ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! 1

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

 
வைணவர்களுக்கு 108 திவ்ய தேசங்கள் என மஹாவிஷ்ணு கோயில் கொண்டிருக்கும் இடங்களை முக்கியமாகச் சொல்லுவார்கள். அவற்றில் முதன்மையானது ஸ்ரீரங்கம்ஆகும். ஸ்ரீரங்கம் மிகவும் பழமையான கோயில் ஆகும். ஸ்ரீரங்கநாதர் இக்ஷ்வாகு குலத்தைச் சேர்ந்த அரசர்களின் குலதெய்வம் ஆவார். ஸ்ரீராமர் அவதரித்த இக்ஷ்வாகு குலத்து மன்னரான இக்ஷ்வாகு ஒரு சமயம் பிரம்மாவை நோக்கித் தவம் இருந்தார். அவருக்கு பிரம்மாவிடம் இருந்த ஶ்ரீரங்க விமானத்துடன் கூடிய பெருமானின் அர்ச்சா விக்ரஹத்தை வைத்து வழிபட வேண்டும் என நீண்ட நாள் ஆவல். அதற்காக பிரம்மாவிடம் அதை வேண்டித் தவம் இருந்தார். பிரம்மாவிடம் ஸ்ரீரங்கவிமானத்தில் பள்ளி கொண்ட பெருமாளின் திருவுருவோடு கூடிய ஒரு அர்ச்சா விக்ரஹம் இருந்தது. அதை பிரம்மா பல ஆயிரம் ஆண்டுகள் தவம் செய்து பாற்கடலில் இருந்து பெற்றார். அந்த விமானத்தின் முன்னர் அமர்ந்த வண்ணம் நான்கு வேதங்களையும் பிரம்மா ஓதி இருக்கிறார். இந்த ரங்க விமானமும் பாற்கடலில் பள்ளி கொண்ட உருவில் இருந்த ஸ்ரீரங்கநாதரின் அர்ச்சா விக்ரஹத்தையும் வேண்டியே இக்ஷ்வாகு தவம் இருந்தார். பல்லாண்டுகள் தவம் செய்தார். அவரின் தவத்தின் கனல் பிரம்மலோகம் போய்த் தாக்க வேறு வழியின்றி பிரம்மா அவர் முன் தோன்றி என்ன வேண்டும் எனக் கேட்டார். இக்ஷ்வாகுவும் அவரிடம் இருக்கும் பெரிய பெருமாளின் அர்ச்சாவிக்ரஹம் அதைச் சார்ந்த ரங்க விமானத்துடனே தன்னிடம் அளிக்குமாறும் தானும், தன் வம்சாவளியினரும் அதைப் பூஜித்து வருவதாகவும் வேண்டினார்.

அப்படியே பிரம்மாவும் அந்த அர்ச்சா விக்ரஹத்தை இக்ஷ்வாகுவுக்கு அளித்தார். இக்ஷ்வாகுவும் அதைப் பெற்றுக்கொண்டு ஸ்ரீரங்கநாதரைத் தங்கள் குலதெய்வமாக வணங்கி வந்தான். இக்ஷ்வாகுவிற்குப் பின்னர் பல்லாண்டுகள் கழித்துச் சூரிய வம்சத்தில் இக்ஷ்வாகுவின் குலத்தில் தோன்றிய ஸ்ரீராமர் ராவண வதத்திற்குப் பின்னர் அயோத்தி வந்து பட்டம் சூட்டிக் கொண்ட சமயம் விபீஷணனும் அங்கே வந்திருந்தான். அவன் திரும்ப இலங்கைக்குச் செல்லும் சமயம் அவனுக்கு ஏதேனும் பரிசளிக்க விரும்பிய ஸ்ரீராமர் அவனிடம் என்ன பரிசு வேண்டும் எனக் கேட்க, ஸ்ரீராமரின் குலதெய்வமான ஸ்ரீரங்கநாதரையே தன்னிடம் அளிக்குமாறு கேட்கிறான் விபீஷணன். கொடுத்த வாக்கை நிறைவேற்ற எண்ணிய ஸ்ரீராமரும் அவ்வாறே விபீஷணனிடம் ரங்க விமானத்தோடு கூடிய ரங்கநாதரை அளிக்கிறார். பெருமானைத் தானே தாங்கிக் கொண்டு பிராண வாக்ருதி என்னும் விமானத்தில் ஆகாய மார்க்கமாக விபீஷணன் வந்தான். பெருமானுக்கோ பாரதத்தை விட்டோ அல்லது சூரியகுலத்தை விட்டோ செல்ல இஷ்டமில்லை போலும். ஒரு திருவிளையாடலை நடத்தித் தன்னை பாரதத் திருநாட்டிலேயே இருத்திக் கொண்டார்.

பெருமானைச் சுமந்து கொண்டு வந்த விபீஷணன் அதை எங்கேயும் கீழே வைக்கக்கூடாது என்ற உறுதியுடன் வந்து கொண்டிருந்தான். ஆனால் ஸ்ரீரங்கநாதரோ சூரியகுலத் தோன்றல்களிடமே இருக்க விரும்பினார். மாலை மயங்கும் நேரம். அன்றாட அநுஷ்டானங்களை விட முடியாது. அதோடு இயற்கையின் உபாதை வேறு விபீஷணனுக்கு. கையில் வைத்திருந்த விமானத்தோடு கூடிய ஸ்ரீரங்கநாதரை எங்கேயும் கீழே வைக்கக் கூடாது. பின் என்ன செய்வது? சுற்றும் முற்றும் பார்த்தான். அங்கே ஒரு அந்தணச் சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தான். நதி ஒன்று இரு பிரிவாகப் பிரிந்து மாலை போல் ஓடிக் கொண்டிருந்தது. அது காவிரி என்பதைக் கண்டு கொண்ட விபீஷணன், அந்தச் சிறுவனை அழைத்து விக்ரஹத்தைக் கையில் வைத்துக்கொள்ளுமாறும், தான் நதியில் இறங்கி மாலை நேர அநுஷ்டானங்களை முடித்துவிட்டு வருவதாகவும் கூறி விக்ரஹத்தைக் கையில் கொடுத்தான். அந்தப் பிள்ளையோ மறுத்தது. தன்னால் தூக்க முடியாது எனப் பிடிவாதம் பிடித்தது. விபீஷணன் பிள்ளையைச் சமாதானம் செய்து அவனால் தூக்க முடியாமல் கனம் அதிகம் தெரிந்தால் தன்னை அழைக்குமாறு கூறிவிட்டுப் பிள்ளையின் கையில் கொடுத்தான். பிள்ளையும் வேறு வழியில்லை போல என நினைத்தாற்போல் குறும்புச் சிரிப்புடன் வாங்கிக் கொண்டது.

சற்று நேரம் பொறுத்தது அந்தப் பிள்ளை. விபீஷணன் திரும்பிப் பார்த்தான். பிள்ளையின் கைகளில் விமானம் பத்திரமாக இருந்ததைக் கண்டான். நதியில் இறங்கி ஒரு முழுக்குப் போட்டான். அவன் தலை நிமிர்வதற்குள்ளாக அந்தப் பிள்ளை விமானத்தைக் கீழே வைத்துவிட்டு ஓடிக் கொண்டிருந்ததைக் கண்டான். கோபம் கொண்ட விபீஷணன் ஓட்டமாக ஓடி வந்து விக்ரஹத்தை எடுக்க முனைந்தான். அவனால் முடியவில்லை. அந்தப் பிள்ளையைத் துரத்தினான். அது பிடிபடவே இல்லை. ஒரே ஓட்டமாக ஓடியது. ஒருவாறு பிடிக்க நினைத்தபோது எதிரே தோன்றியதொரு மலையில் ஏறிற்று. மூச்சு வாங்கத் தானும் மலையில் ஏறிய விபீஷணன் அந்தப் பிள்ளையைப் பிடித்து உச்சந்தலையில் ஓங்கிக் குட்ட நினைத்தபோது அவன் கண்ணெதிரே காட்சி அளித்தார் பிள்ளையார். “அப்பனே, ஸ்ரீரங்கனுக்கு இங்கிருந்து செல்ல இஷ்டமில்லை. அதனால் என்னுடன் சேர்ந்து அவர் நடத்திய திருவிளையாடலே இது.” என்று கூற பிள்ளையாரைக் குட்ட வந்த விபீஷணன் தன் தலையில் தானே குட்டிக் கொண்டு, “விநாயகா, என் நாட்டில் பிரதிஷ்டை செய்ய நினைத்து எடுத்துச் செல்ல இருந்த விக்ரஹத்தை இங்கேயே விட்டுச் செல்ல எனக்கு மனம் வரவில்லையே!’ என வருந்த, “கவலை வேண்டாம் அப்பனே! ஸ்ரீரங்கநாதர் தெற்கு முகமாக முகத்திருமண்டலத்தை வைத்துக்கொண்டு உன் நாட்டைப் பார்த்த வண்ணமே குடி இருப்பார். உன் நாடு சுபிக்ஷமாக இருக்கும். எந்தக் குறையும் வராது.” என ஸ்ரீரங்கநாதரும், பிள்ளையாரும் அருளிச் செய்தனர். இந்த வரலாறு ஸ்ரீரங்க மஹாத்மியத்தில் தர்ம வர்மா என்னும் சோழ மன்னனின் வேண்டுகோளின்படி விபீஷணனே விரும்பி விக்ரஹத்தை அளித்ததாய்ச் சொல்லப் படுகிறது. மேலும் பிள்ளையாரைப் பிடித்து உச்சந்தலையில் விபீஷணன் குட்டியதாகவும், பிள்ளையார் எனத் தெரிந்ததும், தன் தலையில் தானே குட்டிக் கொண்டதாகவும் ஒரு ஐதீகம். அந்தக் குட்டு விழுந்த இடம் இன்றும் பிள்ளையாரின் தலையில் பள்ளமாய்க் காணப்படுவதாகவும் சொல்கிறார்கள். பிள்ளையாருக்கு விபீஷணன் வைத்துக்கொண்ட குட்டுக்களைத்தான் நாம் இன்றளவும் தொடர்கிறோம் என்றும் சொல்வார்கள். மேலும் பிள்ளையார் விபீஷணனிடமிருந்து தப்பிச் சென்ற இடம் தான் உச்சிப் பிள்ளையார் கோயில் என்றும் சொல்வார்கள்.

விபீஷணன் விக்ரஹத்தை எடுக்க முடியாமல் இலங்கை திரும்பியதையும் நடந்த விபரங்களையும் அப்போது சோழ நாட்டை ஆண்டு வந்த தர்ம வர்மா என்னும் மன்னன் தெரிந்து கொள்கிறான். அரங்கனுக்கு அங்கேயே ஒரு கோயில் கட்டி வழிபட்டான். நாளாவட்டத்தில் தர்மவர்மா காலத்திற்குப் பின்னர் காவிரியில் ஏற்பட்ட அதீத வெள்ளம் காரணமாக ஸ்ரீரங்கம் கோயிலின் கோபுர உச்சி வரை மண்மேடிட்டுக் காடுகள் ஏற்பட்டுக் கோயில் காட்டினடியில் மறைந்து போனது. அவன் காலத்திற்குப் பின்னர் வந்த சோழன் ஒருவன் காட்டிற்கு வேட்டையாட வந்தபோது ஒரு மரத்தினடியில் சற்று இளைப்பாற அமர்ந்தான். அப்போது திடீரென ஸ்ரீரங்கநாதர் குறித்தும், அவரின் கோயில் குறித்தும் யாரோ ஸ்லோகமாய்ச் சொல்வது மன்னன் காதுகளில் விழுந்தது. சுற்றும் முற்றும் பார்த்த மன்னன் மரத்தின் மேலே இருந்த ஒரு கிளி அது என அறிந்து கொண்டான். உடனேயே மன்னன் தன் ஆட்களை அழைத்து அங்கே தோண்டிப் பார்க்கச் சொன்னான். எதுவும் கிடைக்கவில்லை. ஏமாற்றத்துடன் சென்ற மன்னன் கனவில் அன்றிரவு ஸ்ரீரங்கநாதரே தோன்றித் தாம் இருக்குமிடத்தைக் காட்டியருளினார்.

மன்னனும் காட்டை அழித்தான். மணலை நீக்கினான். கோயிலும், அதன் பிரகாரங்களோடு புதைந்திருப்பதும், ஸ்ரீரங்க விமானமும்,ஸ்ரீரங்கநாதரின் அர்ச்சா விக்ரஹமும் கிடைத்தது. கோயிலை முன்னிருந்தவாறே திருத்தி அமைத்தான். தன்னுடைய நினவாகக் கிளி மண்டபத்தைக் கட்டினான். கிளியின் மூலம் இறைவன் இருக்குமிடம் தெரிந்ததால் கிளிச்சோழன் என்ற பட்டப் பெயரையும் பெற்றான். வைணவர்களுக்குக் கோயில் என்றால் திருவரங்கம் தான். அதே போல் அவர்கள் திருமலை என்றால் திருப்பதிக் கோயில் தான். பெருமாள் கோயில் என்றால் காஞ்சிபுரம் பெருமாள் கோயிலைக்குறிக்கும். இந்தக் கோயில் அவர்களுக்கு முதன்மை பெற்றதாக ஆனது. ஸ்ரீ என்னும் வடமொழி எழுத்துக்குப் பதிலாக திரு சேர்த்து திரு சீரங்கநாதன் பள்ளி/(அரங்கன் பள்ளி கொண்டிருப்பதால்) என்ற பெயரால் அழைத்து வந்தனர். பின்னர் அதுவே மருவி திருச்சிராப்பள்ளி என ஆனது என்று சிலர் கூற்று. இன்னும் சிலர் உச்சிப் பிள்ளையார் கோயில் கொண்டிருக்கும் மலையின் மூன்று சிகரங்களை வைத்து திரி=மூன்று, சிகரங்கள் உள்ள பள்ளி என்ற திரிசிகரப் பள்ளி என்றும், இன்னும் சிலர் சிரா என்னும் சமண முனிவரின் பள்ளி இந்த மலையில் இருந்ததால் திரிசிராப்பள்ளியே திருச்சிராப்பள்ளி என்றானது என்றும் கூறுகிறார்கள். திரிசிரன் என்ற மூன்று சிரங்களை உடைய இவ்வூரில் இருந்து வழிபட்டு வந்தமையால் இந்தப்பெயர் பெற்றதாகவும் கூறுவார்கள். ஆனால் நாம் இப்போது பார்க்கப் போவது ஸ்ரீரங்கம் மட்டுமே. வடக்கே கொள்ளிடம் சுற்றிவர, தெற்கே காவிரி அணைத்து வர நடுவே பள்ளி கொண்டிருக்கிறார் ஸ்ரீரங்கநாதர். இது தான் பழங்காலத்திலே சொல்லப்பட்ட நாவலந்தீவு என்பாரும் உண்டு.--Geetha Sambasivam 09:46, 17 செப்டெம்பர் 2012 (UTC)பங்களிப்பாளர்கள்

Geetha Sambasivam

இப்பக்கம் கடைசியாக 17 செப்டெம்பர் 2012, 09:46 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 1,265 முறைகள் அணுகப்பட்டது.