பூஜாங் பள்ளத்தாக்கு அகழ்வாராய்ச்சி

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

பொருளடக்கம்

கெடா பூஜாங் பள்ளத்தாக்கு அகழ்வாராய்ச்சி

சுபாஷினி ட்ரெம்மல்


அறிமுகம்

மலேசிய நாட்டின் கெடா மாநிலத்தில் 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் நடைபெற்ற பல்வேறு அகழ்வாராய்ச்சி நடவடிக்கைகளின் பலனாக இந்திய நாட்டின் அதிலும் குறிப்பாக தமிழக தொடர்பு இந்த குறிப்பிட்ட இடத்தில் இருந்ததற்கான் சான்றுகள் பல கிடைத்திருக்கின்றன. அவ்வகையில் கிடைத்த சான்றுகளில் பூஜாங் பள்ளத்தாக்கு பகுதியில் கண்டெடுக்கப்பட்ட பல ஆலயங்கள், மண்பாண்டங்கள் ஆலய வழிபாட்டு பொருட்கள் சுவாமி விக்ரகங்கள் போன்றவையும் அடங்கும். 


Candi2.jpg

Candi1.jpg
பூஜாங் நதிக்கு மேற்குப் பகுதியில் அமைந்துள்ள மெர்போக் நகரில் உள்ள சிறு கிராமமான கம்போங் பெண்டாங் டாலாம் (Kampung Bendang Dalam) பகுதியில் ஒரு ஆலயம் அகழ்வாராய்ச்சியின் போது கண்டெடுக்கப்பட்டது.  இதன் பெயர் சண்டி பெண்டாங் டாலாம் என குறிக்கப்பட்டுள்ளது. இந்த ஆலயம் 1960ல் அகழ்வாய்வின் போது கண்டெடுக்கப்பட்டது.  இந்த கண்டெடுப்பினைத் தொடர்ந்து மேலும் 1974, 1976, 1981ம் ஆண்டுகளில் இந்த ஆலயம் அமைந்துள்ள பகுதியைச் சுற்றிலும் பல பொருட்கள் மீட்கப்பட்டன.

இந்த ஆலயம் ஹிந்து ஆலய வடவமைப்பைக் கொண்டதாக உள்ளது.  ஆலய மண்டபமும் ஆலய விமானப் பகுதியும் தெளிவாக மீட்கப்பட்டுள்ளன. இவற்றின் அளவு, முறையே 6.75 மீட்டர் x 6.25 மீட்டரும் 6.75 மீட்டர் x 6.2 மீட்டரும் ஆகும். 

இந்த ஆலயம் அமைந்துள்ள சுற்றுப் பகுதியில் சிவலிங்கம், யோனி, ஆலய சிற்பங்களின் சிதலமடைந்த கற்கள், சீன கல்பொருட்கள்,  போன்றவை கண்டெடுக்கப்பட்டுள்ளன. அகழ்வாராய்ச்சி வல்லுனர்களின் கருத்துப்படி இந்த ஆலயம் கி.பி 12 லிருந்து கி.பி 13  வாக்கில் கட்டப்பட்டிருக்கலாம் என குறிப்பிடப்படுகின்றது.

பூஜாங் பள்ளத்தாக்கில் உள்ள சண்டி புக்கிட் பத்து பாஹாட் இந்த சுற்று வட்டாரத்தில் அகழ்வாராய்ச்சியின் போது  கண்டெடுக்கபப்ட்ட ஆலயங்களிலேயே மிகப் பெரிய ஒரு ஆலயம்.  அகழ்வாராய்ச்சி நிபுணர் குவாரிட்ச் வேல் (Quaritch Wales) அவர்களால் இந்த சிதலமடைந்த ஆலயம் 1936-1937ல் கண்டெடுக்கப்பட்டது. இவருக்குப் பின்னர் ஆலாஸ்டார் லாம்ப் (Alastar Lamp)  இந்த ஆய்வினை மேலும் தொடர்ந்து ஆலயத்தின் முழு பகுதியையும் வெளிக்கொண்டு வந்தார்.  இந்த சிதலமடந்த ஆலயத்தின் பகுதிகள் 1960ம் ஆண்டு சீரமைக்கப்பட்டு தற்போது உள்ள நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

சண்டி புக்கிட் பத்து பாஹாட்

Candip2 3.jpg

இது ஒரு ஹிந்து சமைய சிவாலயம். இந்த ஆலயத்தின் ஆகம கட்டுமான அமைப்பு சிவாலயத்து விமானத்தையும் மண்டபத்தையும் தெளிவாக காட்டும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.  ஆலயத்தின் விமானமும் மண்டபமும் சேர்ந்து மொத்தம் 27 மீட்டர் X 12 மீட்டர் X 2 மீட்டர் அளவில் கட்டப்பட்டுள்ளன.

Candip2 2.jpg

இந்த ஆலயத்தின் முக்கிய பகுதிகளை வடிவமைக்கப் பயன்படுத்திய கருங்கற்கல் அருகாமையிலுள்ள மெர்போக் கெச்சில் நதிக்கரையோரமிருந்து எடுக்கப்பட்டிருக்கின்றன.  இந்த ஆலயத்தின் மேற்கூறைகள் பணை ஓலைகலைக் கொண்டு அமைக்கப்பட்டிருக்க வேண்டும் என்று அகழ்வாராய்வுக் குறிப்புகள் குறிப்பிடுகின்றன.

Candip2 4.jpg

இந்த ஆலயத்தின் சுற்றுப் புறத்தில் எட்டு மூடிய குழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த குழிகள் ஒவ்வொன்றிலும் ஒன்பது ஓட்டைகள் அமைக்கப்ட்டு அதில் ஒவ்வொன்றிலும் வெண்கலக் குப்பிகளில் சாம்பல், தங்க, வெள்ளி பூச்சிலான தாமரை மலர்களின் வடிவங்கள், ஆமை வடிவம், அமர்ந்திருக்கும் வடிவத்திலான இறை வடிவங்களின் சிறு சிலைகள், முத்து மணிகள், விலையுயர்ந்த கற்கள் போன்றவை வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை தற்போது அருகாமையிலுள்ள கண்காட்சி நிலையத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

இந்த ஆலயத்தை முதலில் கண்டுபிடித்த தொல்லியல் ஆய்வு நிபுணர் குவாரிட்ச் வேல் இந்த ஆலயம் கி.பி 7லிருந்து கி.பி8ம் நூற்றாண்டு வாக்கில் கட்டப்பட்டிருக்கலாம் என்று குறிப்பிடுகின்றார். ளாஅனால் இவ்வாலம் கி.பி 12 அலல்து கி.பி 13ம் நூற்றாண்டில் கட்டபப்ட்டிருக்கலாம் என சில ஆய்வாளர்கள் குறிப்பிடுவதும் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று.

சண்டி பெண்டியாட்

Candi3.jpg

சண்டி பெண்டியாட் எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்த ஆலயம் பூஜாங் நதிக்கு கிழக்குப் பகுதியில் பெண்டியாட் கிராமத்தில் (Kampung Pendiat) கிடைக்கப்பெற்றது. 1940ம் ஆண்டில் குவாரிட்ச் வேல்ஸ் (Quaritch Wales)  இந்த ஆலயத்தை தனது அகழ்வாய்வின் போது கண்டெடுத்தார். இது 11ம் நூற்றாண்டு வாக்கில் கட்டப்பட்ட ஒரு ஆலயமாக இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.  1974ம் ஆண்டில் அகழ்வாராய்ச்சித் துறை இந்த ஆலயத்தை பெயர்த்தெடுத்து பூஜாங் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள பிற ஆலயங்களோடு வைத்துள்ளது.

Candip2 1.jpg

பெரும் கருங்கற்களால் கட்டப்பட்ட ஆலயம் இது. ஆலயத்தின் கீழ்ப்பகுதி ஹிந்து ஆலய அமைப்பின் பிரதானமான ஆலய விமானம், மண்டபம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.  பிற ஆலயங்களை விட இந்த ஆலயத்தில் விமானமும் மண்டபமும் தனித்தனியாக பிரித்து அமைக்கப்பட்டுள்ளன.

இந்த ஆலயம் கண்டெடுக்கப்பட்ட சுற்றுப்புறத்தில் ஆயுதங்கள், விலையுயர்ந்த கற்கள், சீன கற்பாண்டங்கள், வெங்கலத்தில்  செய்யப்பட்ட நிற்கும் வடிவிலான புத்தர் சிலை ஆகியவனவும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.


சண்டி பெங்காலான் பூஜாங்

Candi4 1.jpg

சண்டி பெங்காலான் பூஜாங் என அழைக்கப்படும் இந்த ஆலயம் பெங்காலான் பூஜாங் கிராமத்தில் (Pengkalan Bujang) பூஜாங் நதிக்கரையின் கிழக்குப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. 1936ம் ஆண்டில் குவாரிட்ச் வேல்ஸ் (Quaritch Wales) இந்த ஆலயத்தை தனது அகழ்வாய்வின் போது கண்டெடுத்தார்.1976-1977 இந்த ஆலயம் பெகர்த்தெடுக்கப்பட்டு பூஜாங் பள்ளத்தாக்கு அகழ்வாராய்ச்சி நிலையத்தில் வைக்கப்பட்டது.  


Candi4 2.jpg


இந்த ஆலயத்தில் இதுவரை கிடைத்திருக்கின்ற பகுதிகளில் கிழக்கு நோக்கி இருக்கும் 8 ஸ்தூபங்கள் உள்ளன. இந்த ஆலயம் செங்கற்களால் கட்டப்பட்டுள்ளது.  அகழ்வாராய்ச்சி குறிப்புக்கள் இந்த ஆலய கட்டுமான வேலையில் மரங்களை பயன்படுத்தியுள்ளமையையும் குறிப்பிடுகின்றன. அதோடு படிக்கட்டு ஒன்றும் சேர்ந்தே உள்ளது. கோயிலின் நடுப்பகுதியில் ஒரு பெரிய அளவிலான துவாரம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆலயம் மற்றும் அதன் சுற்றுப் புறத்தில் மண்ணினால் செய்யபப்ட புத்தர் சிலைகள், விநாயகர் சிலைகள், வெண்கல சிலைகள், தங்க மோதிரங்கள், பல்லவர் கால எழுத்துக்கள், கண்ணாடி மணிகள் போன்றவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.
Candi4 3.jpg

இந்த ஆலயம் புத்த ஆலயமாக இருக்கலாம் என நம்பப்படுகின்றது. இது கி.பி 11 - கி.பி 12 வாக்கில் கட்டப்பட்டிருக்கலாம் என அகழ்வாராய்ச்சிக் குறிப்புகள் உறுதி படுத்துகின்றன.

குறிப்பு


பூஜாங் பள்ளத்தாக்கு தொல்பொருள் ஆய்வு நிலையம் மலேசிய நாட்டின் கெடா மாநிலத்தில் உள்ளது. இங்கு தொகுத்து வழங்கப்படும் தகவல்கள் டிசம்பர் 2008ல் அங்கு எனது நேரடி பயணத்தின் போது பதிவு செய்யப்பட்டவை. அனைத்து தகவல்களும் குறிப்பேடுகளிலிருந்து எடுக்கப்பட்டு இங்கு பதிவு செய்யபப்டுகின்றன. [நன்றி: Bujang Valley Archeology Museum]. -- --Ksubashini 08:34, 7 நவம்பர் 2009 (UTC)

பங்களிப்பாளர்கள்

Ksubashini, Vinodh மற்றும் 80.129.114.83

இப்பக்கம் கடைசியாக 30 அக்டோபர் 2012, 18:59 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 7,721 முறைகள் அணுகப்பட்டது.