ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! 3

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

 இவற்றுக்கெல்லாம் ஆதாரங்கள் இல்லை எனினும் மரபு சார்ந்ததாகவே கொள்ள வேண்டி இருக்கிறது. கோயிலைக் குறித்துப் பழங்காலத்து சங்கப்பாடல்கள், சிலப்பதிகாரம், ஆழ்வார் பாசுரங்கள் போன்றவற்றில் குறிப்பிடப் பட்டிருக்கும் இலக்கிய ஆதாரங்களையே கிட்டத்தட்ட கி.பி. பத்தாம் நூற்றாண்டு வரையிலும் கொள்ள வேண்டி இருக்கிறது. ஏனெனில் கி.பி. ஏழாம் நூற்ற்றாண்டில் திருமங்கை மன்னனால் நான்காம் திருமதில் கட்டப்பட்டதாகக் கோயிலொழுகு சொல்வதாகக் கேள்விப் படுகிறோம். ஆனால் அதற்கு முன்பே முதலாழ்வார்கள் பாடிய பாடல்களையும் முன்னரே பார்த்தோம். தற்போது செய்துவரும் சில ஆய்வுகளின் மூலம் பழைய கோயிலின் மேலேயே இந்தக் கோயில் கட்டப்பட்டிருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது. கோயிலொழுகு குறித்து நான் பார்க்க வேண்டும் என நினைத்த பெரியவர் உபந்நியாசங்களாகச் செய்து வைத்திருப்பதால் அதைப் போட்டுக் கேட்டுக் கொள்கிறேன்.


நம் பாரத நாட்டிலேயே ஸ்ரீரங்கம் கோயில் தான் ஏழு பிரகாரங்களைக் கொண்டது. ஏழு என்ற எண் புனிதமானதாய்க் கருதப்படுகிறது. மனித உடலுக்குக் காரணமான ஏழு தாதுக்களையும், உடலில் உள்ள ஏழு ஆதாரங்களையுமே இவை சுட்டுவதாக ஐதீகம். கருவறையில் தொடங்கிப் பிரகாரங்கள் வெளிப்பக்கமாக எண்ணப்படுகின்றன. நம் உடலின் உள்ளே எவ்வாறு ஆன்மா குடி கொண்டிருக்கிறதோ அவ்வாறே கருவறையின் நடுவேஇவ்வுலகத்தின் அனைத்து உயிர்களுக்கும் ஆதாரமாகிய பெருமாள் எழுந்தருளி உள்ளார். கருவறை விமானம் நான்கு கலசங்களோடு கூடிய வட்டவடிவில் பொன்மயமாக அமைந்துள்ளது. விமானத்தின் வெளியில் விக்னேஸ்வரர் காவல் காக்க, கீழ்ப்பக்கம் யோக மாயை ஆன ஸ்ரீதுர்கை இருக்கிறாள். விமானத்தின் மீது பரவாசுதேவர் கையில் கிண்ணத்தோடு இருப்பதையும் கிண்ணம் கொஞ்சம் கொஞ்சமாய் அவர் வாய்க்கருகே சென்று கொண்டிருப்பதாகவும் ஏற்கெனவே பார்த்தோம். விமானத்தின் கலசங்கள்காயத்ரீ தேவியின் தலைப் பகுதியாகக் கூறப் படுகிறது. ஸ்ரீரங்க மண்டபம் காயத்ரீ மண்டபம் என்றும் அழைக்கப் படுகிறது. அங்குள்ள 24 தூண்களும் காயத்ரீயின் 24 அக்ஷரங்கள் எனவும், கோபுரங்கள் வேத தேவதைகளாகவும், சாஸ்திரங்கள் அங்குள்ள பொருட்கள், செயல்களாகவும் கூறப் படும்.


இதே போல் கோயிலின் ஏழு பிரகாரங்களும் ஏழு உலகங்களைக் குறிக்கும். அவை யாவன:


பூலோகம்= மாடங்கள் சூழ்ந்துள்ள சுற்று

புவர்லோகம்= திரிவிக்கிரம சோழன் சுற்று

ஸுவர்லோகம்= அகளங்கன் என்னும் கிளிச் சோழன் சுற்று

மஹர்லோகம்= திருமங்கை மன்னன் சுற்று

ஜநோலோகம்= குலசேகரன் சுற்று

தபோலோகம்= ராஜ மகேந்திர சோழன் சுற்று

ஸத்யலோகம்(கர்பகிருஹம் உள்ள சுற்று) = தர்மவர்ம சோழன் சுற்று


மேற்கண்டவர்கள் அந்த அந்தப் பிரகாரங்களைச் செப்பனிட்டதால் அவரவர் பெயரை வைத்து அழைக்கும் வழக்கம் ஏற்பட்டதாகவும் அறிகிறோம். இதைத் தவிர இந்த ஏழுவிதச் சுற்றுக்களையும் அடைத்தபடி வளைந்து வரும் நெடுஞ்சுற்று ஒன்று உள்ளது. இதற்கு அடைய வளைந்தான் எனப் பெயர். இந்தச் சுற்றிலிருந்து மாடங்கள் உள்ள சுற்றுக்கு வருவதற்கு ஏற்றவகையில் நான்கு திசைகளிலும் திட்டி மூலை என்று வாசலைத் திறந்து வைத்திருக்கிறார்கள். ஏழாவது சுற்று, அடையவளைந்தான் சுற்று மற்றும் ஆறாவது சுற்றில் ஆகிய மூன்றிலும் மக்கள் பெருமளவு அந்நாட்களிலும், இந்நாட்களிலும் வாழ்ந்து வருகின்றனர்.


கருவறை மேற்கு, கிழக்கு, வடக்குத் திசைகளில் சதுரமான திருவுண்ணாழியால் சூழப்பட்டுள்ளது. அதிலே எம்பெருமானார் சயனித்த கோலத்தில் காட்சி அளிக்கிறார். குழைகாரை எனப்படும் சுதை வேலைப்பாட்டில் வலப்பக்கமாய்ச் சாய்ந்த வண்ணம் கிட்டத்தட்ட 21 அடி நீளத்துக்குப் புனுகுச் சட்டம் எனப்படும் தனிச் சிறப்பான தைலக்காப்புச் சார்த்தப் பட்டுத் தனியானதொரு ஒளியோடும், மெருகோடும் விளங்குகிறார். தன் வலக்கையைத் தலையைத் தாங்கிய வண்ணம் வைத்தும், இடக்கையால் திருவடியைச் சுட்டிக் காட்டிய வண்ணமும், தெற்கு முகமாக இலங்கையை நோக்கியபடி அருள் பாலிக்கிறார் மூலவர் பெரிய பெருமாளான ஸ்ரீரங்கநாதர். இவருக்குப் பெரிய பெருமாள் என்ற திருநாமம் மட்டுமே உண்டு. ஐந்து தலைகள் கொண்ட ஆதிசேஷன் பஞ்ச இந்திரியங்கள் எனவும், அந்த பஞ்ச இந்திரியங்களையும் அடக்கியே எம்பெருமானார் யோகநித்திரை கண்டருளுவதாகக் கூறுவர். அவர் அருகே உற்சவரான நம்பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராகக் காட்சி அளிக்கிறார். உற்சவர் முதலில் அழகிய மணவாளர் என்று அழைக்கப் பட்டுப் பின்னர் நம்பெருமாள் என இப்போது அழைக்கப் படுகிறார். அது பின்னர் நம்பெருமாள் என மாறியது ஒரு பெரிய வரலாற்றை உள்ளடக்கிய கதை ஆகும். அதையும் விரைவில் பார்ப்போம்.


சுதையினால் ஆன எம்பெருமானுக்குத் திருமஞ்சனம் செய்விக்க இயலாது என்பதால் வருடம் ஒரு முறை ஆனி மாதம் ஜேஷ்டா நக்ஷத்திரத்தில் காவிரியில் இருந்து யானை மீது தங்கக் குடங்களில் நீர் எடுத்து வந்து உற்சவருக்கு அபிஷேஹம் செய்யப்படும். அந்தச் சமயம் மூலவருக்கு எண்ணெய்க் காப்புச் சார்த்தித் திருவடி வரை ஒரு மெல்லிய வேஷ்டியால் மூடி விடுவார்கள். இது நாற்பத்தைந்து நாட்கள் அல்லது நாற்பத்தெட்டு நாட்கள் வரை இருக்கும். அடுத்த நாள் பெரிய திருப்பாவாடைத் தளிகை என்னும் நிவேதனம் பெரிய பெருமாள் சந்நிதி முன் சேர்ப்பிக்கப் படும். அந்தப் பிரசாதத்தில் பலாச்சுளை, தேங்காய், மாங்காய், நெய், தேன், வாழைப்பழம் போன்றவை சேர்த்து உப்பும் சேர்த்திருப்பார்கள். பெருமாளுக்கு அமுது செய்த பின்னர் பக்தர்களுக்கு விநியோகம் செய்யப்படும். இந்த ஜேஷ்டாபிஷேஹம் ஸ்ரீரங்கம் பெரிய கோயிலைத் தவிரவும் அதைச் சுற்றி உள்ள மற்ற திவ்ய தேசங்களிலும் ஸ்ரீரங்கத்தில் நடந்த பின்னர் நடைபெறும். அவை குறித்துத் தனியாகப் பார்ப்போம். ஆனி மாதம் ஜேஷ்டா நக்ஷத்திரத்தில் ஆரம்பிக்கும் இது ஆடிப் பதினெட்டு அன்று நாற்பத்தெட்டு நாட்கள் பூர்த்தி ஆனால் அல்லது ஆடி மாதம் இருபத்தெட்டு வரையில் என்ற கணக்கில் இருந்து வரும். பின்னர் ஆடிப் பதினெட்டு விழாவில் காவிரி அம்மனுக்குச் சீர் கொடுப்பார் பெருமாள். ஒரு பட்டுப்புடவையில் மாலை, தாலிப்பொட்டு போன்ற மங்கலப் பொருட்களைப் போட்டுக் கட்டி யானையின் மேல் ஏற்றிக் காவிரியில் விடுவார்கள்.


இங்கு காவிரியைத் தவிரவும் ஒன்பது புண்ணிய தீர்த்தங்கள் உண்டு. தற்போது நல்ல நிலைமையில் இருப்பது சந்திர புஷ்கரிணி மட்டுமே. மற்றவை சரியான பராமரிப்பு இல்லாமல் பழுதடைந்து போயிற்று என்பது வருத்தத்துக்கு உரியதாகும். மற்றத் தீர்த்தங்களின் பெயர்கள் வருமாறு:


சந்திர புஷ்கரிணி, வில்வ தீர்த்தம், நாவல் தீர்த்தம், அரசு தீர்த்தம், புன்னை தீர்த்தம், மகிழ தீர்த்தம், புரசு தீர்த்தம், கடம்ப தீர்த்தம், மாதீர்த்தம் எனக் கூறுவார்கள். சந்திர புஷ்கரிணியைச் சுற்றி எட்டுத் திசைகளில் இவை அமைந்திருந்ததாய்க் கேள்விப் படுகிறோம்.



Namperumal.jpg


பாண்டியன் கொண்டையானு சந்தேகமா இருக்குனு ஆடிப் பெருக்குப் பதிவிலே எழுதி இருந்தேன். இது பாண்டியன் முத்துக் கொண்டையே தான்.


ஸ்ரீரங்கம் கோயிலைச் சுற்றிலும் பாதுகாவலாக திக்தேவதைகளை ஆகம சாஸ்திரப் படி ஏற்படுத்தி இருந்தார்கள் எனத் தெரிய வருகிறது. அவர்கள் தெற்கில் உலகளந்த பெருமாள் ஆயனார் என்ற பெயரில் அழைக்கப் படுபவரும், தென்மேற்கு மூலையில் யோக அழகிய சிங்கரும், இருந்திருக்கின்றனர். அழகிய சிங்கர் கோயில் பழுதுபட்டதால் விக்ரஹங்கள் மூலவரும், உற்சவரும் கூரத்தாழ்வான் சந்நிதியில் வைக்கப்பட்டிருப்பதாய்க் கூறப்படுகிறது. மேற்கில் துர்கை அல்லது பிடாரி கோயில் இன்றும் இருக்கிறது. வடமேற்கில் வாதநாராயணர் பழுதடைந்து விட்டது எனக் கேள்விப்படுகிறோம். வடக்கில் தசாவதார சந்நிதி இன்றும் காணலாம்.



வடகிழக்கில் ஆதிகேசவப் பெருமாள் சந்நிதி முழுதும் ஜீர்ணமாக பெருமாளும் நாச்சிமார்களும் பக்கத்துத் தோப்பில் எழுந்தருளி இருந்திருக்கிறார்கள். இப்போது எங்கே எனத் தெரியவில்லை. விசாரிக்கிறேன். அடுத்து கிழக்கே லக்ஷ்மி நரசிம்மர் சந்நிதி. காட்டழகிய சிங்கர். நாம் ஏற்கெனவே இருமுறை பார்த்தோம். தென்கிழக்கு மூலையில் கோதண்டராமர் சந்நிதி. நவாபு காலத்தில் மந்திரியாக இருந்த ஒரு ராயரால் கட்டப்பட்டது. சந்திர புஷ்கரணிக்கரையில் இருக்கும் இவரையும் நாம் பார்த்தோம். இவரே பிரதான ராமர். இவரைத் தவிரவும் பிராகாரத்தில் மேல பட்டாபி ராமர், கீழப் பட்டாபி ராமர் சந்நிதிகள் உண்டு. இவ்வாறு எட்டுத் திக்குகளிலும் எட்டு திக்தேவதைகளை எழுந்தருளப் பண்ணி இருக்கும் திவ்யஸ்தலமான இதன் சரித்திரச் சான்றுகளை நாம் பத்தாம் நூற்றாண்டில் இருந்தே காண முடிகிறது.


கி.பி. ஏழாம் நூற்றாண்டில் திருமங்கை ஆழ்வார் இந்தக் கோயிலில் நான்காம் திருமதிலைக் கட்டியதாகத் தெரிய வருகிறது. ஆனால் இதற்கான சரித்திரச் சான்றுகள் இல்லை. திருமங்கை ஆழ்வாரே அதிகமான பாசுரங்கள் பாடி இருப்பதாகவும் தெரிகிறது. அவற்றில் இரண்டு பாசுரங்களைப் பார்ப்போம்.


உந்தி மேல்நான் முகனைப் படைத்தான் உல குண்டவன்
எந்தை பெம்மான், இமையோர்கள் தாதைக்கிட மென்பரால்,
சந்தி னோடு மணியும் கொழிக்கும்புனல்காவிரி,
அந்தி போலும் நிறத்தார் வயல்சூழ்தென் னரங்கமே (5.4.1)

1379
வையமுண் டாலிலை மேவு மாயன்மணி நீண்முடி,
பைகொள் நாகத் தணையான் பயிலுமிட மென்பரால்,
தையல் நல்லார் குழல்மா லையும்மற்றவர் தடமுலை,
செய்ய சாந்தும் கலந்திழி புனல்சூழ்தென் னரங்கமே (5.4.2)


பாசுரங்கள் உதவி நன்றி:  மதுரைத்திட்டம்


இதைத் தவிரவும், பெரியாழ்வார் பாடல்களும், ஆண்டாள் அழகிய மணவாளரான உற்சவர் மேல் மாளாக் காதல் கொண்டு அவரையே மனைவியாக அடைவேன் எனக் காத்திருந்து மனைவியாக ஐக்கியமடைந்ததுமான வரலாறுகள் சொல்லப் படுகின்றன. ஆண்டாளுக்கு என இங்கே மூன்று தனிச் சந்நிதிகள் இருக்கின்றன. அவற்றில் வெளி ஆண்டாள் சந்நிதியை இன்னும் பார்க்கவில்லை. ஆனால் அங்கே தான் ஆடிப்பூர உற்சவ நிகழ்ச்சிகள் நிறைவு பெறுகின்றன. ஆண்டாளுக்கு அன்று திருமஞ்சனம் செய்விக்கப்படுகிறது. ஆடிப் பதினெட்டு அன்று காவிரிக்குச் சீர் கொடுக்க வரும் நம்பெருமாள் திரும்புகையில் வெளி ஆண்டாள் சந்நிதியில் மாலை மாற்றிக் கொண்டு பின்னரே உள்ளே திரும்புகிறார். அழகிய மணவாளர் மேல் காதல் கொண்ட ஆண்டாள், நம்பெருமாளோடு ஏன் மாலை மாத்திக்கணும்னு தோணுதா? இருவரும் ஒருவரே. அழகிய மணவாளராக இருந்தவர் தான் நம்பெருமாள் என அழைக்கப்படுகிறார். அந்தக் கதைக்குத் தான் இப்போ வரேன். அதை முதலில் பார்த்துவிடுவோம்.


முதலிலே அழகிய மணவாளன் என்ற பெயர் வந்த கதையைத் தெரிந்து கொள்வோம். தர்ம வர்ம சோழனின் வம்சத்தில் வந்த சோழ மன்னன் ஒருவன் நந்த சோழன் என்ற பெயரில் ஆண்டு வந்தான். அவன் அரங்கனிடம் மிகவும் பக்தி பூண்டு வந்தான். அவனுக்குப் பிள்ளைப் பேறில்லை. அரங்கனே கதி என்றிருந்த மன்னன் இதற்கும் அரங்கனே பதில் சொல்லுவான் என நம்பிக்கையுடன் காத்திருந்தான். ஒருநாள் மன்னன் வேட்டைக்குச் சென்ற போது அங்கிருந்த ஒரு ஓடையில் கமலப்பூக்களின் நடுவே ஒரு அழகான பெண் குழந்தை இருப்பதைக் கண்ணுற்றான். அரங்கன் அளித்த செல்வம் என எண்ணி மகிழ்ந்து அக்குழந்தையை அரண்மனைக்கு எடுத்து வந்து சீராட்டிப் பாராட்டி வளர்த்து வந்தான். கமலவல்லி என்ற பெயருள்ள அந்தப் பெண் சிறு வயதில் இருந்தே அரங்கனிடம் பக்தி பூண்டிருந்தாள். ஒருநாள் அவள் உத்தியான வனத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது அரங்கன் அவ்வழியே குதிரையில் சென்றதைக் கண்டாள். அரங்கன் மேல் மாளாக் காதல் கொண்டாள்.


மணந்தால் அரங்கனையே மணப்பது என முடிவு செய்துவிட்டாள். மகளின் நிலை கண்டு என்ன செய்வது எனத் தெரியாமல் கலங்கிய மன்னன் கனவில் அரங்கன் தோன்றி, “ நீ குழந்தை இல்லாமல் கவலைப் பட்டதற்காகவே நாம் திருமகளை அனுப்பினோம்; அவள் நம்மைச் சார்ந்தவள். என் சந்நிதிக்கு அவளை அழைத்து வா; நாம் அவளை ஏற்போம்.” எனச் சொல்லி மறைய, திகைப்புற்ற மன்னன் தன் மகள் திருமகள் எனத் தெரிந்து மகிழ்ந்தான். அவளை சர்வ அலங்கார பூஷிதையாக அலங்கரித்து ஊர்வலமாகச் சுற்றமும், உற்றமும் சூழ அழைத்து வந்தான். அரங்கன் சந்நிதியை அடைந்தான். கோவிலினுள் நுழைந்து அரங்கன் சந்நிதிக்கு வந்ததுமே கமலவல்லி மறைந்தாள். தன் பரிவாரங்களோடு வந்திருந்த மன்னன் இதைக் கண்டு அதிசயம் அடைந்தான்.


ஸ்ரீரங்கம் கோயிலுக்கு எண்ணற்ற திருப்பணிகள் செய்ததோடு அல்லாமல் தான் இருக்கும் உறையூரிலும் அரங்கனுக்கு ஒரு கோயில் எழுப்பினான். அரங்கனே அழகிய மணவாளனாக வந்து தன் மகளைத் திருமணம் செய்து கொண்டதால் அந்தப் பெருமாளுக்கு அழகிய மணவாளர் என்ற பெயரையும் சூட்டினான். தன் மகள் நினைவாகத் தாயாருக்குக் கமலவல்லி என்ற பெயரையும் சூட்டினான். இந்த அழகிய மணவாளர் தான் ஸ்ரீரங்கம் கோயிலின் உற்சவர். உற்சவருக்குக் கிட்டத்தட்ட அறுநூறு, எழுநூறு வருடங்கள் முன்பு அழகிய மணவாளர் என்ற பெயரே இருந்தது. அந்தப் பெயர் தான் பின்னர் நம்பெருமாள் என மாறியது. மாற்றியது ஒரு வண்ணான். ஏன்,எப்படி? வரும் நாட்களில் விபரமாய்ப் பார்க்கலாம். அதற்கு முன்னர் கொஞ்சம் சரித்திரப் பாடம் படிப்போம்.


--Geetha Sambasivam 12:26, 18 செப்டெம்பர் 2012 (UTC)

பங்களிப்பாளர்கள்

Geetha Sambasivam

இப்பக்கம் கடைசியாக 18 செப்டெம்பர் 2012, 12:31 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 1,425 முறைகள் அணுகப்பட்டது.