வீர தேவதை - நாகாம்பாள் 4

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

-திவாகர்12 ஆம் நூற்றாண்டில் தென்னகத்தில் எண்ணிக்கையிலடங்கா அரசுகள் சிறு சிறு
பிராந்தியங்களை ஆட்சி செய்தாலும் அவர்கள் பலமான அரசுகள் (சோழர், ஓய்சளர்,
கங்கர்கள் போன்றோர்) கீழே அடங்கிதான் ஆட்சி செய்யவேண்டும். அந்த நிலையில்
இந்த சிறு சிறு அரசுகளில் ஆட்சித் தகராறுகள் வந்துவிட்டால் விரைவில்
தீர்த்துக் கொண்டால் நல்லது. கொஞ்சம் தாமதம் ஏற்பட்டால் கூட பெரிய
அரசுகள் தலயிடவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். இரு பூனைகள் கவர்ந்த தோசையை
ஒரு குரங்கு தலையிட்டுத் தீர்த்த கதையாக அந்த தீர்ப்பு பலசமயங்களில்
முடியும். புத்திசாலி சின்ன ராஜாக்கள் இந்த விஷயத்துக்காக பெரிய
ராஜாவிடம் நீதி கேட்பது அவர்களுக்கு நல்லதல்ல.


இந்த சின்ன நீதி விஷயம் பிரும்மண்ணாவும் நாகாம்பாவும் நன்கே அறிந்தவர்.
அந்த அதிகாலை நேரத்தில் ஏற்பட்ட திடீர் புரட்சி குர்ஜாலா என்கிற
மாச்சர்லா நாட்டு மக்களை கலக்கியதுதான். ஆனால் எதற்கும் கலங்காத நாகாம்பா
மறுபடியும் பிரும்மண்ணாவிடம் சமாதானம் கோரினாள். அவள் நினைத்தால்
தப்பியோடி பக்கத்தில் உள்ள அரசுகளை துணைக்கு அழைத்துத் தன்னைக்
கணநேரத்தில் தோற்கடிக்க முடியும். ஆனால் அதே சமயத்தில் இவன் புத்தி
பேதலித்து இந்தக் கணத்தில் எதையும் செய்யக்கூடும் என்பதால் தற்காலிகமாக
அவனிடம் சமாதானக் கொடி காட்டினாள். அதே சமயத்தில் பிரும்மண்ணாவின் கர்வம்
தலைக்கேறியது. முதன்முதலாக நாகாம்பா தனக்கு வேண்டியதை எடுத்துக் கொள்ளச்
சொல்கிறாள். அவன் கர்வம் அவனுக்கு வேண்டியதைக் கேட்க வைத்தது. முதலில்
நாட்டைப் பிரிக்கச் சொன்னான். மாச்சர்லாவைத் தலைநகராகக் கொண்ட நாடு
இரண்டு பிரிவானது கிழக்குப் பகுதி பிரும்மண்ணாவின் தலைமையில் மலிதேவா
அரசனாக்கினான். மாச்சர்லாவின் மேற்கு பகுதி நாகாம்பாவின் ஆணையின் கீழ்
நலகாமன் ஆட்சி புரியவும் ஒப்பந்தம் செய்து கொண்டனர்.


அடுத்த ஐந்து வருடங்கள் சின்னச் சின்ன தகராறுகள் இருந்தாலும் அவை
பெரிதாக்கப்படவில்லை. இருந்தாலும் நாகாம்பா எப்படியும் பிரிக்கப்பட்ட
நாடுகளை ஒன்று சேர்க்கவேண்டும் என பிரதிக்ஞையுடன் செயல்பட்டாள். தன்னுடைய
நாட்டின் படைகளைப் பலப்படுத்தியதோடு மட்டுமல்லாமல், கிருஷ்ணா நதியின்
வடக்கே பலம் பெற்றுக் கொண்டிருந்த காகதீய அரசின் உதவியை நாடினாள்.
வாரங்கல் நகரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த காகதீயர்கள் இவளின் அதீத
தீரத்தைப் பாராட்டி உதவி செய்வதாக வாக்களித்தனர். காகதீயர்களுக்கும்
தெற்கே கிருஷ்ணை நதியின் தென்கரையில் நல்ல துணை தேவைப்பட்டது.
நாகாம்பாவின் நடவடிக்கைகளைக் கவனித்துக் கொண்டிருந்த பிரும்மண்ணா மேற்கே
மேலை சாளுக்கியர் மகளைத் தன் அரசனுக்கு மணம் செய்வித்து தன் பலமும்
சேர்ந்தது போல காட்டினான். ஆனால் இந்தக் காலகட்டத்தில் மேலைச்
சாளுக்கியர் பலவீனமான காலமாக இருந்தது. காக்தீயர்கள் பலம் பெற்று
மேலைச்சாளுக்கியரின் முக்கியப்பகுதிகளையெல்லாம் கைபற்றி தங்கள் வசம்
வைத்துக் கொண்டிருந்த சமயம்.


இந்த சமயத்தில்தான் பிரும்மண்ணா தங்கள் அரசனின் கல்யாண விருந்துக்கு
மாச்சர்லாவில் ஏற்பாடு செய்தான். நாகாம்பாவையும் அழைத்தான். முக்கியமாக,
அரண்மனைகளில் நடக்கும் பெரிய விருந்தாக இருந்தாலும் விசேஷமாக இருந்தாலும்
பல அரசியல் பகைகள் வெளிப்படவும், நட்புகள் வலுப்படவும் அவை சந்தர்ப்பம்
வகுத்துக் கொடுக்கும். மகாபாரதத்தில் ஹஸ்தினாபுரத்துக்கு விருந்துக்கு
அழைத்துத்தானே ஐவர்களை சூதாடவைத்து காட்டுக்கு அனுப்பி
வைதக்கப்பட்டார்கள். அதே போல விருந்துக்குப் போன இடத்தில் நாகாம்பாவும்
பிரும்மண்ணாவை வம்புக்கு அழைத்தாள்.


அவன் எத்தனையோ முறை அவளை அவமானப்படுத்த முயற்சி செய்திருக்கிறான். என்ன
இருந்தாலும் பெண் என்ற ஏளனத்தில் அவன் செய்யும் ஒவ்வொரு அநீதியான
செய்கையையும் அவள் பொறுத்துக் கொள்ளவே செய்தாள். ஒருகாலத்தில் அவன்
வீட்டைச் சோதனையிட அரசன் மூலம் ஏற்பாடு செய்தது கூட அவன் சம்பாதனை எத்தனை
மடங்கு உயர்ந்தது என்பதை அரசனுக்குக் காண்பிக்க மட்டும்தான். அது அவள்
ராஜாங்கக் கடமையும் கூட. ஆனால் தப்பித் தவறியும் அவன் மீதோ அவன்
குடும்பங்கள் மீதோ, அல்லது அவனது தாஸர்கள் கூட்டத்தைப் போல இன்னொரு
கூட்டத்தார் மூலமாக அவன் இழிசெயலை அம்பலப்படுத்தி கேவலமாகப் பேசவேயில்லை
நாகாம்பா. அவள் நினைத்தால் எளிதாகப் பேசியிருக்கலாம். ஆனால் அவள் அப்படி
ஈனமாகச் செய்யவில்லை. அவனை வீரனாகவே மதித்தாள். சூன்யக் காரி, சகுனியின்
பெண்பால், அரக்கி, கணவனைக் கொன்றவள், கெட்டவள் என்று தன்னை எவ்வளவோ
கேவலமாகப் பேசியிருக்கிறான் பிரும்மண்ணா. அதே சமயத்தில் எத்தனையோ
சந்தர்ப்பங்களில் பிரும்மண்ணாவைக் கொல்லக் கூட அவளுக்கு வாய்ப்பிருந்தது.
இன்னமும் சொல்லப்போனால் அவள் இடத்தில் பிரும்மண்ணா இருந்திருந்தானால்
அந்தப் பணியை அவனே செவ்வெனச் செய்திருப்பான். ஆனால் பெண்மனம் கருணை
காட்டி அவனைப் பிழைக்கவைத்தது.


அப்படிப்பட்ட கருணை மனத்தினாள் அவளை விருந்துக்குக் கூப்பிட்ட இடத்தில்
அவனை வீணாக வம்புக்கு ஏன் இழுக்க வேண்டும்.. இந்த விருந்து மிகப் பெரிய
அவகாசம். இந்த அவகாசத்தை கைவிட்டால் வேறெப்போதும் இந்த நாட்டை
ஒன்றாக்கமுடியாது. இது ஒரு ராஜதந்திரமாகவே கருதியிருக்கவேண்டும்
என்றுதான் சரித்திர ஆய்வாளர்கள் எழுதுகிறார்கள். இன்னொரு விஷயம், இவள்
இழுத்த வம்பில் இவளுக்கே அபாயம் கூட இருந்தது.


அதுவும் சாதாரண வம்பா,, இல்லை.. அவனுடைய அரசனின் சார்பில் ஒரு சேவலும்,
தன்னுடைய அரசனின் சார்பில் ஒரு சேவலும் சண்டையிடவேண்டும். அந்தச்
சண்டையில் எந்தச் சேவல் ஜெயிக்கிறதோ அந்தச் சேவலுக்கு சொந்தக்காரன் முழு
நாட்டையும் ஆளவேண்டும். தோற்ற சேவலின் சொந்தக்காரன் நாட்டை விட்டு
ஓடவேண்டும். சம்மதமா.. தானும் இந்த அரசன் நலகாமனும் இந்த மேற்குப்
பகுதியைக் கொடுத்துவிட்டு ஓடிவிடுவதாகவும் பிரும்மண்ணாவின் சேவல்
தோற்குமானால் அவர்கள் இருவரும் அதே போல செய்யவேண்டும், ’என்ன சம்மதமா..’
என்று சவால் விட்டாள்.


சபையில் அனைவர் முன்னிலையிலும் அவள் விட்ட சவாலை அவன் சந்தோஷமாக ஏற்றுக்
கொண்டான். காரணம் ஏற்கனவே இம்மாதிரிப் பந்தயங்கள் அந்தப் பிராந்தியத்தில்
சர்வ சகஜம் என்ற ஒன்றும் சண்டைக் கோழிகள் (சேவல்கள்) வளர்ப்பது
கௌரவத்துக்கான ஒன்று, என்பதும் காரணம். பிரும்மண்ணா என்ற பெரிய மனிதன்
வளர்ப்பில் அப்படிப்பட்ட சண்டைக் கோழிகள் ஏராளமாக இருந்தன என்பதும்
நாகாம்பாவின் வளர்ப்பில் கூட அப்படிப்பட்ட சண்டைக் கோழிகள் இருப்பதும்
கூட பெரிய விஷயங்களாக இருந்ததில்லை. ஆனால் பெரிய மனிதர்கள் பணயமாக பணம்
அல்லது அதிகபட்சமாக தங்கநகைகளை வைத்தோதான் சண்டைக் கோழிகளை மோதவிடுவர்.
வெற்றி அடைந்தவர் பரிசைப் பெறுவதோடு, இறந்துபோன சேவலையும் எடுத்துச்
சென்று விருந்து படைத்து தான் சண்டையில் வெற்றி பெற்ற கோழியைச்
சாப்பிட்டு பெருமை கொள்வதும் சர்வ சகஜம்.


இந்த சேவல் சண்டை இத்தனை விவகாரமாகப் போகும் என்று யாருமே
எதிர்பார்க்கவில்லை. ஆனால் பிரும்மண்ணா மட்டும் இந்த முறை நாகாம்பாவே
வந்து வலையில் விழுந்துவிட்டதாக நினைத்தான். சவால் விட்டபடி சேவல் சண்டை
பெரும் எதிர்பார்ப்புடன் இரு மாதங்களுக்குப் பிறகு நடக்கவே செய்தது.


இரண்டு சேவல்கள், புஷ்டியாக வளர்க்கப்பட்டிருந்த சேவல்கள், மத்து மருந்து
என்ச் சொல்லப்படும் பச்சையிலை மயக்க மருந்து மிதமாக்கொடுத்துச் சண்டையிட
பழக்கப்படுத்தியே வைத்திருப்பார்கள். அப்படிப்பட்ட நிலையில் மிகவும்
வீரியத்துடன் ஒன்றுக்கொன்று மோதும். கொண்டைகள் சிலிர்த்துக் கொண்டே
சண்டையிடும் காட்சிகள் அவை. சில சமயம் சில அடி தூரம் மேலே பறந்து மோதிக்
கொள்ளும். மாச்செர்லாவில் நடந்த அந்தக் கோரச் சண்டையில் இருவர் மானம்
மட்டுமல்ல.. இருவர் நாடுகளும் பணயம் வைக்கப்பட்டு போராடுவதால் பொது
மக்களும் பெரிய வளையமாக நின்றுகொண்டு ஆரவாரக்கூச்சலோடும் எந்தக் கட்சி
பலம் பெறுகிறதோ அந்தக் கட்சியை போற்றிகொண்டும் கத்திக் கொண்டும்
இருந்தனர்.


நம்பிக்கையோடும் நாணயத்தோடும் சாதகமான வெற்றியை எதிர்பார்த்தே நாகாம்பா
அங்கே நின்றிருந்தாள். கடைசியில் நாகாம்பாவின் அரசன் சார்பில்
போட்டியிட்ட சேவல் பிரும்மண்ணவின் சேவலைக் கடித்துத் தலையைக் கீழே
தள்ளியதும்தான் அங்கே வெற்றிக் கூச்சல் மிகப்பலமாக எழுந்தது..
நாகாம்பாவின் சார்பில் போட்டியிட்ட சேவலே வெற்றி பெற்றது. பிரும்மண்ணா
சர்வ சாதாரணமாக நாட்டையும் பதவியையும் இழந்தான்.


இந்த இழப்பு அவன் கர்வத்துக்கு கிடைத்த மாபெரும் பங்கம். அவனை
நம்பியிருந்த மலிதேவா வேதனைவயப்பட்டான். தாஸர்களில் பலர் இந்தத்
தோல்வியைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. சகுனிப் பெண்ணே, என்றே கத்தினர்.
பிரும்மண்ணாவை அவர்களில் சிலபேர் த்ங்கள் தோள் மேல் தூக்கிகொண்டு
அங்கிருந்து ஓடினர். இந்தத் தோல்வி சாதாரணமானதல்ல.


கத்தியின்றி ரத்தமின்றி நாகாம்பா வெற்றி பெறவிட்டு விட்டோம் என்ற
பிரும்மண்ணா அடுத்த ஒருமாத காலத்தில் போருக்கு சித்தமானான். இது கடைசிப்
போர் என தாஸர்களிடம் சொன்னான். நாகாம்பாவை வெற்றி கொள்ளாமல் தன் உயிர்
போகாது. சூன்யக்காரி தன் சேவலுக்கு சூன்யம் வைத்துவிட்டாள் என்றும்
அவர்களிடம் சொல்லி ஆறுதல் பட்டுக் கொண்டாலும், ஆறாத புண்களை நெஞ்சில்
சுமந்து அந்த சூன்யக்காரியை இந்தமுறை தன் கைகளால் கொன்றுவிடப்போவதாக
சூளுரைத்தான். ஸ்ரீகிருஷ்ணர் பெண்களைக் கொல்வதில்லை என்பதால் இதுவரை
நாகாம்பாவை உயிரோடு விட்டு விட்டதாகவும், ஆனால் அதே ஸ்ரீகிருஷ்ணர்
பூதகியை பெண்ணென்றும் பாராமல் கொன்றதையும் காரணம் காட்டிப் பேசினான்.
நியாயமாக போரில் அழைத்து அவளைக் கொல்லப்போவதாகவும், அவள் கொல்லப்பட்ட
காட்சியை தாஸர்கள் மிகப் பெரிய பாடலாக உலகமெங்கும் எடுத்துச்
செல்லவேண்டுமென்றும் உணர்ச்சிவசமாக தாஸர்களைக் கேட்டுக்கொண்டான். இந்தப்
பாடலுக்குத் தலைப்பாக ‘பல்நாட்டி வீரசரித்ரா’ என்று பெயரிடுங்கள். நம்
வீரச் செயலையும், நாகாம்பாவின் துரோகச் செயலையும் ஊரெங்கும் பறை
சாட்டுங்கள். அவள் அழியப்போகும் கதை தரணியெங்கும் ஒலிக்கட்டும்.. என்று
அவர்களை வேண்டிக்கொண்டான்.

பங்களிப்பாளர்கள்

Ksubashini

"http://heritagewiki.org/index.php?title=வீர_தேவதை_-_நாகாம்பாள்_4&oldid=2716" இருந்து மீள்விக்கப்பட்டது
இப்பக்கம் கடைசியாக 2 அக்டோபர் 2010, 06:23 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 1,704 முறைகள் அணுகப்பட்டது.