“மெத்தை வாங்கினேன் தூக்கத்தை வாங்கலை”!

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

“மெத்தை வாங்கினேன் தூக்கத்தை வாங்கலை” என்று ஆதங்கப்படும் நிலையில்தான் இருக்கிறது இன்றைக்கு பலரின் நிலைமை. என்னதான் வசதி வாய்ப்புகள் இருந்தாலும் தூக்கம் என்பது மிகப்பெரிய சொத்து. தூக்கத்தை தொலைத்து எதையெதையோ தேடி பெறுவதாகத்தான் அமைகிறது பலருக்கும் இந்த வாழ்க்கை. படுத்தவுடன் தூக்குபவர்கள் மிகப்பெரிய வரப்பிரசாதிகள். பணம், பதவி, புகழ் என எல்லாம் இருந்தும் என்ன விலை கொடுத்தும் வாங்க முடியாததாக தூக்கம் சிலருக்கு கண்களுக்கெட்டாத தூரத்திற்கு போய்விடுவதும் உண்டு.

மனித உடலுக்கு தூக்கம் என்பது நாள் முழுவதும் செலவிட்ட ஆற்றலை மீட்டெடுக்கும் நிலை. ஒருநாள் கண்விழித்து இருந்தாலே மறுநாள் எதையோ இழந்தது போல காணப்படுபவர். தூக்கம் முறையாக இல்லை என்றால் உயர் இரத்த அழுத்தம், மன அழுத்தம், இதய நோய்கள், மூளை தொடர்ப்பன குறைபாடுகள் என பல்வேறு நோய்களுக்கு நாம் ஆளாக வேண்டி இருக்கும்.

ஹார்மோன் சுரப்பு குறையும்

அமெரிக்க மருத்துவ அமைப்பின் இதழ் ஒன்றில் தூக்கம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டன. அதில், வாரம் முழுவதும் ஒரு நாளைக்கு 5 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்குவது, நீண்ட நாட்கள் குறைவான நேரமே தூக்கம் மேற்கொள்வது ஆகியவற்றால் டெஸ்டோஸ்டீரான் என்ற ஹார்மோன் அளவு குறைகிறது. இதனால் தாம்பத்யத்தில் ஆர்வம் குறைந்து போகிறது. மேலும், தசைகளில் தளர்ச்சி, வலுவிழந்த எலும்புகள், ஆற்றல் குறைந்து போதல் மற்றும் கவனமின்மை ஆகியவை ஏற்படுகின்றன. மேலும், இதனால் வளர்சிதை மாற்றத்தில் தாக்கம் ஏற்பட்டு இருதய வியாதிகள், ஸ்ட்ரோக் மற்றும் டையாபடீஸ் 2 ஆகியவையும் ஏற்படுகின்றன என்று குறிப்பிடப் பட்டுள்ளது.

தூங்குவதில் அக்கறையில்லை

தூக்கம் தொடர்பாக மனநல ஆரோக்கிய அமைப்பை சேர்ந்த மருத்துவர் ஆன்ட்ரூ மேக்கல்லோச் கூறும்போது, உடற்பயிற்சி மற்றும் சரிவிகித உணவு ஆகியவற்றுக்கு போதுமான முக்கியத்துவம் தரும் நம்மில் பலர் உடல்நலம் மற்றும் மனநலம் ஆகியவற்றில் முக்கிய பங்கு வகிக்கும் தூக்கத்தில் அக்கறை செலுத்துவதில்லை. இதனால் நமக்கு ஏற்படும் பெரும்பாலான பிரச்சனைகள் தூக்கம் தொடர்பானவையாகவே அமைந்துவிடுகிறது என கூறினார். மேலும் இவ்வமைப்பினர் தூக்கம் குறித்து சுமார் 5,300 பேரிடம் ஆய்வு மேற்கொண்டனர். அதில் 39 சதவீதம் பேர் மட்டுமே நல்ல முறையில் தூங்குவதாக தெரியவந்துள்ளது.

குற்றச்செயல்களில் ஈடுபாடு

குறைந்த அளவு தூக்கம் உடைய மாணவர்கள் குற்ற செயல்களில் ஈடுபாடு கொண்டவர்களாக உள்ளனர் என ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. இது தொடர்பாக அமெரிக்காவின் நெப்ரஸ்கா பல்கலைகழகத்தை சேர்ந்த சமந்தா கிளின்கின்பியர்டு மற்றும் சக ஆய்வாளர்கள் 14,382 மேல் நிலைப்பள்ளி மாணவர்களிடம் ஆய்வு நடத்தினர். அவர்களில் பாதி பேர் ஆண்கள் மற்றும் மீதி பேர் பெண்கள். அந்த ஆய்வில், 8 முதல் 10 மணி நேரம் வரை தூக்கம் கொண்ட மாணவர்கள் சாதாரணமாக நடந்து கொள்கின்றனர். ஆனால் 7 மணி நேரம் மற்றும் அதற்கு குறைவாக தூக்கம் கொண்ட மாணவர்கள் குற்ற செயல்களில் ஈடுபாடு நிறைந்தவர்களாக காணப்படுகின்றனர் என தெரிய வந்துள்ளது.

எவ்வளவு நேரம் தூங்க வேண்டும் என்பதைக் குறித்தெல்லாம் தெளிவான வரைமுறை இல்லை. ஐந்து மணி நேரம், எட்டு மணி நேரம் என சரியான தூக்க அளவுகளாக பல்வேறு நேரங்களைக் குறிப்பிடுகின்றனர் ஆய்வாளர்கள். உண்மையில் மறு நாள் காலையில் எழுகையில் சுறுசுறுப்பாய் இருக்க முடிந்தால் அதுவே சரியான அளவு தூக்கம் என்கின்றனர் மருத்துவர்கள். எந்த பிரச்சினை என்றாலும் அதைத் தூக்கி தூரப்போட்டுவிட்டு நன்றாக தூங்கி எழுந்தாலே பாதி சிக்கல் தீர்ந்து விடும் என்பது மருத்துவர்களின் கருத்து.
--பவள சங்கரி திருநாவுக்கரசு. 12:35, 19 செப்டெம்பர் 2011 (UTC)

நன்றி - தட்ஸ்தமிழ்
பங்களிப்பாளர்கள்

Coralsri.blogspot.com

இப்பக்கம் கடைசியாக 19 செப்டெம்பர் 2011, 12:35 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 746 முறைகள் அணுகப்பட்டது.