வீர தேவதை - நாகாம்பாள் 2

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

-திவாகர்ஜாதிகள் பாரதத்தில் மனிதன் பிறந்தபோதே வந்துவிட்டது என்றுதான் தோன்றுகிறது. சனாதன தர்மத்தில் நான்கு வர்ணங்கள் என ஏற்பட்டதே ஒரு வசதிக்காகவும் அவர்கள் செய்யும் தொழிலால் மாறுபட்டவையே தவிர மனிதர் யாவரும் ஒருவரே என்பதை நம் முன்னோர்களான பாரதத்தின் சத்புத்திரர்கள் எத்தனையோ முறை போதித்துள்ளனர். மகாபாரதம் முழுதும் படித்தவர்கள், பாரதத்தில் வரும் பாத்திரங்கள் இவர் இன்ன சாதிதான் என்று யாரையுமே அறுதியிட்டுக் கூறமுடியாது. சாதி தொழிலால மட்டுமே பார்க்கப்பட்டது. யார் எப்போதெல்லாம் பிறப்பு வழியாக ஜாதிதர்மத்தை சுட்டிக்காட்டியபோதெல்லாம், அவர்களுக்கு அவ்வப்போது பெரியவர்களால் கண்டிக்கப்பட்டு திருதாஷ்டிரனும், பாண்டுவும், ஏன் வியாசமகரிஷியும் பிறந்த விதம் எடுத்துச் சொல்லப்பட்டு, சாதி என்பது பிறந்தவழியால் ஏற்படுவது அல்ல என்று திடமாக போதிக்கப்பட்டது. கடைசியில் முத்தாய்ப்பாக கீதையில் கண்ணனும் இதையே சொல்வதாகவும் வரும். ஆனால் காலாவட்டத்தில் இந்த சாதிமுறை பிறப்பு வழியாக பாரதத்தின் பலமூலைகளிலும் வேர்விட்டு வளர்ந்ததோடு, இது ஒரு விஷவிருட்சமாக மாறி பல குடும்பங்களையும் வேரோடு அழித்ததையும் நாம் எத்தனையோ முறை படித்திருக்கிறோம். அத்துடன் ஆண்வர்க்கம் தங்கள் சுய நலத்துக்காக இந்த சாதியெனும் விஷவிருட்சத்தை தமக்கு சாதகமாக வளைத்துக் கொள்வதிலும் சாதிவழியை அதிகாரமாகவும் அடக்குமுறையாகவும் ஆள ஆரம்பித்தனர்.

சரி, பிரும்மண்ணாநாயுடு கதைக்கு வருவோம். தன் தந்தை மிகச் சிறந்த அறிவாளிதான், ஆனால் வயதான முதல்மந்திரி, முதல்மகனை அநியாயமாக ஒரு புறா விஷயத்தில் பறிகொடுத்தவர், நிலைமை சாதகமாகவே இருந்திருந்தால் இந்த அரச பதவியே அண்ணனுக்குதான் போயிருக்கவேண்டும். பிரும்மண்ணா மனமும் கொதித்துதான் இருந்தது. ஆனால் இந்த சோகங்கள் தந்தையைப் பாதித்துவிட்ட நிலையில் அவர் மகன் எனும் பெயரில் எந்தப் பதவியும் இல்லாமல் அவர் பதவிக்கான அத்தனை அதிகாரத்தையும் தன் கைக்குள் எடுத்துக் கொண்டவன். நான்காம் வர்ணத்தவனாக தன்னைப் பெருமையாகப் பேசிக்கொண்டவன், தானும் ஸ்ரீகிருஷ்ணனும் சமமானவன் என்று சொன்னதோடு விடாமல் தனக்கென தாஸர்கள் என்ற மிகப் பெரிய கூட்டத்தைச் சேர்த்துக் கொண்டான். இந்த தாஸர்கள் இந்த நான்கு வர்ணங்களையும் சார்ந்தவர் அல்லர். பலவகைப் பிரிவுகளாக இருப்பவர்கள். எனினும் தமக்கு மேலான குருவாக பிரும்மநாயுடு அமைந்ததில் வெகு சந்தோஷம் அவர்களுக்கு. இந்த தாஸர்களோடு யாதவ குலமக்களும், பிரும்மண்ணா சார்ந்த வெலம நாயுடு மக்களும் மிக ஒற்றுமையாக இருந்து பிரும்மண்ணாவுக்கு மிகப் பெரிய பலமாக இருந்தனர். இது போதாதென தனக்கென ஒரு கொடியும் அந்தக் கொடியில் ஈட்டி சின்னத்தையும் பொறித்துக் கொண்டான். தன் தாஸாதிதாஸர்களுக்கு ஈட்டி எறிவது முதல் சண்டைப் பயிற்சியையும் சொல்லிகொடுத்தான். அந்த ஈட்டிக் கொடியை நாளாவட்டத்தில் குர்ஜலா தேசமான பல்நாட்டில் பொதுக் கொடியாகவும் தனது தாஸர்கள் மூலம் பிரபலப்படுத்தினான். அதற்கேற்றவாறு அவர்களுக்கெனெ வரிச் சலுகைகளையும் ஏராளமாக அள்ளிக்கொடுத்தான் பிரும்மண்ணா. அதே சமயம் மற்ற சாதிகளான, முக்கியமாக ரெட்டி, கம்மாக்களுக்கும், வைசியர்களுக்கும் அதிகவரி போட்டு ராஜ்ஜியத்தின் பொக்கிஷத்தை சரிசமானமாக வைத்திருந்தான். மூன்றில் ஒரு பங்கு வரியை இவர்களிடம் வசூலித்தவன் தம் மக்களுக்கு வரி கொடுக்காவிட்டால் கூட போகட்டுமே என விட்டுவைத்தான்.

ஆனால் இவையெல்லாம் நாகாம்பா தன்னை வெளிக்காட்டிக் கொண்டு மாச்சர்லா அரச சபை வரும் வரைதான். இந்த அனுகுராஜா ஒருவிதத்தில் புத்திசாலியாகவே செயல்பட்டான். நாகாம்பாவை தன் மதி மந்திரி என்றுதான் அறிவித்தானே தவிர தம் மூத்த முதல் மந்திரியான தொட்டநாயுடுவை அதே முக்கிய பதவியில்தான் வைத்திருந்தான். என்ன, அந்தப் பதவிக்குள்ள ’அந்த’ முக்கியத்துவத்தை மட்டும் நாகாம்பா எடுத்துக் கொள்ளும்போது அதைக் கண்டும் காணாமல் ஏதும் அறியாதவன் போல முகம் திருப்பிக்கொண்டதுதான் விசேஷம்.

வந்த புதிதில் நிலைமையை நன்றாகவே அப்படியே கணித்துக் கொண்ட நாகாம்பா, வந்த சில மாதங்களிலேயே செய்த முதல் உத்தரவு அதுவும் அரசனின் பெயரில் செய்தது, ஆறில் ஒரு பங்கு வரி அனைத்துத் தரப்பினருக்கும் ஒன்றுதான் என்று அதிகாரத்துடன் சொன்னது. அடுத்த உத்தரவாக நாட்டின் சின்னம் வில் என்று பறையறிவிக்கப்பட்டது. காரணம் கேட்ட பிரம்மண்ணாவுக்கு பதில் தரப்பட்டது. நாகாம்பா வில் வித்தையில் தேர்ச்சி பெற்றவள் என்ற ஒன்றுதான். அடுத்த வேலையாக எல்லா வீரர்களுக்கும், நாகாம்பாவின் ஆணைப்படி வில் பயிற்சி கட்டாயக் கல்வியாக ஆக்கப்பட்டது.

அடுத்த ஐந்து வருடங்களில் நாகாம்பா ஏறத்தாழ ஒரு அரசியைப் போலவே செயல்பட்டாள். மிகமுக்கியமான செயல், அவள் மக்களிடையே பரவலாக இருந்துகொண்டு, மக்களுக்கு என்ன தேவையோ அதை மட்டும் செய்துகொடுத்தாள். வரிச்சலுகையால் வளர்ச்சிபெற்றிருந்த தாஸர்களும் இன்ன பிறர்களும், முதலில் பிரும்மண்ணாவின் கடைக்கண் ஆதரவினால் மிகப்பலமாக எதிர்த்தாலும், வெகு தைரியமாக அவர்கள் மத்தியில் வில்லைக் கையிலேந்தி அம்பைச் செருகிக் கொண்டே கோபத்துடன் புலி ஒன்று உலாவுவது போல உலாவி நியாயத்தை எடுத்துச் சொல்லி அவர்களிடமிருந்து பதில் கேட்பாள். அவள் கலவரங்களை அடக்கும் விதமே அலாதிதான். வீராங்கனை போல அவள் உலாவி வருவது அவள் வழக்கப்படுத்திக்கொண்டாள் என்றால் அவள் வீரவசனம் அனைவரையும் ஒரு மயக்கு மயக்கியதும் ஒரு காரணம்தான். யார் கலவரம் செய்கிறார்களோ, அவர்களில் யார் கூப்பாடு போடுகிறார்களோ, அவர்களை தரதரவென எழுத்து சாலை மத்தியில் நிற்க வைப்பாள். வேறு சில பெரியவர்களையும் சுற்றி நிற்க வைப்பாள். பிறகு கலவரக் காரர்களை கலவரத்துக்கான காரணம் கேட்பாள்.

பொதுவாக இந்தப் பொதுமக்களில் பலருக்கு சூதுவாது தெரியாது. தலைவன் என்ன சொன்னாலும் கண்ணை மூடிக் கேட்கும் கும்பல்களாக வளர்ந்துவிட்டதால் திடீரெனக் கண்ணைக் கட்டி காட்டில் விட்ட கதையாக அவர்களையே ஏன் கலவரம் செய்கிறாய் என நீதி நியாயம் கேட்டால் திருதிருவென முழிப்பார்கள். உடனடியாக அவள் சுற்றி நின்ற பெரியவர்களையே அந்தக் கலவரக்காரர்களுக்கு நீதி வழங்கும்படி சொல்லுவாள். எந்தவிதத் தகுதியுமில்லாமல் திடீரென ஒரு தற்காலிக நீதிபதி பதவி கிடைத்த மகிழ்ச்சியில் அந்தப் பெரிசுகள் நாகாம்பாவைப் புகழ்ந்துகொண்டே, தங்கள் மனதுக்குப் பிடித்தவகையில் நீதி வழங்குவார்கள். இது முதலில் ஏதோ விளையாட்டுப் போல தோன்றினாலும் தினமும் சாதாரணமாக நடக்கும் கலவர நாடகத்துக்கு முடிவையும் ஒரு நல்ல திருப்பத்தையும் அந்த நாட்டுக்கு வழங்கியது. கலவரங்கள் அடியோடு ஒழிந்தன. ஒரு பெண் மாயவித்தை செய்வது போல ஒரு நாட்டையும், அதன் அரசனையும் அந்த நாட்டு மக்களையும் தன் சொல்படி ஆட்டுவிக்கிறாள். அவள் செயல்கள் அனைவருக்குமே நல்லதைத்தான் தருகின்றன. பெண்ணா இல்லை ஆகாயத் தேவதையா.. நாகாம்பாவின் பெயர் பிரசித்தி பெற்று அந்தப் பிராந்தியம் மட்டுமின்றி பிராந்தியும் வெளியேயும், ஏன மிகப் பெரிய அரசாங்கங்களுக்கும் சென்றது.

முதலில் அந்த ராஜா மகிழ்ச்சி அடைந்தான். தள்ளாத வயதில் இப்படி ஒரு ஆனந்தமா என்று பொங்கினான். நாகாம்பாவை தன் ஆனந்தத்துக்கு ஏற்ற விதத்தில் புகழ ஆரம்பித்தான். ஆனால் இன்பம் அதிகமாகும்போது துன்பமும் கூடவே வர ஆரம்பிக்குமே.. இதுவரை நாகாம்பாவை ஒளிந்திருந்து வேடிக்கைப் பார்த்த பிரும்மண்ணா இனியும் தன்னால் ஒளிந்துகொண்டிருக்க முடியவே முடியாது என்ற நிலையில் மிக வேகமாக தன் திட்டங்களை நகர்த்த ஆரம்பித்தான். தன் திட்டத்தின் முதல் பலியாக நாகாம்பாவை இழிவு படுத்தத் தொடங்கினான். அடுத்தடுத்துத் திட்டங்கள் மூலம் நாகாம்பாவை தீர்த்துக் கட்டவும் முடிவு செய்தான்.

மக்கள் முட்டாள்கள். தற்சமயம் இந்த நாகாம்பாவைக் கொண்டாடும் இந்த மக்கள், தான் கள்ளத்தனமாக வேலை செய்து, பெண்ணாகப் பிறந்து விட்ட நாகாம்பாவைக் கொன்றுவிட்டால் தன் மீதுதான் பாய்வார்கள். ஸ்ரீகிருஷ்ண பகவான் என்று பெயர் எடுத்திருக்கும் தன்னைக் காறித் துப்பி அதள பாதாளத்தில் தள்ளி விடுவார்கள். அதைவிட இந்த மக்களே இவளைக் கல்லெடுத்து அடிக்கும் நிலைக்குத் தள்ளவேண்டும் என்ற முதல் திட்டத்தின் அடிப்படையில் தன் காய்களை நகர்த்த ஆரம்பித்தான்.

(தொடர்ந்து வருவாள்)

பங்களிப்பாளர்கள்

Ksubashini

"http://heritagewiki.org/index.php?title=வீர_தேவதை_-_நாகாம்பாள்_2&oldid=2714" இருந்து மீள்விக்கப்பட்டது
இப்பக்கம் கடைசியாக 2 அக்டோபர் 2010, 06:20 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 1,429 முறைகள் அணுகப்பட்டது.