வீர தேவதை - நாகாம்பாள் 5

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

-திவாகர்இந்தக் கட்டுரையை எடுத்துக் கொள்ளுமுன், நான் இரண்டு வகைப்பட்ட
கருத்துக்களைக் காண நேரிட்டது. அவைகளை ஆராய்ந்து ஏறத்தாழ ஒரு நீதிபதி
பாணியில் யார் உண்மையான நாயகன் என்று தேர்ந்தெடுக்கவேண்டி வந்தது. இது
மிகக் கஷ்டமான விஷயம்தான். ஆனால் இறுதி முடிவுகள் ஒருவரைக் காட்டுக்கு
திருப்பின, இன்னொருவரை கோயில் தெய்வமாக்கின என்ற உண்மை நிலவரம் இங்கே
முக்கிய கட்டமாக எடுத்துக் கொண்டு அதன் அடிப்படையில் இந்த முழுக்
கட்டுரையும் எழுதப்பட்டுள்ளது.

 

தாஸரிகள் மிக வேகமாக ஊர் ஊராக சென்று பரப்பிய ’பல்நாடு வீரசரித்திர’ வை
அப்படியே எடுத்துகொண்டால் பிரும்மண்ணா நாயுடுதான் நாயகன். அவன்
அதிபுத்திசாலியானாலும், அத்தனை வகையான ஜாதிகளையும் ஒன்று சேர்த்து
சமபந்தி போஜனம் செய்வித்த நாயகன். தாழ்த்தப்பட்ட ஜாதிகளை ஒன்று
சேர்த்தவன் என்ற பெயர் இன்றளவும் அவன் ஒருவனுக்கே உண்டு. நான்காம்
வர்ணத்துக்கும் கீழ்ப்பட்டவரை சமமாக பாவித்தவன் என்ற பெயர் பெற்றவன்.

 

இந்த ஒரு விஷயம் அவன் செய்த அத்தனை அரசியல் சதிகளையும் (அவன் சொந்த
நாட்டு அரசனையே விஷம் வைத்துக் கொன்றதைச் சேர்த்து) தூக்கிச் சாப்பிட்டு
விடுகிறது என்பது இன்றைய நோக்கில் பார்க்கும்போது புரிகிறது. ஆனால் இது
துரியோதனனுக்குக் கூட பொருந்தும். தன்னளவில் உபயோகப்படும்போது,
பாண்டவர்களால் சூதபுத்திரன் என்று ஒதுக்கப்பட்ட கர்ணன், துரியோதனனால்
அரவணைக்கப்பட்டு அவனுக்கு சிறந்த தோழனாகிறான். ஒரு ஒடுக்கப்பட்ட ஜாதிகளை
அரவணைத்துச் சென்றதால் ஒருவனின் மற்ற தீயசெயல்கள் மறக்கடிக்கப்படவேண்டும்
என்பது என்ன நியதி எனக் கேள்வி எழுகிறது. தாஸரிகளுக்குப் பிடித்த
மகாபாரதக் கதை இவனுக்கென ஏற்றாற்போல திருத்தப்படுகிறது. இவன்
ஸ்ரீகிருஷ்ணன் என்பதால், இவன் எதிரியான நாகாம்பா துரோகியாக
வர்ணிக்கப்படுகிறாள். நாகாம்பா அரசியலில் ஈடுபட்டு அவன் வாழ்க்கையைக்
கெடுத்ததால் கிடைத்த பழியை அவள் ஏற்றுக்கொண்டாள் என்றே சொல்லலாம்.
ஆனாலும் அவன் அரசியல் தந்திரங்களுக்கு நேர் சமமாக அவளும் சிந்தித்ததால்
தாஸரிகளால் அவள் ஒதுக்கப்படுவது கொடுமையிலும் கொடுமையாகப் படுகிறது.
தாஸரி கதைகளில் பல்வேறுபட்ட நிலைகளில் இந்தக் கதை திரிக்கப்படுகிறது,
மகாபாரதம் போல பிரும்மண்ணா நாயுடுவும் ஏழு ஆண்டுகளுக்கு காட்டில் மறைந்து
வாழும் நிலை ஏற்பட்டதாக தாஸரிகளின் ஒரு பகுதியினர் பாடுகிறார்கள். இரண்டு
மாதமோ, ஏழு வருடங்களோ, எப்படியோ நடந்து விட்ட அந்த பல்நாட்டி
யுத்தத்துக்கு வருவோம்.

 

மாச்சர்லா பக்கத்தில் காரம்புடி என்றொரு ஊர். இப்போது குக்கிராமம்.
முந்தைய நாளில், அதுவும் இந்த நிகழ்ச்சி நடக்கின்ற வேளையில் வெட்டவெளிப்
பொட்டல் காடு. மகாபாரத யுத்தத்தில் குருக்‌ஷேத்திரம் எப்படி
தேர்ந்தெடுக்கப்பட்டதோ, அப்படியே காரம்புடி என்ற ஊரையே இந்தக் கடைசிப்
போருக்காக தேர்வு செய்த பெருமை கூட பிரும்மண்ணா நாயுடுவுக்குப் போய்ச்
சேரும். மகாபாரதக் கதை மக்களிடையே மிகப் பரவலாகப் பேசப்பட்டிருந்தது
என்பது மிக நிதர்சனமாக தெரிந்தாலும், அந்த மகாபாரதப் போரை பாண்டவருக்காக
முன்னிருந்து நடத்திக் கொடுத்து வெற்றியையும் பெற்றுத் தந்த
ஸ்ரீகிருஷ்ணனாக தாஸ்ர்கள் மத்தியில் பேர் பெற்றிருந்த பிரும்மண்ணா இந்தப்
போரில் சகுனியாகப் பெயர் பெற்ற நாகாம்பாவின் சொல்படி கேட்டு ஆடும்
துரியோதனான நலகாமன் கொல்லப்பட்டு அங்கே அந்த அரசாட்சியில் தர்மத்தின்
(இங்கே தர்மம் என்றால் பிரும்மண்ணா’வின் வேதம்தான்) சொல்படி கேட்கும்
நலகாமனின் மாற்றாந்தாய் மகனும், தம்பியுமான மலிதேவா அமர்த்தப்படுவான்
என்றும் தாஸர்களால் பாடப்பட்டு செய்தி நாடெங்கும் பரப்பப்பட்டது.

 

மகாபாரதப் போர் என்று ஒருபக்கத்து வர்க்கத்தினரால் முடிவு செய்யப்பட்டது
என்றாலும், அந்தப் போரில் யார் வெற்றி பெற்றாலும் போரில் இறப்பவர்
அனைவரும் குர்ஜாரா (மாச்சர்லா) தேசத்து மக்களே என்பதில் நாகாம்பா
அனைவருக்கும் தெரியப்படுத்தினாள். அதே சமயத்தில் தான் ஏன் போருக்கு
செல்வதாக ஒப்புக்கொண்டேன் என்பதையும், இந்தப் போரில் முடிந்தவரை
நாட்டின் ஒற்றுமையைக் குலைக்கும் எதிரிகளை மட்டுமே அழிக்கத் தான்
பாடுபடுவதாக மக்கள் மத்தியில் சென்று அனைவருக்கும் எடுத்துரைத்தாள்
நாகாம்பா. தங்களின் வில்படை வெற்றி பெற்று நாடெங்கிலும் வில்கொடி
உற்சாகமாகப் பறக்க விடப்படும் என்றும் நாட்டு மக்களுக்கு நம்பிக்கை
அளித்தாள். பிரும்மண்ணா சார்பில் வந்த தூதுவர்கள் போரை எப்படி நடத்துவது
என்ற முறையையும் பிரும்மண்ணா வகுத்துத் தந்திருப்பதாக சொன்னபோது கூட
உற்சாகமாக ஒப்புக் கொண்டாள்.

 

காரெம்புடி போரைப் பற்றிய அதிக விளக்கங்கள் எதுவும் தேவையில்லை.
குருக்‌ஷேத்திர அளவுக்கு இந்தப் போர் நடக்கவில்லை. வில்லேந்திய
வீரப்பெண்மணியாக போரில் நாகாம்பா ஒரு பக்கத்துக்கு தலைமை தாங்கியதாகவும்,
பிரும்மண்ணா ஈட்டி ஏந்திய கையோடு தலைமை தாங்கி தன் வீரர்களை ஒழுங்கு
படுத்தி போர் செய்ததாகவும்தான் சரித்திரம் சொல்கிறது, இரண்டு நாட்கள்
போரில் நாகாம்பா வெற்றி பெற்று பிரும்மண்ணாவை இந்தப் பக்கமே வராதபடி ஓடச்
செய்தாள் என்றுதான் குறிப்புகள் சொல்கின்றன. பிரும்மண்ணாவின் மகனான
பாலச்சந்திரன் போரில் மரணமடைந்ததால் பிரும்மண்ணா தளர்ச்சியுற்றான் என்று
சில குறிப்புகள் கொடுத்தாலும், அந்த மகன் போரில் கொல்லப்படவில்லை,
தனிப்பட்ட முறையில் ஏற்பட்ட தகறாறு ஒன்றினால் மரணமடைந்ததாக வேறு சில
குறிப்புகள் சொல்கின்றன. ஆனால் இந்த பாலசந்திரன் தாஸரிகள் கதையில்
அபிமன்யுக்கு நிகராக வர்ணிக்கப்படுகிறான். அதே சமயத்தில் யுத்த களத்தில்
நாகாம்பாவின் வீரத்தனம் பிரும்மண்ணாவைத் திருத்தியதாகவும், தோல்வியை
ஒப்புக்கொண்டு அவன் காட்டுக்குள் திரும்பி தவநிலை ஏற்றுக் கொண்டதாகவும்
வேறு சில குறிப்புகள் சொல்கின்றன. வில்வீரர்கள் சர் சர்ரென அம்புகளை
வீசும்போது ஈட்டி வீரர்களால் ஒன்றும் செய்யமுடியவில்லை என்று பொதுவாக சில
குறிப்புகள் சொல்கின்றன. பிரும்மண்ணாவின் ஆதரவு பெற்ற மகன் மலிதேவா
சிறைப் பிடிக்கப்பட்டு தேசத் துரோகம் குற்றத்துக்காக, தன் சொந்த அண்ணனால்
தண்டிக்கப்பட்டான், என்றுதான் குறிப்புகள் சொல்கின்றனவே தவிர அது என்ன
தண்டனை என்று தெரியவில்லை.

 

மொத்தத்தில் வீரதேவதை கடைசிவரை தன் மீது சுமத்தப்பட்ட பழிகளை மௌனமாகவே
தாங்கிக் கொண்டு, அந்தப் பொறுமை எனும் பெரும் ஆயுதத்தால்தான்
காரெம்புடியில் யுத்தத்தில் வெற்றி பெற்றாள் என்று சொல்லப்படுகிறது.
யுத்தத்தைக் கூடிய வரை தடுக்க முயன்றதாகவும், உண்மையில் இவள்தான்
ஸ்ரீகிருஷ்ணன் தங்கையான மாயாவிஷ்ணுவாக வந்திருந்து கௌரவர்களாக மாறி
துரோகம் செய்த பிரும்மண்ணாவின் படைகளை வென்றாள் என ’வீர காவியம்’ எனும்
தெலுங்குப் பாடல் தொகுப்பு விரிவாகக் கூறுகிறது. தாஸர்களோ மனம் ஒடிந்த
நிலையில் பல்நாட்டிலிருந்து பாரிப்போனார்கள் (ஓடிப்போனதை ‘பாரிப் போவது
என்று சொல்வார்கள்) ஆனால் சென்ற் இடங்களிலெல்லாம் தம் குருவின் புகழை
பரப்ப மட்டும் தவறுவதில்லை. மகாபாரதப் போருக்கு நிகராகப் பேசப்பட்ட
காரெம்புடிப் போரை ‘பல்நாட்டி யுத்தம்’ என்ற பெயரில் தாஸர்களில் சிலர்
தெலுங்கு வீர வசன நாடகமாக தொகுத்ததோடு, அதனைத் தம் பிற்காலச்
சமுதாயத்தினர் பலரும் புரிந்து கொள்ளும் வகையில் மிகச் சிறப்பாகப்
பாதுகாத்துவந்தனர் என்றும் சொல்லலாம்.

 

பர்டன் ஸ்டெயின் எனும் ஆங்கில ஆய்வாளர், தெலுங்கு பாஷையை முதன் முதலில்
அறிமுகப்படுத்தியதே இந்த ‘பல்நாட்டி வீரசரித்ரா’ தான் என்று எழுதுகிறார்.
13 ஆம் நூற்றாண்டிம் இறுதிப்பகுதியில் இந்த நாடகம் வசன பாணியில் எழுதி
தாஸர்களின் சந்ததிகளால் பாடப்பட்டதாக அவர் தகவல் தருகிறார். வீரகாவியம்
என்ற பெயரில் பண்டித தெலுங்கு பாஷையில் காகிதீயப் புலவர்களால்
எழுதப்பட்டதாக வரலாறு சொல்கிறது, பண்டிதர்களால் எழுதப்பட்டதால் இது
காவியம் எனப் பேசப்பட்டது. இந்தக் காவியத்தின் காட்சிகளை ஓவியம் போல
படைத்து வாரங்கல் அரண்மனைச் சுவர்களில் நாகாம்பா புலியை அடக்குவது
போலவும் வில்லேந்தி போர் புரிந்து பிரும்மண்ணாவின் வீரர்களை அடக்குவது
போலவும் பல காட்சிகள் இருந்ததாக சரித்திரத் தகவல்கள் காகதீயர் ஆட்சி யில்
கிடைக்கின்றது. இந்த பல்நாட்டி கதையை பின்னாளில் பண்டித தெலுங்கில்
ஸ்ரீநாத பட்டர் எனும் புலவர் (16ஆம் நூற்றாண்டு) காவியமாக படைத்தார்.
இந்தக் காவியத்திலும் நாகாம்பாவுக்கு நல்ல பெயர் உண்டுதான். ஆனால் இந்தக்
காவியம் தாஸர்களின் பாடல்களை அடித்தளம் கொண்டதால் பிரும்மண்ணா
நாயுடுவுக்கு சிறப்பு இடம் உண்டு.

 

முத்தாய்ப்பாக சில வார்த்தைகள். என்னதான் பிரும்மண்ணா தன்னை ஸ்ரீகிருஷ்ணா
எனக் கூறிக்கொண்டாலும் அவனால் வெற்றி பெற முடியவில்லை என்பது உண்மைதான்.
நாகாம்பா எனும் வீரப்பெண்ணின் முன்னால், அவளால் கடைசியில்
தோற்கடிக்கப்பட்டது கூட வாஸ்தவம்தான் என இரு தரப்பினருமே ஒப்புக்
கொள்கின்றனர். தாஸர்கள் மட்டுமே ’பல்நாட்டி வீர சரித்திரத்தில்’
நாகாம்பாவைக் கடைசி வரை எதிரியாகவே வர்ணித்தாலும் வீரகாவியம் முதற்கொண்டு
சரித்திரக் குறிப்புகள் அனைத்தும் குர்ஜாரா என்கிற பல்நாடு அரசியல்
வாழ்க்கையில் வீர தேவதையாக நாகாம்பா பரிணிமித்தாள் என்றே சொல்கின்றன.
இதனை 1947 இல் திரைப்படமாக எல்.வி.பிரசாத் எடுத்தார். அதில் நாகாம்பா
பாத்திரத்தில் சிறப்பாக கண்ணாம்பா நடித்து பெரும் புகழ் பெற்றார். இதே
படத்தை மறுபடியும் 1966 இல் எடுத்தனர். இதில் நாகாம்பா பாத்திரத்தை
பானுமதி விரும்பிச் செய்ததாகவும், என்.டி.ராமாராவ் பிரும்மண்ணா நாயுடு
பாத்திரத்தில் செய்ததாகவும் தகவல்கள் உண்டு. நாகாம்பா எனும் வீரப்பெண்ணாக
நடித்த பானுமதியின் ஒரு சின்ன வீடியோ காட்சி.
http://www.youtube.com/watch?v=qFnCE4qJ0i

 

சாதாரணமாக கடந்த ஆயிரம் ஆண்டு பாரத வரலாற்றில் சில வீரப்பெண்மணிகள்
வரலாறு மட்டும் நிலைத்து நின்று விட்டது. தமிழ்நாட்டில் ராணி மங்கம்மா,
வேலு நாச்சியார், வடநாட்டில் ராணி ஜான்ஸி லட்சுமி, ஆந்திராவில்
(வாரங்கல்) காகதீய ருத்ரம்மா போன்றோர் ராணிகளின் வம்சத்தில் வந்து
சிறப்பு பெற்றனர். ஆனால் ராணிகளின் வம்சம் இல்லாத பட்சத்தில் ஒரு ராணி
போல செயல்பட்டு, பெண்கள் குலத்துக்கே மங்காத புகழைப் பெற்றுத் தந்து வீர
தேவதையானவள் நாகாம்பா ஒருத்திதான். அதனால்தான் காலம் அவளை மட்டும்
மறக்காமல் செய்வதற்கு அவளை ஒரு தேவதையாக்கி, ஒரு சில ஊர்களில் அவளுக்கென
கோயிலும் அமைத்து இந்த மண் உள்ளளவும் மக்கள் மனதில் இடம் பெற வைத்தது
போலும். அவள் இருந்த போதும் தம்மை நம்பிய மக்களைப் பாதுகாத்தாள். அவள்
இறந்த பின்னும் அவளை தேவதையாக நம்பி வழிபடுகின்ற மக்களையும் தன் ஆத்ம
சக்தியால் பாதுகாத்து வருகிறாள். பெண்ணாய்ப் பிறந்து பெண்ணாய் வாழ்ந்து,
ஆண்களுக்கு சமமாக அரசியல் செய்து, ஆண்களின் அடக்குமுறைக்கும், அவர்தம்
பழிச்சொல்லுக்கும் அஞ்சாமல் கடைசிவரை போராடினாலும், பெண்ணுக்கே உரிய
கருணை என்ற உத்தம குணத்தைக் கடைசிவரைப் பெற்று, பெண்களுக்கு காலா
காலத்துக்கும் பெருமை சேர்த்த அந்த வீரதேவதைக்கு நம் தலை தாழ்ந்த
வணக்கங்கள்.

 

இந்தக் கட்டுரைக்கான முக்கிய தகவல்கள் பெறப்பட்ட புத்தகங்கள்:
1. பல்நாட்டி வீர சரித்திர மற்றும் வீரகாவியம்
2. பி.எஸ்,என். ராவ் எழுதிய Social Movements of Medieval Andhra
3. Narasaraopet Inscriptions of SII
4. Epigraphical reports 402 of 1912
5. Thurston E, Caste and Tribes of Southern India
6. Ramaraju B’s Telugu Gnanapadha Geya Sahithyamu
7. Art and Culture of Marginalised Nomadic Tribes in AP by P. Sadanandan
8. N. Venkatramanayya’s History of Andhra Pradesh (Chalukyas and Kakatiyas)
9. Miscellaneous sources from various types of Articles.

பங்களிப்பாளர்கள்

Ksubashini

"http://heritagewiki.org/index.php?title=வீர_தேவதை_-_நாகாம்பாள்_5&oldid=2718" இருந்து மீள்விக்கப்பட்டது
இப்பக்கம் கடைசியாக 2 அக்டோபர் 2010, 06:26 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 1,996 முறைகள் அணுகப்பட்டது.