வீர தேவதை - நாகாம்பாள் 3

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

-திவாகர்தாஸர்கள் நல்ல கலைத்திற்மை வாய்ந்தவர்கள். தெலுங்கு மொழியை நல்ல வளமிக்க
மொழியாய்க் கொண்டுவந்ததில் இந்த தாஸர்களுக்கு மிகப் பெரும்பங்குண்டு.
தெலுங்கு மொழியை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். ஒன்று பண்டித பாஷை.
இன்னொன்று பாமர பாஷை. பண்டித பாஷையில் பாதிக்கும் மேல் (அல்லது
முக்கால்வாசி) சமுஸ்கிருதம் கலந்திருக்கும். பாமர பாஷையில் அந்த மண்ணின்
பழகுச் சொற்கள் ஏராளமாக கலந்திருக்கும். தாஸர்கள் நாடோடிகள்.
சாதாரணமக்களிடையே பாட்டு பாடி பிழைப்பு நடத்துபவர். ராமாயணம், மகாபாரதம்
போன்ற இதிகாசங்களின் மூலம் சின்ன சின்னக் கதைகளை எடுத்து அவைகளை சுவையாக
தங்கள் பாமர பாணியில் பாட்டு பாடி கதைகள் சொல்வதில் வல்லவர். மண்ணின்
இசையும் கூட சேர்ந்து கொள்ளும்போது அது இனிய தேனாக செவியில் பாய்வதை
மக்கள் பெரிதும் விரும்புவார்கள். எப்போதாவதுதான் இவர்கள் அரச சபையில்
தங்கள் திறமையைக் காண்பிக்க சந்தர்ப்பம் கிடைக்கும் என்றாலும், இவர்கள்
பாமரமொழி ஏறத்தாழ நகைச்சுவைகாகவும், கீழ்த்தட்டு மக்களின் விருப்பமாகவும்
பார்க்கப்பட்டது. இந்தவகையான ஏற்றதாழ்வுகளும், பேதங்களும் அந்தக் காலத்து
அரசுகளிடம் சர்வசாதாரணம் என்பதால் தாஸர்களும் இவைகளைப் பெரிதாக எடுத்துக்
கொள்வதில்லை என்பதோடு தம் வயிற்றைக் கழுவிக்கொள்ள சாதாரண மக்களிடம்
ஏராளமான அளவில் புழங்கினார்கள். தாஸர்கள் தெய்வபக்தி நிரம்பியவர்கள்
என்பதாலும் நல்லவார்த்தைகளை ஆசிர்வாதம் போலச் சொல்வதாலும் அவர்களுக்கும்
ஏராளமான செல்வாக்கு மக்களிடையே கிடைத்தது. தாஸு என்று செல்லமாக
அழைக்கப்பட்டும், மக்களிடையே அறிவாளி என்றும் கூட பெயர் அவர்களுக்கு
கிடைத்தது. இத்தனை அறிவாளிகளாக தாஸர்கள் தங்களை ஐந்தாம் வர்ணமாக
அனைவரும் பாவிக்கிறார்களே என்ற ஏக்கத்தில் இருந்ததும் வாஸ்தவம்தான்.
எத்தனைதான் செல்வாக்கு பெற்றாலும் சாதி என வரும்போது அரசசபையில் தாம்
கீழானவர்தாம் என்ற உண்மையும் அவர்களை பாதித்தது.


தாஸர்களின்இந்த செல்வாக்கும், ஏக்கமும் தான் பிரம்ம நாயுடுவுக்கு வெகுவாக
கை கொடுத்தது. பிரம்ம நாயுடுதான் முதன் முதலில் இந்த பிராந்தியங்களில்
ஜாதி வெறியைக் கிளப்பிய நாயகன் ஆவான் என்ற பட்டத்தையும் பெறுகிறான் என்றே
சரித்திர ஆய்வு ஆசிரியர்கள் எழுதுகிறார். தாஸர்களை தனது சீடர்கள், அதனால்
அவர்கள் ஜாதியின் ஐந்தாம் நிலையிலிருந்து நான்காம் நிலைக்கு
ஏற்றபட்டுள்ளனர் எனப் பெருமைப்பட பேசி அவர்களை முழுவதும் தம் பக்கம்
நிலையாக நிறுத்திக் கொண்டான்.


ஏற்கனவே சொன்னபடி நாகாம்பா தன்னை ஜாதியின் பெயரால் தன்னை வெளிக்காட்டாமல்
இருந்தது ஒருவகையில் அவளுக்கு வெற்றியைத் தந்தது என்றாலும் பிரும்ம
நாயுடு அவளை மேல்சாதியின் ஆதிக்கசக்தியாகப் பார்த்தான். ஒரு சில
ஆசிரியர்கள் நாகாம்பாவை ரெட்டி சாதியினர் எனக் குறிப்பு தருகிறார்கள்.
அவள் பூர்வீகத்தில் ரெட்டி சாதியைச் சார்ந்தவனைத் திருமணம் செய்து
கொண்டதை சில குறிப்புகளாகத் தருகிறார்கள். இந்த சிலரின் கருத்து
பெரும்பாலோர் ஏற்றுக் கொள்ளவில்லை. எப்ப்டி இருந்தாலும் ரெட்டி, நாயுடு,
மற்றும் கம்மா இவர்கள் மூவருமே நாலாவது வர்ணத்தைச் சார்ந்தவர்தாமே என்று
வாதம் செய்கிறார்கள்.


ஆனால் நாகாம்பாவை உயர்சாதியாகவே காண்பிக்கத் தலைப்பட்டான் பிரும்மண்ணா.
தாஸர்கள் மூலமாக இந்தச் செய்தியை மக்களிடையே சுலபமாகப் ப்ரப்பினான்.
மேலும் அவள் தன் கணவனைக் கள்ளத்தனமாக சூன்யம் வைத்துக் கொலை செய்ததாக
செய்தியையும் அந்த சூன்யம் இந்த நாட்டு அரசனுக்கு வைக்கப்படும் காலமும்
வெகு தூரம் இல்லை என்றும் வதந்தி தாஸர்களில் அழகு தெலுங்கில் வெகு
தாராளமாக பரப்பப்பட்டது. நாகாம்பா செவியிலும் இவை ஏராளமாக விழுந்தாலும்,
அவைகளை அவள் ஏளனம் செய்து சமாளித்தாள். சூன்யக் காரியின் ஆட்சியிலா
மக்கள் நல்மாக வாழ்கிறார்களா எனத் திருப்பி மக்களையே கேள்வி கேட்டாள்
சூன்யக் காரியின் ஆட்சி என்றால் நாடே சுபிட்சமற்று வறட்சியும்
மழையின்மையும் பெருகி வரிச் சுமை சாதாரண மக்களை வாட்டுமே.. எங்கே அந்தச்
சுமை என்று கேட்டு மக்களிடையே வலம் வந்தாள். நாகாம்பா எதற்கெடுத்தாலும்
மக்களிடையே நேரிடையாகச் சென்று பதிலுக்குப் பதிலடி கொடுப்பது
பிரும்மண்ணாவுக்கு எரிச்சலைத் தந்தது. அதன் விளைவு அடுத்த் நாள் மிகப்
பெரிதாக வெளிப்பட்டது.


முதல்நாள் இரவு நேரத்தில் அவன் தந்தையால் தோழமையுடன் விருந்துக்கு
அழைக்கப்பட்ட போது அந்த நாட்டு கிழ அரசனான அனுகு ராஜா உற்சாகமாகத்தான்
சென்றிருக்கவேண்டும்..தொட்டநாயுடு வயதில் பெரியவன். நண்பனாகத் தன்
வாழ்க்கையில் தன் இன்ப துன்பங்களில் பங்கு கொண்டவனாக இருப்பதால் அரசனும்
அவன் அழைத்த விருந்துக்கு உடனடியாகச் சென்றான். அங்கு விருந்தும்
திருப்தியாக அளிக்கப்பட்டு சற்று நேரம் கழித்தே அரண்மனை திரும்பிய அரசனை
கோபத்துடன் நாகாம்பா கடிந்து கொண்டது கூட அனைவரும் வேடிக்கைப்
பார்த்தனர்தாம்.ஆனால் அடுத்தநாள் காலைதான் தெரிந்தது. மன்னன் இரவு
நேரத்தில் படுக்கையில் படுத்தவன் எழுந்திருக்கவே இல்லை என்பது. எப்படி
இறந்துபோனான் அவன் என்பது யாருமே அன்றைக்கு என்றல்ல என்றைக்குமே தெரியாத
ரகசியமாக போய்விட்டது..


நாகாம்பா, பிரும்மண்ணா இருவருமே இந்த நிலையை தமக்குச் சாதகமாகப் பயன்
படுத்திக் கொண்டனர் என்றே எல்லோரும் (சரித்திர ஆய்வாளர்கள்)
சொல்கிறார்கள். நாகாம்பா இரவு விருந்தில் விஷம் வைக்கப்பட்டது என்று
குற்றம் சாற்றினாள். பிரும்மண்ணாவோ அரசர் வெகு மகிழ்ச்சியாக அரண்மனை
திரும்பியதை அத்தனை பேரும் பார்த்தார்களே என்று சொல்லியவன்,
சந்தர்ப்பத்துக்குக் காத்திருந்த நாகாம்பா அநியாயத்துக்குக் கொன்று
போட்டுவிட்டாள் என்றும் இவள் கணவனைக் கொன்றவிதத்திலேயே நாட்டை ஆளும்
ராஜாவுக்கே சூன்யம் வைத்துவிட்டதாகவும் கோபத்தோடு பேசினான். தாஸர்கள்
மூலம் இந்தச் செய்தியும் படுவேகமாகப் பரப்பப்பட்டது.


நாகாம்பா முதன் முதலாக தடுமாறினாள் என்றே சொல்லலாம். மக்களிடையே
சிரமப்பட்டு சேமித்துவைத்திருந்த நம்பிக்கை எனும் செல்வத்தை வெகுவேகமாக
அவள் இழக்க நேர்ந்தது. ஏனெனில் மக்களிடையே எதற்கும் செல்லத் தயங்காத
நாகாம்பா முதன் முதலாக அதன் எதிர் விளைவு (ஒருவேளை சென்றால்) தனக்கு
பாதகத்தை விளைவிக்கும் என்று எதிர்பார்த்தவள்தான்.


அவள் மக்களிடையே வராதது ஒரு பெரும் வெற்றியைத் தந்தது பிரும்மண்ணாவுக்கு.
சூன்யக்காரி பயந்துவிட்டாள் என்று தாஸர்கள் பாடினார்கள். பிரும்மநாயுடு
ஸ்ரீகிருஷ்ணனாக மாறி பூதகி எனும் நாகாம்பா எனும் சூன்யக் காரியின் தோலை
உரித்துவிட்டார் என்றும் கூடச் சேர்த்துப் பாடினார்கள். ஆனால் அடுத்த
கட்டம் அடுத்த பட்டம் யாருக்கு என்பதில் ஆரம்பித்தது. சற்றே தயக்க
ச்நிலையில் இருந்த நாகாம்பா ரெட்டி ராணியின் குமாரனை (நரசிம்மராஜு)
பிரஸ்தாபிக்க, பிரும்மண்ணாவோ நாயுடு ராணியான மயிலம்மை புத்திரனுக்கு
(நலகாமன்)அரசப்பட்டம் என்று சட்டம் பேசினான். மக்கள் மத்தியிலும்
மயிலம்மை புத்திரனுக்கே தாஸர்கள் மூலம் ஆதரவு கூட்டினான்.


நிலைமையை வெகு நிதானமாகவே சமாளித்தாள் நாகாம்பா. எப்படியோ மக்கள்
பெரிதும் பேசுகின்ற நாயுடு புத்திரனான நலகாமனுக்கே அரச பதவி என்றும்,
பிரமா நாயுடு இனி, தன் தந்தையின் ஸ்தானத்தில் நலகாமனுக்கு துணையாக
மந்திரி எனும் அந்தஸ்துடன் இருப்பதற்கு சம்மதம் தெரிவித்தாள். எப்போது
சாதி தலைவிரித்து ஆடுகிறதோ, அதன் போக்கில் விட்டுப் பிடித்து பிறகு
இழுத்துக் கட்டுவது என்றும் முடிவெடுத்தவள் தனக்கு சாதகமாக ஏனைய
சாதியினர் இருப்பதையும் புரிந்துகொண்டு, ரெட்டிகுமாரனான நரசிம்ம
ராஜுவுக்கு இளைய பட்டமும் கட்டவேண்டும் என்ற நிபந்தனையும், மாச்சர்ல
அரசபீடத்தில் அமரும் அரசன் யாராக இருந்தாலும் அவன் தன் சொல்படி கேட்டு
நடக்கவேண்டும் என்ற நிபந்தனையும் விதித்தாள்.


இது பிரும்மண்ணவால் ஒப்புக் கொள்ளப்பட்டது. தம்முடையை சாதியான் அரசனானால்
தன்னால் எதுவும் செய்யமுடியும், காலாவட்டத்தில் நாகாம்பாவை
அரண்மனையிலிருந்தும் விரட்டமுடியுமெனவும் திட்டமிட்டவன் இந்த சுமுக
உடன்படிக்கைக்கு ஒப்புக்கொண்டான்.


வயதில் இளையவர்களான அரசரும் சிற்றரசரும் தங்கள் குலதர்மப்படி குலங்களைச்
சார்ந்து ஒத்துழைத்தார்கள். எனினும் முதல் இரண்டு மூன்று மாதங்களிலேயே
புது அரசனான நலகாமனுக்கு பிரம்மநாயுடுவின் தந்திரம் புரிந்துவிட்டது. தன்
மந்திரி தன்னை காப்பது போல காத்து தனக்கு வேண்டாத சமயத்தில் தன் தந்தையை
ஒழித்துக் கட்டியது போல தன்னையும் ஒழித்துவிடுவான் என்பதை நாகாம்பா மெல்ல
மெல்லப் போதித்தாள். நாகாம்பா இந்த நாட்டுக்கு வருவதற்கு முன்பு இருந்த
நிலையையும், வந்த பின்பு நாடு மாறிய நிலையையும் நலகாமனை உணரச்செய்தாள்.
நலகாமன் நாகாம்பாவை தெய்வமாகப் பார்க்க ஆரம்பித்தான். அவள் சொல்படி
திடீரென ஒருநாள் பிரும்மண்ணா வீட்டில் சோதனை செய்யும்படி தன் காவலரை
அனுப்பினான் அரசன். அன்று தடாலடியாக பி்ரும்மண்ணா வீட்டில் நுழைந்த
காவலர்கள் பொன்னும், மணியும், மாணிக்கங்களும் முத்துக்களையும் அப்படியே
அள்ளி வந்து அரசன் காலடியில் வைத்தனர். அரசனுக்கே இல்லாத அனைத்துச்
செல்வமும் பி்ரும்மண்ணா வீட்டில் எப்படி வந்தது என்ற ஒருநாள் விசாரணையில்
பிரும்மநாயுடு விசாரிக்கப்பட்டு, மக்கள் முன்னிலையில் அவமானப்
படுத்தப்பட்டான்.


தன்னால் அமர்த்தப்பட்ட தன் சாதி அரசனே தனக்கு மோசம் செய்ததை அவனால்
தாங்கிக் கொள்ளமுடியவில்லை. நாகாம்பாவில் இந்த வெற்றி பிரும்மண்ணாவின்
ரத்தக் கொதிப்பை மேலும் வெறியேற்றியது. அந்த வெறி, மூன்றாம் இளவரசனான
சிறுவன் கம்மசாதி மலிதேவா வை தன் பக்கம் இழுக்கவைத்தது. தம் முழு
பலத்தையும் அவனுக்காக செலவழிக்கவும் முடிவு செய்தவன், ஒருநாள் இரவு
எல்லோரும் தூங்குகையில், மடிதேவாவின் துணையோடும், தாஸர்களின் துணையோடும்
மாச்சேர்லா நகரையே முற்றுகை இட்டு, அதன் உள்ளே நுழைந்து அரண்மனையும்
பாதுகாப்போடு கைப்பற்றினான். ரத்தசேதம் இல்லாமல் அந்த அதிகாலையில்
அரண்மனை அதிகாரம் நாகாம்பா கைகளிலிருந்தும் நலகாமன்
அரசாட்சியிடமிருந்தும் பறிக்கப்பட்டது.

பங்களிப்பாளர்கள்

Ksubashini

"http://heritagewiki.org/index.php?title=வீர_தேவதை_-_நாகாம்பாள்_3&oldid=2715" இருந்து மீள்விக்கப்பட்டது
இப்பக்கம் கடைசியாக 2 அக்டோபர் 2010, 06:22 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 1,481 முறைகள் அணுகப்பட்டது.