட்டாகவே பேச்சு வழக்கில் காணப்படுகிறது. ஆனால், இந்தஒட்டையார் யாரிடம் எப்போது பயன் படுத்தவேடும் என்பதில் ஒரு வரையறை இருப்பதாகத் தோன்றுகிறது. அதாவது, இந்த ஒட்டு நெருக்கமான நண்பர்களிடையே மற்றும் பேசுபவரின் தரத்திலுள்ளோர், அவரைவிட வயதில் குறைந்தோர் ஆகியோரிடம் உரையாடும்போது பரவலாகப் பயன்படுத்தப் படுகிறது. ஆனால், தன்னைவிட வ்யதில் மூத்தவர்கள், ஆசிரியர்கள் இவர்களிடம் உரையாடும் போது இதன் பயன்பாடு பெரும்பாலும் தவிர்க்கப்படுகிறது என்றே தோன்றுகிறது. இந்த ஒட்டுவாக்கியத்தில் இடையிலும் கடையிலும் வருவதைக் காணலாம். எடுத்துக் காட்டு:
வாங்க—லா கடைக்குப் போகலாம்.
‘come let us go to the market’

எனக்கு இந்தக் கண் அக்கு சரியாத் தெரியலெ—லா
‘I do not know this maths’

வா—லா நாளைகுப் பார்ப்போம்
‘come let us see tomorrow’

ஆரம்பிச்சுட்டார்—லா ராம்.
‘look Ram has started’


முடிவுரை

இந்த ஆய்விலிருந்து மலேசியாவிற்கெனத் தனிப்பட்ட கூறுகளுடனான பேச்சுத்தமிழ் வழக்கு ஒன்று இருக்கிறது என்பது தெளிவாகப் புலப்படுகிறது. ஆனால், குறைவான தரவுகளின் அடிப்படையில் இந்த ஆய்வுகளை மேற்கொண்டதால் மலேசியத் தமிழின் முழு வடிவத்தையும் கண்டறிய முடியவில்லை. நாம் கண்டறிந்த தனித்தன்மை என்பது மிகவும் குறைந்த அளவிலானதே, ஆகவே, நாடு தழுவிய அளவில் இங்கு வாழும் தமிழ்ச் சமுதாயத்தினர் எந்தச் சூழலில் யார் யாரிடம் எப்படிப்பட்ட தமிழைப் பேசுகிறார்கள் என்ற ஒரு மொழிஅடிப்படையிலான தரவு சேகரிகும் பணியை மேற்கொள்ளவேண்டும். இந்தத் தரவிலிருந்து தெளிவாகத் தற்போது மலேசியாவில் வாழ்ந்துகொண்டிருகிற பயன்பாட்டுத் தமிழ் மொழியைத் தெரிந்துகொள்ள முடியும். புலம் பெயர்ந்த மலேசியத் தமிழர்களால் குறைந்தது பதினைந்து ஆண்டுக்ளுக்குள் தமிழில் எழுதி வெளிவந்துள்ள சிறு கதைகள். புதினம், கட்டுரைகள், பிற புத்தகங்கள் இவற்றைப் பயன்படுத்திமொழிக்கூறுகளின் களஞ்சியம்(corpus) ஒன்று தயாரிக்க வேண்டும். இந்தச் சொற்கிடங்கானது தற்காலத் தகவல் யுகத்தில் கல்வித்துறையில் மட்டுமில்லாமல் வேறு பலதுறைகளிலும் பயன்படுத்த ஒரு வாய்ப்பைத் தேடித் தருவதோடு தமிழின் சொற்களஞ்சியத்தைப் பெருக்குவதற்கும் உறுதுணையாக இருக்கும் என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை.

மலேசியாவைப் போல் உலகிலுள்ள பல நாடுகளிலும் புலம் பெயர்ந்த தமிழர்கள்வாழ்ந்து வருகிறார்கள். அவரவர் நாடுகளில் சூழலுக்கு ஏற்றவாறு தமிழ்மொழியின் வளர்ச்சிக்காகவும் சொற்களஞ்சியத்தின் பெருக்கத்திற்காகவும் பல முயற்சிகள் ஆங்காங்கே நடந்து் கொண்டிருகின்றன. இம் முயற்சியில் பலர் வெற்றி அடைந்துள்ளனர். இதன் அடிப்படையில் ஒவ்வொரு நாட்டிலும் இயங்கி வரும தமிழமைப்புகள் முயற்சி செய்து அந்தந்த நாட்டு மொழிக் கூறுகளின் களஞ்சியத்தைத் தயாரிக்க வேண்டும்.இவ்வாறு எல்லா நாடுகளிலும் தயாரிக்கப்பட்ட மொழிக்கூறுகளின் களஞ்சியங்களை ஒருங்கிணைத்து உலகம் தழுவிய அளவிலான ஒன்றைத் தயாரித்தால் அது தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும் அதன் சிறப்பான செயல்பாட்டுக்கும் பெரிதும் பயனுள்ளதாக இருக்கும்.தட்டச்சு:திரு. ஓம்.சுப்ரமணியம்
நன்றி: அரிமா நோக்கு

பங்களிப்பாளர்கள்

Ksubashini

இப்பக்கம் கடைசியாக 6 ஆகஸ்ட் 2011, 16:18 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 2,432 முறைகள் அணுகப்பட்டது.