லோகாம்பிகா அம்மன் திருக்கோவில் - கோழிக்கோடு

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

 


* கோழிக்கோடு - அருள்மிகு லோகாம்பிகா அம்மன் திருக்கோவில்.


                                                                                             
T 500 1414.jpg


மூலவர் : லோகாம்பிகா அம்மன்
-தீர்த்தம் : பெரிய குளம், சிறிய குளம்
ஆகமம்/பூஜை : அத்யுத்தமா என்ற முறையில் பூஜை செய்யப்படுகிறது.
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன் -
ஊர் : லோகனார்காவு
மாவட்டம் : கோழிக்கோடு
மாநிலம் : கேரளா


தல சிறப்பு:

இங்குள்ள அம்மன் சுயம்புவாகத் தோன்றியிருப்பது இத்தலத்தின் தனிசிறப்பு. இவளை தாய் மூகாம்பிகையின் அம்சமாக கருதுகின்றனர். இது அம்மன் கோயிலாக இருந்தாலும், அம்மன் சன்னதிக்கு வடக்கு பக்கம் சிவனும், விஷ்ணுவும் தனித்தனி கோயில்களில் அருள்பாலிப்பது சிறப்பு.

கர்நாடக இசைக்கலைஞர் செம்பை வைத்தியநாத பாகவதர் பிறந்த ஊர் இது. இங்கு அவரது நினைவாக இசை மண்டபம் கட்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்குரிய நன்கொடை அனுப்ப விரும்புவோர் நிர்மாணக் கமிட்டி அமைப்பாளரைத் தொடர்பு கொள்ளலாம்.

கோயில் பிரகாரத்தில் சிவன், விஷ்ணு, கணபதி, ஆதித்தயன், நவக்கிரகங்கள், பூதத்தேவர் சன்னதி உள்ளது.


தலபெருமை:

கோயிலின் இடப்புறத்தில் கரனவர் எனப்படும் நகரிகர் தலைவர்களின் பீடம் அமைந்துள்ளது. இவர்களிடம் உத்தரவு பெற்ற பின்பே, பக்தர்கள் வழிபாட்டிற்குச் செல்லவேண்டும் என்ற விதி இங்கு உள்ளது. வடக்கு வாசலில் கூரையற்ற சந்நிதியில் பூதத்தேவர் கோயில் கொண்டிருக்கிறார். இவர் கோயிலின் பாதுகாவலராகத் திகழ்கிறார். ஞாபகசக்தியை அதிகரிப்பதற்கும், தொலைந்த பொருட்களை மீட்டுக்கொடுக்கும்படியும் இவரிடம் வேண்டிக் கொள்கின்றனர். இரண்டு தெப்பக்குளங்கள் இங்கு உள்ளன. பூரத்திருவிழாவின் போது ஆறாட்டு நடைபெறும் குளம் பெரியகுளம். கோயிலின் மேற்கே அமைந்துள்ள இக்குளத்தை, நகரிகர் குடும்பத்தைச் சேர்ந்த கோட்டூரம்மா உருவாக்கினார். மற்றொரு சிறியகுளம் விஷ்ணு கோயில் அருகில் உள்ளது. சிவன் சன்னதி எதிரில் நந்தி விலகி உள்ளது. கோயிலின் வடக்கு பக்கம் அமைந்துள்ள பூரக்களி மண்டபத்தில், திருவிழா காலங்களில் அம்மனுக்கு பிடித்தமான பூரக்களி நடனம் நடைபெறும். அப்போது அம்மனே இந்த நடனத்தை பார்ப்பதாக ஐதீகம்.


தல வரலாறு:

இங்கு பகவதி,சிவன், விஷ்ணுவுக்கென்று மூன்று கோயில்கள் உள்ளன. பகவதியை லோகாம்பிகை, ஆதிபராசக்தி என அழைக்கின்றனர். இவள் சுயம்பு மூர்த்தியாக (தானாகத் தோன்றியவள்) காட்சி தருவது சிறப்பாகும். வடஇந்தியாவில் இருந்து நகரிகர் என்னும் ஆரியர்கள் இடம்பெயர்ந்து கேரளத்திலுள்ள புதுப்பனம் கிராமத்திற்கு வியாபாரத்திற்காக வந்தனர். அவர்களுடன் குலதெய்வமான லோகாம்பிகை உடன் வந்தாள். நகரிகர்களின் கண்ணுக்கு மட்டுமே அவள் தெரிவாள். நகரிகர்களில் ஒருவரை, உள்ளூர்வாசிகள் சிலர் ஒழுக்கக் குறைவானவர் என்று பழித்தனர். பழிச் சொல்லைத் தாங்காமல், அவர் உயிரை மாய்த்துக் கொண்டார். இதற்கு பின், நகரிகர்கள் ஓலம்பலம்என்னும் கிராமத்திற்கு வந்து அதன்பின் லோகனார்காவு கிராமத்திற்குக் கூட்டமாகச் சென்றனர். கூட்டத்தின் பின்னால் தேவியும் பின்தொடர்ந்தாள். அந்த கிராம மக்கள் கண்ணுக்கு லோகாம்பிகா தெய்வம் தெரிந்தது. அவள் யார் என நகரிகர்களிடம் கேட்டனர். நகரிகர்கள் ஆச்சரியத்துடன் திரும்பி பார்த்தபோது, அவர்களது கண்ணுக்குத் தெரியாமல் மறைந்து விட்டாள்.

நகரிகர்களின் தலைவர், அவளைத் தேடி அருகில் இருந்த கொடைக்காட்டு மலை(பயங்குட்டு என்ற பெயரும் உண்டு) மீது ஏறி உச்சியை அடைந்தார். மற்றவர்கள் அவரைப் பின்தொடர்ந்தனர். அங்கே அவர்கள் லோகாம்பிகையைக் கண்டு மகிழ்ந்தனர். மலையிலிருந்து வில்லை வளைத்து அம்பு தொடுக்கும்படியும், அம்பு விழும் இடத்தில், தனக்கு கோயில் அமைக்கும்படியும் தேவி உத்தரவிட்டாள். தொடுத்த அம்பு மலைஅடிவாரத்தில் ஒரு மரத்தைத் துளைத்து நின்றது. அவ்விடமே லோகனார்காவு ஆனது. அங்கு கோயில் கட்டப்பட்டது. மூலஸ்தானத்தில் உள்ள மரத்திற்கு பங்குனியில் நடக்கும் பூரம் ஆறாட்டு விழாவின் போது மூலிகை திரவியம் பூசுவார்கள். இதை சாந்தாட்டு என்பர். இந்த நிகழ்ச்சியின் போது மட்டுமே மரத்தை பக்தர்கள் தரிசிக்க முடியும். ஆரம்பத்தில் நகரிகர்களே கோயிலில் பூஜை செய்தனர். பிற்காலத்தில் தந்திரி மற்றும் மேல்சாந்திகளை நியமித்தனர். லோகாம்பிகைக்கு அத்யுத்தமா என்னும் சிறப்பான முறையில் பூஜைகள் செய்யப்படுகின்றன. தினமும் காலை, மதியம், இரவு பூஜை நடக்கிறது.


சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்: இங்குள்ள அம்மன் சுயம்புவாகத் தோன்றியிருப்பது இத்தலத்தின் தனிசிறப்பு. இவளை தாய் மூகாம்பிகையின் அம்சமாக கருதுகின்றனர். இது அம்மன் கோயிலாக இருந்தாலும், அம்மன் சன்னதிக்கு வடக்கு பக்கம் சிவனும், விஷ்ணுவும் தனித்தனி கோயில்களில் அருள்பாலிப்பது சிறப்பு.


திருவிழா:

மண்டலவிளக்கு விழா கார்த்திகையில் 41நாட்கள். விழாவின் 16ம்நாள், நகரவிளக்கு வழிபாடு, கடைசி 11 நாட்கள், அருகிலுள்ள கொங்கனூர் பகவதி அம்மன் கோயிலில் மண்டலவிளக்கு நடக்கும். கொங்கனூர் பகவதி லோகாம்பிகையின் இளைய தங்கையாகக் கருதப்படுகிறாள். பூரம் திருவிழா பங்குனி ரோகிணியில் தொடங்கி பூர நட்சத்திரத்தன்று ஆறாட்டுடன் நிறைவு பெறும். புரட்டாசியில் நவராத்திரி விழா. இதன் எட்டாம் நாளான துர்க்காஷ்டமி அன்று கிரந்த பூஜை என்னும் கல்வி விருத்திக்கான வழிபாடு நடக்கும்.


திறக்கும் நேரம்:

காலை 5 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
பவள சங்கரி திருநாவுக்கரசுதேதி - 08/04/2011
நன்றி - தின மலர்.

பங்களிப்பாளர்கள்

Coralsri.blogspot.com மற்றும் Ksubashini

இப்பக்கம் கடைசியாக 26 மே 2011, 17:41 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 1,339 முறைகள் அணுகப்பட்டது.