வீழிநாதேஸ்வரர் திருக்கோவில்

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

 


அருள்மிகு வீழிநாதேஸ்வரர் திருக்கோவில்.

                                                                                                         
T 500 523.jpg


மூலவர் : வீழிநாதேஸ்வரர் ( கல்யாணசுந்தரேஸ்வரர்)

உற்சவர் : கல்யாணசுந்தரர்

அம்மன்/தாயார் சுந்தரகுசாம்பிகை (அழகியமாமுலையம்மை)

தல விருட்சம் :வீழிச்செடி

தீர்த்தம் : வீஷ்ணுதீர்த்தம்
-
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்

புராண பெயர் :திருவீழிமிழலை

ஊர் : திருவீழிமிழலை

மாவட்டம் :திருவாரூர்

மாநிலம் : தமிழ்நாடு


பாடியவர்கள்:


திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய மூவராலும் பாடப்பெற்றது. சேந்தனார், அருணகிரிநாதர்


தேவாரப்பதிகம்


எடுத்தான் தருக்கினை இழித்தான் விரனூன்றிக்
கொடுத்தான் வாளாளாக் கொண்டான் உறைகோயில்
படித்தார் மறைவேள்வி பயின்றார் பாவத்தை
விடுத்தார் மிகவாழும் வீழி மிழலையே.

-திருஞானசம்பந்தர்


தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 61 வது தலம்.

தல சிறப்பு:

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இங்கு பாதாள நந்தி உள்ளது. முழு கோயிலே நந்திக்கு மேல் அமைந்திருப்பது போல் உள்ளது. இங்கு இறைவன் காசியாத்திரைக்கு கிளம்பும் மாப்பிள்ளை கோலத்தில் அருள்பாலிப்பதால், மாப்பிள்ளை சுவாமி எனப்படுகிறார். மகாமண்டபம் திருமணமண்டபம் போல் பந்தல் காலுடன் காட்சியளிப்பது இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத சிறப்பு. கொடிமரம் அருகே சிவலிங்கம் அமைந்திருப்பது இன்னொரு சிறப்பம்சம். இங்கு சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த பிரம்மாண்ட "வவ்வால் நந்தி மண்டபம்' உள்ளது

கோயிலின் எதிரில் பெரிய குளம் உள்ளது. மிகப் பெரிய கோயில். கோயில் கிழக்கு நோக்கியுள்ளது. இக்கோயில் மாடக்கோயில் அமைப்புடையது.

தெற்குப் பிராகாரத்தில் தல விநாயகர் (படிக்காசு விநாயகர்) சந்நிதியும், மேற்கில் சோமாஸ்கந்தர், முருகன், மகாலட்சுமி சந்நிதிகளும், வடக்கில் சண்டேசுவரர் சந்நிதியும் உள்ளது. நடராசர் சந்நிதி சிறப்பானது

                                                                                       
Pranala-less Nataraja, Thiruvengadu.jpg

தலபெருமை

பார்வதி திருமணம்: காத்தியாயன முனிவர் என்பவர் தனக்கு குழந்தை வரம் வேண்டி மனைவியுடன் கடும் தவம் புரிந்தார். இவரது தவத்திற்கு மெச்சிய பார்வதி, அந்த முனிவருக்கே மகளாக பிறந்தாள்.

அக்குழந்தைக்கு கார்த்தியாயினி என்று பெயரிட்டு வளர்த்தனர். பெண்ணிற்கு திருமண வயது வந்ததும், இறைவனே கார்த்தியாயினியை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என வேண்டினார்.

முனிவரின் வேண்டுகோளின் படி சித்திரை மாதம் மகம் நட்சத்திரத்தில் இத்தலம் எழுந்தருளி அம்மனை திருமணம் செய்தார். அப்போது முனிவர், என்றென்றும் இதே திருமணக்கோலத்தில் இத்தலத்தில் அனைவருக்கும் அருள்பாலிக்க வேண்டினார். அதன்படி இறைவன் மூலஸ்தானத்திலேயே திருமணக்கோலத்தில் அருள்பாலிக்கிறார்.

பெயர்க்காரணம்: ஒருகாலத்தில் இத்தலம் முழுவதும் வீழி எனப்படும் சந்தனம், செண்பகம், பலா, விளா ஆகிய மரங்கள் அடங்கிய காடுகளாக இருந்தன. மிழலைக்குறும்பர் என்ற வேடுவர் இத்தல இறைவன் மேல் கொண்ட அன்பினால் தினமும் விளாங்கனியை நைவேத்யம் செய்து வழிபட்டு வந்தார். இறைவன் அவரது அன்பிற்கு இரங்கி, அஷ்டமாசித்திகளை வழங்கினார்.

வேடுவரால் நிவேதனம் செய்யப்பட்ட விளாங்கனி வீழிநாதரின் பாதத்தில் இன்றும் காட்சியளிக்கிறது. இதனால் இத்தலம் திரு+வீழி+மிழலை என்று அழைக்கப்படுகிறது.

படிக்காசு: சம்பந்தரும், நாவுக்கரசரும் பல தலங்களை தரிசித்து விட்டு திருவீழிமிழலையில் சில காலம் தங்கினர். அப்போது பஞ்சம் ஏற்பட்டது

இருவரும் வீழிநாதரை பணிந்து பஞ்சம் போக்க பாடினர். இருவரது கனவிலும் தோன்றிய ஈசன், தினமும் ஒரு பொற்காசு தருவதாகவும், அடியார்களின் பசி தீர்க்கும்படியும் கூறினார். அதன்படி கிழக்குப்பீடத்தில் உள்ள காசை சம்பந்தரும், மேற்குப்பீடத்திலுள்ள காசை திருநாவுக்கரசரும் எடுத்து அடியார்களிடம் கொடுத்து, அவர்கள் பசி போக்கினர்.

இப்போதும் படிக்காசு பீடம் இருக்கிறது. இங்குள்ள விநாயகர் படிக்காசு விநாயகர் எனப்படுகிறார். இங்கு சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த பிரம்மாண்ட "வவ்வால் நந்தி மண்டபம்' உள்ளது. சஷ்டியப்த பூர்த்தி திருமணங்கள் இங்கு நடத்தப்படுகின்றன

தல வரலாறு:

மகாவிஷ்ணுவின் சக்கராயுதத்தை சலந்தரன் என்ற அரக்கன் பறித்துச் சென்று விட்டான். அவர் பரமசிவனிடம், சக்ராயுதத்தை மீட்டுத்தர வேண்டினார்.

பூலோகத்தில் வீழிச்செடிகள்அடர்ந்த இடத்தில் தான் இருப்பதாகவும், அங்கு தினமும் பூஜை செய்தால் சக்ராயுதம் கிடைக்கும் என்றும் அருளினார்.

விஷ்ணுவும் இத்தலத்தில் தனது பெயரால் ஒரு தீர்த்தம் உண்டாக்கி, அதிலிருந்து சிவனுக்கு அபிஷேகம் செய்து ஆயிரம் தாமரை மலர்களால் ஈசனை வழிபாடு செய்து வந்தார். ஒருநாள் சிவனின் திருவிளையாடலால், சிவபூஜைக்கான ஆயிரம் தாமரையில் ஒன்று குறைந்தது.

அந்த ஒரு தாமரைக்கு பதில் விஷ்ணு தன் கண்ணையே ஆயிரமாவது மலராக தந்தார். இதனால் தான் கோயில்களில் "கண்மலர்' காணிக்கை தரும் பழக்கம் உருவானது. இப்பூஜைக்கு மகிழ்ந்த சிவன், சலந்தரனை வதம் செய்து, சக்கராயுதத்தை கொடுத்தருளினார்.

விஷ்ணு சிவனுக்கு பூஜை செய்த கண்மலர் இன்றும் சிவனின் பாதத்தில் இருப்பதைக்காணலாம்

திருவிழா:

மகா சிவராத்திரி, மார்கழி திருவாதிரை

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8மணி வரை திறந்திருக்கும்.

'ஆன்மீகச் சிந்தனை மலர் ':


  • காசி விஸ்வநாதரை வழிபடுங்கள் - ஆதி சங்கரர்
                                                                              
Adisankara.jpg


  • 'நமசிவாய' என்னும் பஞ்சாட்சரத்தின் ஐந்து எழுத்துக்களும் சிவனையே குறிக்கிறது. அச்சிவனை நான் வணங்குகிறேன். அவன் நாகேந்திரனை மாலையாகக் கொண்டவன். முக்கண்ணன்; வெண்ணீறு பூசுபவன்; மகேஸ்வரன், நித்தியன், பூரணன், திசைகளை ஆடையாக உடையவன். நந்தியின் நாதன் அவன். மந்தாரை மலரும் இதர மலர்களும் அவனை அணி செய்கின்றன. தெய்வீக அன்னையான கவுரியின் தாமரை முகத்தை மலரச் செய்யும் உதய சூரியன். சதியை அவமானம் செய்த தக்கனின் வேள்வியை நாசம் செய்தவன். தேவர்களைப் பாதுகாக்க விஷத்தை உண்டு நெஞ்சில் அடக்கிக் கொண்ட நீலகண்டன். தன் கொடியில் எருதைச் சின்னமாகக் கொண்டவன்.
  • வசிஷ்டர், அகஸ்தியர், கவுதமர் முதலிய மகரிஷிகளால் மட்டுமின்றி தேவர்களாலும் தேவர்களில் சிறப்பு மிக்கவன் என வழிபடப்பட்டவன்.பவள சங்கரி திருநாவுக்கரசு

தேதி 02 - 02 - 2011.

நன்றி - தின மலர் .

பங்களிப்பாளர்கள்

Ksubashini மற்றும் Coralsri.blogspot.com

இப்பக்கம் கடைசியாக 10 மே 2011, 14:15 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 2,431 முறைகள் அணுகப்பட்டது.