வீர தேவதை - நாகாம்பாள்

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

மின்தமிழ் மகளிர் சமுதாயத்துக்காக அந்தக் காலப் பெண் ஒருத்தியின் வீரதீர சாகஸம் நிறைந்த வரலாறு ஒன்றினை கட்டுரை வடிவில் மின் தமிழில் எழுதுகிறேன். இங்குள்ள அத்தனைப் பெண்மணிகளுக்கும் இது சமர்ப்பணம். (இந்தக் கட்டுரை பூர்த்தி அடைந்தபின் திருமதி சுபா அவர்கள் மரபுவிக்கியில் சேர்க்கட்டும்)

- திவாகர்ஏறத்தாழ 800 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்றுப் பெண்மணி இவள், எங்கே பிறந்தாளோ, எப்படி பால்யத்தில் வளர்ந்தாளோ யாரும் அறியார். இவள் பிறந்த இடம் இன்றையை நெல்லூர் பகுதி என்று ஓரளவு ஆதாரத்துடன் வரலாற்று ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இளமையிலேயே, பால்ய வயதிலேயே கணவனை இழந்தவள். மறுமணம் புரியாதவள். ஆனால் மன்னாதி மன்னர்களையும் தன் புத்தி சாதுர்யத்தினால் கவர்ந்தவள். ஆண்கள் ஆதிக்க சமுதாயத்தில் மிகப் பெரிய வீரப்பெண்மணியாக போற்றப்பட்டவள். அவள் எதிரிகளால் ‘பெண் சகுனி’ என்று தூற்றப்பட்டவள். வீராங்கனை, போரில் ஈடுபட்டவள், அவள் கொடியே வில்கொடி. இவளைப் பற்றி அதிகம் பேருக்கு தெரிய வாய்ப்பில்லாமல் போய்விட்டது. இவள் எதிரிகள் இவளைப் பற்றிய நாடோடிப் பாடல்களை ‘தாஸர்கள்’ என்று சொல்லப்படும் நாடோடிகள் மூலம் ஆந்திரதேசத்து தென்பகுதியெங்கும் பரப்பினர். 'Truthful woman is as rare as a white crow" என ஆங்கிலத்தில் சிலர் சொல்வார்களே, அந்த சிலர் பலராக இருந்து இவளை ஏசினர். ஆண்களின் தனிப்பட்ட அரசியல் மற்றும் அரசாட்சி உலகில் எந்தப் பெண்ணுக்கும் மரியாதை எந்தக் காலத்திலும் கிடையாது. இந்த நாடோடி் தாஸர்கள் வாக்கில் ’சொல்லபபடாத வாக்கியத்தால்’ ஏசப்பட்டவள். ஆனால் காலம் இந்த நாயகிக்கு பதிலும், நல்லதோர் தீர்ப்பும் தந்தது. இவள் உண்மையைப் புரிந்த நல்லாசிரியர்கள் இவளை வீர தேவதையாக வர்ணித்தனர். விஷ்ணு மாயை எனப்படும் காளி இவள்தான் என வர்ணித்தனர். இன்றும் குண்டூர் மாவட்டத்தில் தாசப்பள்ளி, உப்பேபள்ளி, காரெம்பூடி, ஜித்தகாமாலபாடு என்னும் கிராமங்களில் இவளுக்கு கோயில்கள் உண்டு. அம்மவாரு என பூசிக்கப்படுபவள். இவளுக்கு வேண்டிக்கொண்டு முடியையும் காணிக்கையாகக் கொடுத்தால் கேட்பது கிடைக்கும் என நம்பிக்கை இந்தப் பகுதியில் இன்னமும் உண்டு.


இவள் பெயர் நாகாம்பாள்.


இவளைப் பற்றிய விவரங்கள் வெளியுலகத்துக்குத் தெரிய வரும்போது இவள் வயது 20 அல்லது 25 ஆக இருக்கும். அது வரை அவளைப் பற்றிய வரலாறு யாருக்கும் தெரியாது. ஆனால் ஒருமுறை இவள் வெளியுலகத்துக்கு வெளிப்பட்டபின் இவள் தன் வரலாறு பக்கம் திரும்பிப் பார்க்கவும் இல்லை. பின்னர் நடக்கும் எந்த நிகழ்ச்சிக்காகவும் வருந்தவும் இல்லை. இவள் தாரகமந்திரம் ‘தைரியமே சாகஸ லக்‌ஷணா’ எது வரினும் சந்திப்போம்.. அந்த தைரிய மனதுதான் இவள் பலம்.


சரி, ஏற்கனவே சொல்லிவிட்டேன், நாகாம்பா தன் 20/25 ஆவது வயதில்தான் தன்னை வெளிக்காட்டிக்கொண்டாள் என்று. அதற்குள் இந்த 20/25 வருட தல வரலாறை ஒருமுறை சட்புட்டென பார்த்துவிடலாமே

இங்கு சொல்லப்படும் தலம் என்பது பல்நாடு அல்லது குர்ஜாலா எனும் ஒரு சிறிய மாநிலம் ஆகும். இது இன்றைய குண்டூர், பிரகாசம், பகுதிகளில் இருந்த இடம். மஹாதேவிசெருவுலா என்கிற மாச்சரலா தலைநகரம் (இன்றைக்கும் மாச்சர்லா என்ற பெயர்தான், குண்டூர் மாவட்டத்தின் மேற்கு கோடியில் உள்ளது) இந்த பல்நாடு பகுதியை நாம் சொல்லப்போகும் இந்தக் கட்டுரையின் காலத்தில் ஆண்டுவந்தவன் அனுகுராஜா என்கிறவன். (இவன் காலம் கி.பி 1125-60 என்பர்) இவன் சோழநாட்டின் கட்டுப்பாட்டுக்குள்ளும் சோழ ராஜனான இரண்டாம் குலோத்துங்கனை சக்கரவர்த்தியாக ஏற்றுக் கொண்டவன். அவர்களின் தெலுங்கு நண்பர்களான வெலநாட்டுச் சோழன் மகள் மயிலம்மையை மணம் செய்தவன். இந்தவெலநாட்டு சோழர் தம்மை வெலம நாயுடு வகுப்பில் சேர்த்துக் கொண்டனர். அனுகு ராஜா சத்திரிய வம்சம். இந்த ராஜா, நாயுடு வம்சத்து மயிலம்மை போதாதென பூரமா எனும் (கம்மா ஜாதி, பூ என்றால் பூமி, ரமா என்றால் லக்‌ஷ்மி) அரசியையும் ரெட்டி வம்சத்தவளான விஜ்ஜலா என்பவளையும் கலியாணம் செய்துகொண்டான். சாதித் தகராறு மிக அதிகமான சமயம் அது. சாதித் தலைவர்களைத் திருப்திப்படுத்த அனுகுராஜாவின் அமைச்சரான தொட்டநாயுடு என்பவரின் ஏற்பாடுதான் இது. மூன்று மனைவிகள் உள்ளவனானாலும் புத்திரபாக்கியம் இல்லாத நிலையில் மந்திரியின் முதல் மகனான
பாதாநாயுடு என்பவனை சுவீகாரம் ஏற்றுக் கொண்டான். அந்த மகனே தனக்கு அடுத்தபடியான அரசன் என்றும் அறிவித்துவிட்டான்.

இதுவரை கதை நன்றாகவே நடந்தாலும், விதி என்று ஒன்று இருக்குமே, அது எப்போதுமே மனிதனுக்கு எதிராகவே வேலை செய்யுமோ என்னவோ, எந்த நேரத்தில் தொட்டநாயுடுவின் முதல் மகனை தத்து எடுத்தானோ அந்த சமயம் இந்த மூன்று மனைவிகளுமே ஒவ்வொருவராக கருத்தரிக்க ஆரம்பித்தனர். மூன்று பேருமே ஆளுக்கொரு மகனையும் (!) பெற்றுத்தந்தார்கள். தத்துப்பிள்ளை வந்த அதிர்ஷ்டம் என்று வெளியே மன்னனிடம் சந்தோஷமாகவும், உள்ளுக்குள் வெறுப்பாகவும் இருந்த மந்திரி தொட்டநாயுடுவுக்கு இன்னொரு சோதனை வந்தது என்னவென்றால் அந்த தத்துப்பிள்ளை பக்கத்து நாட்டில் ஒரு விவகாரத்தில் சிக்கி தண்டனையாக மரணத்தின் பிடியில் சிக்கியதுதான்.. (விவகாரம் என்றால் ஏதோ பெண் விஷயம் என நினைக்கவேண்டாம். அந்தப் பக்கத்துநாடான சண்டோல் நாட்டுக் கொடி புறாக்கொடி. அதனால் அந்த நாட்டில் சென்று அங்கு புறாக்களை கொல்லக்கூடாது. ஆனாலும் இவன் அங்கே போய் அப்படி ஒரு புறாவை அம்புவிட்டுக் கொல்ல, அந்த நாட்டுச் சட்டப்படி அவனுக்கு உடனடியாக மரணதண்டனை கிடைத்துவிட்டது)

ஆக அனுகுராஜாவுக்கு சற்று வயது கூடிப்போனாலும் மகிழ்ச்சியும் கூடிப்போய்விட்டது. சம்பந்தமே இல்லாத தத்துப் பிள்ளைக்கு இனி முடிசூட்டவேண்டாம், இருக்கவே இருக்கிறார்கள் தன் ரத்தத்தின் ரத்தமான அருமந்தபுத்திரர்கள் மூவர்.. யாராவது ஒருவனுக்கு முடிசூட்டிவிட்டு ராஜ்ஜியபாரத்தை மந்திரியிடம் ஒப்படைத்துவிட்டால் தாம் இனி மீதியிருக்கும் காலத்தை வெகு சந்தோஷமாக கழித்துவிடலாம் என்று கணக்கு போட்டான்.

மந்திரியான தொட்டநாயுடு சோகத்தில் ஆழ்ந்ததைப் பார்த்த அவன் இரண்டாம் மகனான பிரமண்ணாநாயுடு தந்தைக்கு ஆறுதலாக இருந்ததோடு, அந்தத் தந்தைக்கு வாக்கும் கொடுத்தான். இந்த பல்நாடு எனும் நாடு பலமாக இருக்க வேண்டுமானால் தம்மால்தான் முடியும் என நிரூபிக்கவேண்டும்.. ஆகையினால் மன்னர்களின் மூன்று புத்திரர்களில் நாயுடு வம்சத்தைச் சேர்ந்த மயிலம்மை புத்திரனுக்கே முடிசூட்டவேண்டுமென அனுகுராஜாவுக்கு இந்த தந்தையும் இரண்டாம் மகனும் யோசனை கொடுத்தனர். இந்த யோசனை விஷயம் வெளியே சென்றதுமே மற்ற ஜாதித்தலைவர்களுக்குப் பிடிக்கவில்லை என்பதையும் அந்த ராஜாவும் அறிந்து கொண்டான். ஒவ்வொரு நாளும் அந்தந்த ஜாதிகாரர்கள் ஏதாவது உள்நாட்டுக் கலகம் செய்து தத்தம் ஜாதி பெரிது எனக் காண்பிக்க எல்லாவழிகளையும் கடைபிடித்தனர். பிரமண்ணா நாயுடு அதி சாமர்த்தியசாலியாதலால் நாட்டில் உள்ள நாயுடு மக்களையும் அவர்களோடு சத்திரிய வைஸ்ய, இதர ஜாதி மக்களையும் (ரெட்டி, கம்ம தவிர்த்து) மிகப் பெரிய கூட்டத்தைத் தமக்காக தயார் செய்துகொண்டு காலம் கனிய காத்திருந்தான். கலவரங்கள் நாளும் நடந்தாலும் அதை சுமூகமாக தான் தவிர்த்து அரசனுக்குப் பாதுகாப்பாக இருப்பது போல காண்பித்துக் கொண்டான். இவனுடைய சாமர்த்தியத்துக்குப் பரிசாக அனுகு ராஜாவின் மாமனாரும், வெலமநாயுடு வம்ச மயிலம்மையின் தகப்பனுமான வெலநாட்டு ராஜா பிரும்மண்ணாவுக்கு அந்த நாட்டு முதன்மந்திரி பதவியைக் கொடுக்க சிபாரிசு செய்தார். (அதுதானே ஜாதிக்கழகு?) இதனால் மேலும் ஆத்திரமடைந்த ரெட்டிக்களும், கம்மாக்களும் கலவரத்தைப் பலப்படுத்தினர்.

சக்தி வாய்ந்த மூன்று ஜாதிக்காரர்களை எதிர்த்துக் கொண்டு தம்மால் ராஜ்ஜியபாரம் சுமக்கமுடியாது என்ற நிலைக்கு வந்த அனுகுராஜா சொல்லாமல் கொள்ளாமல் ஒருநாள் இரவு அரண்மனையை விட்டு கால் போன போக்கில் நடந்தபோது ஊரின் முடிவில் அவன் முன்னே ஒரு ஒளி தோன்றியது போல ஒரு உணர்ச்சி ஏற்பட்டது. கண்ணைக் கசக்கி அந்தக் கிழராஜா எதிர்நோக்கியபோது அங்கே அந்த பெண் நிற்கக் கண்டான். ஆனால் அந்தப் பெண் திடீரென அவன் மேல் பாய்ந்து அந்த ராஜாவை ஒரு தூக்கு தூக்கி பாதை ஓரத்தில் எறிந்தாள். சடுதியில் நடந்த இந்த கோரத்தைப் பார்த்து பயந்து போனவன், அங்கே அவன் முன்னம் நின்ற இடத்தில் ஒரு வேங்கைப் புலி இருப்பதையும் பார்த்தான். வேடிக்கை என்னவென்றால் அது ஏதோ நாய் ஒன்று மனிதனுக்கு தோழமையாய் இருப்பது போல அந்தப் பெண்ணைப் பார்த்து அவள் காலடியை மோர்ந்து பார்த்துவிட்டு பிறகு சத்தம் போடாமல் காட்டுப்பக்கம் ஓடிவிட்டதையும் பார்த்து மயக்க மருந்து இல்லாமலே மயங்கும் நிலைக்கு வந்தான் அரசன். அந்தப் பெண் அந்த அரசனை எழுப்பி அவனை தன் நிலைக்குக் கொண்டு வந்தாள். “என்னை இன்று காப்பாற்றினாயே.. அது போல என்றும் என்னைக் காப்பாற்ற உன்னால் முடியுமா.. அப்படி முடிந்தால் நீ சொல்வதை எல்லாம் நான் செய்கிறேன்” என்றான்..

”முடியும் வரை பார்க்கலாம்” என்றாள் அந்தப் பெண். அவள் பெயர் கேட்டான் ‘நாகாம்பா’ என்றாள். எந்த ஊர் எனக் கேட்டான். எந்தக்குலம் எனக் கேட்டான். கலியாணம் ஆகிவிட்டதா..கணவன் பெயர் என்னவெனக் கேட்டான்.

அவள் ஒரே வார்த்தையில் பதில் சொன்னாள்.” இனி எந்தக் கேள்வியும் கேட்காமல, நான் சொல்வதை மட்டும் கேட்டு அதன் படி நட.. மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன்..: என்று கிழராஜனை முன்னே செல்லவிட்டு பின்னே அவள் நடந்தாள். அரண்மனையில் மறுநாள் நாகாம்பாள்தான் தன்னுடைய மதி மந்திரி என்று அரசன் பிரகடனம் செய்தான். முதன் முதலாக தனக்கென ஒரு மிகப்பெரிய ஆதரவைப் பெற்ற அதே நாளில் ஒரு மிகப் பெரிய எதிரியையும் சம்பாதித்துக் கொண்டான்.
அவன் பிரம்மண்ணாதான்.

(வீரதேவதை தொடர்ந்து வருவாள்)

பங்களிப்பாளர்கள்

Ksubashini

"http://heritagewiki.org/index.php?title=வீர_தேவதை_-_நாகாம்பாள்&oldid=2713" இருந்து மீள்விக்கப்பட்டது
இப்பக்கம் கடைசியாக 2 அக்டோபர் 2010, 06:18 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 2,260 முறைகள் அணுகப்பட்டது.