மனுநீதிச்சோழன்

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

கா.மு.சிதம்பரம்மனுநீதிச்சோழன் பற்றிய செய்தி,
சிலப்பதிகாரம்
புறநானூறு
பழமொழி
மூவருலா
கலிங்கத்துப்பரணி
பெரியபுராணம்
ஆகிய நூல்களில் உயர்த்திப் பேசப்பட்டுள்ளது.


இளவரசனுக்கு மரண தண்டனை விதித்ததற்கு இரண்டு காரணங்கள் பெரியபுராண ஆசிரியரான சேக்கிழாரால் கூறப்பட்டுள்ளன.


முதலாவது, "கன்றை இழந்து அந்தத் தாய்ப்பசு படும் துன்பத்தை என் மகனை இழந்து நான் படவேண்டும் என்று மன்னன் கூறுவது.


இரண்டாவதாகக் கூறப்பட்ட காரணம், திருவாரூர் ஒரு புண்ணியத்தலம். அங்கு எழுந்தருளியுள்ள சிவபெருமான் முப்பெரும் தெய்வங்களால் வணங்கப்பட்டவர். திருவாரூரில் தோன்றிய புல், பூண்டு முதல் ஆறறிவு உயிர்கள் வரை அனைத்தும் சிவகணங்கள். இவற்றுள் எதனைக் கொன்றாலும் சிவகணத்தைக் கொன்ற பெரும்பழி வந்து சேரும். அதற்குரிய தண்டனை மரண தண்டனைதான் என்று மன்னன் கூறுகிறான்.


இது ஏற்றுக்கொள்ளக்கூடிய காரணம்.


இதிலிருந்து இதே நிகழ்ச்சி திருவாரூரைத் தவிர வேறு ஓர் ஊரில் நடைபெற்று இருப்பின் அக்குற்றத்துக்கு மரணதண்டனை விதிக்கப்படாது என்பது தெளிவாகிறது.


தண்டனை நிறைவேற்றுவதற்கான முறைகள் இருபதுக்கும் மேலானவை இலக்கியங்களிலும் புராணங்களிலும் காணப்படுகின்றன.


அவற்றை எல்லாம் விடுத்து தேரை ஏற்றிக் கொல்லும் முறையை மன்னன் ஏன் மேற்கொண்டான்?


ஒருவன், எந்த ஒரு பொருளின் மேல் அதிகமாக ஆசைப்பட்டு குற்றம் இழைக்கிறானோ அதே பொருளால் அவனுக்குத் தண்டனை வழங்குவது பண்டைக்கால வழக்கங்களுள் ஒன்றாகும்.


முற்காலத்தில் மன்னர்கள் தேர்கள் வைத்திருப்பதையும் அவற்றைப் பல வகைகளில் ஓட்டி பாராட்டுப் பெறுவதையும் தங்கள் வாழ்வின் குறிக்கோளாகவும் பெருமையாகவும் கருதினர் என்பதற்கும், மன்னர்களுக்குத் தேரின் மீது இருந்த அளவுக்கு மீறிய ஆர்வத்துக்கும் வரலாற்றுச் சான்றுகள் பல உள்ளன.


அதேபோல மனுநீதிச் சோழனின் மகனுக்கும் தேரோட்டுவதில், அதைப்பலர் பாராட்டக் கேட்பதில் அளவற்ற ஆர்வம். ஏன் வெறியே இருந்தது.


இக்கருத்தை இராமலிங்க வள்ளலார் எழுதிய "மனுமுறை கண்ட வாசகம்",என்னும் நூலில் உள்ள கீழ்வரும் பகுதிகள் விளக்கும்.


"சிவதரிசனம் செய்யப் போகிறவன் தேரூர்ந்தே போகக்கூடாது. அவ்வாறு போயினும் நாற்புறத்திலும் நடப்போர்களை விலகும்படி ஆள்விலக்கிகளை விட்டு முன்னே பரிகாரகர் வரவு குறித்துப் போக, பின்னே மெல்லெனத் தேரை விடவேண்டும்.


அப்படிச் செய்யாமல் பாலியப்பருவம் பயமறியாது என்பதற்குச் சரியாக, பரபரப்பாகத் தேரை நடத்தி பசுங்கன்றைக் கொன்றான் எனவும்


"என் புத்திரன் தேரில் ஏறிக்கொண்டு செல்வச் செருக்கினால் மறதி பற்றியே இப்பசுவின் கன்றைக் கொன்றான் என்றும் மனுநீதிச் சோழன் கூறுகிறான்.


திருவாரூர் சோழர்களின் தலைநகராக இருந்திருப்பின் இளவரசன் திருவாரூரில்தான் பிறந்திருப்பான். திருவாரூரில் பிறந்த உயிர்கள் அனைத்தும் சிவகணங்கள் என்பதால் அவற்றைக் கொல்லக்கூடாது என்பது சமயக்கொள்கை. அதனால் மன்னன், இளவரசனுக்கு மரணதண்டனை விதித்திருக்க மாட்டான்.


சோழ இளவரசன் தேரை அதிகமாக விரும்பி, அதன் காரணமாகக் குற்றம் செய்ததால், தேரையே அவனைக் கொல்லும் கருவியாக மாற்றி தண்டனை வழங்கினான் சோழ மன்னன்.


இத்தகைய தண்டனை வழங்கியதற்கு புனை கதை மற்றும் புராணச் சான்றுகளைத் தவிர வரலாற்று ஆதாரமும் ஒன்று உள்ளது.


காவிரிப்பூம்பட்டினத்தைப் பற்றிய வர்ணனையில், சிலப்பதிகாரத்தில் ஒரு செய்தி கூறப்பட்டுள்ளது.


"வீதிகளில் பல பண்டங்கள் காவல் இன்றிக் கிடந்தன. ஏனெனில் அவற்றைக் களவு செய்வோர் உளராயின் அவர் கழுத்துக் கடுப்பப் பொதியைத் தலையில் ஏற்றி ஊரைச் சூழ்விப்பின் அல்லது அவர்க்கே கொடுத்துவிடாது. அதனால் களவு என்பதை நினைப்பதற்கே நடுங்கும் மன்றம் என்னும் கருத்தமைந்த "ஒருவன் எந்தப் பொருளை விரும்பித் திருடுகிறானோ அதே பொருளை அவன் சுமக்க முடியாத அளவுக்கு அவன் தலையில் ஏற்றி ஊரைச் சுற்ற வைப்பது தண்டனையாக வழங்கப்பட்டது என்பது இந்திரவிழவூரெடுத்த காதை (115-17)யில் சொல்லப்பட்டுள்ளது.


புராணக் கருத்துகளின்படி இளவரசன் பசுவின் கன்றைக் கொன்றது குற்றம் என்பதும், அக்குற்றம் நடைபெற்ற இடத்தை வைத்து அதற்குரிய தண்டனை மரண தண்டனை என்பதும் வரலாற்று மற்றும் பண்பாட்டுப் வழக்கப்படி தேரை ஏற்றிக் கொன்றது அக்காலத்து நடைமுறை என்பதும் தெளிவாகிறது.


நன்றி:- தினமணி

--Ksubashini 17:34, 18 மே 2010 (UTC)

பங்களிப்பாளர்கள்

Ksubashini

"http://heritagewiki.org/index.php?title=மனுநீதிச்சோழன்&oldid=2172" இருந்து மீள்விக்கப்பட்டது
இப்பக்கம் கடைசியாக 18 மே 2010, 17:34 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 2,906 முறைகள் அணுகப்பட்டது.